செயற்கை கருப்பைக்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்?

-காயத்ரி மஹதி

பெண்களைப் பற்றி இந்த ஆணாதிக்க சமூகம் செதுக்கி வைத்துள்ள மதிப்பீடுகளை உடைத்து நொறுக்குகிறது அறிவியல் கண்டு பிடிப்புகள்! கல்யாணம் செய்யாத பெண்களையும், கருத்தரிக்க வாய்ப்பில்லாத பெண்களையும் முழுமையற்ற பெண் என முத்திரை குத்தலாமா? பூரணத்துவம் என்பது உடல் சார்ந்ததா..?

பெண் எப்பொழுது முழுமையடைவாள்? என்பதற்கு ஒரு வியாக்கியானம் சொல்லி அப்பாவி மக்களை நம்ப வைத்த படம் பாக்கியராஜின், ‘சுந்தர காண்டம்’! இந்தப் படம் தான்  இன்னும் பெண் மதிப்பீட்டிற்கான உதாரணமாக, நம் மக்களிடையே சொல்லப்பட்டு வருகிறது.

அதற்கு காரணம்,  அந்தப் படத்தில் முழுமையான பெண் என்று வரையறுத்த சீன் தான்!

”ஒரு பெண் பிறந்ததும் இருபத்தைந்து மதிப்பெண் என்றும், பூப்பெய்தி விட்டால் ஐம்பது மதிப்பெண் பெறுகிறாள் என்றும், திருமணம் ஆனதும் எழுபத்தைந்து மதிப்பெண் பெறுகிறாள் என்றும், குழந்தைப் பெற்றவுடன் நூறு மதிப்பெண்  நிறைவு பெற்று முழுமையான பெண்மையை அடைந்து விடுகிறாள்” என்றும் சொல்லி இருப்பார் பாக்கியராஜ்.

அப்படியானால், திருமணமாகாத பெண்கள் அரைப் பெண்களா? அன்னை தெரஸா, சகோதரி நிவேதிதா போன்றவர்களை அவ்வாறு சொல்ல முடியுமா? குழந்தைக்கு வாய்ப்பில்லாத நிலையில் தத்தெடுத்து வளர்க்கும் குடும்ப பெண்கள் எல்லாம் முக்கால் பெண்களா? முழுமையான  பெண் தான் இந்த உலகில் வாழத் தகுதியானவளா?

பாக்கியராஜ் போன்றவர்களால் காலம்தோறும் பரப்பிவிடப்படும் இது போன்ற கருத்தைத் தான் இந்தச்  சமூகம்  பெண்களை நோக்கி  கேள்வி கேட்டு துரத்திக் கொண்டே இருக்கிறது.

சிறு வயதில் நான் வசித்த எங்க தெரு மக்களோ, ‘பாக்யராஜ் சொன்னதை உண்மை என்றும், அப்படி பூப்பெய்தவில்லை என்றால், தன் வீட்டு சொந்த மகளைக் கூட பெண்ணாக பார்க்க கூடாது’ என்றும் முடிவு செய்து விட்டார்கள்.

ஏனென்றால், நான் வசித்த தெருவில், ‘ஒரு பொண்ணு பூப்பெய்தி விட்டால், தொடர்ந்து அங்கு வசிக்கும் பருவ வயதைத் தொடும் மற்ற வளரிளம் பெண்களும் கண்டிப்பாக வயதுக்கு வந்து விடுவார்கள்’ என்ற மூட நம்பிக்கையுடன் இருந்தனர். அந்தத் தெருவில், ‘நாங்க எல்லாரும் வயதுக்கு வந்து ஐம்பது மார்க் வாங்கி விட்டோம்’ என்று சிலர் வாய் விட்டு சொல்லிக் கொண்டும், சிலர் மனதில் நினைத்துக் கொண்டும் இருந்தோம். ஆனால், அதில் ஒரு அக்கா மட்டும் வயதுக்கு வராமல் இருந்தார்.

ஒவியம் இளையராஜா

‘அந்த அக்கா மட்டும் இன்னும் ஐம்பது மார்க் வாங்கவில்லை’ என்று எங்களை மாதிரி சுற்றி இருந்தவர்களும், மற்ற குடும்பத்தினரும் அந்த அக்காவையும், அந்த அக்காவின் அம்மாவையும் பல கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களைப் பார்க்கும் போது, எல்லாம் விதம் விதமான சிகிச்சை முறைகளை சொல்லிக் கொண்டும் இருந்தார்கள்.

தெரு மக்கள் சொன்னது பத்தாது என்று கேபிள் டிவியோ ‘சுந்தர காண்டம்’ படத்தை தொடர்ந்து போட்டுக் கொண்டு இருந்தார்கள். அந்தப் படத்தை பார்க்கும் போது எல்லாம், அந்த அக்கா தேம்பித் தேம்பி அழுது விடுவார். அவருக்கு, ‘தான் ஒரு முழுமையான பெண் இல்லை’ என்று அவரே இந்தப் படத்தைப் பார்த்து நம்ப ஆரம்பித்து விட்டார். அதனாலேயே, இந்தப் படத்தின் மீது ஒரு ஒவ்வாமை உணர்வு தான் எனக்கு வந்தது.

ஏன் வயதுக்கு வரவில்லை என்றால், ஒரு பெண் முழுமையடைய மாட்டாள் என்ற முட்டாள்த் தனமான எண்ணத்தை புகுத்திக் கொண்டு இருந்தார்கள் என்று தெரியவில்லை.

இந்தக் கேள்விக்கான பதிலை எப்படி ஒரு ஆணால் சொல்ல முடிகிறது? என்றும், ஒரு ஆண் இயக்குனரின் பதிலை எப்படி இந்தச் சமூகம் ஏற்றுக் கொண்டது என்றும், இப்ப வரை நானும் யோசிக்கிறேன். ஒரு சினிமா மூலம் பதிய வைத்த சிந்தனையை காலம் கடந்து திரைத்துறையில் இருந்து அந்த ஆணின் பதிலை ஒட்டு மொத்தமாக உடைத்து, நயன்தாரா பதில் சொல்லி விட்டார். ‘முழுமையான பெண் என்று எந்த மதிப்பெண்ணும், ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் உடலில் ஏற்படும் நிகழ்வுகள் வைத்து சொல்லக் கூடாது’ என்று அவரது செயலின் மூலம் சொல்லி விட்டார்.

தற்போது தான் அறிவியல் வளர்ச்சியால் பெண்ணுக்கு சாதகமாக உள்ள வாடகைத் தாயின் விவாதம் பற்றி முழு மூச்சாக பேசிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் அந்தப் பேச்சு தீர்ந்த பாடில்லை.

அதற்குள் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக ‘எக்டோ லைப்’ என்ற தனியார் நிறுவனம் செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பையை அறிமுகப்படுத்தியுள்ளது. பெர்லினை தலைமையிடமாக கொண்ட உயிரியல் தொழில்நுட்பவியல் நிறுவனம் செயற்கை கருப்பையையை உலகிற்கு தெரியப்படுத்தி இருக்கிறது.

செயற்கை முறை கருத்தரிப்பு

சுமார் எண்ணூறு பெண்கள் நாள் ஒன்றுக்கு கர்ப்பம் சார்ந்த சூழலில் ஏற்படும் சிக்கல்களால் தொடர்ந்து அவதியுறுகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருக்கிறது. அப்பெண்களுக்கு அதிகமான ரத்தப்போக்கு, திடிரென்று ஏற்படும் கருக்கலைப்பு, பிரசவத்தில் ஏற்படும் சில சிக்கல்கள் என்று ஒவ்வொரு நாளும் பெண்கள் அவதிப்படுகிறார்கள். இதனால் பிரசவ காலத்தில் ஏற்படும் வலியை நினைத்து தற்போது உடலில் ஏற்படும் சிக்கல்களால் இன்னும் தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இப்படியான பெண்களுக்கு செயற்கை முறையிலான கருத்தறித்தல் ஒரு வரப்பிரசாதமே!

பெண்களுக்கு உடல் சத்துக் குறைவால் மற்றும் உடல் பாதிப்பால் கரு உருவாகி சில மாதங்களில் தங்காமல் போகும் போது, அந்தப் பெண்கள் உடல் ஆரோக்கியம் குறைந்தும், மனதாலும் பாதிக்கப்படுகின்றனர் . அதற்கு வழிகாட்டியாக இந்த செயற்கை கருப்பை இருக்கிறது என்ற  நம்பிக்கையை இன்னும் அழுத்தம் திருத்தமாக அறிவியல் கொடுத்து இருக்கிறது.

தற்போதைய சமூகத்தில் திருமண வாழ்க்கையை  இந்த வயது என்ற அளவுகோல் இல்லாமல்,  பிடித்த வயதில் திருமணம் செய்யலாம் என்ற நம்பிக்கைக்கு வந்து விட்டனர். அந்த நிதானமான மனநிலையால் அவர்களுடைய தனிப்பட்ட வேலை, கனவு என்று ஆசைப்பட்ட பிடித்த விஷயங்களில் ஒரு நிறைவைப் பார்த்துவிட்டு,  அடுத்ததாக திருமணம் என்ற விஷயத்தை யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

டிஜிட்டல் உலகில் உள்ள பெரும்பாலான பெண்கள் 28 வயதுக்கு மேல் திருமணம் செய்யலாம் என்ற முடிவில் இருக்கின்றனர். அதற்காக குழந்தை வேண்டாம் என்று யாரும் யோசிப்பது இல்லை. ஆனால் கணவன், மனைவியுடன் குறிப்பிட்ட காலம் ரொமான்டிக் லைப் வாழ்வதற்கு அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்க வேண்டும் என்று யோசிக்கிறார்கள். அப்படி நினைக்கும் தம்பதிகள் உடனே குழந்தைப்பேறு மருத்துவரை பார்ப்பது ரொம்ப அத்தியாவசியமாகிறது!

அப்படிப்பட்ட மருத்துவர்கள், மருத்துவ உலகில் வலியில்லாத பல அறுவை சிகிச்சை முறைகள் வளர்ந்த நிலையில், பெண்களும் வலியில்லாத ஆரோக்கியமான உடல் வேண்டும் என்றும் நினைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் எல்லா வலிகளையும் பெண்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. தன்னுடைய  தாய் மாமாவை திருமணம் செய்த பெண்ணுக்கு கருத்தரிப்பதில் சில பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. அந்தப் பெண்ணும் படித்து ஒரு நல்ல பதவியில் இருக்கிறார். அதனால் மாமாவை அழைத்துக் கொண்டு ஜெனிடிக் கவுன்சிலிங்கும் எடுத்துக் கொண்டார். அதில் இருவருக்கும் குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று சொல்லி விட்டார்கள்.

அதற்கு மேல் அந்தப் பெண் செயற்கை கருத்தரிக்கும் மருத்துவம் சார்ந்து சிகிச்சை எடுக்கவும் செய்தார். முதல் தடவை செயற்கை கருத்தரிப்பில் சிகிச்சை செய்யும் போது அவருக்கு கரு உருவானது. ஆனால் சில நாட்களில் திடீரென்று அவருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டு விட்டது.

கருக்கலைப்பு ஏற்பட்டு விட்டதாலும், ஆல்ரெடி ‘ஜெனிடிக் கவுன்சலிங்’ எடுத்து, அதில் அவர்களுக்கு தேவையான முறையான மருத்துவரின் சில தகவலும் கிடைத்து இருப்பதால் அதற்கு மேல் சிகிச்சை எடுக்க விரும்பவில்லை என்றும் கூறி, செயற்கை கருத்தரிப்புக்கு செல்கிறார்! இந்த மாதிரியான சூழலில், அந்தப் பெண் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியவளாகிறாள்! இந்த சமூகம் பெண் என்பதற்கும், தாய்மை என்பதற்கும் ஏற்படுத்தி வைத்துள்ள கருத்தியலுக்கு பொருந்தி வராதவளாகப் போய்விடுகிறாள்!

உண்மையில் மேலே சொன்ன பெண் சுயமாக சிந்திக்கும் போது, அதன் யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு, தேவையில்லாத உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு யாரையும் அவர் கொண்டு போக விரும்பவில்லை. எந்தவித செண்டிமெண்ட் வார்த்தைகளும் சொல்லி யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை. அந்த சிகிச்சை அவர்களுக்கு எத்தனை சதவீத நம்பிக்கையை கொடுக்கும் என்று தெரியும் என்பதால், ”மனதால், அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள தயாராகி விட்டோம்” என்று தான் சொல்கிறார்கள்.

சமூகம் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அவர்களிடம் பதில்கள் இல்லை. ஆனால், அவர்களிடம் இருக்கும் பதில்களுக்கும், அவர்களிடம் இருக்கும் சமாதானங்களுக்கும் அமைதியாக அங்கீகாரம் கொடுக்கச் சமூகம் பழக்கப்படவில்லை.

அவரவர் வலியை என்ன மாதிரி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவை சம்பந்தப்பட்ட பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதில் வேறு எந்த வித அதிர்ச்சியையும், ஆச்சரியங்களையும் சமூகம் காட்டாமல் இருந்தாலே போதும்.

இவர்களுக்காகவே, ‘கரு ஒரு முறை உருவாகி விட்டால் போதும், அந்தக் கருவை எடுத்து, செயற்கை கருப்பையில் வைத்து குழந்தையை வளர்க்க முடியும்’ என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பெண்களின் கருப்பை போலவே, ஒரு செயற்கை கருப்பையை அறிவியல் உருவாக்கி, ஒரு வீடியோவை உருவாக்கி நம்மைப் பார்க்க வைத்து இருக்கிறது. இந்த செயற்கை கருப்பை மூலம் குழந்தைகளின் இதயத் துடிப்பு, வெப்பநிலை, ரத்த அழுத்தம், சுவாசம் என்று அனைத்தையும் கண்காணிக்கக் கூடிய சென்சார்களை கொண்டுள்ளது என்று இதனைக் கண்டுபித்த ஹஷேம் அல்கைலி  என்ற அறிவியல் அறிஞர் கூறியுள்ளார்.

எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியும் முதலில் செய்யும் போது, அளவுக்கு அதிகமான பொருளாதார செலவு ஏற்படத் தான் செய்யும். அதிகமான பொருளாதார வர்க்கத்தில் உள்ளவர்கள் மட்டுமே முதலில் அனுபவிப்பார்கள். அடுத்த சில வருடங்களில் செயற்கை கருப்பை இன்னும் பரவலாக அடுத்த கட்டத்தில் உள்ள பெண்களுக்கும் உதவும் வகையில் நம்முடைய மருத்துவ வளர்ச்சி இருக்கும்.

நம் கலாச்சாரம் எல்லாம் தாண்டி, அறிவியல் வளர்ச்சியோ பெண்ணுக்கு சாதகமாக தன்னை மாற்றிக் கொண்டு, சிறு புன்னகையுடன் நம்மை அழகாய் வேடிக்கை பார்க்கிறது.

அதனால் முழுமையான பெண் என்று இந்த உலகில் எதுவுமில்லை. அவளுக்கு தகுந்த மாதிரி அவள் தன்னை தகவமைத்துக் கொள்வாள். அதுவே, வாழ்வியல் நியதியாக இருக்கிறது. அதற்கு உறுதுணையாக அறிவியலும் தற்போது கை கொடுக்கிறது.

கட்டுரையாளர்; காயத்ரி மஹதி

மனநல ஆலோசகர், மதுரை

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time