நம்ம ஸ்கூல் திட்டத்தின் முழுப் பின்னணி இது தான்!

- சு.உமாமகேஸ்வரி 

பாஜக அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் செயல்வடிவமே நம்ம ஸ்கூல் பவுண்டேசன் ! ‘தரமான இலவச கல்வி தரக் கூடாது’ என்பதைத் தான் இலைமறைக் காயாக பல திட்டங்களின் வழியே செயல்படுத்து கின்றனர். ..!

நம்ம ஸ்கூல் திட்டத்தின்  தலைவராக கல்விச் சேவைக்கு சம்பந்தமில்லாத டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் வேணு சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராக உலக சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வ நாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் ஏன் வருகின்றனர் என்றால் , பாஜக அரசின்  புதிய தேசியக் கல்விக் கொள்கையில்  தனியார் நிறுவனங்களை அழைத்து கல்விக்கு பயன்படுத்தக் கூறியுள்ள பகுதிகள் மிகத் தெளிவாகக் இதைத் தான் அறிவுறுத்துகின்றன!

1986 கல்விக் கொள்கையின் நீட்சியே நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டம்

1986 கல்விக் கொள்கை வந்த போது அதன் அம்சங்களில் ஒன்று  தான் தனியார் நிறுவனங்களுடன் அரசு கைகோர்ப்பது (Public Private Partnership) என்பது. 1990 ஆம் ஆண்டு , அகில உலக எழுத்தறிவு வருடமாக அறிவிக்கப்பட்டது.

UNESCO,UNICEF,UNFPA,UNDP மற்றும் WORLD BANK ஆகிய ஐந்து அமைப்புகளும் தான் இத்திட்டங்களை அகில உலக அளவில் முன்னெடுத்தன. அனைவருக்கும் கல்வி என்ற கவர்ச்சியான கோஷத்தை இவர்கள் முன்வைத்தனர்!

சர்வதேச அமைப்புகளின் சதி வலை தான், இலவசக் கல்வியை இல்லாமல் ஆக்குவது!

அந்த மாநாட்டில்  155 நாடுகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தாய்லாந்து நாட்டில் ஜோமைட்டின் என்ற இடத்தில் நடந்த மிகப் பெரிய இம்மாநாட்டில் கல்வியை இலவசமாகத் தரக்கூடாது , வியாபாரமாக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு பல நாடுகள் கையெழுத்திட்டன. அதில் இந்தியாவும் அடக்கம்.

அதன்படி, இந்தியாவில் அப்போதே அறிமுகப்படுத்திய திட்டம் தான் மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம் (DPEP) என்பது. அதில் சற்று நிதி ஒதுக்கப்பட்டு, பள்ளிகளின் கட்டிடங்கள், வகுப்பறைகள் இவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அப்போதிருந்தே ஆசிரியர் நியமனத்திற்கோ, தரமான கல்வி தரவோ முக்கியத்துவம் தரப்படவில்லை. அந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக கற்றலில் இனிமை, ஆடல் பாடல் மூலம் கற்பித்தல்.. உள்ளிட்ட பல திட்டங்கள் 90 களின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டன.

2001 க்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட SSA என்ற அனைவருக்கும் கல்வித் திட்டம் தொடக்க , நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1 – 8 வகுப்புகளுக்கானது. இது பத்தாண்டு காலம் பல திட்டக் கூறுகளுடன் நடைமுறைப் படுத்தப்பட்டது. இத்திட்டத்திலும் கூட, ஆசிரியர்கள் நியமனம் குறித்தோ தரமான கற்றல் – கற்பித்தல் சூழலை உருவாக்கவோ, எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

 அதன் பின்னர் 2011-12 இல் தொடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டமான RMSA திட்டமானது 9-12 வகுப்பு மாணவர்களுக்கு அதே போன்று பல திட்டக் கூறுகளை செயல்படுத்தும்படி நடைமுறைப்படுத்தப்பட்டது. பத்தாண்டுகளுக்குப் பிறகு SSA மற்றும் RMSA இரண்டும் இணைந்து சமக்க்ஷர அபியான் என்று மாற்றப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. அதன் வழியாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு திட்டக் கூறுதான் நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன் ! .

அரசிடம் நிதி இல்லையா ? கல்வி வரி எங்கே போயிற்று ?

வெளியிலிருந்து பார்ப்போருக்கு அரசுப் பள்ளிகள் நலிவுற்று இருக்கின்றனவே. அவற்றை மேம்படுத்த நிதி தேவைப்படுகிறது. ஆகவே, அரசு நிதியைத் திரட்டத்தானே இத்திட்டத்தை செயல்படுத்துகிறது என்ற சிந்தனை உருவாகி நேர்மறையாகப் பார்ப்பதை கவனிக்க முடிகிறது. ஆனால், அரசின் கடமை அனைவருக்கும் தரமான, சமமான கல்வியைத் தருவது. தன்னிடம் நிதி இல்லை என்று தொடர்ந்து அரசு கூறி வருவது  ஏற்புடையதல்ல!  அரசிடம் ஏராளமான நிதி இருக்கின்றது. தமிழ்நாட்டு மக்கள் தினசரி வாங்கும் ஒவ்வொரு  பொருட்கள் மூலமாகவும் அரசுக்கு கல்வி வரி கட்டி வருகின்றனர். அவற்றை முறையாக செலவிட்டாலே இத்தனை வருடங்களில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் தன்னிறைவு பெற்றிருக்கும்.

அதற்கான முயற்சிகளையோ, செயல்பாடுகளையோ எந்த அரசும் எடுப்பதாகத் தெரியவில்லை. அதை விடுத்து அரசுப் பள்ளிகளை மோசமான அவல நிலைக்கு தள்ளிவிட்டு, பின்பு அதையே, காரணமாக வைத்து மக்களுக்கு அரசுப் பள்ளிகள் மீது  பரிதாப உணர்வை உருவாக்கி, இப்படியான திட்டங்களை முன்னெடுக்கிறது.

அரசுப் பள்ளிகளுக்கு உதவும் திட்டமா இது ? ஏன் மையப்படுத்த வேண்டும் ?

ஏற்கனவே, பல ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளுக்கு உதவி செய்யும்  நன்கொடையாளர்கள் உண்டு . உள்ளுர் சமூகம் விரும்பி தங்கள் பள்ளிகளுக்கு நிதி உதவி செய்து வருகிறது. புரவலர் திட்டம் உள்ளது. பெற்றோர் – ஆசிரியர் அமைப்புகள் நிதி திரட்டி பள்ளிகளுக்கு உதவி வருகின்றன! லயன்ஸ் அமைப்பு உள்ளிட்ட அந்தந்த பகுதிகளில் செயல்படும் அமைப்புகள் அப்பள்ளிக்கு உதவி வருகின்றன. அது மட்டுமன்றி, முன்னாள் மாணவர்களும் அவரவர் இயன்ற பொருள் உதவி , உடல் உழைப்பு என செய்து வருகின்றனர். நேரடியாக பள்ளிக்கு இவர்கள் செய்யும் உதவிகள், எவ்வித ஊழலுக்கும் இடமின்றி, பள்ளியின் மீது அக்கறை கொண்ட திட்டங்களாக மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், இது போன்ற அனைத்தையும் இவர்கள் உருவாக்கியுள்ள இணைய தளம் வழியாக மையப்படுத்துவது ஏன்?  மட்டுமல்லாமல், தனியார் நிறுவன பெரு முதலாளியின் தலைமையின் கீழ் இவற்றைக் கொண்டு செல்வது எதிர்காலத்தில் அரசுப் பள்ளிகள் அழிந்து போவதற்கான ஆரம்பமாகவே பார்க்க முடிகிறது.

அரசுப் பள்ளிகளை அரசு கை விடுகிறதா ?

தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் 37,554  அரசு பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். சுமார் இரண்டு லட்சத்து  இருபத்தைந்தாயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு மேலாக, அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் இல்லை. வகுப்புக்கு ஓராசிரியர் என்ற நிலை இல்லை. துப்புரவுப் பணியாளர்கள் நியமனமோ  இரவுக் காவலர் , அலுவலக உதவியாளர் என எந்த நியமனமும் இல்லை. மின்சார வசதி , மின் கட்டணம் , காற்றாடி , மின் விளக்குகள், குடிநீர் , கழிப்பறை வசதி  போன்ற மிக அடிப்படையான தேவைகளைக் கூட நிறைவேற்றாமல் தான் மெத்தனமாக இருக்கின்றனர்.

போட்டோ; சமூக புலன் விசாரணை

ஏற்கனவே வசதியற்ற சூழலில் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் மற்றவரிடம் கையேந்தி யோ அல்லது தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்தோ சமாளித்து வருகின்றனர். அப்படி அவர்கள் நிதி திரட்ட செலவிடும் நேரங்கள், கொடையாளர்களைத் தேடும் நேரங்கள் என  கற்றல் கற்பித்தலை பாதிக்கவே செய்கிறது.

இப்படியான சூழலில், மீண்டும் முறைப்படுத்தப்பட்ட இந்த நன்கொடைத் திட்டம் மேலும், ஆசிரியர்களை தங்கள் கற்பித்தல் பணியிலிருந்து விலகிச் செல்லவே வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆக, அரசு கல்வி தரும் தங்கள் கடமையிலிருந்து விலகிச் செல்கிறது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

என்ன செய்யலாம்  ?

CSR  (Corporate Social Responsibility) என்பது Public Private Partnership இன் நீட்சியே . CSR வழியாக ஒரு நிறுவனம் தான் அடையும் இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதப் பங்கை சமூகத்திற்கு செலுத்த வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில்  அந்த நிதியை அரசு வசூலிப்பதில் தவறில்லை. ஆனால் அவற்றைப் பெற்று நேரடியாக ஒவ்வொரு பள்ளிக்கும் என்ன தேவையோ அதை அரசு தான் செய்ய வேண்டும் . தனியாரைப் பங்குதாரர்களாக அனுமதிக்கக் கூடாது. அனுமதிப்பது காலப் போக்கில் அவர்கள் கைகளுக்கு அரசு பள்ளிகள் செல்வதாக அமைந்துவிடும்

அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட மேற் சொன்ன அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பணியை அரசு முன்னெடுக்க வேண்டும் . தரமான கல்வியை ஏழை எளிய மக்களின் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில் வழங்க வேண்டும்.

அருள் கூர்ந்து, நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும், நம் அரசு!

கட்டுரையாளர்; சு.உமாமகேஸ்வரி

கல்வி செயற்பாட்டாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time