சென்னையில் 1000 அரங்குகளுடன் பிராமாண்டமாக தொடங்கி உள்ளது 46 வது புத்தகத் திருவிழா! ஆயிரம் அரங்குகள் என்றவுடன் ஆயிரம் பதிப்பகங்கள் கடை போட்டுள்ளனர் என்பதில்லை! எல்லா இடங்களிலும் ஒரு சிலரே ஆக்கிரமித்து, மற்ற சிறிய பதிப்பகத்தாரை விரட்டி அடித்து ஆக்டோபஸாக செயல்படுகிறார்கள்!
இன்று 6-ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைக்க,காலை 11 மணிக்கு தொடங்கும் கண்காட்சி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
வழக்கமாக விடுமுறை நாட்களிலேயே 11 மணி வரையும் அலுவலக நாட்களில் மதியம் 2 மணி தொடங்கிடும் நடைபெறும். இம்முறை அரசின் நிதியுதவி பெறுவதால் மதியம் உணவுடன் கலந்து கொள்ளும் பதிப்பாளர்- விற்பனையாளர்களுக்கு உணவும் வழங்கி புத்தகத் திருவிழா நடைபெறுவதும் சிறப்பு.
புத்தகக் கண்காட்சி என்பது ஒரு அறிவுத் திருவிழா! அரசின் நிதி உதவி பெற்று நடக்கும் விழா! ஆகவே, அதில் அனைவரும் பங்கு பெறும்படி நிர்வாகிப்பது தான் பொறுப்பான நிர்வாகமாகும்! ஏராளமான சிறு பதிப்பகங்களை தூர நிறுத்திவிட்டு, காசு, பணம், துட்டு எனக் கண்மூடித்தனமாக இயங்குவது சரியாக இருக்குமா தெரியவில்லை!
பெரிய பதிப்பகங்களுக்கு சிங்கிள் ஸ்டால் போதாது! ஆகவே, அவர்கள் டபுள் ஸ்டால் கேட்பதோ, அல்லது நான்கு ஸ்டால்கள் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட ஸ்டாலோ எடுப்பதை புரிந்து கொள்ளலாம்!
ஆனால், பெரிய பதிப்பங்கள் ஐந்து மட்டுமே, 8 அரங்குகளை ஒருங்கிணைத்த பிரம்மாண்ட அரங்கை எடுத்துக் கொண்டுள்ளனர்! இதில் விகடன் நிறுவனம் பிரம்மாண்ட அரங்கு எடுத்துக் கொண்டதோடு, அவள் விகடன், மோட்டார் விகடன், சுட்டிவிகடன், பசுமை விகடன் எனத் தனித்தனியாக டபுள் மற்றும் சிங்கிள் ஸ்டால் எடுத்துள்ளது! அதே நக்கீரன் போல நக்கீரனும் ஒரு பிரம்மாண்ட ஸ்டால் மட்டுமின்றி, சாருப்பிரபா, ராம்பிரசாத் என வெவ்வேறு பெயர்களில் மேலும் ஐந்து ஸ்டால்கள் எடுத்துள்ளது. காலச்சுவடுவும் எட்டு ஸ்டால்கள் ஒருங்கிணைந்த அரங்கை எடுத்துள்ளது! கிழக்கு பதிப்பகமும், பிரிட்டிஷ் கவுன்சிலும் கூட இதே ரீதியிலேயே எடுத்துள்ளன!
இந்த ஆக்டோபஸ்களில் எல்லாம் பெரிய ஆக்டோபஸாக கிட்டதட்ட 16 அரங்குகளை எடுத்துள்ளது என்.சி.பி.எச்! இது எட்டு தனி அரங்கங்களை ஒருங்கிணைந்த பிரம்மாண்ட ஸ்டால் போதாது என்று, பாவை பிரிண்டர்ஸ் போன்ற வெவ்வேறு பெயர்களில் மேலும் எட்டு அரங்குகளை ஆக்கிரமித்து உள்ளது! இப்படி கோடிக்கால் பூதமாக ஆக்கிரமித்தது போதாது என்று, எக்கசக்கமான அரங்குகளில் தன் நூல்களை கொண்டு இறக்கி வைத்து, விற்கவும் வைக்கிறது என்.சி.பி.எச்! இதே பாணியை மற்ற சில பெரிய பதிப்பகங்களும் செய்கின்றன! இதனால், ‘எங்கு திரும்பினாலும், எந்த அரங்கிற்குள் நுழைந்தாலும் தங்கள் நூல்களே வாசகர்களின் கண்களுக்கு தெரிய வேண்டும். அவங்க பர்ஸில் உள்ள பணமெல்லாம் நம்ம பதிப்பகத்திற்கே வந்து சேரணும்’ என இவர்கள் நினைக்கிறாங்க!
இதுதான் கம்யூனிஸ கோட்பாடோ?
இதன் விளைவு சிறு பதிப்பகத்தார் கடுமையாக பாதிக்கபடுகின்றனர்! மொத்த அரங்குகளையும் நடந்து பார்ப்பதற்குள் சோர்வு ஏற்பட்டு பலரும் நான்கைந்து வரிசைகளை மட்டுமே பார்த்து, நூல் வாங்கி செல்வதும் நடக்கிறது! ஒரு கட்டத்தில் வாசகர்கள் எல்லா இடத்திலும் ஒரு சில நூல்களே இருகின்றன..” – என்று சலிப்போடு கடந்து சென்றுவிடுகின்றனர். இத்தகையப் போக்குக்கு பப்பாசி முடிவுகாண வேண்டும்!
4 அரங்குகள் ஒருங்கிணைந்த முறையில் மட்டுமே 70 அரங்குகள் உருவாக்கப்பட்டு உள்ளன!
2 அரங்குகள்- ஒருங்கிணைந்த வகையில் 250 அரங்குகள் எடுக்கப்பட்டு உள்ளன!
பத்தடிக்கு பத்தடி சிங்கிள் அரங்குகள் என்பதாக 150 – என்பதாக மொத்தம் ஆயிரம் ஸ்டால்கள் கணக்கு வருகிறது!
இது போன்ற நிகழ்வு பிற மாவட்டங்களில் நிகழ்வதில்லை. இதற்குக் காரணம் அந்தந்த மாவட்டங்களில் இவர்களால் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியாது! அதற்கான பலனையும் எதிர்பார்க்க முடியாது.
இது ஒரு புறம் இருக்க, மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாவில், மாவட்ட ஊராட்சி நூலகங்களுக்கு அரசு தொகை ஒதுக்கி நூல் கொள்முதலும் செய்தனர். அதுவும் அந்தந்த பதிப்பகத்தாரிடம் நேரிடையாக கொள்முதல் செய்ய அரசு பரிந்துரைத்தது. ஆனால், அப்படி நிகழ்ந்தா என்றால் கலந்துகொண்ட பதிப்பகத்தாரின் பதில்,”இல்லை” என்பதே.
இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக தமிழக அரசின் ரூ6.60 கோடி நிதி உதவியுடன் நடைபெறுவது மட்டுமல்லாமல் 16, 17, 18, 19 – ஆகிய நாட்களில் உலகத்தின் ஆங்கில பதிப்பாளர்கள் கலந்துகொள்ளும் பதிப்பகங்களும் கலந்துகொள்கின்றன!
இது எல்லாம் சரி. இத்தனை பிரமாண்டமான அரங்கை சுற்றிப் பார்த்து வாசகப் பெருமக்கள் அனைத்துக் கடைகளையும் கண்டு புத்தகம் வாங்குவது சாத்தியமா?- என்ற கேள்வி எழுகிறது.
அதற்கு, இவர்கள் முன் வைக்கும் பதில், ”வழக்கமாக 12-ஆம் நடக்கும் இதனை 17 நாட்கள் நடத்துவதால் அவரவர்க்கு உகந்த நாட்களில், மீண்டும், மீண்டும் வந்து, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் செல்லலாம்” என்கின்றனர். ஆனால், மீண்டும் வருபவர்கள் மிகக் குறைவாக இருக்க முடியும்!
அதேபோல் ஒரே பதிப்பகத்தாரே வேறு, வேறு பெயர்களில் கடை எடுப்பதும் பப்பாசியில் விவாதப்பொருளாக இருப்பதாக அயல்நாட்டு புத்தக திருவிழாவின் பொறுப்பாளர்களில் ஒருவரான டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் கூறியதோடு, “நான் விற்பனையான் தான் ஆயினும் கடந்த மூன்றாண்டுகளாக பதிப்பகம் தொடங்கி தரமான இலக்கிய நூல்களை, பன்னாட்டு தமிழர்களின் படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். அதற்காக கூடுதலாக என்பதிப்பக நூல்கள் விற்பனைக்கு வைக்கிறேன். அதில் பிற பதிப்பகத்தாரின் நூல்களை வாங்கி விற்பதில்லை என்பது என் நிலை. அதனாலேயே கவிஞர் வைரமுத்து -வின் படைப்புகளை நான் விற்பனைக்கு காட்சிப்படுத்தவில்லை, இது குறித்து ஒன்பது ஆண்டுகளாக பேசப்படுகிறது. ஆயினும், ஒவ்வொருவரும் பப்பாசியின் அங்கத்தினராக இருக்கும்போது கடை ஒதுக்குவது நியாயமாக கருதுகிறார்கள்” என்கிறார்.
மேலும், மாவட்டம் தோறும் நூலகப் புத்தக திருவிழா அரசு தொடருமா? அப்படித் தொடர்ந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு மாவட்ட நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் பெறுமா?- என்ற ஐய்ய வினாவை நூலகத்தையே நம்பி இருக்கும் பதிப்பாளர்களின் கேள்வியாய் தொனிக்கிறது. மேலும் கடந்த ஆட்சியில் லஞ்ச லாவண்யத்தோடு நூலகங்களுக்கு அனுப்பி நூல்களுக்கான தொகையும் பல மாவட்டங்களிலிருந்து வழங்காமல் இருப்பது சோகமே!
பெரிய தினசரி பத்திரிகைகளில் புத்தக கண்காட்சி குறித்து நன்றாக செய்தி வர வேண்டும் என்பதற்காக தினமணி, தினமலர், தினகரன், தி இந்து தமிழ் மற்றும் ஆங்கிலம்,டைம்ஸ் ஆப் இந்தியா போன்றவற்றுக்கு சின்சியராக அவர்கள் கேட்கும் அரங்குகளை தந்துவிடுகிறது பபாஸி! ஆனால், ‘சிறிய பத்திரிகைகள் அரங்கு கேட்டால் தருவதில்லை’ என்ற புகார் பரவலாக உள்ளது!
20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘கட்டுமானத் தொழில் ‘ மாத இதழ் நடத்தும் சிந்து பாஸ்கர் அரங்கு கேட்டு அணுகிய போது, ‘பபாஸியின் நிர்வாகி மிகவும் அதிகார தொனியிலும், அவமானப்படுத்தும் தொனியிலும் பேசியதாக’ கூறி வருத்தப்பட்டார்!
இதே போல’ உயிர்’ என்ற பெயரில் அற்புதமான சுற்று சூழல் இதழை நடத்தி வரும் சண்முகானந்தம் தானும் அரங்கு கேட்ட போது அவமானப்பட்டதாக தெரிவிக்கிறார்!
”சென்ற ஆண்டு நான் ஸ்டால் போட்டேன். இந்த ஆண்டு ஏன் மறுக்கப்படுகிறது எனத் தெரியவில்லை! இது போன்ற அறிவார்ந்த திருவிழா பதிப்பகத் தளத்தில் நடக்கும் புதுப்புது அறிவார்ந்த முயற்சிகளைப் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் அரங்கு கேட்டு விண்ணப்பிப்பவர்களை கர்ணக்கடூரமாக நடத்துவது வேதனையாக உள்ளது” என்றார்!
Also read
மற்றொரு மகளிர் இதழ் ஆசிரியரான கிரிஜா ராகவன், ”நான் லேடீஸ் ஸ்பெஷல் இதழை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். அறுபது நூல்களை பதிப்பித்து உள்ளோம். நான் ஸ்டால் கேட்டதற்கு மறுத்து விட்டார்கள்” என வருத்தப்பட்டார். இப்படி பலர் ஏமாற்றத்தில் உள்ளதாகத் தெரிகிறது!
மிக பிரமாண்டம், அதீத விளம்பர வெளிச்சம், பெரும் மக்கள் திரள் என்ற நிலையில் அனைவருக்கும் கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் சரியாக செய்ய முடிவதில்லை என்பது ஒரு குறையாகவே தொடர்கிறது.
கட்டுரையாளர்; எழில்முத்து
பத்திரிகையாளர், எழுத்தாளர்,
நூல் வெளியீட்டாளர்
இலக்கிய திருவிழா நன்கு படித்தவர்களால் நன்கு படித்தறியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு நடத்தும் ஒர் திருவிழாவில் இப்படி ஒரு பாகுபாடு என்பது உள்ளபடி வேதனையான ஒன்று.
மிகவும் கண்டிக்கதக்கது.
இந்த புத்தக திருவிழா ஒரு நாளில் சுற்றி வரலாம். ஆனால் ஒரே நாளில் அனைத்து ஸ்டால்களையும் பார்த்து அறிந்து புரிந்து புத்தகம் வாங்கிட முடியாது
எங்கெங்கு காணினும் கருணாநிதி தான் இருப்பார் போல் உள்ளது. திமுகவின் வேலையே புத்தக கண்காட்சியை அரசியல் களமாக பயன்படுத்துவது. ஜால்ரா தட்டிகளுக்கான காட்சியாக இருக்கும் போல உள்ளது.
உண்மையை கூறினீர்கள், சரி செய்வது பபாசியின் கடமை…
தயவு செய்து இந்தப் பதிவினை பபாசி நிர்வாகிகளின் கவனத்திற்கு தனியாகவும் அனுப்பி வையுங்கள். அறம் முயற்சியில் அரசுக்கும் தெரிவிக்கலாம்.பிரச்சனைகளைக் கூறுவதோடு நிற்காமல் அதற்கான தீர்வுக்கு வழி காண்பதும் அறத்தின் பணியாக இருக்க வேண்டும்.
முக்கியமானதை மறந்துவிட்டீர்கள், அரங்கை எடுத்து மற்றவர்களுக்கு விற்று பணம் சம்பாதிக்கும் பபாசி நிர்வாகிகளை தோலுரிக்க வேண்டுமே!
‘ஆக்டோபஸ்’ ஆக்கிரமிப்பில் புத்தகத் திருவிழா!
– எழில்முத்து – சென்னையில் 1000 அரங்குகளுடன் பிராமாண்டமாக தொடங்கி உள்ளது 46 வது புத்தகத் திருவிழா! ஆயிரம் அரங்குகள் என்றவுடன் ஆயிரம் பதிப்பகங்கள் கடை போட்டுள்ளனர் என்பதில்லை! எல்லா இடங்களிலும் ஒரு சிலரே ஆக்கிரமித்து, மற்ற சிறிய பதிப்பகத்தாரை விரட்டி அடித்து ஆக்டோபஸாக செயல்படுகிறார்கள்!