யார் எக்கேடு கெட்டால் என்ன? பணமே குறி!

- ம.வி‌.ராசதுரை

குடிகாரர்களுக்கோ மதுவெறி! அரசாங்கத்துக்கோ லாபவெறி! அபார லாபத்தால்  உச்சகட்ட அத்துமீறல்கள் அனைத்தும் நடக்கின்றன! ஆட்சியாளர்களுக்கோ பொருளாதார போதை! ஊழியர்களுக்கோ உயிர் வாதை! கொடூர உழைப்புச் சுரண்டல்! டாஸ்மாக்  குறித்த அதிர்ச்சி தகவல்களை பகிர்கிறார், கே.திருச்செல்வன்!

டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச் செயலாளரான கே.திருச்செல்வன், சி.ஐ. டி .யு.வின் மாநில நிர்வாகிகளில் ஒருவராகவும் உள்ளார்!

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தலைமை அலுவலகத்தில் அவரை சந்தித்தோம்.  நம்முடைய ‘அறம்’ இதழுக்காக அவர் அளித்த பேட்டியில் இருந்து;

சி.ஐ.டி.யு திருச்செல்வன்

டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என கலைஞர் சொல்லி இருந்தார்! கலைஞரின் மகன் அதை எந்த அளவு நிறைவேற்றி வருகிறார்?

” 2016 தேர்தலை முன்னிட்டு அப்போது திமுக தலைவராக இருந்த கலைஞர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தேர்தலில் வெற்றி கிடைத்து ஆட்சி பொறுப்பு ஏற்றதும் நாங்கள் எடுக்கும் முதல் நடவடிக்கை டாஸ்மாக் கடைகளை மூடுவதாகத் தான் இருக்கும்” என்றார்.

மதுக்கடைகளின் தீய விளைவுகள் முன்பை விடவும் தற்போது  மோசமாக உள்ள நிலையில் மு. க. ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தி.மு.க., அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது!  மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக ஏற்கனவே தம் தந்தையார் அளித்த வாக்குறுதியை அவர் கண்டு கொள்ளவே இல்லை. டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை கூட பொருட்படுத்த்வதில்லை! விற்பனையை இன்னும், இன்னும் அதிகப்படுத்தவே வெறியோடு இயங்குகிறார்கள்! பெருமழை, புயல், வெள்ளம் வந்தால் கூட டாஸ்மாக்கிற்கு மட்டும் விடுமுறை கிடையாது!

டாஸ்மாக் கடையை மூடக் கோரும் பெண்கள் போராட்டம்!

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2003 ஆம் ஆண்டில்  அறிமுகப்படுத்தியது தொடங்கி இரு அரசுகளுமே இப்படித் தான் உள்ளன!  இதற்கு காரணம் அதில் இருந்து கொட்டும் பணமழை தான். அதே சமயம் டாஸ்மாக் ஊழியர்களை பிழிந்து  எடுத்து சட்டத்துக்குப் புறம்பாக வேலை வாங்குகிறார்கள்.

எப்போதும் மதுவோடு புழங்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மதுப் பழக்கம் இருக்கிறதா?

ஊழியர்களில் சிலர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர்! கடந்த 19 ஆண்டுகளில் மது குடித்து உடல் உறுப்புகள் கெட்டு இறந்துபோன டாஸ்மாக் ஊழியர்கள் எண்ணிக்கை  ஏறத்தாழ 4,000 ஆகும். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 40 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன.

டாஸ்மாக் மதுவைக் குடிப்பவர்கள் நாளடைவில் உடல் நலிகிறார்கள்! இன்னும் சிலர் சீக்கிரத்தில் மரணிக்கிறார்கள்? என்ன காரணம்?

டாஸ்மாக் மது கடைகளைத் தேடி வருவோர் பெரும்பாலும் தினக் கூலிகள் ஆவர். இந்த மதுவுக்கு பெயர் உள்நாட்டில் தயாராகும் அயல்நாட்டு மது. அயல்நாடுகளில் பழச்சாறுகள் மூலம் மது தயாரிக்கிறார்கள். அங்கு அது உடல் ஆரோக்கியத்துக்கு பயன்படுகிறது ‌. ஆனால், இங்கு மது தயாரிக்கப் பயன்படுத்துவது “முலாசஸ்”சும் “எத்தனாலும் “தான். இதில் ஆல்ஹாகால் சற்று அதிகமாக உள்ளதாக சொல்லபடுகிறது. இதை தினமும் குடிப்பவர்களின் குடல், கல்லீரல், கிட்னி, இதயம் உள்ளிட்ட உள் உறுப்புகள் கதி என்ன ஆகும் என்பதை சொல்லத் தேவையில்லை.இந்த மதுபானங்களின் தரம் குறித்து ஆய்வு சரியான வல்லுநர்கள் குழு இருப்பதாகத் தெரியவில்லை.

மதுவால் சீரழியும் இளம் தலைமுறை!

டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வதில்லை. அதனால் தான் டாஸ்மாக் கடை வாசல்களில் ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர்களை நீங்கள் பார்க்கலாம்! கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும்  இந்த கடைகள் சமுதாயத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது பற்றிய உண்மையான சமூக ஆய்வு ஒன்று அவசியம் தேவை!

டாஸ்மாக் கடைகளோடு பார்களும் இணைந்து செயல்படுவதால் குடிப் பழக்கம் அதிகரிக்கிறது என்பது உண்மையா? இதில் ஊழலும் உச்சத்தில் என்கிறார்களே?

டாஸ்மாக் அருகில் பார்கள் இல்லையென்றால் பலருக்கும் குடிக்கும் ஆர்வம் வராது. வீட்டில் எடுத்து போய் குடிக்கவும் முடியாது. ஆகவே பார்கள் குடிப்பவர்களை தூண்டில் போட்டு இழுக்கிறது என்பது உண்மையே! மற்றும் இவற்றின் அருகே செயல்படும் பார்கள் வாயிலாக  காவல்துறை,கலால் துறை, உணவுபாதுகாப்புத் துறை என்று பல மட்டங்களுக்கு கமிஷன் பணம் வெள்ளமாக பாய்ந்து கொண்டு இருக்கிறது. சட்ட விதிகள்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள சுமார் 300 மதுக்கடைகள் பார்கள் இருக்கக் கூடாது. ஆனால், ஜாம்மென்று நடக்கிறது! அனைத்து கடைகள் அருகிலும் சட்ட விரோத பார்கள் செயல்படுகின்றன. இதனால் தமிழ்நாட்டில் வீட்டிற்கு ஒரு குடி நோயாளி இருக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. பெண்கள்,சிறுவர்கள் எல்லாம் கூட மதுவிற்கு அடிமையாகிறார்கள்!

பார்களில் அடுப்பு கூடாது அங்கு உணவு சமைத்து தரக் கூடாது என ஒரு விதியை வைத்துள்ளார்கள்! ஆனால், எல்லா பார்களும் அசைவ ஓட்டல்களாகத் தான் உள்ளன! இந்த விதிமீறலுக்கு அதற்குதக்கவர்களை கவனத்துவிடுவார்கள்! குறிப்பிட்ட நேரத்திற்கும் அதிகமாக திறந்து வைக்கப்பட்டு வியாபாரம் செய்யும் பார்களிடம் இருந்து லம்பாகப் மேலிடத்திற்கு பணம் போகும்.

செம லாபம் தரக் கூடியதாக டாஸ்மாக் உள்ளது! விற்பனையாகும் நூறு ரூபாயில் 87 ரூபாய் வரியாக அரசுக்கு போகிறது. இந்த அளவு பெருலாபம் தரும் நிறுவனத்தில் ஊழியர்கள் நிலை என்ன?

2003 ல் டாஸ்மாக் மதுக்கடைகளின் சூப்பர்வைசர் பதவிக்கு ஆட்கள் எடுத்தபோது ,எம்.ஏ., எம்.எஸ்.சி, எம்.காம், போன்ற முதுநிலை பட்டதாரிகளும் பி.இ.போன்ற பொறியியல் படித்தவர்களும் ஓடிவந்து பணியில் சேர்ந்தார்கள். அரசு நிறுவனம் ஆயிற்றே என்றாவது ஒரு நாள் விடியல் வரும் என்ற நம்பிக்கையில் பல்லைக் கடித்துக் கொண்டு பணிசெய்தார்கள். தினமும் 16 மணி நேரம் வேலை. மாதம் 4000 சம்பளம். உலகில் எங்குமே நடக்காத உழைப்பு சுரண்டலை தமிழக அரசின் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனமே செய்தது.

இதனால் தான் டாஸ்மாக் ஊழியர்களுக்காக சங்கத்தை 2006 ஆம் ஆண்டு தொடங்கினோம். தொழிலாளர் நலத்துறையை நாடி நீதிகேட்டோம். தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினோம்‌.கூடுதல் நேர வேலை, வாரவிடுமுறை இல்லை…இப்படி அடுக்கடுக்காக அரசு நிறுவனமே தொழிலாளர்களிடம் நடந்து கொண்டதைப் பார்த்த நீதிமன்றம் ஊழியர்கள் அனைவருக்கும் ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டது. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் மேல்முறையீடு சென்று கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

”சம்பள உயர்வு நாங்கள் முதன் முதலில்  கேட்ட போது, விற்பனையை அதிகரித்துக் காட்டுங்கள் ஊக்கத்தொகை தருகிறோம்” என்றார்கள். செய்யவில்லை!

முதுநிலை படித்துவிட்டு 2003 ஆம் ஆண்டு சூப்பர் வைசராக சேர்ந்த ஒருவர் அப்போது பெற்ற சம்பளம் ரூபாய் 4000.  19  வருடங்கள் கழித்த பிறகு இப்போது அவர் பெறும் சம்பளம் 13,750. விற்பனையாளர்  பெறும் சம்பளம் 11, 600. உதவியாளர் பெறுவது 10, 500. இப்போது ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ஆயிரத்தை தாண்டி விட்டது. மனைவி, இரண்டு குழந்தைகள் வைத்திருக்கும் ஒரு டாஸ்மாக் ஊழியர் வீட்டு வாடகை, குடும்ப செலவு, கல்விக்கட்டணம், பண்டிகைகளுக்கு புத்தாடை வாங்குவது அனைத்தையும் இதற்குள்ளேயே அடக்க வேண்டும்.. பெரும்பாலான. ஊழியர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

அண்மையில் கோவையில் நடந்த இரத்ததான முகாமுக்கு இரத்ததானம் கொடுக்க சென்ற டாஸ்மாக் ஊழியர்களில் பாதிபேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறி,   இரத்தம் எடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர்.

தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. மருத்துவ  திட்டத்திலாவது சேர்த்து விடுங்கள் என்று கேட்டுப்பார்த்தோம். அதற்காக செலவிட வேண்டிய தொகை குறைவே. ஆனாலும் கிடையாது.

மதுவால் அதிகரிக்கும் சாலை விபத்துகள்! உயிர் பலிகள்!

‘டாஸ்மாக்கில் எந்த சரக்கு வாங்கினாலும், பாக்கி சில்லறை சரியாகத் தருவதில்லை’ என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

டாஸ்மாக் அதிகாரிகள், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உள்பட, உயர் அதிகாரிகள் கமிஷன் பணத்தில் குளிக்கிறார்கள்.! டாஸ்மாக் கடைகளில் சரக்குகள், குறைந்திருந்தாலோ உடைந்து போனாலோ ஊழியர்கள் தான் பொறுப்பு! மேலும், சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஊழியர்கள் படியளக்க வேண்டியுள்ளது! ஒரு சின்ன இடமாறுதல் வேண்டும் என்றால் கூட, லட்சக்கணக்கில் பணம் பறிக்கிறார்கள்! கிடைக்கும் சம்பளம் குடும்பம் நடத்தவே போதாத நிலையில், இத்தனை இக்கட்டுகளையும் சமாளிப்பதற்காக சிலர் இவ்வாறு செய்கின்றனர்!

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ‘கரூர் கம்பெனி’ என்ற பெயரில் மிரட்டல் விடுத்து ஊழியர்களிடம் பணம் பறிக்கும் செயல் நடப்பதாக சொல்லப்படுகிறதே?

கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத புது அபாயத்தை அண்மைக்காலமாக டாஸ்மாக் ஊழியர்கள் சந்தித்து வருகின்றனர். அதிகாரிகள் மட்டத்தில் அரசியல்வாதிகள் மட்டத்தில் கோடிக்கணக்கில் கமிஷன், லஞ்சம் இருப்பதெல்லாம் டாஸ்மாக்கில் எல்லா ஆட்சியிலும் இருப்பது தான். ஆனால், இந்த ஆட்சியில் தான் ஊழியர்களிடமே அடித்து பறிக்கும் அநியாயத்தை பார்க்கிறோம். இவர்களின் கொள்ளைக்கு வரைமுறையே இல்லையா..?

“கரூர் கம்பெனி”யிலிருந்து பேசுகிறோம், “ஒவ்வொரு பாட்டிலுக்கும் இவ்வளவு கமிஷன் எங்களுக்கு வேண்டும் “என்று மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. பல மாவட்டங்களில் ஊழியர்கள் மிரட்டப்பட்டதால் பதிவான செல்போன் எண்களுடன் மிரட்டியவர்களின் பெயர் விவரத்தையும் இணைத்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் தெரிவித்தோம். டிஜிபி சைலேந்திரபாபுவிடமும் புகார் கொடுத்தோம். முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரனிடமும் புகார் கொடுத்தோம். இரண்டு மாதங்கள் கடந்து விட்டன!  கடுகளவு நடவடிக்கையும் இல்லை. இதிலிருந்து இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை நீங்களே புரிந்து கொள்ள முடியும்.!

நேர்காணல் செய்து எழுதியவர் ; ம.வி‌.ராசதுரை

மூத்த பத்திரிக்கையாளர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time