மூன்று நூல்கள்! முத்தான விமர்சனங்கள்!

ரசனையுடன் கூடிய விழிப்புணர்வு கட்டுரைகள்!

பொக்கணம் என்ற சொல்லுக்கு பை என்ற பொருளாம். இந்த நூல் சுற்றுச் சூழல், மருத்துவம், இலக்கியம், தொல்லியல்.. என சகல தரப்பிலான கட்டுரைகளை உள்ளட்டக்கிய ஒரு பையாகும்! இந்த நூலின் ஆசிரியர் பிரபல மருத்துவர் அ.உமர் பாரூக்.

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற புகழ் பெற்ற கணியன் பூங்குன்றனாரின் புற நானூற்றுப் பாடல் முழுவதையும் வரிக்கு வரி ஆய்வுக்கு உட்படுத்தி, புதிய சிந்தனை போக்கை பதிவு செய்கிறார்.

“தீதும், நன்றும் பிறர் தர வாரா”, என்பதும், “ஆற்று நீர் வழி ஓடும் தெப்பம் போல”, என்ற வரிகள் உணர்த்தும் விதிக் கோட்பாட்டையும், சமயப் பின்புலத்தையும் கவனப்படுத்தி, கணியன் பூங்குன்றனார் அசீவகத்தை சேர்ந்தவர் என்பதற்கான சாத்தியக் கூறுகளை கூறுகிறார்.

‘சாதீய ஆதிக்கமும், பொருளாதார விடுதலையும் – நாட்டரசன் கோட்டை செப்பேடு உணர்த்தும் உண்மைகள்’ என்ற கட்டுரையில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய சாதி ஆதிக்கத்திற்கான சமபவத்தை சொல்கிறார். அந்த காலகட்டத்தில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் ஏழ்மையை ஆதிக்க சக்திகள் எப்படி ஈவு இரக்கம் இன்றி பயன்படுத்திக் கொண்டன என்பதை அம்பலபடுத்துகிறார்.

திருக்குறள் வைதீக நூலா..? என்ற வினா எழுப்பி அதில் வைதீகத்திற்கு எதிராக உள்ள கூறுகளை சொல்கிறார்! 1812 ல் ஆங்கிலேய  அதிகாரி எல்லீசன் பிரபு மூலமாக திருவள்ளுவரும், திருக்குறளும்  மீட்கப்பட்ட வரலாற்றை அழகாக விவரிக்கிறார். எனில், ஏன்? திருவள்ளுவர் இடைப்பட்ட காலங்களில் காணாமலடிக்கப்பட்டார் என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. 1812 ஆம் ஆண்டில் எல்லீசன் பிரபு வெளியிட்ட திருவள்ளுவர் உருவம் பதித்த தங்க நாணயத்தின் அரிய புகைப்படத்தையும், தகவல்களையும் தந்துள்ளார். இது திருவள்ளுவர் மொட்டைத் தலையுடன் தலைக்கு மேல் ஒரு சிறு குடையுடன் இருப்பதானது வள்ளுவர் ஒரு ஜைன துறவி என்பதற்கான ஆவணம் என்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பொன்னூர் மலையில் திருவள்ளுவருக்கான கோவிலையும், அங்கு பல்லாண்டுகளாக திருவள்ளுவரின் பாதங்கள் வழிபடப்பட்டு வருவதையும் கவனப்படுத்தி உள்ளது ஆச்சரியம் தருகிறது.

அ. உமர் பாரூக்

‘பேரழிவை வரவேற்கும் மத்திய அரசின் திட்டம்’ – சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு யாருக்காக என்ற வினாவை எழுப்பி அதற்கு விடை தேடியுள்ளார். சுற்றுச் சூழல் குறித்த ஆய்வுகளும், எச்சரிக்கைகளும் மீண்டும், மீண்டும் பேசப்பட்டு கடைபிடிக்கபடாமல் இருக்கும் அவலத்தை தோலுரிக்கிறார்! 2018 ஆம் ஆண்டிலேயே இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன, ”தற்போதைய நிலை நீடித்தால் இன்னும் நூறு வருடத்தில் பூமி முற்றிலும் வாழத் தகுதியற்றதாகிவிடும்” என்ற எச்சரிக்கையும் தரப்பட்டு உள்ளது.

‘ஒற்றை மருத்துவத் திணிப்பு எனும் சர்வாதிகாரம்’ என்ற கட்டுரையில் இந்திய அரசு ஆங்கில மருத்துவத்தை திணிப்பது குறித்த காத்திரமான எதிர்கேள்விகளை வைத்துள்ளார். ஒருவர் தன் உடல் நலனுக்கு எந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுப்பது  என்பது அடிப்படை உரிமையாகும். அதை அரசியல் சட்டமும் அங்கீகரித்து உள்ளது. அப்படி இருக்க, பிரசவம் தொடங்கி கொரனா வரை ஆங்கில மருத்துவ வழிமுறை நிர்பந்திக்கப்படுவதை கடுமையாக சாடியுள்ளார். ‘இயற்கையான பூக்கள் மலர்வதை தடுத்து ரசாயன மணத்தோடு கட்டாயமாக பரப்படும் செயற்கை பூக்கள் நிலையானவை அல்ல. உணவு, அரசியல்,பொருளாதாரம், சமயம்..இவற்றில் மட்டுமல்ல, மருத்துவத்திலும் ஒற்றை திணிப்பு ஆபத்தானது’ என்கிறார்.கொரானா கால மோசடிகளையும் தோலுரித்து காட்டியுள்ளார்.

தி.ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி சிறுகதை தொகுப்பில் உள்ள சிறுகதைகள் குறித்த கட்டுரை மிகவும் சுவாராஷ்யமாகவும், நுட்பமான ரசனை உணர்வுடனும் எழுதப்பட்டு உள்ளது! தி.ஜா எழுத்தை அணுவணுவாக ரசித்து, சுவைத்து  கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் குணாம்சங்கள், அவை வெளிப்படுத்தும் உணர்வுகள், அதிலிருந்து பெறப்படும் செய்திகள் என இலக்கிய சுவை குன்றாமல் எழுதியுள்ளார்.

விமர்சனம்; அஜிதகேச கம்பளன்

நூல்; பொக்கணம்

ஆசிரியர்; அ.உமர் பாரூக்

வெளியீடு; டிஸ்கவரி புக் பேலஸ்,

சென்னை 600078

தொலைபேசி; 99404 46650

விலை; ரூ 120

————————————————————————————————————————————-

புறப்பாடு – பிரமிக்க வைத்த நூல்!

ஜெயமோகனின் புறப்பாடு படிக்க ஆரம்பித்தேன். அதில் என் வாசிப்புப் பயணமும் ஆரம்பமானது. நூலில் வருகின்ற இந்தச் சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்தவையா? புனைந்தவையா? இது நிகழ்ந்திருக்காது, நிகழ்ந்திருந்தாலும் இவருக்கு அல்ல என மீண்டும் மீண்டும் எனக்குள் பலவாறாகத் தோன்றியது.

அவர் வீட்டை விட்டு வெளியேறுவார். இல்லையெனில், ஓடி விடுவார். ஏதாவது ஒரு விடுதியில் தங்குவார். ஒரு சம்பவத்திற்குப் பிறகு வீடு திரும்புவார். நண்பனின் இறப்பு நிகழும். மறுபடியும் ஓடிவிடுவார். கங்கை, காசி, ஹரித்துவார், மும்பை எனப் பல இடங்களுக்குச் செல்வார். அதற்கு முன் பூனேயில் மண் சுமக்கும் வேலை, பிறகு சென்னையில் அச்சகத்தில் வேலை, அடுத்து வீடு திரும்புவார். சில காலம் கழித்து மறுபடியும் ஓடிவிடுவார். இப்படி எங்காவது ஓடிவிடுவார்; ஓடிக்கொண்டே இருப்பார். அவர் வீட்டை விட்டு வெளியேறியபோது என்ன எண்ணினார்? வெளியேறிய பின்பு வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று என்னவில்லையா? என, எனக்குத் தோன்றும்.

இந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவர் வீட்டை ஒரு விடுதியாகவே பாவித்தது போல் தோன்றியது. வருவார், தங்குவார், செல்வார். அவரது வீட்டில் அங்கு வாழவேயில்லை என்ற எண்ணம் தோன்றும். இப்படியெல்லாம் ஓடுவதும் வருவதும் போவதும் சாத்தியம்தானா? ஒரு வாலிபரால் அப்படி அவ்வளவு தூரம் பறக்க முடியுமா? ஆனாலும், அவர் அலைந்தார்; பறந்தார்.

முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்ததைக்கூட அப்படியே விவரிக்கிறார். அவரது ஞாபகத் திறன் வியக்க வைக்கிறது. மிகச்சிறிய தகவலையும்கூடத் துல்லியமாக விவரிப்பது ஒரு கலைதான்.

அவர் பல வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். சிமெண்ட் வேலை, மணல் அள்ளுதல், பிழை திருத்தம், புத்தகம் படைத்தல் எனப் பல வேலைகள் செய்திருக்கிறார். ஆனாலும், புத்தகம் வாசிப்பதை அவர் நிறுத்தியதே இல்லை.

இந்தப் புத்தகத்தில் வரும் அவருடைய மொழிநடையைப் பற்றி பேசியே ஆக வேண்டும். எளிமையான சொற்கள்தான். ஆனாலும், இந்தப் புத்தகம் இன்னும் மெருகேற்றிய வாக்கியத்தால் ஆகியிருக்கிறது. என்றாலும், எல்லோராலும் இதை வாசிக்க முடியாது என்றே தோன்றியது.

ஆசிரியர் குறிப்பிடும் ஒப்புமைகள் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. அவரது ஒப்புமைப்படுத்தும் திறன் மகத்தானது.. நனைந்த சாலைகளைச் சாக்கடைகள் என்பார். இரவில் சாலைச் சந்திப்புகளைப் பிரம்மாண்டமான ஒரு தோல் செருப்பின் வார் போல இருக்கிறது என்பார். ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதை, அது மூச்சிரைத்துக் கொண்டிருக்கிறது என்பார்.

புத்தகம் முழுவதிலும் சாமர்த்தியமாகச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு பொருளையும் விவரிக்கும் அவரது கலை மிகவும் சிறப்பு.

எழுத்தாளர் ஜெயமோகன்

உலாவுதல் ஒரு உன்னதமான தியானத்தைக் கொடுப்பது. அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஞானத்திற்கு ஈடு இல்லை. ஜெயமோகனின் புறப்பாட்டை எண்ணிப் பார்க்கையில், அவர் பயணத்தை எழுத்தாக்கவில்லை. இதை எழுதுவதற்காகத்தான் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டாரோ என்று எண்ணத் தோன்றும்.

ஒரு கட்டத்தில், யார் இந்த மனிதர்? சாமானியர்தானா எல்லாவற்றையும் செய்கிறார் என்று பட்டது. இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில்கூட, ஒரு பொருளின் மீதுகூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல் தான் என்று எடுத்துக் கொண்டார் போலும்.

ஆம், இந்தப் பயணம் அவருக்கு ஒரு படிப்பினை. இந்தப் படிப்பினைகள்தான் படைப்பாளிக்கும் படைப்பிற்கும் அடிப்படையாக இருந்திருக்கலாம். பயணம் எல்லோருக்கும் படிப்பினைதானே.

ஜெயமோகனின் புறப்பாடு புத்தகமானது, இந்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களின் பிம்பமாக – பிரதிபலிப்பாகவே இருப்பதாகப் பார்க்கிறேன். இந்தப் பயணத்தில் அவரோடு சேர்ந்து நானும் அந்த வாழ்வில் பங்கெடுத்தது போல உணர்கிறேன்.

சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும் போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன. சேரியில் அவர் தங்கி இருந்த பொழுது விவரிக்கும் பகுதிகள் அதிர்ச்சியூட்டுகின்றன.

அதேபோல, மும்பையில் அவர் தங்கிய இடங்கள் பற்றிய விவரிப்பும் வெகுவாகப் பாதித்தது. அங்கெல்லாம் அப்படியான மனிதர்கள் வாழ முடியுமா? வாழ்ந்தார்கள். இன்னும் வாழ்கிறார்கள். இதையெல்லாம் படித்துவிட்டு,  “இந்த நாடு முழுக்க அவர்கள்தான் வாழ்கிறார்கள். மற்றவர்கள் ஒரு போர்வையாக அவர்களை மறைத்து ஒளித்து வைத்திருக்கிறார்கள்” என்று பட்டது.

காசியில் காளி வேசம் போடும் பெண்ணைப்பற்றிப் படிக்கையில், என் மூளை மரத்துவிட்டதுபோல இருந்தது. பெண் என்பவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், இந்தச் சமூகத்தில் எந்த வழியிலும் சுரண்டப்படுகிறாள் என்பதைத்தான் காளி வேடப் பெண்ணின் அனுபவங்கள் அமைந்திருக்கின்றன.

புறப்பாடு புத்தகமானது அதன் பயணங்களில் என்னையும் கூட்டிச் செல்வது போல் உணரும் நல்லதோர் பயணமாக, இயல்பான பயணமாக, பரபரப்பான பயணமாக இருந்தது. பயண அனுபவங்களை வாசிப்பின் மூலமாகப் பெறுவதற்கு, புறப்பாடு தந்த ஜெயமோகன் அவர்களுக்கு மிக்க நன்றி.

நூல் விமர்சனம்; அ.ம.அங்கவை யாழிசை

நூல்; புறப்பாடு

ஆசிரியர்; ஜெயமோகன்

வெளியீடு; நற்றிணை பதிப்பகம்

விலை 360

போன்; 94861 77208

——————————————————————- —————————————————–

நேரு குறித்த சரியான புரிதல் தரும் நூல்!

இந்தியாவின் முதல் பிரதமரான நேரு இறந்தபோது இந்தியா மட்டுமல்ல, உலகமே சோகத்தில் மூழ்கியது. ஆனால் இந்துத்துவா அமைப்புகள் வலுவாக இருந்த குவாலியர் நகரத்தில், இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். ஜனநாயக அமைப்புகளை  உருவாக்கியதில், இந்தியா என்ற கருத்தாக்கத்தை  உருவாக்கியதில், உலக அமைதிக்கு பங்காற்றியதில் நேருவின் பங்களிப்பை யாராலும் மறுக்கமுடியாது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்  கடந்தபின்பும், நேருவை ‘ஒருசில சக்திகள்’ திட்டமிட்டு அவதூறு செய்கின்றன. அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக, நா.வீரபாண்டியன் இந்த நூலை எழுதியுள்ளார்.

நேருவைப் பற்றி பேசுவதன் மூலம் இந்தியாவின் நவீனகால வரலாற்றை இந்த நூல் பேசுகிறது. நேருவைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கும், கூடுதல் விபரங்களைத் தரும் வகையில் இது உள்ளது;  சுவாரசியமாகவும் உள்ளது.

சமூகநீதியும் நேருவும், நீதித்துறையும் நேருவின் பங்களிப்பும், ஊடக சுதந்திரம் மீதான நேருவின் பார்வை, நேருவின் மொழிக் கொள்கை போன்ற 16 அத்தியாயங்கள் இந்த நூலில் உள்ளன. ‘அயல்துறைக் கொள்கையும் நேருவும்’ என்ற அத்தியாயத்தை விரும்பி  படித்தேன். இந்தப் பகுதி விரிவாகவும் உள்ளது. எகிப்து அதிபர் நாசர், இந்தோனேசியாவின் சுகர்ணோ, யூகோஸ்லாவியாவின் மார்ஷல் டிட்டோ ஆகியோர் நேரு முன்மொழிந்த வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு, பஞ்சசீலக் கொள்கைக்கு உறுதியான ஆதரவை வழங்கி இருக்கின்றனர்.

உலகின் ஆறில் ஒருவர் இந்தியாவில் உள்ளனர். உலக அரங்கில் ஏற்படும் நிகழ்வுகளில், இந்தியா எடுக்கும்  நிலைபாட்டைப் பொறுத்து, ஆசிய நாடுகள் தங்கள்  நிலையை எடுக்கும். அது உலகநாடுகளின் நிலையும் பாதிக்கும். விடுதலைக்கு முன்பாக நாட்டின் அகச்சூழல், சர்வதேச விவகாரங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை இருந்த போதும், நேருவின் இடையறாத முயற்சியினால் காங்கிரசு இயக்கமானது, 1927 க்குப் பிறகு ‘முதல் அயலுறவுக் கொள்கையை’ வெளியிட்டது என்கிறார்.

நேருவின் முயற்சியினால் நடந்த ஆசிய நாடுகளின் மாநாடு, பாண்டுங் மாநாடு போன்றவைகள் மூலம் இந்தியாவின் செல்வாக்கு உச்சத்திற்கு  சென்றது.

இடதுசாரி எண்ணம் கொண்ட  சுபாஷ் சந்திரபோசை காங்கிரசில் இருந்து வெளியேற்றுவதில் வலதுசாரிகள் வெற்றிபெற்றனர். ஆனால், அவர்களால் நேருவை வெளியேற்ற முடியவில்லை என்கிறார் ஆசிரியர். ‘காந்தி,  நேருவை தன் வாரிசாக அறிவித்ததும், அவரது கைகளில் நாடு பாதுகாப்பாக இருக்கும் என வெளிப்படையாகக் கூறியதும், இந்துத்துவா சக்திகளுக்கு காந்தியின் மேல் அதிருப்தியையும், ஆத்திரத்தையும் உண்டாக்கியது.

காங்கிரஸ் கட்சியின் சென்னை மாநாடு அனைத்து பிரிவினரும் ஏற்றுக் கொள்லும் வகையில் நகல் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க தீர்மானித்தது. இந்தக்குழுவிற்கு தலைவராக மோதிலால் நேரு இருந்தார். ஜவகர்லால் நேரு அதன் செயலாளராக இருந்தார். 1929ல் மாதிரி அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதில் தீர்மானிக்கப்பட்ட கருத்துரிமை, பேச்சுரிமை, ஆண் பெண் பேதமின்றி அனைவருக்கும் வாக்குரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட உரிமைகளே பிறகு அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன. அதனால்தான் ‘இதுவரை காந்தியின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ் தற்போது கம்யூனிஸ்டுகள் வசம் சென்று விட்டது என இலண்டனில் இருந்து வந்த ஒரு ஏடு  எழுதியதாக கூறுகிறார்  நா.வீரபாண்டியன்.

பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி, இந்து திருமணச் சட்டத்தின் மூலம் விவாகரத்து போன்றவைகளில் பெண்களின் உரிமைக்கு நேரு  பணியாற்றியிருக்கிறார். ‘ஆபத்து ஏற்படினும், முழுமையான சுதந்திரமான ஊடகங்களையே நான் பெற விரும்புகிறேன்’ என்பதை உறுதி செய்திருக்கிறார். இதுபோன்ற விளக்கங்கள் மூலம் இப்போதைய ஆட்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர். நேருவை விமர்சிப்பவர்களை எதிர்கொள்ள உதவும் ஒரு கருவியாக இந்த நூல் உள்ளது’ என்கிறார், மொழிபெயர்பாளரான அக்களூர் இரவி.

இந்த நூலிற்கு உதவிய நூட்களின் பட்டியலைப் பார்க்கையில் இதன் நம்பகத்தன்மை கூடுகிறது. ‘பொருளாதார ஜனநாயகம் என்பது சோசலிஷம் அன்றி வேறில்லை’ என்பது போன்ற , பொருத்தமான மேற்கோள்கள்  நூல் நெடுகிலும் வருகின்றன.          ‘ஜனநாயகத்தின் கோட்பாடுகளில்  நாம் வைத்திருக்கும் நம்பிக்கை தகர்ந்து போய்விடாமல் தடுக்கவும், மதவெறி அரசியலை முற்றாக ஒழிக்கவும்’ நேருவின் கொள்கைகள் நமக்கு உதவி புரியும் இருக்கும் என இதற்கு அணிந்துரை எழுதிய ஆர்.கே. கூறுகிறார்.

‘நேருவின் நினைவுகளை அழிக்க நினைப்பவர்கள், அம் முயற்சியில் தோற்கிறார்கள் என்பதை உணரும்போது நேருவின்மேல் கோபம் கொள்கிறார்கள்’ என்கிறார் நூலாசிரியர். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த  நா.வீரபாண்டியன், நேரு முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘ஒரு தேசத்திற்கான கடிதங்கள்’ என்ற பெயரில் அந்த நூல் சமீபத்தில்  வெளியானது. அது  ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக இந்த நூலை எழுதியிருக்கிறார் எனலாம்.

எதிர் வெளியீடு,

பொள்ளாச்சி, 642 002,

தொ: 99425 11302,

விலை; ரூ.300.

நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time