பறவைகளுள் காகங்கள் எதையும் சமாளிக்கக் கூடியவை!

_ த. ஜான்சி பால்ராஜ்

இயற்கையை அவதானிக்க, நம் இளம் தலைமுறையினரை பழக்க வேண்டும்! எழுத்துக்களால் எழுதப்படாத ஒப்பற்ற புத்தகம் இயற்கை. அதில், உயிரோட்டமாய் இருப்பது பறவையினங்கள். காகங்கள் மனிதனோடு மிக நெருங்கிய தொடர்பில் வசிப்பவை. தற்காப்புணர்வு மிகுந்தவை! காக்கை பற்றிப் பேச நிறைய உள்ளன!

புவியோட்டை அழகாக்குவதில் பசுமைமாறாக் காடுகள், புல்வெளிகள், வண்ண வண்ண மலர்கள், நீர்பரப்புகள், மேகமூட்டங்கள் அவற்றினிடையே பறந்தலையும் பறவையினங்கள்…. என்று இயற்கையின் மொத்தமும் முதலிடம் வகிக்கின்றன.

நாம் எதேச்சையாய் பாய்ச்சும் ஒரு பார்வை வெட்டில் எத்தனை எத்தனை பூச்சிகளும் பறவைகளும் பறந்து செல்வதை நம் விழிகள் படம் பிடிக்கின்றன…!? ஆனாலும், அவற்றை எதார்த்தமாக புறந்தள்ளிவிட்டு,  நாம் நமது வேலைகளைதான் தேடி சென்று கொண்டிருக்கிறோம்.

உயிர் வாழும் தேவைகளுக்காக மரம் செடி கொடிகளை நம்பிவாழும் பறவையினங்கள் விதைப்பரவல், மகரந்தக்  கலவை, நிலத்தைச் செழுமையாக்கும் உரம்… என்று கைமாறாக நிறைய விசயங்களை செய்தபடி, தனது கடனை கழித்துக் கொண்டேதான் வாழ்கின்றன.

நமது விழிப்பாவையளவு  முதல் ,உயர்ந்து வளர்ந்த குதிரையளவான பறவைகளும் உயிர் சுமந்து உலகில் வாழுவது பேரழகு. இவற்றை ரசித்து வாழப் பழகாத மனிதர்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை வீணில் கழித்ததாகவே கொள்ளமுடியும்.

மனிதர்களின் குடியிருப்புகளோடு நெருங்கிய தொடர்புடைய சிலப் பறவைகளும் உள்ளன. அவற்றுள் காகங்கள்,  குயில்கள், பூணில் குருவிகள்,  மைனாக்கள், மயில்கள், கோழியினங்கள்கள், சிட்டுக் குருவிகள், தூக்கணாங்குருவிகள், தேன்சிட்டுகள் … போன்றவை மனிதர்களின் பார்வையில் அடிக்கடி தென்படுபவை.

அவற்றுள் காகங்கள் மனிதனோடு மிக நெருங்கிய தொடர்பில் வசிப்பவை. அதற்கு அவற்றின் உணவுமுறையும் ஒரு காரணமாக இருக்க வேண்டும். அல்லது மனித குடியிருப்புக்களோடான அவற்றின் நெருக்கமே அவற்றின் உணவு முறைக்கு காரணமாக இருக்க வேண்டும்.  உலோகங்களைத் தவிர மற்ற அனைத்தையும் உண்டு செரித்துத் தள்ளும் உணவு மண்டலத்தைப் பெற்றிருப்பவை.

மனிதனை வானில் பறக்கவைக்க உந்துசக்தியாக விளங்கியதும் இந்த அழகிய பறவையினங்கள் தான். நமது பார்வைக்கு பழக்கப்பட்ட பறவைகளைத் தவிர மற்றவையனைத்துமே நமக்குப் புதுமையானதாகவும், அந்நியமானதாகவும் தான் தெரிகின்றன. பறவைகளின் அழகிய உலகத்தை கவனித்துப் பார்த்தால் மட்டுமே அவற்றின் இனிய மொழிகளையும்,  வாழ்க்கை முறைகளையும் உணர்ந்து நம் மனதை இழந்து ரசிக்க முடியும்.

மனித கற்பனையில் எத்தனையெத்தனையோ உலகங்கள் தோன்றுகின்றன. அவை அனைத்துமே நிஜக் கண்களால் பார்க்க இயலாதவைகளாகவும் உண்மைக்குப் புறம்பானதும் சுவாரசியத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு படைக்கப்பட்ட புனைவுகள். ஆனால், அவற்றை வியந்து, புகழ்ந்து தள்ளும் மனித மனங்களுக்கு இயற்கையின் அற்புதங்களைக் கண்டு கொள்ள தெரிவதில்லை என்பதே வியப்பான உண்மை.

நம்மைச் சுற்றிலும் உயிரினங்கள் நிரம்பிய மிக மிக அழகான பல உலகங்கள் இயங்கி கொண்டிருக்கின்றன என்பதை இன்னும் அறியாமலேயே வாழ்ந்து முடித்து உலகை விட்டு கடந்தது சென்று கொண்டேதான் இருக்கிறது மனித இனம்.

சிந்தனை வளர்ச்சியில் நிகரின்றி வளர்ந்து கொண்டிருக்கும் மனித மனம், ஏன் இன்னும் இயற்கையின் அழகியலை இனங்காணாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று வியக்க வைக்கிறது. இதுவும் ஒருவகையான அறியாமை தான்.

‘இந்தவகை அறியாமையினால்  இயற்கைக்கு மட்டுமல்ல, மனிதனுக்கும் பேரிழப்புதான்’ என்பதை அறிவுறுத்தும் நிலை எதார்த்தமானதாக்கப்பட வேண்டும்.

வனங்களின் பேரமைதியைக் குலைத்து , சுற்றுப்புறத்தை இயங்கு பொருளாக்குவதில் பறவைகளின் பங்கு மிக மிக அதிகம். ஆங்காங்கே பறவைகளின் சிறகடிக்கும் சத்தமும் , கீச்சிடும்  குரலொலியும், உணவைத்தேடிய, உணவு பரிமாற்றங்களோடான  அவற்றின் வாழ்க்கைப் போராட்டமும் ,காதல் கொண்டு கிசுகிசுத்து அலைந்து திரியும் களியாட்டங்களும் நம் அருகிலேயே அன்றாடம் நடந்து கொண்டேயிருக்கும் ஓர் உன்னதமான அழகியல்…!

ஆனாலும், அவற்றை பொருட்படுத்தாமல்  சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செயற்கையான படைப்புகளுக்குள்தான்  மனிதமனங்கள் வீழ்ந்து கிடக்கின்றன.காரணம் இயற்கையை ரசித்து மகிழும் பழக்கம் நமது மரபில் பெருமளவில் இல்லாமையே.!

நமது சுற்றுபுறத்தைத் தூய்மையாக்குவதில் காகங்களின் பங்கு அளப்பரியது. அத்தோடு தற்காப்புணர்வு மிகுந்தவை. தன்னையும், தனது குஞ்சுகளையும் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும். வெகு தொலைவிலிருந்து காகத்தின் கூட்டினை  கூர்ந்து கவனிப்பதைக் கவனித்தால் கூட பாய்ந்து வந்து தாக்க வரும். அந்த நபரை நீண்ட நாட்கள் அடையாளம் வைத்துக் கொண்டு எதிரியாக பாவிக்கும். அதே நேரம் உணவளிக்கும் நபரையும் அறிந்து வைத்து உணவை எதிர்பார்த்து இரந்து  நிற்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் வீட்டிற்குள் நுழைந்து உணவுப் பொருட்களை தூக்கிச் சென்று விடுவதிலும் காகங்கள் கில்லாடிகள். ஆனால் பறைவைகளில் இச்செயல்களை திருட்டு என்றெல்லாம் கருதி அவற்றிற்குத் தீங்கு விளைவிக்க எண்ணுவது  தவறு. அவற்றைப் பொருத்தவரை அச்செயல் களவு அல்ல…., தனது உணவுத் தேடலின் வெற்றி.

காகங்கள், பொதுவாக மனித குடியிருப்புகளுக்கருகில் கூட்டம் கூட்டமாக வாழும் பறவையினம். இவை உலகின் எல்லாவித பருவ நிலை மாறுபடுகளையும்  சமாளித்து வாழ்ந்து காட்டும் தன்மை உடையன. மத்திய ஆசியவில் தோன்றி பின்னர் ஐரோப்பா,வட அமெரிக்கா,ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கும் பறவியதாக பறவையிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்டங் காக்கை

கோர்வசு( Corves) பேரினத்தையும் கார்விடே( Corvidae) குடும்பத்தையும் சார்ந்தவை காகங்கள். இவற்றில் நாட்டுக் காக்கை, அண்டங் காக்கை என இருவகை உள்ளன. நமது பார்வையில் பறந்தலையும் சாம்பல் நிற கழுத்துப் பகுதியோடு கருமை நிறத்தில், எண்ணைப் பூசி, தலைச் சீவியதைபோல் அழகான தோற்றத்தில்  இருப்பவை நாட்டுக் காகங்கள். இவை வீட்டுக் காக்கை, அரசி காக்கை, மணிக் காக்கை என்றெல்லாம் தமிழர்களால் அழைக்கப் படுகின்றன.

நாட்டுக் காகங்களைவிட சற்றுப் பெரிய அளவில் முழுவதும் அடர் கருப்பு நிறத்திலான காகங்கள் அண்டங்காக்கை என்று அழைக்கப்படுகிறது. இவற்றின் அலகுகள் தடித்து காணப்படும். இவற்றை ஊர்ப்புறங்களில் பார்ப்பது அரிது. இவை, பெரும்பாலும் காடுகளில் தான் வசிக்கின்றன.

பெண் காகங்கள் மூன்று வயதிலும், ஆண் காகங்கள் ஐந்து வயதிலும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. ஒருமுறைக்கு மூன்றிலிருந்து ஐந்து முட்டைகள் வரை இடுகின்றன.

காகங்களின் கூடுகள் மிக மிக எளிமையாக வடிவமைக்கப் படுகின்றன.பொதுவாகப் பறவைகள் பொறிக்கப் போகும் குஞ்சுகளுக்கு போதுமான பாதுகாப்பு, உணவு கிடைப்பதில் எளிமை, இயற்கையின் மாற்றங்களை சமாளிக்கும் இட அமைவு ஆகிய அனைத்தையும் கவனித்தே கூடுகட்ட தொடங்குகின்றன. மழை, காற்று , வெயில், முட்டை மற்றும் குஞ்சுகளை விரும்பி உண்ணும் விலங்குகளுடமிருந்து தப்பிக்கும் வகையில் கூட்டை பாதுகாப்பாக வடிவமைக்கின்றன!

காகங்களின் கூடுகள் ஆங்காங்கே கிடைக்கும் நீண்ட குச்சிகளை கொண்டுவந்து குருக்கும் நெடுக்குமாக சொருகி வைத்திருப்பதைப் போல தோன்றும். ஆனால் அவை மிக நேர்த்தியாக முட்டைகளும் குஞ்சுகளும் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும் அடைகாப்பதற்கு வசதியாகவும் அமைக்கின்றன. இணையர் இருவரும் ஒன்றிணைந்தே காதல் களிப்போடும் குடும்ப பொருப்போடும் கூடுகட்டி பராமரிக்கின்றனர்.ஆணும் பெண்ணுமாக மாறிமாறி அடைகாக்கின்றன.

பெருங்காற்று , மழை போன்றவற்றால் கூட்டிலிருந்து குச்சிகள் விலகுவதும் கீழே விழுவதுமாக இருக்கும். எனவே, அவ்வப்போது கூட்டை செப்பனிட்டபடியே இருக்கின்றன.

சுமார் 20 ஆண்டுகள் வரை காகங்கள் உயிர் வாழுமாம். அறிவுத் திறனில் மற்றப் பறவைகளை விட சிறந்தவை காகங்கள்.மற்றப் பறவைகளை விட எளிதில் புரிந்து கொள்ளும் திறனுடையவை.

இதன் அறிவுத்திறனை , புரிந்துணரும் திறனைப் பயன்படுத்தி அவற்றை எளிதில் பயிற்றுவிக்கவும் முடியும் என்பதால் சில சமூக விரோத செயல்களுக்காக காகங்களைப் பயன்படுத்தும் நிலமை இருப்பதாகவும் அதன் காரணமாக காகங்களை வீடுகளில் வளர்ப்பதற்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் உள்ளன.

காகங்களின் மூளைப்பகுதியில் உள்ள ” நியோகார்டெக்ஸ்” என்னும் அறிவுத்திறனுக்கான பகுதியின் வளர்ச்சியே அவற்றின் அதிக அறிவிற்கான காரணமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காகங்களின் வாழ்வியலில் அவற்றிற்கு குறிப்பிடத்தக்க எதிரி ஒன்றுண்டு.!காகத்தின் சாயலிலும் நிறத்திலும் சற்று சிறிய அளவிலான ஆசியன் குயில்கள் தான் அவை.

தனது இனிய குரலிசையால் அது வாழும் வனத்தையும் ஏன் மனித இனத்தையும் கட்டிப் போடும் திறன் வாய்ந்த குயில்கள், காகங்களின் எதிரிகளாக வாழ்வதற்கு அவற்றின் ஓர் இயலாமையே காரணமாக உள்ளது தான், இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று.

குக்கூஸ்(Cuculs) என்னும் பேரினத்தைச்  சார்ந்த குயிலினத்திற்கு  கூடுகட்ட தெரியாது. அதற்காக தங்களது இனத்தை விருத்திச் செய்யாமலிருக்குமளவு அறிவிலிகளும் அல்ல குயில்கள்.

குயில்கள்

காகங்களும், குயில்களும் இளவேனிற் காலமான ஏப்ரல், மே மாதங்களையே இனப்பெருக்க காலமாக கொண்டிருப்பது மற்றொரு அதிசயம்.  காகங்கள் மனிதர்களின் வாழ்விடத்தை சார்ந்தே வாழும் பறவை.  குயில்கள் காகத்தின் கூடுகளுக்காக அவை வாழும் இடங்களை ஒட்டியே  வசிக்கின்றன. இதனால்தான் குயிலிசை நமக்கு மிக அருகில் கேட்க முடிகிறது.

குயில்கள், காக்கைகளை ஏமாற்றி அவற்றின் கூடுகளில் முட்டையிடுகின்றன.காகங்களின் கூடுகள் கிட்டாத நிலையில் சமக்கால இனப் பெருக்கத்தை உடைய பிற பறவைகளின் கூடுகளிலும் இவை முட்டையிட தயங்குவதே இல்லை. எனவே தான் குயிலைவிட அளவில் மிகச் சிறிய பறவைகளாலும் உணவூட்டப்படுவதை பார்த்து அதிசயிக்க முடிகிறது. மக்களால் இந் நிலை சரியான புரிதலின்றி, தாய்ப் பறவையை குஞ்சுகள் பாதுகாக்கின்றன என்று கருதுகின்றனர். நிஜத்தில் அது உண்மையல்ல. பூணில் குருவிகளின் கூடுகளிலும் குயில்கள் முட்டையிட்டு செல்கின்றன.

ஆனால், காகங்களின் கூடுகளைதான் இவை அதிகம் விரும்புகின்றன. காகத்தின் தன்னை ஒத்த உருவமும், அவற்றின் முட்டைகள் கிட்டத்தட்ட ஒரே நிறத்தில் இருப்பதால் காகங்களால் இனங்காண இயலாது காகங்களைப் போன்றே தனது குஞ்சுகளும் பராமரிக்கப்படும் என்ற குயில்களின் எண்ணம் தான்.  குயில்களின் இந்த நோக்கத்தை அறிந்து கொள்ளும் காகங்களோ, தங்களது கூடுகளின் அருகில் அவை எதேச்சையாகப் பறப்பதைக் கூட அனுமதியாமல் துரத்திச் செல்கின்றன. தங்களது கூடு அமைக்கப்பட்டக் கிளைகளருகில்  குயில்கள் வந்தமர்வதையும் அவற்றால் சகித்துக் கொள்ள முடியாமல் ஆவேசமாக விரட்டியடிக்கின்றன.

ஆயினும், குயில்கள் காகங்களின் கூடுகளில் முட்டையிடுவது என்பது லேசான விசயமல்ல. அது அவற்றின் இனத்தை தக்கவைக்கும் உயிர்ப்போராட்டம் என்றே கூற வேண்டும்.

முதலில் ஆண்குயில் காகத்தின் கூட்டருகே பறக்கும்…!  வழக்கம்போல் காகங்களில்  இணையர்களுள் ஒன்று முதலில் குயிலை விரட்டிச் செல்கின்றது. அந்நேரம் மற்றொன்று கூட்டில் முட்டைகளைப் பாதுகாத்தப்படி அமர்ந்திருக்கும். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக குயில் கூட்டை நெருங்கி காகத்தின் முட்டைகளை கொத்தும் பாவனைக்குச் செல்லும் போதுதான் காகங்கள் தங்களது அதிவேகத் தாக்குதல்களை நடத்துகின்றன. குயிலை விடாப்பிடியாக ஓட ஓடத் தொடர்ந்து சென்று கொத்தித் துரத்துகின்றன.இந்நேரம்  மறைந்திருந்து தக்க சமயத்திற்காகக் காத்திருக்கும் பெண்குயில் அக்கூட்டில் முட்டையிட்டு விட்டு, உடனே எழுந்து சென்று விடுகிறது. பின்னர் காகங்கள் தங்களது முட்டைகளாகவே கருதி அடைகாக்கின்றன.

குயிலின் முட்டை இளம் சாம்பல் பச்சை, காகத்தின் முட்டை இளம் நீல பச்சை நிறம். காகத்தின் முட்டையை விட குயிலின் முட்டை சற்று சிறியதாக உள்ளது. இருப்பினும் இச்சிறிய வேறுபாடுகளைக் காகங்களால் அறிந்து கொள்ள இயலாமல் குயில்களைத் துரத்தியடித்த மகிழ்ச்சியில் தனது முட்டையாகவே கருதி அடைகாக்கின்றன.

குயிற்குஞ்சுகள் 14 நாட்களில் பொரித்து வெளிவந்துவிடுகின்றன. ஆனால் காகங்கள்  18 நாட்களில் தான் பொரிக்கின்றன. ஆக ஓரிரு நாட்கள் முன்பே குயில்கள் பிறந்து உணவு பெறுதலில் முந்தி கொள்கின்றன.குஞ்சு பருவத்தில் காகங்களுக்கும் குயில்களுக்கும் எவ்வித வேறுபாடும் தெரிவதில்லை .எனவே அவற்றைப்  பாகுபாடின்றி பராமரிக்கின்றன காகங்கள்.!

பின்னர் ஒரு கட்டத்தில் குயில்களின் குரல் மற்றும் சுபாவ மாற்றங்களால் இனங்கண்டு அவற்றைத் துரத்தி விடுகின்றன.

பறக்கும் நிலைக்கு வந்த பிறகே குயில்கள் அடையாளம் தெரியவருவதால் அவற்றுள் பெரும்பாலான குயில்கள் தப்பித்துக் கொள்கின்றன.

ஆனாலும், காகங்களிக்கும் குயில்களுக்கும் இடையேயான இத்தகைய வாழ்க்கைப் போராட்டம் காலாகாலமாக தொடர்ந்துநடந்து கொண்டுதான் இருக்கின்றது. தன்னையறியாமலேயே குயிலினத்தை அழியவிடாமல் காப்பாற்றிவரும் பணியினை காகங்கள் செய்து வருவதும் சுற்றுச் சூழலில் உயிரினங்களின் சமநிலையைப் பாதுகாக்கும் ஓர் ஒப்பற்ற பணியே ஆகும்.

மனிதனுக்கு அருகில் வசிப்பதனாலோ என்னவோ, எண்ணற்ற காகங்களுள் ஒன்று இறந்து விட்டாலோ அடிபட்டு கீழே விழுந்து கிடந்தாலோ கூட்டமாக கூடி மனிதர்களைப் போலவே மரண ஓலமிட்டு தனது துக்கத்தையும் வேதனையையும் வெளிப்படுத்துகின்றன…மனிதர்களைப் போலவே.

காகங்களைப் போன்றே மற்ற பறவையினங்களும் பல்வேறு சிறப்பியல்புகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை உற்று நோக்கி ஆராய்வோமென்றால் ஒவ்வொன்று ஒவ்வொரு அற்புதம் என்பதை உணர முடியும்.

காக்கைக் கூடு நடத்திய செங்கால் நாரை விருதுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை!

கட்டுரையாளர்; த. ஜான்சி பால்ராஜ்

முனைவர், எழுத்தாளர், ஆசிரியர், சுற்றுச் சூழல் ஆர்வலர்.

குறிப்பாக பறவைகள் மீது அதிக பற்று கொண்டவர். ‘மாடும், வண்டியும்’ ( பண்பாட்டு ஆய்வு நூல்) உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time