காந்தியின் நிழலாய் வாழ்ந்த கர்மயோகி!

- விப்ர நாராயணன் திருமலை

மகாத்மா காந்தியை உலகத்திற்கே தெரியும்! காந்தியை நிழல் போல தொடர்ந்த – மகாத்மாவின் சேவைக்கே இந்த மண்ணுலக வாழ்வை அர்பணித்துக் கொண்ட – மகாதேவ தேசாயை பலருக்கு தெரியாது! காந்தி என்ற ஒளிவிளக்கு பிரகாசிக்க, தன்னை திரியாய் ஒப்புக் கொடுத்த மகாதேவின் வாழ்க்கை ஒப்பற்ற தியாக வாழ்க்கையாகும்!

இந்த உலகில் 50 ஆண்டுகள் வாழ்ந்து 100 ஆண்டிற்கான சேவை செய்து மறைந்தவர். தன்னை பூஜ்யமாக கரைத்துக் கொண்டவர்.  ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, சமஸ்கிருதம். ஹிந்தி, பிரெஞ்ச், வங்காளம் முதலிய மொழிகளைக் கற்று, பல நூல்களைக் குஜராத்தியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தவர். 25 ஆண்டுகள் காந்திஜியுடன்  செயலாளராக அவருடைய நிழலாக வாழ்ந்தவர். காந்திஜியின் மறு உடல் என்று  ராஜாஜி அவர்களால் பாராட்டப் பட்டவர். அவர்தான் மகாதேவ் தேசாய்.

இவர் காந்திஜியைப் பற்றித்தான் எழுதினாரே தவிர, தன்னைப் பற்றி எங்கும் சொன்னதில்லை, அவருடைய நிழலாக வாழ்ந்துவிட்டுச் சென்று விட்டார்!

”இந்திய  வரலற்றில் ஒரு  திருப்புமுனை ஏற்படுத்தவே இறைவன் இவர்கள்  இருவரையும் இணைத்திருக்கிறார் போலும்! 1915-ல் காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்தபின் எப்பொழுதும் தன்னுடன், இருப்பதற்கு ஒரு  திறமைவாய்ந்த, நம்பிக்கையான, உண்மையான  உதவியாளரைத்  தேடினார் .  மகாதேவ் தேசாய் நட்பார்வம் கொண்ட உணர்ச்சி மயமான இளைஞன்,  ஆங்கிலத்திலும்  குஜாராத்தியிலும் ஆழ்ந்த  புலமை பெற்றவர், சுய நினைவுடன்  இயல்பாகவே    ஒரு தகுந்த மனிதனுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்.  அவர்களின் விருப்பங்கள் ஒன்றாக இருந்தாலும், இறையருள் இல்லையேல் ஒருவரை ஒருவர் கடந்து சென்றிருப்பர். இறைவனின் திட்டம் நமக்குப் பேரதிசயம் தான்.  தேசாயும் காந்தியும் ஒருவரை ஒருவர் கண்டுபிடித்ததும், காந்தியின் ஆற்றலைப் பெருக்கியதும்  இந்திய விடுதலையை வேகப்படுத்தியதும்  வரலாறு கண்ட  அற்புதமென்று  நான்  கூறுவேன்” என்று காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி கூறுகிறார்.

மகாத்மா காந்தியும், மகாதேவ தேசாயும்!

1915 ஆம் ஆண்டு மகாதேவ், தன் நண்பர் நரஹரி பரீக்குடன் காந்தியை முதன் முதலில் சந்தித்தார்.காந்தி, மகாதேவைப் பார்த்தவுடன் அன்பும்,அர்ப்பணிப்பும் கலந்து நிற்கும் இந்த இளைஞன் தான் தன் செயலாளர் என்று முடிவெடுத்துவிட்டார். இரண்டு வருடங்கள் செயலாளராக பணியாற்றிய மகாதேவை தன்னுடன் நிரந்தரமாகவே வந்து தங்கி விடும்படி காந்திஜி கேட்டுக் கொண்டார். அதன்படி மகாதேவ் தன் குடும்பத்துடன் 1917 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம்நாள் காந்தியின் அஸ்ரமத்தில் 24 மணி நேர சேவகராக  இணைந்தார்.

காந்தியின் குரலாக செயல்பட்டார் மகாதேவ்.  காந்திஜி   தன் கட்டுரையை எழுதி முடித்தவுடன் M. K. G  என்று கையெழுத்து போட்டிருப்பார். அதைப் படித்த மகாதேவ் காந்திஜி கையெழுத்தை நீக்கிவிட்டு, அதன் கீழ்  M. D என்று எழுதி விடுவாராம்! ஆம், காந்தியின் அறிக்கை யாவும் மகாதேவ் தேசாய் பெயரில் தான் ஊடாக்ங்களுக்கு தரப்படும். அதே போல், மகாதேவ் எழுதிய கட்டுரையின் கீழ் தனது கையெழுத்தை எழுதி விடுவாரம் காந்தி !  இந்த தகவல் மகாதேவ் அவர்களின் மகன் நாராயண் தேசாய் குறிப்பிட்டுள்ளதாகும்! காந்தி பேசுவதற்கு முன்னதாகவே என்ன பேசுவார் என்பதை ஊகித்து மகாதேவ் எழுதி பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பி விடுவாராம்! இவ்வாறு இருவரும் ஈருடல், ஓருயிராக வாழ்ந்தார்கள்.

காந்தியோடு நடை பயணத்தில் மகாதேவ தேசாய்!

இவர் 1892 ஆம் ஆண்டு ஜனவரி 1 –ல் குஜராத் மாநிலத்தில் சூரத் மாவட்டத்தில் சரஸ் என்ற ஊரில் பிறந்தார்.   இவருடைய தாயார் ஜமுனாபாய். தந்தையார் ஹரிபாய். அவர்கள் சிறந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர். வறுமையிலும் மகாதேவ் நன்றாகப் படித்தார். 1905 ஆம்  ஆண்டு  துர்காபென்னைத் திருமணம் செய்து  கொண்டார். மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றார். பம்பாயில் எல்பின்ஸ்டன் கல்லூரியில்   பி. ஏ. தத்துவயியல் படித்து பட்டம் பெற்றார். பின் எல். எல் பி பட்டம் பெற்றார். வக்கீலாக செயல்படவில்லை.  மொழிபெயர்ப்பு அலுவலகத்திலும், கூட்டுறவு வங்கியிலும் பணியாற்றினார்.

தந்தையாரின் அனுமதிபெற்று மகாதேவ் தன் குடும்பத்துடன் காந்திஜியுடன் சேர்ந்தார்.  சேர்ந்த மறுநாளே காந்திஜியுடன் இருவரும் சம்பரானுக்குச் சென்று விவசாயிகளுக்கான களப் பணி செய்யத் தொடங்கிவிட்டனர். கிராம நிர்மாணத்திட்டப் பணிகளில் முழுமனதுடன் முழுவீச்சில் இருவரும் ஈடுபட்டனர். காந்திஜியுடன் மகாதேவ் சுற்றுப்பயணம் செய்தார். நாட்குறிப்பு எழுதும் பணியை  சேர்ந்த நாளிலிருந்தே தொடங்கிவிட்டார்.

காந்தியின் எண்ணங்களை எழுத்தாக்கிய மகாதேவ தேசாய்!

கேதா விவசாயிகள் போராட்டம். அஹமதாபாத் ஆலைத்தொழிலாளர்களின் போராட்டம் முதலியவற்றில் ஈடுபட்டு காந்திஜிக்கு வேண்டிய குறிப்புகளைச் சேகரித்துக் கொடுத்தார். மனைவியுடன் இருந்த நாட்கள் மிகக் குறைவுதான்!   காந்திஜி, மகாதேவை தன் செயலாளராக  உருவாக்குவதற்கு தக்க பயிற்சியைக் கொடுத்தார். எளிய வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தார். விவாதங்களின் மூலமாக அவருடைய ஞானத்தைப் பெருக்கினார்.அதனால், மகாதேவ் செயலாளராக மட்டுமல்லாது, சேவகனாக, காந்தியின் தூதராக, சமையற்காரராக,   துணி துவைப்பவராக , விருந்தினர்களைப்  பேணிக் காக்கும் பொறுப்பாளராக இருந்தார். நூல் நூற்பார், துணி நெய்வார், காந்திஜியின் சொற்பொழிவிற்கு குறிப்புகள் எழுதுவார். முடிந்தால் முழுச் சொற்பொழிவையும்  எழுதி விடுவார். இவ்வாறு காந்திஜியின் வாழ்வோடு கலந்திருந்தார் மகாதேவ்.

நவஜீவன், யங் இந்தியா, ஹரிஜன் போன்ற பத்திரிகைகளில் பொறுப்பாளராக இருந்து சிறந்த பத்திரிகை ஆசிரியர் என்று பெயர் பெற்றார்.  மகாதேவ்பாய் இந்திய பத்திரிகைத் துறை பற்றி ஒரு கையேடு தயாரித்தார். ’’ ஒரு சத்தியாக்கிரகி பத்திரிகையாளர், உண்மையின் ஆணிவேரைக் கண்டுபிடிக்க முயல்வார்’’ என்று மகாதேவ் கூறுவார். இந்தியப் பத்திரிகையாளர் சங்கத்தில் உறுப்பினராய் இருந்தார். இவரிடமிருந்து தகவல்கள் பெறுவதற்கு பத்திரிகையாளர்கள் காத்திருப்பார்கள். குஜராத் வித்யாபீட மகாநாட்டில் இதழியல் துறை பற்றி ஒரு அருமையான வரலாற்றில் பதியப் பெற்ற சொற்பொழிவு ஆற்றினார்.

மகாதேவ தேசாயின் தபால் தலை

மோதிலால் நேரு நடத்திவந்த ‘’இண்டிபென்டன்ட்’’ பத்திரிகையை நடத்தும் பொறுப்பும் மகாதேவிடம் வந்தது.  இப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் தடைசெய்யப்பட்டன. அதனால்,  மோதிலால் நேரு , ஆசிரியர் ஜார்ஜ் ஜோசப் முதலியோர் கைது செய்யப்பட்டனர்.  பின்னர், மகாதேவும் கைதானார்,   அப்பொழுது அவருடைய மனைவியும் உடன் இருந்தார். 1921 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம்தேதி நைனி சிறையில் அடைக்கப்பட்டார், பின் ஆக்ரா, லக்னோ சிறைக்கு மாற்றப்பட்டார், சிறைச்சாலையை தவச்சாலையாகக் கருதினார்!

நவஜீவன் இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றிற்கு குஜராத் இலக்கியக் கழகம் மகாதேவிற்கு ஒரு பரிசை அளித்தது.  சர்தார் பட்டேலுடன்  பர்தோலி போராட்டத்தில் ஈடுபட்டு பெரும் பங்காற்றி படேலின் நன்மதிப்பைப் பெற்றார்.

1930 ஆம் ஆண்டில் உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது  சிறந்த பத்திரிகையாளராக இயங்கி போராட்ட நிகழ்வுகளை பத்திரிகையில் எழுதி வந்தார். குஜராத் முழுவதும் பயணம் செய்து உப்புச் சத்தியாக்கிரகத்தைப் பற்றி சொற்பொழிவாற்றினார்; பின் கைதானார்.   லண்டனில் நடந்த வட்டமேஜை மகாநாட்டிற்கு காந்திஜியுடன் சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சிகளை இந்திய மக்களுக்குத் தெரியப்படுத்தினார். அதனால், பிரிட்டிஷ் பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெற்றார். ரோமன் ரோலண்ட்.   முசோலினி முதலியோரைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். ஐரோப்பியர்களின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றார் மகாதேவ்.

பூனா ஒப்பந்தத்தின்போது 1932 –ல் எரவாடா சிறையில் காந்திஜியுடன் படேல் மகாதேவ் முதலியோர் கைதானார்கள்.  மகாதேவ் ஹிண்டல்கா சிறையில்   இருந்தபோது ’’காந்தியின் பார்வையில் கீதை’’ என்ற காந்திஜியின் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு அவர் எழுதிய  ’என் சமர்ப்பணம்’ என்ற முன்னுரை மிகவும் புகழ்பெற்றது. அவரது அறிவாற்றலுக்கும், மேதமைக்கும் அந்த நெடிய முன்னுரை மகத்தான சான்று! சிறைவாசம் முடிந்து காந்திஜியின் தீண்டாமை சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டார்.

1938-ல்  பூரி ஜகன்னாதர் ஆலயத்திற்கு கஸ்தூர்பாவையும் துர்காபென்னையும் அழைத்துச் சென்றார். அங்கு கஸ்தூர்பா ,துர்காபென் மற்றும் சிலர்   கோவிலுக்குள் சென்றனர், மகாதேவ் கோவிலுக்குள் செல்லவில்லை.இச்செய்தி காந்திஜியின் செவிக்கு எட்டியது. காந்திஜி கோபமடைந்தார். ஏனென்றால் ஹரிஜனங்களை அனுமதிக்காத ஆலயத்திற்குள் எப்படிச் செல்லலாம் என்பது தான். தீண்டாமையைப் பற்றிப் பிரசாரம் செய்யும் நாமே எப்படி செல்லலாம். அதனால் மகாதேவைக் கடிந்துகொண்டார். மகாதேவ் மனம் வருந்தி தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக அவரை விட்டுப் பிரிவதென்று முடிவு செய்து காந்திக்கு கடிதம் எழுதி விட்டார். காந்தி, மகாதேவின் மனதை மாற்றிவிட்டார்.

அயராத உழைப்பால் மகாதேவின் உடல்நிலை அடிக்கடி  மோசமானது. 1942, ஆகஸ்ட் 8 ஆம்தேதி காந்திஜியுடன் மகாதேவ் ஆகாகான் அரண்மனையில்  சிறைப் படுத்தப்பட்டார்.  15 ஆம்தேதி காலை மகாதேவின் உடல்நிலை மோசமாயிற்று.  அவருக்கு இதய வலி உண்டாயிற்று.  காந்தி அவரது கன்னத்தைத் தடவிக் கொடுத்து, தன் மடியில் படுக்க வைத்தார். அக்காட்சி காண்போரின் மனதை உருக்கியது. சுசிலா நய்யார். சரோஜினி நாயுடு, காந்தி,   கஸ்தூர்பா முதலியோர் உடனிருந்தனர். காந்திஜியின் மடியில் மகாதேவின் உயிர் பிரிந்தது.

இச்செய்தி 22 நாட்கள் கழித்துத்தான்  அவர் மனைவிக்குக் கிடைத்தது. காந்திஜியின் ஆன்ம ஓலி அவரிடமிருந்து பிரிந்தது. இவருக்கு ஆகாகான் அரண்மனையில் ஒரு சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

மகாத்மாவைப் பற்றிய மகாதேவ தேசாயின் நூல்!

காந்திஜி மகாதேவைத் தன்மகன் போல் பாவித்தார், ரயில் பயணத்தின் போது இரவு முழுவதும் கழிப்பறையில் அமர்ந்து நாட்குறிப்பு எழுதி முடித்து அதிகாலை அசந்து தூங்குவார் மகாதேவ். அப்போது அந்த அதி காலையில் தேநீர், ரொட்டியுடன் காந்திஜி அவரை எழுப்புவார்.

சிலசமயம் மொட்டைமாடியில் மகாதேவ் தூங்கிவிடுவார், அவரை எழுப்பி  கூடத்தில் படுக்க வைப்பார் காந்திஜி.

மகாதேவ், தன்னைப் பூஜ்யமாக்கிக் கொண்டு, காந்தியின் புகழ்பரப்பவே வந்தார், பூஜ்யமானார்.  உயரிய இலக்கியவாதியாக இருந்தும் அவர் அதில் ஈடுபடவில்லை. பணிவின் இலக்கணமாக வாழ்ந்தார். காந்தியை உலகறியச் செய்த தன்னைத் தானே மெழுகாக உருக்கிக் கொண்டார்! மகாதேவும் அவர் மனைவியும் தங்கள் வாழ்வை காந்திஜியிடம் அர்ப்பணித்துவிட்டனர்.

மகாதேவ் அவர்கள் காந்திஜிக்குப் பணிவிடை செய்து அவர் தம் காலடியில் இறக்க வேண்டும் என்று   ஆசைப்பட்டார், அவர் ஆசை இறைவன் அருளால் நிறைவேறியது. இந்த இணைப்பு உலகில் எங்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை. சாமுவேல் ஜான்ஸன் – பாஸ்வெல், சாக்ரடிஸ் – ப்ளேட்டோ. ராமகிருஷ்ணர்- விவேகானந்தர் போன்றோர்களுடன் ஒப்பிட்டாலும் காந்தி- மகாதேவ் நட்பு அதிசயமானது!

மகாதேவ் தேசாய்  எழுதிய  35 தொகுதி நாட்குறிப்பில்   இது வரை 19 தொகுதிகள் மட்டுமே அச்சில்  வந்துள்ளன! இவையே அரிய காந்தியக் கருவூலமாக உள்ளன. இந்த மனிதர் சாகாவரம் பெற்றுவிட்ட ஒரு அற்புதமனிதர் என்பதில் சந்தேகமே இல்லை.

இன்று மகாதேவ தேசாயின் பிறந்த நாள்!

கட்டுரையாளர்; விப்ர நாராயணன் திருமலை

காந்திய செயற்பாட்டாளர், கவிஞர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time