ஆவேச அண்ணாமலை, அதோ கதிக்கு ஆளாவார்!

- சாவித்திரி கண்ணன்

அண்ணாமலைக்கு ஏதோ மன நிலை சார்ந்த பிரச்சினை இருக்கிறது. ‘ரெஸ்ட்லெஸ் மைண்ட்’ உள்ளவங்க தான், இந்த மாதிரி ‘பிகேவ்’ பண்ணுவாங்க! ஊடகக்காரர்கள் என்றாலே, தனக்கு எதிரானவர்கள் என்ற மனநிலை அவர் மனதில் ஆழமாக பதிந்துள்ளதாக தோன்றுகிறது! விதண்டாவாதிகள் வெகு காலம் தாக்குப் பிடிப்பதில்லை!

அவரால் ஒரு ஷணம் கூட இயல்பு நிலையில் பேச முடியவில்லை! தன்னையும் மீறிய கோபம், கொந்தளிப்பு, ஆவேசம் என சூழலையே அவர் சங்கடத்திற்கு உள்ளாக்குகிறார். உண்மையில் இது பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பிரச்சினை என சுருக்கிவிட முடியாது! பாஜகவில் உள்ள அனைவருக்குமே இது தர்மசங்கடத்தை தான் தந்து கொண்டுள்ளது. ஏனென்றால், அவரிடம் பக்குவமின்மை பளிச்செனத் தெரிகிறது! சும்மா சாதாரண மன நிலையில் பேட்டி எடுக்க வரும் எந்த ஒரு நிருபரையுமே பாஜகவிற்கு எதிரானவராக மாற்றிவிடுவதில் வல்லவராக உள்ளார் அண்ணாமலை! ‘பத்திரிகைகளின் விரோதம் பாஜக வளர்ச்சிக்கு பாதகம்’ என்றே பாஜகவில் உள்ள பலரும் கருதுவதாகத் தெரிகிறது!

அண்ணாமலை அரசியலுக்கு புதியவர்! அரசியலில் அனுபவம் என்பது தான் முதல் தகுதியாகும்! எலிமெண்டரி ஸ்கூல் குழந்தையை பி.எச்.டி தேர்வு எழுதச் சொல்வது போல, கட்சியில் சேர்ந்த மிகக் குறுகிய காலத்திலேயே அவர் மாநிலத் தலைவரானதால் தடுமாறுகிறார்! அவரது தடுமாற்றமும், தவறுகளும் கட்சியைக் கடுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்தாலும், மூத்த தலைவர்களால் இதை வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை அக் கட்சியில் நிலவுகிறது.

எவ்வளவோ அனுபவஸ்தர்கள் அந்தக் கட்சியில் இருக்க, இப்படி ஒரு கத்துக் குட்டி தலைவனிடம் கட்சியை ஒப்படைத்த மேலிடத்திற்கு இங்கு நடக்கும் கூத்துகள் குறித்த கவனமே இல்லாமல் இருப்பது அண்ணாமலைக்கு இன்னும் சாதகமாக போய்விட்டது.

கார்ப்பரேட் கம்பெனிகளைப் போல கட்சிகள் செயல்படுவதன் விளைவே இது! கட்டற்ற அதிகாரம் கொண்டவராக அதன் சி.இ.ஒ செயல்படுவார்! ஒரு பேரழிவு வரைக்கும் அடிமட்டத்தில் உள்ள யாருமே அவரை கண்டிக்கவோ, தவறுகளை சுட்டிக் காட்டவோ வாய்ப்பே இருக்காது!

கட்சித் தலைவராக இருப்பது என்பது மனித உறவுகளைப் பேணத் தெரிந்தவர்களால் மட்டுமே வெற்றி பெற முடிந்த ஒரு பதவியாகும்! பெருந்தலைவர் காமராஜ் அன்றைக்கு கருத்து வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து தரப்பு நிருபர்களாலும் கொண்டாடப்பட்டார். இத்தனைக்கும் அவர் தமிழக முதலமைச்சர் ஆன போது, தி இந்து உள்ளிட்ட பல பிராமண பத்திரிகைகள் ராஜாஜி போன்ற கூர்ந்த அறிவாற்றல் உள்ள தலைவர் இருந்த இருக்கையை படிக்காத தற்குறிக்கு தந்துவிட்டனர் என எழுதின! ஆனால், மனிதர்களை கூர்ந்த பார்வையிலேயே படித்துவிடக் கூடிய நுட்பமான புத்தி கூர்மை கொண்ட காமராஜர் விரைவில் அனைத்து நிருபர்களின் பெரும் மதிப்பையும், மரியாதையையும் விரைவில் வென்றெடுத்தார்.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு என்பது அலாதியானதாக இருக்கும். அத்தனை விரபங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்! அவருடைய அறிவாற்றலும், பேச்சாற்றலும் எல்லா நிருபர்களையும் வியப்பில் ஆழ்த்தும்.

கருணாநிதி பத்திரிகையாளர்களின் கேள்விக்கு சாதுரியமாக பதில் அளிப்பார்! இரு அர்த்தம் கொண்ட சொல்வடைகள் பேட்டியை கலகலப்பாக்கிவிடும். ஜெயலலிதா கொஞ்சம் சிக்கல்! அவர் விரும்பாத கேள்வியை யாரும் கேட்கக் கூடாது  என நினைப்பார். அப்படிக் கேட்கும் நிருபருக்கு அடுத்த பிரஸ்மீட்டில் அனுமதி கிடைப்பதே கஷ்டமாகிவிடும்.

வி.பி.சிங் பிரஸ் மீட் விறுவிறுவென்று போகும். புன்னகை தவழ சகஜமாகப் பேசுவார்! ராஜிவ் காந்தி ஆரம்பத்தில் தடுமாறினாலும், போகப் போக அழகாக சமாளித்து விட்டார்!  அணுகுவதற்கு மிகவும் எளியவாராக இருந்தார் ராஜிவ்! பேட்டிகளின் போது ராகுல்காந்தி மிகவும் சின்சியராகவும், உண்மையாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்!

மூப்பனார் சிக்கலான கேள்விகளை சிம்பிளாக சிரித்து மழுப்பி, சம்பந்தமில்லாத ஏதோ ஒன்றை சொல்லிக் கடந்துவிடுவார்! மனுசனிடம் துளி கூட பதட்டத்தை பார்க்க முடியாது! வாழப்பாடி ராமமூர்த்தி பத்திரிகையாளர்களிடம் நல்லுறவைப் பேணுவதில் தன்நிகரற்று விளங்கினார்!

தமிழக பாஜகவில் நாங்கள் பல தலைவர்களை பார்த்துவிட்டோம். இல.கணேசன், கே.என்,லட்சுமணன், ஜனா.கிருஷ்ணமூர்த்தி, பொன்.இராதாகிருஷ்ணன், சி.பி.இராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்திரராஜன்.. இப்படியான எல்லோருமே மீடியாக்களிடம் நல்லுறவையே கொண்டிருந்தனர்! கட்சித் தலைவர் பதவி நிரந்தரமல்ல என்பதும், அந்த பதவி இல்லையேல் தன்னை யாருமே சட்டை செய்ய மாட்டார்கள் என்பதும், ஏனோ அண்ணாமலைக்கு தெரிவதில்லை! விரைவில் அவரிடம் இருந்து பதவி பறிக்கபடவும் வாய்ப்பு உள்ளது!

அண்ணாமலை ரெஸ்ட்லெஸாக உள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது! ஆகவே தொடர்ந்து அவர் ரெஸ்ட்லெஸாக இருப்பது அவரது நலனுக்கே நல்லதல்ல! அருள் கூர்ந்து அவரை மன அழுத்ததில் இருந்து மீட்டு எடுங்கள்!

அவர் பேட்டி தருவதற்காக தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்பதையே மறந்து வாதப் பிரதிவதங்களுக்கான மனநிலைக்கு விரைவில் சென்றுவிடுவதோடு , பத்திரிகையாளர் சந்திப்புகளை ஒரு போர்க்களமாக மாற்றிவிடுகிறார்! அவர் கூட உட்கார்ந்தும், நின்றும் கொண்டுள்ள மற்ற பாஜகவினரின் முக பாவங்களை பார்க்கும் போது, ‘அய்யோ இந்த ஆள் இந்த பேட்டியை சீக்கிரமாக முடிக்கக் கூடாதா?’ என்ற பதட்டம் அவர்களிடம் நிலவுவதைக் காணலாம்!

ஒரு பெரிய பதவி கிடைத்துள்ளது! அதில் நிறைய நண்பர்களை கண்டடைவது தான் வெற்றியாளர்கள் அனைவரும் செய்வது. ஆனால், எல்லா நேரங்களிலும் எதிரிகளை உருவாக்கிய வண்ணம் இருப்பது அண்ணாமலையிடம் ஏதோ மனப் பிறழ்ச்சி இருப்பதைத் தான் உணர்த்துகிறது! பாவம் அண்ணாமலை, மன அழுத்ததில் இருக்கிறார்! அதில் இருந்து அவர் விரைவில் மீளட்டும். ஆனால், அதற்குள் அவர் தன் கட்சியை வெள்ளத்தில் மூழ்கடித்து விடுவார் போலத் தெரிகிறதே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time