மக்கள் மீது விழுந்த மரண அடியை மன்னித்ததா நீதிமன்றம்?

- ச. அருணாசலம்

அதிரடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி வாசலில் வரிசையில் நின்றதில் மயங்கி விழுந்தும், தற்கொலை செய்தும் 150 பேர் இறந்தனர்! எத்தனையோ கோடி பேர் எதிர்காலத்தை தொலைத்தனர். சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா சந்தித்த சொல்லொண்ணா துயரம் இது! இதை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கிறதா?

‘நோட் பந்தி’ என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சியும், அவலமும் நாடறிந்த ரகசியம் . அது சாமானிய மக்களுக்கு இழைத்த கொடுமையையும், ஏராளமான சிறு, குறு தொழில்களை முடக்கியதும், மறுப்பார் யாரும் இல்லை. அன்று பட்ட அடியிலிருந்து இந்திய பொருளாதாரம் இன்று வரை மீட்சி பெறவில்லை என்பது படித்த வல்லுனர்களும், பாமர மக்களும் ஒத்துக் கொள்ளும் உண்மையாகும் .

இந்த முட்டாள்தனமான நடவடிக்கையை இனிமேலும் தூக்கிபிடிக்க முடியாது என்று சங்கி ஆதரவு மேதாவிகளும், பொருளாதார வல்லுனர்களும் 2018ம் ஆண்டே முடிவுக்கு வந்தனர். ஆகவே தான் 2019 நாடாளுமன்ற தேர்தலில் நோட்பந்தி “சாதனை” பற்றி பாரதிய ஜனதா கட்சியோ, மோடியோ வாய் திறக்கவில்லை.

தங்களது சாதனை பணமதிப்பிழப்பு என்று பாஜகவினரே சொல்லத் தயங்கிய நேரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு சிலருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளதா?

ஆனால், உச்சநீதி மன்றம் இந்த துக்ளக் பாணி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உண்மையில் வரவேற்றுள்ளதா? அல்லது அங்கீகரித்துள்ளதா?

அரசுகளின் கொள்கை முடிவில் எப்பொழுதும் நீதி மன்றங்கள் தலையிடுவதில்லை! அதை சரியா? தவறா? என்ற முடிவிற்கு ஒருபோதும் நீதிமன்றம் செல்லாது, அதையேதான் இந்த தீர்ப்பிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்ட வழக்கே பணமதிப்பிழப்பு சரியா? தவறா? என்பதல்ல. மாறாக அந்த “அறிவிப்பு” 1934ம் வருடத்திய ரிசர்வ் பேங் ஆப் இந்திய சட்டம், பிரிவு 26(2) ஐ அடியொற்றி அறிவிக்கப்பட்டதா? இல்லையா? என்பது தான்.

உண்மையில், இந்த அறிவிப்பு” சட்டரீதியாக ” அறிவிக்கப்பட்டதா? இல்லையா? என்ற கேள்விக்கு பெரும்பான்மை (4) நீதிபதிகள் “ஆம்” என்றும், சிறுபான்மை தீர்ப்பாக  ஒரு நீதிபதியின் “இல்லை” என்ற தீர்ப்பும்  வெளிவந்துள்ளது. இயல்பாகவும் இயற்கையாகவும் நாம் பெரும்பான்மை தீர்ப்பை சட்டமாக , இறுதி முடிவாக ஏற்றுக்கொள்வது நமது சட்ட மரபு.

ஆனால் “தீர்ப்பு” வந்தவுடன் பாஜக முன்னாள் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் , பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உச்ச நீதி மன்றமே ஏற்றுக் கொண்டுவிட்டது. அதை எதிர்த்த ராகுல் காந்தியும் மற்ற எதிர்கட்சியினரும் “மன்னிப்பு ” கோர வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார் . இதை எதிர் கட்சிகள் சாடியுள்ளன. அரசும், ஆளும் தலைமையும் வாய்மூடி இருக்கும் பொழுது “முன்னாள்” அமைச்சர் மூலம் அறிக்கை வருவதிலிருந்தே இதை புரிந்துகொள்ள முடியும்.

கருப்பு பணத்தை ஒழித்தல், பயங்கரவாதத்திற்கு பணம் செல்வதை தடுத்தல், ஊழலை ஒழித்தல், பொருளாதாரத்தில் உள்ள பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவையே பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கான காரணமாக சொல்லப்பட்டது. ஆக, என்ன காரணத்திற்காக அறிவிக்கப் பட்டதோ அவை நடைபெறவில்லை என்பதும், மாறாக அதனால் ஏற்பட்ட அவலமும், ரணமும், காயங்களும் இன்றும் தொடர்கின்றன.

பண மதிப்பிழப்புக்கு எதிரான போராட்டங்கள்!

ஆனால், அரசோ மனசாட்சியின்றி, தனது இலக்குகளை (Goal Post) ஒராயிரம் முறை மாற்றிக் கொண்டே வந்ததும் நாம் மறக்கவில்லை.

இதில் ‘உயரிய ‘ நோக்கங்கள் மட்டுமே கவனிக்கப்பட வேண்டும். அது ஏற்படுத்திய மாற்றங்களை அல்ல, என்பது வெறும் “பிதற்றல்” ஆகும்.

அரசு என்பது செயலாதிக்கத்தின் அறிகுறி. அது சங்கர மடமோ அல்லது ஆண்டிகளின் கூடாரமோ இல்லை. அரசின் தலைமை பொறுப்பில் உள்ளவர் – தலைமை அமைச்சர் அல்லது பிரதம மந்திரி – மாமரத்து முனியோ அல்லது போதி மரத்து புத்தரோ அல்ல.

செயலதிகாரம் பெற்ற ஒரு பிரதம சேவகர், அவரது சொல் மற்றும் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர். ஏனெனில் அவரது செயலால், எடுக்கும் நடவடிக்கையால் எண்ணற்ற மக்களுக்கு பாதிப்பு வர வாய்ப்புள்ளது. ”பிரதமர்-உயரிய நோக்களுக்காக பண மதிப்பிழப்பை அறிவித்தார், அதை மட்டுமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், அவர் எடுத்த நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகளை கணக்கில் எடுக்க வேண்டாம் என்பதும்” அரசாட்சி முறைக்கும், ஐனநாயகத்திற்கும் எதிரானது மட்டுமல்ல. அது ஒரு பித்தலாட்டமான அணுகுமுறையாகும் . அரசின் “அடிவருடி” நாளிதழ்கள் தொடர்ந்து இத்தகைய ஈனத்தனமான செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது வேதனையானது, கண்டிக்கதக்கது.

தனது “பராக்கிரமத்தை” காட்ட , தடாலடியாக, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் அதிர்ச்சியூட்டும் ஒரு செயலை அது சாமானியர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளை கருத்தில் கொள்ளாது அதற்கான முன்னெச்சரிக்கை முயற்சிகள் எதுவும் செய்யாத அரைவேக்காட்டு நடவடிக்கையை மோடி அறிவித்தார் . தன்னை பற்றிய “பிம்பத்தை” கட்டி எழுப்ப இந்த நடவடிக்கையை அவர் அறிவித்தார்.

”ஐம்பது நாட்களில் அனைத்தும் சரியாகி அறிவித்த இலக்குகளை எட்டுவோம் , தவறினால் எந்த தண்டனையையும் ஏற்கத்தயார்” என நாடகமாடிய மோடி எந்த இலக்குகளை அடைந்தார்.

தண்டனை இவருக்கு கிடைத்ததா? அல்லது சாமானியர்களுக்கு கிடைத்ததா? அடைந்த துயருக்கும், அடையாத இலக்குகளுக்கும் யார் பொறுப்பு?

‘எந்த வினைக்கும் எதிர்வினை உண்டு’ என்று முழங்கியவர்கள் இன்று ஏன் ஊமைகளாகி விட்டனர்? செயலுக்கும் அதன் விளைவுகளுக்கும் யார் பொறுப்பு?

மனித குலத்திற்கு தெரிந்ததெல்லாம் செயலுக்கும் அதன் பயனான விளைவுக்கும் உள்ள உறவும், சம்பந்தமும் மட்டுமே.

பண மதிப்பிழப்புக்கு எதிராக காங்கிரசார் நடத்திய போராட்டம்

இது புரியாத மரமண்டைகள் நோக்கத்தின் அவசியம் பற்றி வியாக்கியானம் கொடுக்க முன்வருகின்றனர். நோக்கம் பற்றி நமக்கு கவலையில்லை செயலும் அதன் விளைவும் தான் நமக்கு முக்கியம் . இட்லர் முதல் போல் பாட் வரை, ஏன் இன்னும் பல போர்வைகளில் வரும் கொடுங்கோலர்களின் நோக்கமெல்லாம் அவர்களை பொருத்தவரை “உயரியவை”தான் ,ஆனால், அவை ஏற்படுத்திய விளைவுகளை வரவேற்க முடியுமா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. அவை அரசியல்,பொருளாதார மற்றும் சட்ட அம்சங்களாகும் .

நோட் பந்தியின் அரசியல் அம்சத்தை நோக்கினால், இதனால் பல கோடி மக்களின் வாழ்க்கை புரட்டி போடப்பட்டது. பொருளாதார அம்சத்தை நோக்கினால் “அது” இந்திய பொருளாதாரத்திற்கு கொடுத்த அடி மரண அடி என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வர்.

மக்களின் மனசாட்சியாக வெளிப்பட்ட நீதிபதி பி.வி. நாகரத்தினா.

சட்ட அம்சத்தில் இந் நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிதிகளையொட்டியே எடுக்கப்பட்டது என்று தீர்ப்பெழுதியுள்ளனர். பி.வி. நாகரத்தினா என்ற ஒரு நீதிபதி இந்த நிலையிலிருந்து மாறுபட்டு தீர்ப்பெழுதியுள்ளார். அது மக்களின் மனசாட்சியாக வெளிப்பட்டு உள்ளது! அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாத இது போன்ற நீதிபதிகள் மக்கள் நெஞ்சில் என்றென்றும் நிலைத்து நிற்பர்!

இவ்விஷயத்தில் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலின் வாக்கு மூலம் பெறப்பட்டதா என்று நமக்கு தெரியவில்லை.

ஆனால், நமக்கு ஒரு சினிமா வசனம் ஞாபகத்திற்கு வருகிறது.” நாங்கள் நாயை சுடுவதானாலும் சட்டப்படி தான் சுடுவோம்” என்ற வசனந்தான்!

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கட்டபொம்மனின் கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் மேஜர் பானர்மான் உதிர்க்கும் இவ் வசனம் இன்றைய நிலைமைக்கும் பொருந்தும்.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time