பள்ளிகளில் தமிழ் காணாமல் போனது எப்படி?

-சாவித்திரி கண்ணன்

மூன்று தலைமுறைகள் தமிழ் தெரியாமல் உருவாகியுள்ளன! இளம் தலைமுறையினருக்கு தாய்மொழியே அன்னியமாகி விட்டது. பள்ளிகளில் தமிழை கற்பிக்க தமிழ்நாட்டில் 1968 தொடங்கி, இன்று வரை பல ஆணைகள், சட்டங்கள் போட்டுள்ள போதிலும், கல்வி நிலையங்களில் தமிழ் காணாமல் போன மர்மம் என்ன..?

தமிழ்நாட்டில் தமிழ் உணர்ச்சியைத் தூண்டி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடித்த இயக்கம் திமுக! ஆனால், அப்படி ஆட்சிக்கு வந்து 54 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கல்விக்கூடங்களில் முன்பு இருந்த தமிழ் ஏன் தற்போது இல்லாமல் போனது என்பது ஆச்சரியமாக உள்ளது! இத்தனைக்கும் தமிழைக் கட்டாய பாடமாக்க திமுக, அதிமுக அரசுகள் தொடர்ந்து பல சட்டங்கள் போட்டனர். ஆயினும், தமிழகத்தில் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாமலே இரண்டு தலைமுறை உருவாகி, மூன்றாவது தலைமுறையும் தமிழ் கற்காமலே உருவாகிக் கொண்டுள்ளது!

இது தொடர்பாக சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழகப் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டும் ஏன் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை? எனக் கேட்டு, அதற்கு தமிழக அரசு விபரமாக பதில் அளிக்கும்படி உத்திரவிட்டு உள்ளது.

தமிழ் கற்பித்தல் தொடர்பாக இது வரை தமிழ்நாட்டு திமுக, அதிமுக அரசுகள் ஏராளமான அரசு ஆணைகள் வெளியிட்டு உள்ளனர். ஆயினும், நாளுக்கு நாள் தமிழகப் பள்ளிகளில் தமிழ் காணாமல் தான் போய்க் கொண்டுள்ளது! பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திரா போன்றவற்றில் அவரவர்களின் தாய் மொழிக் கல்வி எந்த சிரமமும் இல்லாமல் ஒரு மொழிப் பாடமாக இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் என்ன காரணத்தால் தமிழ் ஒரு மொழிப் பாடமாகக் கூட அமல்படுத்த முடியவில்லை என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

பயனற்றுப் போன அண்ணாவின் ஆணை

பேரறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்த போது ஜனவரி 1968 ல் மும்மொழிக் கொள்கையை தவிர்த்து,  இருமொழிக் கொள்கைக்கான (அரசாணை எண். 105)  ஆணை பிறப்பித்தார்! ‘தமிழகத்தில் “வட்டார மொழி அல்லது தாய்மொழி”வழியாக பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டது. இதில், தமிழ் என்ற வார்த்தை இல்லாத காரணத்தால் இந்த ஆணைப்படி தமிழ் கற்பிக்காமல் தவிர்க்கவும் வாய்ப்பு தரப்பட்டதாகவே கருதி,  தனியார் பள்ளிகள் வட்டார மொழியாக, தாய் மொழியாக ஏதேனும் ஒரு மொழியை அடையாளப்படுத்தி தங்கள் கல்வி வியாபாரத்தில் தொடர்ந்து கல்லா கட்டி வந்தனர்.

அறிஞர் அண்ணா

இதை அறிந்த தமிழ்ச் சான்றோர்கள், ”இந்த ஆணையில் தமிழ் என்ற வார்த்தை தெளிவாக குறிப்பிடாதது தான் தோல்விக்கு காரணமாயிற்று” என கொந்தளித்து பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தினர்.இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகே தன் தவறை திருத்திக் கொள்ள திமுக அரசு முன் வந்தது!

கண் துடைப்பான கருணாநிதியின் ஆணைகள்

தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்த போது டிசம்பர்.1999 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 354ன்படி,  “தமிழ் அல்லது தாய்மொழி” என்று திருத்தப்பட்டது. மேலும், அரசாணை எண். 324 ன் படி,  ”அனைத்துப் பள்ளிகளிலும் (மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளிகள், உதவி பெறும், உதவி பெறாத அங்கீகாரம் பெற்ற பள்ளிகள்) முதல் மொழியாக தமிழ் அல்லது தாய்மொழி இருக்கும்” எனச் சொல்லப்பட்டது. மேலும், ”பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி பயிற்று மொழியாக இருக்கும். 6ஆம் வகுப்பு முதல் தமிழ், தாய்மொழி அல்லது ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கும்’’ என்றது.

சொக்க வைக்கும் தமிழில், சுவைபடப் பேசிய கலைஞர் கருணாநிதி!

இந்த ஆணையிலும் கூட தமிழ் அல்லது தாய்மொழி என இரண்டு வாய்ப்புகள் தரப்பட்டுள்ளதன் மூலம் தழிழை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தனியார் கல்வி நிறுவன முதலாளிகள் கண்டடைந்தனர்!

எனினும் கூட, இந்த அரசாணையை 324ஐ எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் பல்வேறு அமைப்புகள் ரிட் மனுக்களை முதல் பெஞ்சில் தாக்கல் செய்தார்கள். உயர்நீதி மன்றத்தின் முழு பெஞ்ச் ரிட் மனுக்களை ஏற்றுக் கொண்டு அரசாணையை ரத்து செய்தது.

உயர்நீதி மன்ற முழு பெஞ்சின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையிலே உள்ளது. இன்று வரை தமிழ் கற்பதில் இருந்து மொழி சிறுபான்மையினர் விலக்கு பெற்றே வருகின்றனர்.

ஜெயலலிதா ஆட்சியில் 2003-2004 கல்வி ஆண்டு முதல் அனைத்து வகைப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிப்படியாக அறிவியல் தமிழ் என்னும் பாடத்தைக் கற்பிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிறகு, 12 ஆம் வகுப்பு வரை அறிவியல் தமிழ் கற்பிக்க வேண்டும் என்றார். இந்த ஆணை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரளவு நடைமுறையில் உள்ளது.

செல்லுபடியாகாத ஜெயலலிதாவின் ஆணைகள்!

ஆனால், இந்த ஆணை பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அமலாகவில்லை! அப்படி அமலாக்கப்படுவதிலும் அரசு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தனியார் பள்ளி முதலாளிகளுக்கு தான் அரசியல் லாபி கைவந்த கலை ஆயிற்றே!

பிறகு, 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கருணாநிதி தமிழ் மொழி கற்கும் சட்டத்தை அமல்படுத்தினார். இந்த முறை மிக ஜாக்கிரைதையாக தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொள்ள நிர்பந்திக்காமல், தமிழை ஒரு பாடமாகவேனும் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க அரசு தனியார் பள்ளி முதலாளிகளிடம் விண்ணப்பித்துக் கொண்டது. அதையும் கூட, இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்புக்கு மட்டும் தொடங்கினால் போதும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு மூன்று என விரிவுபடுத்தி பத்தாண்டுகளில் பத்தாம் வகுப்பு வாரி தமிழும் ஒரு மொழிப் பாடமாக ஆகட்டும் என்றது தமிழக அரசு!

இதிலும் கூட, ஆத்திரம் அடைந்து தனியார் பள்ளி முதலாளிகளும், டிராபிக் இராமசாமி போன்ற பார்ப்பனர்களும் நீதிமன்றம் சென்றனர். ஆனால், நீதிமன்றம், ”இந்த நியாயமான சட்டத்தையும் எதிர்ப்பது முறையல்ல” என தமிழக அரசின் சட்டத்தை அங்கீகரித்தது.

ஆனால், மிகப் பெரிய துர்அதிர்ஷ்டம் இந்த சட்டமும் பெயரளவுக்கு தான் கொண்டுவரப்பட்டது. சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.

தமிழ் ஆசிரியர்கள் நியமனமே இல்லை!

ஜெயலலிதா அரசும், கருணாநிதிக்கு போட்டியாக 2014 ஆம் ஆண்டு இதே போல ஒரு ஆணை பிறப்பித்து, அதுவும் அம்பேல் ஆனது. இன்று வரை தமிழக அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளுமே கூட தமிழுக்கான ஆசிரியர் பணியிடங்கள் சரியாக நிரப்படுவதில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு ஒப்புதலே தருவதில்லை என நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கே இந்த நிலைமை என்றால், தனியார் பள்ளி விவகாரங்களில் அரசு தலையிட்டு தமிழ் விஷயத்தில் நியாயத்தை நிலை நாட்டிவிடும் என நாம் எப்படி எதிர்பார்க்க  முடியும்? அப்புறம், எப்படி தமிழ் கற்பது நடைமுறைக்கு வரும்?

தமிழ் என்றாலே கதி கலங்கும் மாணவர்கள்

இந்த சட்டத்தை திமுக, அதிமுக மனப்பூர்வமாக அமல்படுத்தாதன் காரணமாக, 2022 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் மட்டுமே 47,055 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்த மாணவர்களை பொறுத்த வரை தமிழால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. முறையான தமிழ் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், தற்போது தமிழக மாணவர்கள் பெரும்பாலோருக்கு தமிழ் என்றாலே, எட்டிக்காயாகக் கசக்கிறது! இப்படி இன்பத் தமிழை இளம் தலைமுறையினர் துன்பத் தமிழாக உணர்வதற்கு யார் பொறுப்பு? என்ன காரணம்..? எனத் தீவிரமாக ஆய்வு செய்து உடனடியாக அதை களைய வேண்டும்.

எழிலார்ந்த பள்ளி கட்டிடத்தை நோக்கி ஷு, சாக்ஸ் போட்டு பொதி மூட்டை சுமக்கும் குழந்தைகளுக்கு தமிழ் எட்டாக் கனியானது!

உலகத்தில் முன்னேறியுள்ள பல நாடுகளில் – குறிப்பாக ஜெர்மன், ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா..போன்ற நாடுகளில் – தாய் மொழியில் தான் அனைத்தும் கற்பிக்கப்படுகிறது. அங்கெல்லாம் தாய் மொழி படிப்பதும், பேசுவதும் இயல்பாக உள்ளதே அன்றி, இழிவாகக் கருதப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட ஆங்கில மொழியையே இன்னும் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். காரணம், இங்குள்ள ஆதிக்க சக்திகள் தொடர்ந்து எளிய மக்களை கல்வியில் இருந்தும், சமூக கருத்தாக்கத்தில் இருந்தும் தள்ளி வைக்க ஆங்கிலம் ஒரு கருவியாக உள்ளது. அதனால் தான், கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், அரசு நிர்வாக அலுவலகங்கள் அனைத்திலும் ஆங்கிலத்தையே இன்னும் கோலோச்ச வைத்துள்ளனர். ஆகவே, நாட்டிற்கு சுதந்திரம் பெற்ற போதிலும், இன்றைய ஆட்சியை நாம் அடிமை ஆட்சியின் நீட்சியாகக் கொள்வதே சரியாகும்.

இந்தியை எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் கூட, இந்தி எதிர்க்கப்படுவதை விட, ஆங்கிலம் எதிர்க்கப்படுவதற்கே அதிக நியாயம் உள்ளது. ஏனென்றால், இந்தி ஒரு வெகுமக்கள் மொழி என்பதால் அது கற்றுக் கொள்வது சற்று எளிது. ஆங்கிலம் அளவு அதில் சிரமம் இருந்திருக்காது. ஆனால், வெளிநாடுகளுக்கு செல்வதற்கும், அறிவியல் அறிவு பெறுவதற்கும் ஆங்கிலம் அவசியம் என்ற வாதம் வைக்கப்பட்டது. இது ஒரு மிகத் தவறான வாதம்.

எப்படி என்றால், தமிழ் மொழியிலேயே எல்லா அறிவியல் நுட்பங்களையும் எளிதில் கொண்டு வரத்தக்க அறிஞர்கள் நம்மில் நிறைய பேர் இருக்கின்றனர். அது மட்டுமின்றி, பள்ளி பயிலும் மொத்த மாணவர்களில் அதிக பட்சம் மூன்று சதவிகிதமானவர்கள் தான் வெளிநாட்டு வேலைக்கு செல்லக் கூடியவர்கள். அவர்களுக்காக எல்லோரும் சிலுவை சுமப்பதா? அதற்கும் கூட, ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக இருந்தாலே போதுமானது! அப்படித்தான் பல பெரும் அறிஞர்கள் தமிழ் வழி கல்வி கற்று பெரிய அறிவாளிகளாக, துணைவேந்தர்களாக, அறிவியலாளர்களாக உயர்ந்துள்ளனர்.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் என்பது தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கான கருவி என்ற அளவிலேயே அரசியல்வாதிகளுக்கு பயன்படுகிறது. அதே சமயம் மத்திய ஆட்சியாளர்கள் இந்தி மற்றும் சமஸ்கிருதம் விவகாரத்தில் மிகத் தெளிவாக உள்ளனர்.

பள்ளிக் கூடத்தின் பெயர் பலகையிலேயே இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளன

மத்திய அரசின் கேந்திரிய வித்தியாலயாவில் ஹிந்தி, சமஸ்கிருதம் மட்டுமே கட்டாயமாக உள்ளது. அங்கு தமிழோ பிற இந்திய மொழிகளோ சொல்லித்தரபடுவதில்லை மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கட்டாயம் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும். அவர்கள் 6 ஆம் வகுப்பில் சமஸ்கிருதம் படித்து பாஸ் செய்தால் மட்டுமே 7 ஆம் வகுப்பு தேர்ச்சி அறிவிக்கப்படும். மேலும் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சம்ஸ்கிருத மொழியை தவிர்த்து தமிழ் மொழியை படிக்க முடியாது. தமிழகத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை என்பது தான் நிலவரமாகும்!

மலிவான விளம்பரத்திற்காக பள்ளிக் கூட வகுப்பறை சென்று உட்காரும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களால் தமிழ் கற்றல் தொடர்பான சட்டங்களோ, ஆணைகளோ தொடர்ந்து தெளிவில்லாமல் போடப்படுகின்றன! தமிழ் நாட்டில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்க வேண்டும் என இதுவரை எந்த அரசும் ஆணை பிறப்பிக்கவில்லை. அதிலேயே, ஒரு உறுதிப்பாடின்மை தெரிகிறது. பயன்பாடில்லாத சமஸ்கிருதத்தின் மேல் மத்திய ஆட்சியாளர்கள் காட்டும் ஆர்வத்தில் சிறுதுளியேனும் நம் ஆட்சியாளர்களுக்கு இல்லையே! அதுவும், தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் அரசு பள்ளிகளின் கட்டமைப்பை அழிப்பதற்கு மத்திய ஆட்சியாளர்கள் கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பின்றி நிறைவேற்றி வருகிறது. இந்தச் சூழலில் தமிழ் கல்வி குறித்த ஆர்வம் இவர்களிடம் எள்ளவும் தெரியவில்லை.

பொதுவாக,  தாங்கள் போடும்  தமிழ் கல்வி சார்ந்த ஆணைகளை நிறைவேற்றுவதில் உள்ளார்ந்த, உண்மையான ஈடுபாடு தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை. கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா போன்றவற்றில் தாய் மொழியை தவிர்க்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாய்கின்றன! தமிழ் நாட்டில் அவ்வாறு இல்லை. மொழி உணர்வு பொங்கி பிரவாகமெடுக்கும் தமிழகத்தில் தான் மொழியின் பெயராலான பித்தலாட்ட அரசியலும் தழைத்தோங்குகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time