பணம், பதவி உள்ளவர்களுக்கு தான் பார்த்தசாரதியா?

-ஆர். இராமலிங்கம்

ஜனவரி 2, வைகுண்ட ஏகதசியன்று சென்னை பார்த்தசாரதி கோவில் சென்ற போது நாங்கள் கண்ட அநீதிகளும், பட்ட அவஸ்த்தைகளும் கொஞ்ச, நஞ்சமில்லை! பக்தர்களுக்குள் இத்தனை பாரபட்சங்களா? இவ்வளவு அதிகார அழுத்தங்களா..? வி.வி.ஐ.பிக்களும், வி.ஐ.பிக்களும் செய்த அட்ராசிட்டிக்கு அளவில்லை!

சோதனைகளைக் கடந்து ஒரு பக்தன் பரமபத வாசல் அடைந்த நிஜ அனுபவம் இது! நான் ஒரு மூத்த பத்திரிகையாளன்! எந்த காரணத்தைக் கொண்டும் நான் பத்திரிகையாளன் என்ற போர்வையில் சிறப்பு தரிசனத்தையோ, சில முக்கிய பிரமுகர்களின் மூலம் விஐபி பாஸ் பெற்றோ, ஆள் பிடித்தோ குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்வதை தவிர்த்து வருபவன்.

வரிசையில் நின்று தர்ம தரிசனம். அல்லது நம்மால் முடிந்த கட்டண தரிசனம் என்பதையே வழக்கத்தில் கொண்டவன். ஆனால், நான் சென்ற ஒருசில மாநிலங்களில் இந்த கட்டண தரிசனம் கூட கிடையாது. குறிப்பாக கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்கள் முதல் காசியில் உள்ள விஸ்வநாதர் கோயில் வரை தர்ம தரிசனமே பிரதானம்.. பிளாக் கேட்ஸ் என்று அழைக்கப்படும் உயர்மட்ட பாதுகாப்பில் உள்ள விஐபிகள் மட்டுமே இத்தகைய கோயில்களுக்கு விஐபிகளாக செல்ல முடிவதும், மற்றவர்கள் தர்ம தரிசன வரிசையில் சென்றே கடவுளை வழிபடுவதையும் நான் கண்டிருக்கிறேன்.

தமிழகத்தில் நிலமை ரொம்ப மோசம்! ”முக்கிய விசேஷ நாள்களில், குறிப்பாக… திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று விடாதீர்கள்” என்று அலறும் அளவுக்கு அந்த திருக்கோயில் விஐபிகளின் தரிசன கூடாரமாக மாறியிருந்ததை கண்கூடாகக் கண்டேன்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு நீண்ட நாள்களுக்கு முன்பு சென்றிருக்கிறேன்.  அதனால் வைகுண்ட ஏகாதசியான திங்கள்கிழமை நானும், எனது மனைவியும், திங்கள்கிழமை காலை 11 மணியளவில் அந்த கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக சென்றோம். ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

எது இலவச தரிசன வரிசை, எது கட்டண தரிசன வரிசை என்ற கண்டுபிடிப்பதில் ஒருசில நிமிடங்கள் கடந்துபோயின. இலவச தரிசனத்தில் நிற்கலாம் என வரிசையில் நிற்க முற்பட்டபோது, ஆங்காங்கே வாய்ப்பு கிடைத்த சில முரட்டு பக்தர்கள், கூட்டத்துக்குள் புகுந்து வரிசையில் நிற்பதையும், அதை போலீஸார் கண்டு கொள்ளாததையும் பார்க்க முடிந்தது. சரி, ‘இந்த வரிசை சரிப்பட்டு வராது’ என முடிவெடுத்து 11.15 மணிக்கு கட்டண வரிசையில் நின்று காத்திருக்க தொடங்கினேன்.

அங்கேயும் குறுக்கே பலர் புகுந்து எங்களை தொடர்ந்து பின்னுக்கு தள்ளிக்கொண்டே இருந்தார்கள். இதனால், அங்கே நின்ற காவல்துறையைச் சேர்ந்த ஒருவரிடம் முறையிட்டபோது, அவர் கூலாக,  ”நீங்களே உங்களுக்குள் வரிசைப்படுத்திக்கொண்டு யாரையும் நுழைய விடாதீர்கள்” என்று அறிவுறுத்தினார். சரி என்று பக்தர்களில் சிலர் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், நிலைமை இன்னும் மோசமானது!

தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்டநேரம் நின்றதால், அந்த வரிசையின் முனைப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, சவுக்குமரத்தால் ஆன தடுப்புவேலி பாதை சேரும் இடத்தில், சில காவல்துறையினர், தங்களுக்கு சல்யூட் அடித்தவர்களுக்கும், அவர்களை பார்த்து பல் இளித்தவர்களுக்கும், அரசு அலுவலர்களாக, காவலர்களின் உறவினர்களாக வந்தவர்கள், வேறு சிலருக்கும் கருணை காட்டி உள்ளே அனுப்பி வருவதுதான் காரணம் எனத் தெரிந்தது. 2 மணி நேரத்தில் வரிசையில் காத்திருந்தவர்களை விட, காவல்துறையினர் கருணையால் உள்ளே சென்றவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருந்திருக்கலாம் என்பது நாங்கள் ஒரு 50 அடி தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் ஆனதில் இருந்து புரிந்துகொள்ள முடிந்தது.

மயக்கமடைந்தவர்கள்!

திறந்த வெளியில் வெயிலில் நின்றவர்கள் சவுக்கு கட்டையால் அமைக்கப்பட்ட கேலரிக்குள் நுழைவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. ஒருசிலருக்கு மயக்கம் வந்துவிட்டது. நல்ல வேலை சமூகப் பணியில் ஈடுபட்ட ஒரு பெண் ஒருவர் இரத்த அழுத்த மானியை கொண்டு வந்து ரத்த அழுத்தத்தை பார்த்து, அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியது ஒரு ஆறுதலான விஷயமாக இருந்தது.

இவ்வளவு களேபரத்திற்கு இடையே வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, அறநிலையத் துறை, கோயில் ஊழியர்கள், முக்கியஸ்தர்கள், சில தமிழ்நாடு அரசுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் என அவரவர் பங்குக்கு சிறப்பு தரிசனப் பாதையில் உறவினர்கள், நண்பர்களை, விஐபிகளை அனுப்பி சேவை செய்தனர்.

வரிசையில் நின்ற பெண்கள் பலரும் அவரவர் வாய்க்கு வந்தபடி வசை பாடியதை அவர்கள் கண்டுகொள்ளாமல், தங்களின் சகிப்புத்தன்மையை அமைதி மூலம் வெளிப்படுத்தினர். ஒருவழியாக இரண்டரை மணி நேரத்தில் திறந்தவெளி வரிசையில் 100 மீட்டரை கடந்து தடுப்பு வேலி பாதைக்குள் நுழைந்தபோது, பல தடைகளுக்குப் பிறகு இமயத்தின் உச்சியைத் தொட்டது போன்ற ஒரு பூரிப்பு எனக்குள் ஏற்பட்டது.

தடுப்புவேலி அரணுக்குள் நுழையும் இடத்தில் 4, 5 போலீஸார் உட்காந்தும், நின்றும் இருந்தனர். ஆனால் அந்த வரிசைக்குள் அவர்களுக்கு தெரிந்தவர்கள் உரிமையோடு உள்ளே நுழையும் அளவுக்கு இடைவெளி காணப்பட்டது. அதை மூடினால், அத்துமீறி வரிசைக்குள் நுழைபவர்களை தடுக்கலாமே என்று எனக்கு தோன்ற, அதை அங்கே நாற்காலியில் அமர்ந்திருந்த காவல்துறை அதிகாரியிடம் கூறினேன். அவர் ஏதோ செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால், நான் சொன்னது அவருக்கு காதில் விழவில்லை போலும். ஆனால் அருகில் இருந்த காவலர் ஒருவர், என்னை ஆழமாக ஒரு பார்வை பார்த்தார்.

நான் கொஞ்சம் ஆடிப்போனேன். இதைக்கண்ட என் மனைவி என்னை உஷார்படுத்தவே, அமைதியாக வேறு திசை நோக்கி என் பார்வையை செலுத்தி மெல்ல நகர்ந்தேன். ஆனாலும், என் பின்னாள் வந்த மூதாட்டி வெயிலின் உக்கிரம் தாங்காமல், அங்கிருந்தவர்களின் அலட்சியத்தைச் சுட்டிக் காட்டி, ஆட்சியாளர்களையும், ஆண்டவனையும் வம்புக்கிழுத்தார். நம்மால் இப்படி பேசமுடியவில்லை. ஆனால் அவர் பேசுகிறார் என்ற திருப்தி எனக்கு அப்போது ஏற்பட்டது. அந்த காவலரும் அந்த மூதாட்டிகிட்ட எதுக்கு வாய மாட்டிக்கிட்டு என்று அந்த இடத்தை விட்டு சற்று தள்ளி நின்றார்.

இயற்கை உபாதையால் இடர்பட்டேன்!

வரிசையில் காத்திருக்கத் தொடங்கி சுமார் 3 மணி நேரம் கழித்து டிக்கெட் கொடுக்கும் இடத்தை நானும், என் மனைவியும் நெருங்கினோம். அப்போது எனக்கு சிறுநீர் கழிக்கும் உபாதை மெல்ல தலைதூக்கியது. அதனால் விரைவாக சாமி தரிசனம் செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை அந்த கஷ்டத்தை மறக்க வைத்தது. டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, கோயில் கோபுரத்தை தாண்டும் போது, கட்டண ரசீதை வாங்கி கிழித்தவரிடம், ”அரை மணி நேரத்தில் சாமி தரிசனம் பண்ண வாய்ப்பு இருக்கா?” என்று கேட்டேன். ”வாய்ப்பில்லை” என்று உதட்டை பிதுக்கினார். ஒரு மணி நேரம்… திரும்பவும் வாயை பிதுக்கினார். இரண்டு மணி நேரம்… இப்போது அவர் வாய் திறந்தது.

”ரெண்டு விஷயம். விஐபிகள் கூட்டம் கொஞ்சநேரம் வராமல் இருக்கனும். உங்களுக்கு முன்னாள் செல்பவர்கள் வேகமாக செல்ல வேண்டும். இது நடந்தால் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்தில் தரிசனம் செய்ய வாய்ப்பு” என்றார். அதை கேட்டதும் எனக்கு கொஞ்சம் வியர்க்கத் தொடங்கிவிட்டது. இயற்கை உபாதையைப் போக்கிக் கொள்ள இந்த தடுப்புகளைத் தாண்டிப் போனால், திரும்ப வருவது என்பது இயலாத காரியம். ஒன்றரை மணி நேரம் நம்மால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற சந்தேகம். குழப்பத்தோடு, என் மனைவியிடம் ஆலோசனைக் கேட்டேன். கோவிந்தா…. கோவிந்தான்னு சொல்லிகிட்டே வாங்க.. என்று சொன்ன யோசனை எனக்கு பிடித்திருந்தது. சிறிதுநேரத்தில் அந்த இயற்கை உபாதை உந்துதல் மறைந்து போனது.

பக்தர்கள் காவலர்கள் வாக்குவாதம்

கோயில் கோபுரத்தைக் கடந்து, தகதகவென மின்னிய கொடிமரத்தை தரிசனம் செய்து அடுத்த நிலையை எட்டியபோது, எங்கிருந்தோ ஒரு கூட்டம் தர்ம தரிசனத்துக்கும், கட்டண தரிசனத்துக்கும் இடையே போடப்பட்டிருந்த விஐபி வரிசையில் புகுந்தது. வரிசையில் நின்றவர்கள் போறவங்க பெரிய பதவிகளில் இருப்பவர்களாக தெரிகிறார்கள் என்று ஆருடம் கூறி தேற்றிக் கொண்டார்கள். அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்களும், அவர்களின் மேலதிகாரிகளும் சுறுசுறுப்பாக இயங்கி, விஐபிகளின் பாதுகாப்பான தரிசனத்துக்கு பாதை வகுத்து தந்தனர்.

இந்த திடீர் கூட்டத்தால், நாங்கள் சென்ற வரிசை சிறிதுநேரம் ஸ்தம்பித்தது. அரை மணி நேரம் காத்திருந்த சில முரட்டு பக்தர்கள் அங்கிருந்த அப்பாவி காவலர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் செய்வதறியாது உயர்அதிகாரிகளை பார்த்தனர். அந்த உயர் அதிகாரிகளோ, விஐபிகள் பாதுகாப்பாக தரிசனம் செய்து முடித்து வெளியேறும் வரை தங்கள் கவனத்தை எதற்காகவும் திசைத் திருப்புவதில்லை என சபதம் செய்திருப்பதுபோல் நின்றனர்.

கோயில் உள்ளேயும் 3 வரிசைகளில் சுமார் 150 மீட்டர் தூரத்துக்கு கட்டண வரிசையில் பக்தர்கள் நிழல் பகுதியில் காத்திருந்தார்கள். அப்போது கர்ப்ப கிரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியேறும் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட புதிய விஐபி பக்தர்கள் சிறிதுசிறிதாக திரண்டு காத்திருக்கத் தொடங்கினார். சுமார் 10 நிமிடத்துக்கும் மேல் அவர்கள் வெயிலில் காத்திருந்ததையும், வெயிலில் நின்று பழக்கப்படாதவர்களைப் போல் தோற்றம் அளித்த அவர்கள், மயக்கமடைந்து விழுந்துவிட்டால், உயர் அதிகாரிகளிடம் நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற அச்சம் காரணமாக அவர்களை உள்ளே அனுப்புவதற்கு சில காவலர்கள் முயன்றனர்.

அதிரடி அறிவிப்பும், பின் வாங்கலும்!

இதைக் கண்ட கட்டண தரிசனப் பக்தர்களில் சிலர் வெகுண்டெழுந்தார்கள். கண்டன குரல்கள் எழுப்பினார்கள். இந்த நிலையில், பக்தர்கள் பேசுவதைக் கேட்க சகிக்காமல், விஐபி தரிசனம் நிறுத்தப்படுவதாகவும், அங்கே காத்திருப்பவர்கள் நகர வேண்டும் என்று நடமாடும் ஒலிபெருக்கியில் அறிவித்தார். இதனால் ஏதோ தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடுவதுபோல் ஒரு சிறிய ஆரவாரம் வரிசையில் இருந்தவர்கள் எழுப்பப்பட்டது.

ஆனால், அந்த சந்தோஷம் சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. யார் விஐபி தரிசனம் நிறுத்தப்பட்டதாக அறிவித்தாரோ,

அவரே,  விஐபிகள் காத்திருந்த இடத்துக்குச் சென்று, அவர்களை தரிசனம் முடித்ததும் பக்தர்களை வெளியேற்றும் வழியில் (குறுக்கு வழியில் உள்ளே செல்ல) ஒருவர் பின் ஒருவராக வரிசைப்படுத்தி அழகு பார்த்தார். இதனால், காவல்துறையினரை சில முதியவர்கள் வசை பாடினர்.

ஒருவழியாக பார்த்தசாரதி பெருமாள் இருக்கும் கர்ப்பகிரகம் அமைந்துள்ள மகா மண்டப நுழைவாயிலுக்குள் மாலை நாலரை மணிக்கு நுழைந்துவிட்டோம். எங்கள் பின்னாள் விஐபிகள் ஒருபுறமும், கட்டண தரிசனத்துக்கு காத்திருப்போர் ஒருபுறம் என தள்ளுமுள்ளுக்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். மகா மண்டபத்தில் நுழைந்துவிட்டால், அடுத்து அர்த்த மண்டபம். அங்கே நின்று கண்குளிர பெருமாளை தரிசிக்க போகிறோம் என்ற ஆவல் எனக்குள் கொப்பளித்தது.

அப்போது எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கூட்டம் அதிகமாகிவிட்டபடியால், கர்ப்பகிரத்தையொட்டிய அர்த்த மண்டபத்தில் தரிசனம் செய்துகொண்டிருந்த விஐபிகள் வெளியேறியதும், ஒரு தடுப்பு வைத்து, சுத்தம் செய்யப்பட்டது. ‘இனி, அர்த்த மண்டபத்திற்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மகா மண்டபத்தில் வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்ய அனுமதி’ என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல்.

மூதாட்டியின் புலம்பல்!

இதைக் கேட்ட மூதாட்டி ஒருவர், ”எவன்எவனோ விஐபின்னு சொல்லிட்டு குறுக்கே புகுந்து அர்த்த மண்டபத்தில் சாமியை கிட்டே நின்னு தரிசனம் பண்ணிட்டு போறான். கழுத்துல, கையில நகை, நட்டு போட்டுகிட்டு வரவாளத்தான் இங்கே மதிக்கிறா…  ஆத்மார்த்தமா..விரதம் இருந்து 6 மணி நேரம் உன்னை பார்க்க காத்திருக்கிற நான், உன்னை கிட்டே வந்து தரிசனம் பண்றதுக்கு நீ ஏன் பெருமாளே கருணை காட்டலேன்னு..” புலம்பினார்.

மகா மண்டப வாசல் திறக்கப்பட்டது

மீண்டும் சில விஐபிகள் சிலருக்கு தரிசனம் செய்ய அனுமதித்த போலீஸார், ஏனோ கட்டண தரிசன பக்தர்களையோ, இலவச தரிசன பக்தர்களையோ கவனிக்கவில்லை. மகா மண்டபத்தின் வெளியிலும் இல்லாமல், உள்ளேயும் போகமுடியாமல் ஒரு சிறு கூட்டத்தில் சிறிது நேரம் சிக்கி தவித்தோம். அங்கேயிருந்த கோயில் ஊழியர்கள் சிலர், பக்தர்களின் புலம்பலை காதில் வாங்கியவாறு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினர். ஒரு கட்டத்தில், வேறு வழியின்றி அங்கு நின்ற காவல்துறை அதிகாரி ஜி. கோபியிடம், மகா மண்டபத்திற்குள் செல்ல அனுமதியுங்கள். மூச்சுவிட முடியவில்லை என்று கெஞ்சவே, அவரது கருணை பார்வையில் மகாமண்டபத்தில் நுழைவாயில் கேட் திறக்க, உள்ளே பரவசத்துடன் கூட்டத்தில் முண்டியடித்துச் சென்று, நிலைகுலையாத ஆர்வத்துடன் பார்த்தசாரதி பெருமாளை 6 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பெருமாளை தரிசித்தேன்.

அங்கே நின்ற ஒருசில நிமிடங்களில், என்னை நல்லா வச்சுக்கோ… என் குடும்பத்த நல்லா வச்சுக்கோன்னு வேண்ட தோனலே… இவ்வளவு போராட்டத்துக்கு அப்புறம் உன்னை தரிசிக்க முடிந்ததே அதுவே போதும்!

அடுத்து உற்சவர் தரிசனம், அதைத் தொடர்ந்து சொர்க்க வாசல் வழியாக வெளியேறுவது என்று இலக்கை நோக்கி பயணித்தேன். உற்சவரை பார்த்ததும், மனசுக்குள் அவரிடம், நிருபருக்கே உரிய வில்லங்கத்தனத்துடன் ஒரு கேள்வி கேட்ட தோன்றியது.

பெருமாளிடம் அந்தரங்கமான உரையாடல்

பகவானே.. விஐபி பெயரில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவன், பணம் படைத்தவன், அரசியல், அரசு செல்வாக்கு மிக்கவன், அவனது குடும்பத்தினருக்கு காட்டும் பரிவை ஏன் சாதாரண பக்தனிடம் நீ காட்டுவதில்லை என்பதுதான் அந்த கேள்வி. அப்போது, பெருமாள் என்னிடம் ஏதோ பேசுவதுபோல் இருந்தது.

”இது கலியுகம்… இன்றைய உலக நடப்பை புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய் மகனே… நான் சதா சர்வகாலமும் சிறைபட்டு இருக்கிறேன். ஐம்பொன் சிலையாக இருக்கும் என்னை காப்பாற்றிக்கொள்ளவே பலரது தயவு தேவைப்படுகிறது. அதனால், என்னை தரிசிக்க வருபவர்களை விஐபிகள், சாதாரண பக்தன் என்பதை வேறுபாட்டை நீங்கள் பார்ப்பதுபோல் என்னால் பார்க்க முடியாது!

தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட சூழல் இல்லை. சின்னத்திரை நடிகர் முதல் வெள்ளித்திரை நடிகர் வரை, அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரை, எந்த கட்சியாக இருந்தாலும் மாவட்டம், வட்டம், ஒன்றியம் என செல்வாக்கு மிக்கவர்கள், உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள், பணம் படைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், சுற்றியுள்ளவர்களின் செல்வாக்கை பெற்றவர்கள் என மிக நீண்ட விஐபி பட்டியல் உண்டு. இன்றைக்கு ஆண்டனைக் காட்டிலும் ஆள்பவன் தான் அதிக செல்வாக்கும், அதிகாரமும் படைத்தவனாக இருக்கிறான். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற பழமொழி இப்போது எனக்கு பொருந்தாது. அது அவர்களுக்குத்தான் பொருந்தும். அதனால் என்னிடம் நீ கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, ஆட்சியர்களிடம் ஒரு கேள்வியைக் கேள்” என்றார் பெருமாள்.

அப்போது, கூடுதலாக ஒரு கொசுறு தகவலையும் அவர் சொல்வதுபோல் உணர்ந்தேன். ”இது சமூக நீதி பேசும் அரசாங்கம். ஒன்றே குலம், ஒருவனே தேவன், சமத்துவம், சகோதரத்துவம், ஏற்றத் தாழ்வுகளை கலைவதே எங்கள் இலட்சியம், அதுதான் எங்கள் கொள்கை எனக் கூறி ஆட்சிக்கு வருபவர்கள், இந்து சமய அறநிலையத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், ‘கோயில்களில் பக்தர்களை பணத்தின் பெயரால், செல்வாக்கின் பெயரால், அதிகாரத்தின் பெயரால் பிரித்தாளுவதை மாற்ற, தமிழக கோயில்கள் அனைத்திலும் விஐபி தரிசனம் கிடையாது. ஆண்டவன் தரிசனத்தில் ஆள்பவனும், சாதாரண பக்தனே. எனவே, எல்லோருக்கும் இலவச தரிசனம். பணத்தின் பெயரால், செல்வாக்கின் பெயரால், இனத்தின் பெயரால் வேறுபடுத்தும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படும் என்ற உத்தரவை வெளியிடுவீர்களா? அதற்கான நேர்மையும், பக்குவமும், ஆற்றலும் உங்களிடம் இருக்கிறதா? என்று கேள்” என்று கூறி சிரித்தார் பெருமாள்.

சொர்க்க வாசலில் நுழைந்து கடவுளுடன் உரையாடும் கற்பனையில் மிதந்து வந்த என்னை, என் மனைவி, தோளில் தட்டி, ”கோயிலை விட்டு வெளியே வந்த பிறகும் என்ன சிந்தனை? எதிரே பாத்ரூம் இருக்கு போய்ட்டு வந்துடுங்க…” என்ற போது தான் நான் என் நிகழ்காலத்துக்கு திரும்பினேன்.

கட்டுரையாளர்; ஆர். இராமலிங்கம்

மூத்த பத்திரிகையாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time