சூழலை அழித்தால், நம் வாழ்வும் சூனியமாகும்!

- முத்துகிருஷ்ணன்.க

சொகுசான வாழ்க்கைக்காக இயற்கையை அழித்துக் கொண்டுள்ளோம். இயற்கையை அழிப்பதன் மூலம் நாம் நம்மையே அழித்துக் கொண்டுள்ளோம். வளர்ச்சியின் பெயரால், விஞ்ஞானத்தின் பெயரால், பொருளாதாரப் பேராசையால் சூழலியல் சூறையாடப்படுகிறது! இதன்  பின் விளைவுகளை மனித குலம் தாங்குமா…?

சூழலியல் ஒரு சிக்கலான, அற்புதமான கண்ணிகள் அந்த அற்புதத்தை கண்டுணர்வதும் அதை சிதைக்காமல் நம் வாழ்வியலை தொடங்குவதும் தான் இந்த பிரபஞ்சத்தின் நுணுக்கமான படைப்பம்சத்தின் சாரமாகும்!

நம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மாய சுவர் நம் முன் தோன்றி நிற்கிறது. அந்த சுவர் மிக ஆழமானதாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதன் பெயர் “வளர்ச்சி” இந்த சுவர் கட்டப்படுவதற்கு நிறைய விடயங்களை நாம் இழந்து வருகிறோம் என்பதை மறுக்க முடியாத உண்மையாகும். இந்த சுவர் எல்லா இடங்களிலும் கட்டமைக்கப்பட்டு வருகிறது காடுகள் முதல் வீடுகள் வரை.

இயற்கையை நாம் பயமுறுத்தும் போது ஒருநாள் அது இறக்கமற்ற நிலைக்கு மாறக்கூடும்.நம் குழந்தைக்கு வரும் ஒரு சிறு பிரச்சனைக்கு முழுமூச்சாக  எவ்வாறு காத்து  நிற்கிறோமோ அதுபோலவே வெட்டப்படும் அதன் குழந்தைகளான மரங்களுக்காக, தகர்க்கப்படுகிற மலைகளுக்காக, அழிக்கப்படுகிற அதன் விருந்தாளிகளான  விலங்குகளுக்காகவும், இயற்கை வளங்களுக்காகவும் மனித செயல்களுக்கு எதிராக ஒரு நாள் தனது கோர முகத்தை காட்டும். அப்போது நம் கையில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களோ, அதிநவீன தொழில்நுட்பங்களோ நம்மை காப்பாற்ற போவதில்லை என்று வரும் சந்ததியினருக்கு உணர்த்துவது நம் கடமை!

கிரானைட் கற்களுக்காக தகர்க்கபடும் மலைகள்!

பிரபஞ்சத்தில் நாம் ஒரு விருந்தாளி என்பதை வருங்கால தலைமுறைக்கு அறிவுறுத்த நாம் அதை பின்பற்றி, உயிரற்ற காற்றும் நீரும் ,நிலமும், சுற்றுச்சூழலும் இணைந்து உருவாக்கிய இந்த அற்புதமான உயிர்ச் சூழலை காத்து நிற்க வேண்டும். உயிர் இல்லாத ஆழ் கடல் தான் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு வாழ்வளிக்கிறது. ஆனால், நம் செயல்கள் யாவும் ஆழ்கடலின் அமைதியையும் அசைத்து அல்லவா பார்க்கிறது. அரசின் எத்தனையோ நல திட்டங்கள் வந்த வண்ணம் உள்ளன இருப்பினும் தனிமனித ஒழுக்கமே உலக மாற்றம்.

நெகிழிகளை உண்டு மரண அவஸ்தைப்படும் வில்ங்குகள்!

வனவிலங்குகளின் வயிற்றிற்கு நெகிழி சேர்க்கும் உரிமை எந்த மனிதருக்கும் தரப்படவில்லை. மனிதர்களின் சோம்பேறித்தனத்தால் இன்று நவீனம் என்னும் பெயரில்  மண்ணிற்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் ஒவ்வாத பல பொருட்கள் நாளுக்கு நாள் உற்பத்தி செய்து இறக்கிக் கொண்டிருக்கின்றன மனித இனம். நம் முன்னோர்களிடம் இருந்த அனைத்து தொழில்நுட்பங்களையும் இன்றைய நவீன அறிவியல் தூசி தட்டி புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன. நீர் மேலாண்மையில் உச்சந்தொட்ட நம் முன்னோர்களின் நுட்பங்களும், வழித்தடங்களும் தனி மனிதர்களாலும்  கார்ப்பரேட் நிறுவனங்களாலும் சூறையாடப்பட்டு கிடப்பதை நாம் உணர்ந்து அதை மீட்டெடுக்க வேண்டும்.

வளர்ச்சி வேண்டும். ஆனால், சூழலியலை பாதிக்காத வகையில் அரசின் திட்டங்கள் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். வானுயர்ந்த மலைகள், ஆழ் கடல்கள் வசீகரிக்க கூடிய பாலைவனங்கள், மரங்களடர்ந்த வனங்கள் என உலகின் மிகவும் பன்மயமாக்கப்பட்ட சூழலியல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் இதனை பாதுகாக்க சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்காத வண்ணம் திட்டங்களை ஒழுங்குபடுத்தவும் சூழலில் சமநிலையை சரி செய்ய அரசும், தன்னார்வ இயக்கங்களும் கைகோர்க்கும் கட்டாயத்தில் உள்ளோம்.

சூழலியல் சமநிலை குலையும் போதெல்லாம் உணவுச் சங்கிலிகள் சத்தமில்லாமல் அறுபட்டு கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ பல உயிரினங்கள் தொடர்ந்து அழிந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை சரிசெய்ய தொடர்ந்த களப்பணிகள் மட்டுமே தீர்வு. காயமடைந்த இந்த சுற்றுச்சூழலை மரம் நட்டும், நெகிழி தவிர்த்தும், காடுகள் வனங்களை காத்தும், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற அனைத்திலும் கூடுதல் கவனம்  செலுத்தி ஒழுங்கு படுத்திட வேண்டும். அதிகப்படியான கார்பன் படிவினால் பூமியின் மூச்சிரைக்கும் சத்தம் உங்கள்  காதுகளினால் கேட்க முடிகின்றதா? தனிநபர்  வாகனத்தில் இருந்து பொது போக்குவரத்தை நடைமுறைப்படுத்த நம் தலைமுறைக்கு அறிவுறுத்தி நாமும் அதை பின்பற்றிடல் வேண்டும்.

சூரிய ஒளி, இருள், நீர், காற்று, வெப்பம் என அனைத்தும் இயற்கையின் படைப்பே எனும் அற்புதத்தை உணர்ந்து அன்பின் மிகுதியால் அனைத்தையும் நேசித்தும், அறத்தை மீறாத சூழலை உருவாக்க பக்குவப்படுவதே வாழ்வின் உன்னதம். நாம் எதையும் உருவாக்கவில்லை எல்லாம் இயற்கை தான் உருவாக்குகின்றது என்னும் உண்மையை மசானோ ஃபுக்காக்கோ மற்றும் விவசாயம் என்பது வியாபாரம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை என்னும் நம்ம ஊரு ஐயா நம்மாழ்வார் போன்ற சூழலியல் அறிஞர் பெருமக்களின் அனுபவங்களின் படி இந்த வாழ்வை வழிநடத்தி செல்வோமே.

நாட்டு விலங்குகள் மற்றும் மண்ணின் மரங்கள் சூழலுக்கு உகந்த பேருயிர்களாகும் .இவற்றை பல்வேறு நவீனத்தின் பெயர்களால் அழித்து வரும் கூட்டத்திடம் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டியுள்ளது.யானைகள், பறவைகள் எச்சத்திலும் மலர்ந்தது காடு!  ஆனால், இன்று யானை பயமுறுத்தும் அச்சமுறுத்தும் மிருகமாகவும், பறவைகள் தொந்தரவு செய்கின்றன என்று வீட்டின் முன் உள்ள மரங்களை வெட்டும் அடி முட்டாள் சமூகத்திடம் சுற்றுச் சூழல் கிடந்து அவதியுறுகின்றது. அதே நேரத்தில், எத்தனையோ பள்ளி சிறுவர்கள் விதைப்பந்துகள் செய்து காடெங்கும் விதைத்த பறவைகள் நினைவாக சாலை எங்கும் விதைத்து வருவது மாற்றத்திற்கான நல்ல செய்திகளே.

இன்று பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று கூடுகின்றன. ஆனால் இன்னும் இந்தியா இதில் தயக்கம் காட்டுவது சற்று வருத்தமளிக்கவே செய்கின்றது. தலைநகரம் டெல்லியும், தமிழ்நாட்டில் கோவையும் காற்று மாசுபாட்டால் திணறிக் கொண்டிருக்கின்றன!. இந்த காலநிலை மாற்றத்திற்கு எதிராக ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு கட்டாயம் பங்கு கொள்ள வேண்டும் உண்மையில் இன்னும் எத்தனை எத்தனையோ அதிசயங்கள் காணக் கிடைக்கின்றன!

இந்த பூமிதனில் அவைகளை தேடிய பயணம் பல தலைமுறைகளாக தொடர்ந்த வண்ணம் உள்ளன. உண்மையில் நமக்கு பின்னும் இந்த வண்டுகளும், பூச்சி இனங்களும் இந்த பூமியில் வாழக் கூடும் அவைகள் தங்களை தகவமைத்துக் கொள்ளும். ஆனால், மனிதனால் தன்னை உருமாற்றிக் கொள்ள முடியாமல் இறுதியில் மடிந்து போவான்’ என்று உணர வைத்து விட வேண்டும் இந்த நல்ல நேரத்தில்!

பறவை சூழ் உலகு! கண்களுக்கு விருந்து!

காடு என்பது பயங்கரமாக இருக்கும் என்றும், பூச்சிகள் ஆபத்தானவை என்றும் பயமுறுத்தும் இந்த நவீன கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தி காக்கை, குருவிகள் தாண்டியும் இன்னும் லட்சக்கணக்கான பறவைகள் வாழ்ந்து வருகின்றன, நாமும் இந்த பூமியின் ஒரு சிறு அங்கம் என்னும் புரிதலை உணர்த்தும் மாற்று கல்வி வேண்டும் நம் மாணவர்களுக்கு!

எந்தப் பூச்சிகளையும், மனித இனத்தால் முற்றிலும் அழிக்கவே முடியாது.பூச்சிகளை விரட்டிய சமூகம் இன்று பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த தூண்டியது பன்னாட்டு அரசியல் சூழ்ச்சியாகும்.தெளித்த ஒவ்வொரு துளி வேதியியல் ரசாயனங்களும் காற்றிலும், நீரிலும் கலந்து பல்லுயிர்களை சிதைத்து வேறு ஒரு வழியில் நம் தட்டின் உணவாக ஆக்கிரமிக்கிறது என்பதை எப்போது உணர போகிறாய் மனிதா? மெத்தில் ஐசோ சயனைடு,எண்டோசல்பான் ஏற்படுத்திய விளைவுகள் போதாதா? இன்னுமொரு கோர விபத்து நடக்கும் முன் இயற்கை விவசாயத்தை ஒவ்வொரு கடைக்கோடி மக்களுக்கும் நாம் கொண்டு சேர்த்தே ஆக வேண்டும் தோழமைகளே.

வனங்களில் வீசப்படுகின்ற ஒரு சிறு மதுபாட்டில் யானை என்னும் பேருயிரை வீழ்த்துவதும், பூச்சிக்கொல்லி ரசாயனங்களால் அழிந்து வரும் தேனீக்கள், கழுகுகள், கழுதைப்புலிகள் இன்னும் எத்தனையோ உயிரினங்களை தடுக்கும் அவசர சட்ட திருத்தங்களை கொண்டு வர வேண்டும். மரம் காக்க வந்த நடுகல் முறை இன்று பரிணாமம் அடைந்து சிலை வடிவம் பெற்று காடுகளை அழித்து கோயில்களாக மாறிவிட்டதையும்,கடவுளின் பெயராலேயே இயற்கை வளங்கள் சூறையாடப்படும் வன்முறையையும் கட்டுக்குள் வருவதாலேயே சுற்றுச்சூழல் சிக்கல்களை சரி செய்ய முடியும்.

வெறும் சொல்லோடு நில்லாமல் களப்பணிகளில் பள்ளி சிறுவர்களை கொண்டு அரியலூர் மாவட்டத்தில் மரங்களின் நண்பர்கள் அமைப்பு மூலம் அடர்வனம் அமைத்தும், பனை விதைத்தும், நெகிழிக்கு எதிராக துணிப்பை வழங்கியும், வெட்டப்படும் மரங்களை காத்தும், பறவைகளுக்கு கூடுகள் அமைத்தும், மூலிகைதோட்டம் நஞ்சில்லா இயற்கை வேளாண் மாதிரி பண்ணை அமைத்தும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சூழலியல் சேவை செய்து வருகிறோம்.

‘எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க’ என்னும் வள்ளலாரின் கூற்றுபடியும், ‘காக்கை குருவிகள் எங்கள் ஜாதி’ என்னும் மகாகவி பாரதியின் அன்பின் உச்சத்தோடும் செயல்படுவோம். மண்ணைக் கிளரும் மண் புழுவை நேசிக்கும்  சுல்தான் அகமது இஸ்மாயில் போன்ற இன்றைய இயற்கை ஆர்வலர்கள், ஸீவீடன் நாட்டு சிறுமி கிரேட்டா தன்பெர்க் போராட்டங்கள், ஆந்திராவில் இயற்கை விவசாயத்திற்கு மக்களை மாற்றும் ஸ்ரீ ராம ஆஞ்சநேயலு, திணையில் கோட்பாடுகளை மக்களுக்கு பரப்பி வரும் தோழர் பாமயன்,  காட்டுயிர் ஆர்வலர் கோவை சதாசிவம்  போன்றோரும், கால நிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் பூவுலகின் நண்பர்கள் மற்றும் ஊரெங்கும் வனம் அமைத்து வரும் எண்ணிலடங்கா தன்னார்வலர்கள், துணிப்பை பரப்பும் இயக்கங்களும், பனை விதைக்கும் சிறுவர்கள்… என எத்தனையோ நல் மனிதர்கள் இந்த மண்ணை இன்னும் நேசித்து சூழலைக் காக்க போராடி வருகின்றனர். நாமும், இவர்களோடு கைகோர்த்து இணைவோமே…!

சூழல் காப்போம்! தேசம் காப்போம் !

கட்டுரையாளர்; முத்துகிருஷ்ணன்.க

சூழலியலாளர்,

தலைமை ஒருங்கிணைப்பாளர்

‘மரங்களின் நண்பர்கள் அமைப்பு’ அரியலூர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time