குடும்பங்களில் ஆணாதிக்கம் முடிவுக்கு வருகிறது!

-பீட்டர் துரைராஜ்

அருமையான குடும்ப படம்! மனைவிகளின் உணர்வுகளை, எண்ணங்களை உணர முடியாத கோடானு கோடி இந்திய கணவன்மார்களின் பிரதிபலிப்பாக கதாநாயகன்! எவ்வளவு தான் கணவனுக்கு அடங்கிப் போவது எனத் தெரியாமல் தடுமாறி, எதிர்க்கத் துணியும் இளம் மனைவி!  நகைச்சுவை ததும்ப எடுத்துள்ளனர்!

நமது தேசிய கீதத்தின் கடைசி வரி தான், இந்தப் படத்தின் பெயர். இந்தப் பாடலை பாடினால், அந்த விழா அதோடு முடிந்ததாக பொருள். அதே போல இந்தப் படத்தில் வரும் ராஜேஷ் – ஜெயாவின் திருமண வாழ்க்கையும் அதோடு முடிந்துவிடுமோ… என்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்களோ, என்னவோ !

‘The Great Indian Kitchen’ என்ற மலையாளப் படம் கடந்த ஆண்டு திரை உலகில் பெரிய விவாதத்தை கிளப்பியது. அதன்  தாக்கத்தில் வெளிவந்த மற்றொரு மலையாளப்படம் என்று இதனைக் கருதலாம். முதல் இருபது நிமிடங்களுக்குப் பிறகு, வாய் விட்டு சிரிக்கக் கூடிய, நெடிய  நகைச்சுவை படமாகவும் இது உள்ளது.

வழக்கமாக, எங்கும் நடக்கும் கதை தான். + 2 படித்த ஒரு பெண்ணுக்கு ஒரு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கிறது. குடும்பத்திற்கு ‘நல்லது’ செய்யும் மாமா ஒரு வயது வந்த பெண்ணை எப்படி வெளியூருக்கு   அனுப்புவது என்கிற ‘பொறுப்பான’ கேள்வியைக் கேட்கிறார். பிறகு அவரே, தனக்கு தோதாக ஒரு பையனை அருகில் உள்ள ஊரில் பார்த்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

மணமகன் ராஜேஷ், ஒரு கோழிப் பண்ணை நடத்தி வருகிறான். சுயமாக தொழில் நடத்தி வளர்ந்தவன். ‘பெண் தன்னை விட அழகு குறைவாக இருந்தால் போதும்’ ‘குழந்தை பிறந்துவிட்டால் மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீடு  போய்விட மாட்டாள்’ என்பது போன்ற ‘நல்ல ஆலோசனைகளை’ அவனுக்கு அண்ணன் போல இருப்பவன்  வழங்குகிறான்.

ராஜேஷுக்கும், ஜெயாவிற்கும் திருமணம் நடக்கிறது. ஆரம்ப சடங்குகள் முடிந்த பின்பு, ராஜேஷ் சாதாரண ஆண் மகனாகிறான். அவனுக்கு இடியாப்பமும், கடலைக் குழம்பும் தினமும் வேண்டும். ஓட்டலுக்கு போனாலும்,  இவனுக்கு பிடிப்பதைத் தான் அவன் மனைவியும் சாப்பிட வேண்டும். ஜெயா தனது குமுறல்களை தனது அம்மாவிடம் சொல்கிறாள். அண்ணனிடம் சொல்கிறாள். கணவனோடு இருப்பதுதான் குடும்பத்திற்கு நல்லது என அவர்களும் கூறுகிறார்கள்.

ஆனால், பொறுக்க முடியாமல் ஆறு மாதத்திற்குப் பிறகு, ‘ ஒரு முடிவு’ எடுக்கிறாள். அது,  சமுதாயத்தில் விவாதப் பொருளாகி விடுகிறது. இரு தரப்பாரும் அவரவர் ‘மேதமைக்கு ஏற்ப’ அறிவுரை வழங்குகிறார்கள்.

விலா வலிக்கும் அளவுக்கு ரசிகர்களுக்கு சிரிப்பு ஏற்படுகிறது. இப்போது மனைவி செய்வது சரியா? என்ற விவாதத்தை ரசிகர்களுக்கு மாற்றி விடுகிறார் விபின் தாஸ். அவர் தான் இந்தப் படத்திற்கு வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான விருதை இந்தப் படம் பெறக் கூடும். சாதாரணமாக நாம் இயல்பாகப் பேசுவதையே வசனங்களாக்கி வைத்துள்ளார்.

கதாநாயகனாக பாசில் ஜோசப் நடித்துள்ளார்;  ‘வெற்று’ கௌரவத்தை மனைவியிடம் காட்டும் எத்தனையோ ஆண்களில் ஒருவராக இருக்கிறார். இவர் கார் போகும் இடத்தில் மிளாகாயைக்  காய வைக்கக் கூடாது என அம்மாவிடம் சண்டை போடுகிறார். ’தன் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டுத் தான், தன் அக்கா குண்டச்சியாக இருக்கிறாள்’ என நினைக்கிறான்.( இவள் கணவனோடு கோபித்துக் கொண்டு வீட்டில் இருக்கிறாள். ஆனால், கணவன் அழைத்தபாடில்லை)  தான் வருவதைக் கூட பார்க்காமல், தன் மனைவி செல் போனையே பார்ப்பதை தவறு என்று அவளை அடிக்கிறான். அடித்து விட்டு மன்னிப்பு கேட்டு, ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறான்.( அவனுக்குப் பிடித்ததை வாங்கித் தருகிறான்). முற்பகுதியில் இவன் காட்டும் கித்தாய்ப்புதான், பிற்பகுதியின் சிரிப்புக்கு காரணமோ , என்னவோ! !

+ 2 படிக்கும் மாணவியாக, யூ டியூப் மூலமே கற்கும் ஆற்றல் உள்ள பெண்ணாக, மனக் குமுறல்களை அடக்கி வைக்கும் சிறு பெண்ணாக தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ளார். நாம் பார்க்கும் எத்தனையோ பெண்களில்  இவரும் ஒருவர். ஜெயா பார்வையில் தென்படுவது கோபமா, ஏமாற்றமா, ஆற்றாமையா ? எதை வேண்டுமானாலும் நாம் பொருத்திக் கொள்ளலாம். அதனாலேயே தர்ஷணாவிற்கு  அழகு கூடி விடுகிறது. இப் படம் ஹாட்ஸ்டாரில் ஓடுகிறது.

ராஜேஷை, அப்படியொன்றும் ஒரேயடியாக நாம் திட்டமுடியாது. மனைவி வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை வாட்ஸ் அப்பில் அனுப்பினால், எத்தனை கணவர்கள் அதனைப்  பார்த்ததிற்கு ஒப்புதல் குறி அனுப்புகிறார்கள். ஏன் பாசமாக ஒரு காதல்குறி ‘(Love symbol) அனுப்பினால் தான் என்ன? என்று ராசி செய்வதற்காக அவன் நண்பன் ஆலோசனை கூறுகிறான். இவனிடம் உள்ள இயல்புகள், ரசிகர்களிடமும் உள்ளது தான். இதனாலேயே இவன் மீது லேசான பரிதாபம் கூட நமக்கு வந்து விடுகிறது.

முற்போக்கு பேசும் இளைஞர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கிறார்கள் என தவறாக எண்ண வேண்டாம். அவர்களும் மனைவியின் முகநூல் நண்பர்கள் யார் என பார்க்கிறார்கள்; முகநூலின் முகப்பு படத்தை எனக்குத் தெரியாமல் ஏன் மாற்றினாய் எனக் கேட்கிறார்கள். இன்னார் இன்னாரிடம் நண்பராக இருக்கக் கூடாது என காதலிக்கு  சொல்கிறார்கள். எதனால் இத்தகைய கட்டுப்பாடுகளை ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டும்?

எந்தச் சூழ்நிலையிலும் ஜெயாக்களால் தனியாக வாழ முடியும்; ஆனால், ராஜேஷால்  தனியாக வாழமுடியுமா ?  இது தான் ராஜேஷ் எதிர் கொள்ளும் பிரச்சினை.  படத்தின் இறுதிக் காட்சியில் குடும்ப நீதிமன்றத்தில் வரும் நீதிபதியான பெண்மணி கேட்கும் ‘கடா முடாவான’ கேள்விகளுக்கெல்லாம் ராஜேஷிடம் பதில் இல்லை. ஒரு வழியாக இறுதியில் படம் முடிகிறது.

பெண் பார்க்க வரும்போது, அந்த ஊரில் கோழி விலை என்னவென்று ராஜேஷ் கேட்கிறான்; அதே கேள்வியை ஜெயா இறுதியில் அவனிடம் ஒரு விவரமாக கேட்டு முடிக்கிறாள். இப்படி நுட்பமாக பல காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநரான விபின் தாஸ். பெரிய அறிவுரைப் படமெல்லாம் இல்லை. முழு நீள நகைச்சுவைப் படம். ” நான் சமீபத்தில் பார்த்த படங்களில், இதனை  மிகவும் ரசித்தேன் ” என்று கூறும் ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி்.அமுதன் “இந்தப்படத்தை தமிழில் எடுத்து, பெண்களுக்கு அறிவுரை  சொல்லித் தொலைக்காதீர்கள் புண்ணியவான்களே” என்று தனது முகநூலில் கூறுகிறார்.

மாறியுள்ள சமூகச் சூழலில் இந்தியக் குடும்பங்களில் இனியும் ஆணாதிக்கம் என்பது சாத்தியமற்றதாகிக் கொண்டுள்ளது. அதாவது, ‘ஜெய,ஜெய,ஜெய ஹே..’ என முடிவுக்கு வருகிறது என்பதை சூசகமாகப் படம் உணர்த்துவதாகவும் கொள்ளலாம்!

விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time