”விலைவாசி உயர்வு விழி பிதுங்குகிறது! முதலாளிகளை வாழ வைப்பதில் தான் மோடி அரசின் முழுக் கவனமும் உள்ளது! போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் எல்லாம் பறிபோகிறது. தொழிற்சங்கங்கள் தான் மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டும்” – ஏ.ஐ.டி.யூ.சி அகில இந்திய பொதுச் செயலாளர் அமர்ஜித் கௌரின் பேட்டி!
நூற்றாண்டைக் கடந்த, இந்தியாவின் பழம் பெரும் தொழிற்சங்கமான ஏஐடியுசியின் (அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்), அகில இந்திய மாநாடு கடந்த வாரம் கேரளாவின் ஆலப்புழாவில் நடந்தது.
”இந்தியா தொழிற்சங்கங்கள் ஒன்றாக இணைய வேண்டும்; – அரசாங்கத்தின் பிடியிலிருந்து, முதலாளிகளின் பிடியிலிருந்து, அரசியல் கட்சிகளின் பிடியிலிருந்து தொழிற்சங்கங்கள் விடுபட்டு சுயேச்சையாக செயல்பட வேண்டும்” என ஏஐடியுசி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் பொதுச் செயலாளராக அமர்ஜித் கௌர், இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு பெண்மணி தொழிற்சங்க செயல்பாட்டில் தொடர்ந்து தலைமை ஏற்பது மகிழ்ச்சிக்குரியதாகும். நம் நாட்டில் உள்ள தொழிலாளர்களின் நிலை, புதிய தொழிலாளர் சட்டம், விலைவாசி உயர்வு, வேலை நிறுத்தங்கள் குறித்து இந்த நேர்காணலில் அவர் கூறுகிறார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. விலைவாசி குறைவது என்பது சாத்தியமா ?
விலைவாசியைக் குறையுங்கள் என்று கோரிக்கை விடுப்பது வெற்று முழக்கம் அல்ல; சாத்தியமான ஒன்றுதான். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில், ஒருசில மாற்றங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன. அதனை மீண்டும் கொண்டு வரவேண்டும். அப்படிச் செய்தால் விலையைக் கட்டுப்படுத்த இயலும். பொது விநியோகத்திட்டத்தை அனைவருக்கும் விரிவுபடுத்த வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும். சந்தையில் இருந்து, இடைத்தரகர்களை நீக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

உலகச் சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்துகொண்டே போனாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் வாயு இவைகளின் விலைகளை உயர்த்திக் கொண்டே போகிறார்கள். இதனால் மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
கொரோனாவைப் பற்றி பேசும்போதெல்லாம் உணர்ச்சிப்பூர்வமாக பேசுகிறீர்களே !
ஒரு சேமநல அரசு மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ, அதை இந்த அரசு செய்யவில்லை. உலக சுகாதார நிறுவனமானது, கோவிட் – ஐ சுகாதார நெருக்கடியாகத்தான் (health emergency) அறிவிக்கச் சொன்னது. அப்படி செய்தால், மக்களுக்கு வேண்டிய மருத்துவ வசதி, தடுப்பூசி உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக செய்ய வேண்டி இருந்திருக்கும். ஆனால், மோடி அரசாங்கமானது ‘சுகாதார நெருக்கடி’ என அறிவிக்காமல், வெள்ளையர் காலச் சட்டமான தேசியப் பேரிடர் சட்டத்தினை (National Disaster Management Act) அமலாக்கியது. இதனால், அனைத்து நடைமுறைகளுக்கும் மக்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலையை அரசு ஏற்படுத்தி விட்டது. கொரோனாவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, மக்களுடைய போராட்டங்களுக்கு தடை விதித்து கருத்துரிமையை கட்டுப்படுத்தியது. அதன் மூலம் தமது அரசின் மீதான விமர்சனத்தை வளர விடாமல் மோடி அரசு பார்த்துக்கொண்டது.

ஊரடங்கை அறிவிக்க வெறும் நான்கு மணி நேரமே எடுத்துக் கொண்டார். இதனால் வெளியூரில் இருந்த மாணவர்கள், மருத்துவ சிகிச்சை எடுத்த நோயாளிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிப்பட்டார்கள். இவர்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் கால்நடையாகவே தங்கள் ஊர்களுக்கு திரும்ப வேண்டியதாயிற்று. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மோடி தனது வாயைக்கூட திறக்கவில்லை.
இப்படி ஒரு வெளியேற்றம் (mass exodus), இந்திய விடுதலை காலத்தில்தான், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் நடந்தது. கொரோனா காலத்தில், மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள், அந்நிய நாட்டு எல்லைகள் போல கருதப்பட்டு மூடப்பட்டன. பல குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. அவைதான், இந்தியாவில் பெருவாரியான மக்களுக்கு வேலை அளிப்பவை. எனவே, வருமானவரி செலுத்தாத குடும்பங்களுக்கு, தலா ரூ.7,500 தர வேண்டும் என தொழிற்சங்கங்கள் விடுத்த வேண்டுகோளை மோடி கண்டு கொள்ளவில்லை.
அதே நேரம் இந்த வாய்ப்பைக் பயன்படுத்திக் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் முனைப்புக் காட்டினார். அதானி, அம்பானி போன்ற தனது நண்பர்களின் நிறுவனங்களுக்கு , வரிக்குறைப்பாகவும், கொரோனா கால சலுகைகளாகவும் கோடிக்கணக்கான ரூபாய்களை தள்ளுபடி செய்தார். அந்த நேரத்திலும் இசுலாமிய மக்கள் மீது வெறுப்பை உமிழச் செய்யும் வேலைகளில் அவரது கட்சியினர் ஈடுபட்டனர். இசுலாமிய வியாபாரிகள் தாக்கப்பட்டனர். அப்போது, நரேந்திர மோடியின் குரூரமான முகம் வெளிப்பட்டது. உலகம் முழுவதிலும், கொரானா காலத்தில் முதலாளித்துவ அரசுகள் அம்பலப்பட்டு போயின. ஒரு சில மக்கள் நலன் சார்ந்த அரசுகள்தான் சிறப்பாக செயல்பட்டன.
மற்ற தெற்காசிய நாடுகளில் தொழிற்சங்க இயக்கம் எப்படி உள்ளது ?
இலங்கை, நேபாள நாடுகளில் இருந்து கேரளாவில் நடைபெற்ற எங்கள் மாநாட்டை வாழ்த்திப் பேச பிரதிநிதிகள் வந்திருந்தனர். பாகிஸ்தான் நாட்டிலிருந்து தொழிற்சங்கத்தினர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு கோரியிருந்த விசாவைத் தர இந்திய அரசு மறுத்து விட்டது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியையும், போராட்டத்தையும் நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் இந்தியா என்ன செய்கிறது, தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன என்பதை மற்ற நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் பார்க்கின்றன. போராடி வருகின்ற மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டியது தொழிற்சங்கங்களின் கடமையாகும். அந்தக் கடமையை இந்திய தொழிலாளி வர்க்கம் நிறைவேற்றும். அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து போராடி வருகிறோம். நிலக்கரி, மின்சாரம், வங்கி என அரங்கம் வாரியாகவும் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
புதிய தொழிலாளர் சட்டங்களை ஏன் தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன ?
சம்பளப் பட்டுவாடாச் சட்டத்தை மாற்றியுள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறையும். பணிக்கொடை தொகை குறையும். முன்பெல்லாம் 100 பேருக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களை மூட வேண்டும் என்றால், அதற்கு அரசாங்கத்தின் அனுமதி தேவை. அதனை, இப்போது 300 பேருக்கு மேல் உள்ள தொழிற்சாலையை மூடுவதற்குதான் அரசாங்கத்தின் அனுமதி தேவை என்று மாற்றி விட்டார்கள். ஒரு ஆலையை எப்போது வேண்டுமானாலும் முதலாளி மூடிவிடலாம் என்றால், பெரும்பான்மையான தொழிலாளர்களின் வேலை இழப்பிற்கு புதிய தொழிலாளர் சட்டம் வழி வகுக்கிறது.
நிரந்தர வேலை என்பதே இல்லாமல் ‘குறித்த கால வேலை’ என்பதாக ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இது, வேலை குறித்த நிச்சயமின்மையால் தொழிலாளியை அச்சத்திலேயே வைத்திருக்கும் சூழ்ச்சியாகும். இத்தகைய சட்ட மாற்றங்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக செய்யப்பட்டுள்ளன. புதிய சட்டத்தினால் தொழிலாளர்களின் பாதுகாப்பான சூழலும், பணித்தள சுகாதாரமும் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கட்டடம், பீடி, ஆட்டோ போன்ற அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு நல்ல திட்டங்கள் உள்ளன. ஒரு சில மாநில அரசுகள், அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு சிறப்பான திட்டங்களை அமலாக்கி வருகிறார்கள். ஆனால், அமைப்புச்சாரா தொழிலாளர்களின் நலனுக்கு என, எந்த நிதி உத்தரவாதத்தையும் மோடி அரசு புதிய சட்டத்தில் கொடுக்கவில்லை. மாறாக அமைப்புச்சாரா தொழிலாளர்களின் எல்லா நிதியையும் ஒன்றாக்க உள்ளது. இதனால் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வரும் திட்டங்கள் கூட முடமாக்கப்படும்.
தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அத்தகைய குழுக்களில் வல்லுநர் இடம் பெறுவார்கள் என மாற்றி உள்ளனர். அதாவது, அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ளவர்களைக் கொண்டு இக்குழுவை நிரப்புவார்கள். இதனால் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். தொழிற் தகராறுகளை தீர்க்க இப்போது உள்ள தொழிலாளர் ஆணையர்கள், இனிமேல் இருக்க மாட்டார்கள். தொழிலாளர் நீதிமன்றங்களை அகற்றிவிடுவார்கள். வெள்ளைக்கார ஆட்சியில் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளைக் கூட பறிக்கும் வகையில் மோடி அரசாங்கம் இப்போது சட்டம் இயற்றி உள்ளது.
வேலைநிறுத்தம் செய்வதால், உங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி விடும் என நம்புகிறீர்களா ?
பேச்சுவார்த்தைகளிலும், உரையாடலிலும் நம்பிக்கையில்லாத அரசாக மோடி அரசாங்கம் உள்ளது . 2014 -ல் இருந்ததை விட, 2019ல் மோடி அரசாங்கம் மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது. லாபகரமானப் பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்கிறது. மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் 15 இலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மக்களுக்கு சேவை தரும் கல்வி, மருத்துவம், இரயில் போன்ற நிறுவனங்களை நடத்த, அரசு தயாராக இல்லை.
Also read
தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களையும் இந்த அரசு காலில் போட்டு மிதிக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை இப்போது மேலெழும்பி வருகிறது. மத்திய தர வர்க்கத்தினரும் இப்போது மோடியை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். வேறு வழியில்லாமல்தான் வேலை நிறுத்தங்களைச் செய்கிறோம். எங்களுடைய எதிர்ப்புகளினால் தான் புதிய தொழிலாளர் சட்டத்திற்கான விதிகள் உருவாக்கத்தையும், அவைகளின் அமலாக்கத்தையும் அரசு தாமதப்படுத்தி வருகிறது. இத்தகைய எதிர்ப்புகள் இல்லையென்றால் நிலைமைகள் இன்னமும் மோசமாக இருக்கும்.
பேட்டி எடுத்தவர்; பீட்டர் துரைராஜ்
மக்களை காலில் போட்டு மிதிக்கும் மோடி அரசு! -அமர்ஜித் கெளர்
-பீட்டர் துரைராஜ்
நல்ல அருமையான கேள்வி பொருத்தமான பதில்
I am a student of BAK College. The recent paper competition gave me a lot of headaches, and I checked a lot of information. Finally, after reading your article, it suddenly dawned on me that I can still have such an idea. grateful. But I still have some questions, hope you can help me.