திமுக அரசு யாருக்கானதாக இயங்குகிறது?

-சாவித்திரி கண்ணன்

புதுக்கோட்டை இறையூர் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்தவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் என்ன திமுக அரசுக்கு? முதல்வரின் கனத்த மெளம், ஆட்சி நிர்வாகத்தின் கைகள் கட்டப்பட்ட நிலை, மேன்மேலும் சாதி விரோதங்கள் வளர்த்தெடுக்கப்படும் சூழல்கள்..! இவை எல்லாம் நமக்கு சொல்ல வரும் செய்தி என்ன..?

குடிநீரில் மலம் கலக்கப்பட்டு மக்கள் தலித் பாதிக்கப்பட்ட சம்பவம் நடந்து இரு வாரங்கள் ஆகிவிட்டன! மிகச் சிறிய கிராமத்தில் நடந்த இந்தக் கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என இது வரை கண்டு பிடிக்க முடியவில்லை! இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளும் தலைமை இது வரை வருத்தமோ, கண்டணமோ வெளிப்படுத்தாமல் மெளனித்து இருப்பது அதன் கோழைத்தனத்தை தான் வெளிப்படுத்துகிறது!

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடையூர் கிராமத்தில் தலித் மக்கள் சுமார் 30 குடும்பங்கள் வசிக்கும் வேங்கை வயல் தெரு மக்களுக்கென பிரத்தியேகமாக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதன் காரணமாக சுமார் ஒருவார காலமாக அடுத்தடுத்து குழந்தைகள், பெரியவர்கள் எனப் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளனர்! இதில் அரசு மருத்துவமனையில் சரியாக குணமாகாத காரணத்தால், தனியார் மருத்துவமனைக்கு ஒரு குழந்தை எடுத்துச் செல்லப்பட்ட போது தான் டெஸ்ட் எடுத்து பரிசோதித்த மருத்துவர் குடிநீர் ஒவ்வாமையால் தான் இந்தப் பிரச்சினை! ஊரில் குடிக்கும் குடிநீர் மிகுந்த மாசுபட்டுள்ளது என தெரிவித்த பிறகே, சுதாரித்து குடிநீர் தொட்டியின் மேலேறி பார்த்துள்ளனர்! அதில் மலம் கரைந்தும், கரையாமலும் நிறையவே மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்!

இதையடுத்து விஷயம் கேள்விப்பட்டு, அரசு நிர்வாகத் தரப்பில் பல தரப்பட்ட அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று பார்வை இடுகின்றனர்! அப்போது தான் அந்த கிராமத்தில் தேனீர் கடையில் இரட்டை குவளை முறை இருந்துள்ளதும், அய்யனார் கோவிலுக்குள் தலித் மக்கள் அனுமதிக்கப் படாததும் தெரிய வந்துள்ளது! இதை கண்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உடனடியாக தலித் மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளதும், அதை தடுக்க முனைந்து போலியாக சாமியாடிய பெண்ணையும், தேனீர் கடை உரிமையாளரையும் கைது செய்துள்ளதும் புரட்சிகரமானதாக அனைவராலும் பாராட்டப் பெற்றுள்ளது.

தீண்டாமை புரையோடிப் போயுள்ள ஒரு இடத்தில் இப்படிப்பட்ட முன் யோசனையோ, திட்டமிடலோ இல்லாமல் செய்யப்படும் அதிரடி அவசரச் செயல்கள் நீண்ட காலப் பலனைத் தராது என்பது மட்டுமல்ல, கிராமத்தின் தலித் அல்லாத ஒட்டுமொத்த மக்களை கடும் எதிர் நிலைக்கு தள்ளிவிட்டு, பகையை அதிகரிக்க செய்கிறது என்பதே யதார்த்தம்!

கலெக்டர் கவிதா ராமுவும், எஸ்.பி.வந்திதா பாண்டேவும் விசாரணை

சம்பவத்தன்று கோவிலிலேயே சாவி இருந்தும் தங்கள் யாரிடமும் இல்லாதது போல, முக்கால் மணி நேரம் இழுத்தடித்த சம்பவமும், கலெக்டரும், எஸ்.பியும் மிரட்டிய பிறகே வேறு வழியின்றி கோவிலை திறந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பிறகு, அந்த தலித் மக்கள் அங்கிருந்து சென்றதும், கோவிலில் தீட்டுக் கழிக்க தீவிரமாக கழுவப்பட்டு உள்ளது.

அத்துடன் தாங்கள் கோவிலுக்குள் நுழைந்தது தொடர்பாக அந்த கிராமத்தின் ஒட்டுமொத்த தலித் அல்லாதாரும் கடும் கோபத்தில் இருப்பதாகவும், தங்களுக்கு எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தலித் மக்கள் ரூட்ஸ் தமிழ் போன்ற ஊடகங்களிடம் பேசியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலாவதாக நடைபெற்றுள்ள மாபெரும் குற்றச் செயலுக்கு காரணமானவரை கண்டடைவது தான் பிரதான கடமையாகும். அதைத் தவிர்த்த மற்ற அணுகுமுறை திசை திருப்பலாகவே முடியும்! அதன் பிறகு அடுத்தடுத்து தான் மற்ற தீண்டாமை விவகாரங்களை இத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். தற்போதோ, அதிரடியாக ஒன்றை செய்துவிட்டு, அத்துடன் தன் கடமை முடிந்தது போல தமிழக அரசு நிர்வாகம் பிரச்சினையை எதிர்கொள்ளத் துணிவின்றி, அமைதியாக குற்றவாளிகளைத் தேடுவது போல பாவனை காட்டிக் கொண்டுள்ளது. அரசு நிர்வாக இயந்திரத்திற்கு அதிகபட்சம் மூன்று நாள் போதுமானது! அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் யார் இதை செய்தது என்பதை கண்டுபிடிக்க! கண்டிப்பாக காவல்துறை இதை கண்டுபிடித்திருக்கும்! ஆனால், ஆட்சித் தலைமையின் சம்மதம் இல்லாமல் உண்மை வெளியே வராது.

முதலாவதாக அந்த கிராமத்தையும், அங்கு நிலவும் சாதிய ஒடுக்குமுறையையும் முழுமையாக உள்வாங்கி ஸ்டடி பண்ண வேண்டும். பின்பு சூழல்களுக்கு தக்க ராஜ தந்திரத்துடன், சமயோஜித நடவடிக்கைகளின் மூலம் அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டும். மேலும், அந்த ஒரு கிராமத்தில் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதுமா? அந்த மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் இரட்டை குவளை முறையும், தீண்டாமையும் தான் உள்ளது! இந்த சம்பவம் ஒற்றை கிராமத்துடன் நின்றுவிடும் போது, அது எந்தப் பலனையும் தரப்போவதில்லை! சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும், திராவிடக் கட்சிகள் 55 வருடங்கள் ஆட்சி செய்த போதும், இந்த நிலை தொடர்கிறது என்றால், இது போன்ற விவகாரங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் படியான முன்னெடுப்புகள் இது வரை எடுக்கப்படவில்லை என்பதையே இவை உணர்த்துகின்றன! ஆகவே, இதில் காந்திய அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள் ஆகியவற்றுடன் அரசு கைகோர்த்து இவற்றைக் களைய வேண்டும்.

நடவடிக்கை கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

அந்த கிராமத்தை பொறுத்த அளவில் மூன்று சாதிகள் பிரதானமாக உள்ளனர்! முத்தரையர், அகமுடையார், ஆதி திராவிடர் ஆகியோரே! இதில் ஆதிதிராவிடர்களின் நிலஉடமைகள் முற்றிலுமாக அவர்களிடம் இருந்து கடந்த காலத்தில் அடாவடியாக பறிக்கப்பட்டு உள்ளது! அத்துடன் பல தலைமுறையாக கோவிலுக்குள் அனுமதியின்மையும், தீண்டாமை அணுகுமுறைகளும் நடந்து வருகின்றன! நாம் செய்வது தவறல்ல, இதுவே நம் வழக்கம் என்பது அவர்களுக்கு ஆழமாக பதிந்துள்ளது! மேலும், நடந்த சம்பவம் தொடர்பாக அந்த இரு சமூகத்தின் தரப்பிலும், வருத்தமோ, அனுதாபமோ இல்லாத ஒரு இருக்க நிலையில் வெளிப்படுகின்றனர் என்பது நம்மை நிறையவே அதிர்சிக்கு உள்ளாக்குகிறது! எனில், இதை ஒரு தனி நபர் தன்னிச்சையாக செய்திருக்க வாய்ப்பில்லை. ஊர் பெரிய மனிதர்களின் ஆதரவுடன் நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, தொலை நோக்குடன் கூடிய பெரிய திட்டமிடல்கள் தான் தேவை!

நடந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டின் பிரதான திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் கண்டணம் தெரிவிக்காததும், நேரில் செல்லாததும் இவர்களுக்கு சமூகநீதி என்ற சொல்லாடல் வெறும் தேர்தல் கால வியாபாரம் என்று தான் எண்ணத் தோன்றுகிறது! அதே போல கோவை கார்குண்டு வெடிப்பில் பொங்கி எழுந்த தமிழக பாஜக, இந்த விவகாரத்தில் வாய் மூடி மெளனமாக உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். அத்துடன் பாஜக தலைவர்கள் தடா பெரியசாமியும், கருப்பு முருகானந்தமும் அங்கு விசிட் அடித்ததோடு, அரசு நிர்வாகத் தரப்பிடம் இதை தலித் மக்களே தான் செய்திருக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தை தூண்டிவிட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே அதிகாரிகள் சந்தேகக் கண்கொண்டு கேள்விக் கணைகளை தொடுத்து வருவதாகவும் செய்தி வருகிறது!

அடிக்கடி வாய்க்கு வாய் திராவிட மாடல், பெரியார், அண்ணா வழியில் நடக்கும் ஆட்சி என சொல்லிக் கொள்ளும் முதல்வர் இந்த பேரதிர்ச்சியும் பேரவலமுமான சம்பவம் குறித்து ஏன் வாய் மூடி மெளனிக்க வேண்டும்? அந்தக் கட்சியின் மற்ற முக்கியஸ்தர்களோ, அமைச்சர்களோ அங்கு செல்லவில்லை. இதற்கு கண்டணம் தெரிவித்தால் ஆதிக்க சக்திகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற பயமா? எனத் தெரியவில்லை!

துக்ளக் நிருபர் ரமேஷின் 60 தாவது ஆண்டு திருமணத்திற்கும், ரங்கராஜ் பாண்டேயின் அப்பா இறந்ததற்கு இழவு கேட்கவும் முதல் ஆளாக ஓடிச் சென்று வருகை பதிவு செய்யும் ஸ்டாலின் சொல்ல வருவது என்ன? பிரதமர் மோடி தயார் இறந்ததற்கு இந்தியாவின் பாஜக ஆளும் முதலமைச்சர்களே அனுதாப அறிக்கையோடு நிறுத்திக் கொண்ட நிலையில், ஸ்டாலினோ முதலில் மாலை நான்கு மணி விமான பயணத்திற்கு டிக்கெட் எடுத்தார்! பிரதமர் தாயின் இறுதி காரியத்தை விரைவில் முடித்து டெல்லி கிளம்பிவிட்டார் என்ற நிலையில், டெல்லிக்கு இரவு ஏழு மணிக்கு டிக்கெட் எடுத்தார். ‘இரவில் அவரை சந்திக்க வாய்ப்பில்லை’ என்ற நிலையில் அதிகாலை டிக்கெட் எடுத்தார்! பிறகு, ‘பிரதமர் தாயார் இறந்தது தொடர்பாக யாரையும் சந்திக்க விரும்பவில்லை’  என கறாராக அறிவுறுத்தப்பட்டவுடன், அந்த விமான டிக்கெட்டும் கேன்சல் செய்யப்பட்டது!

இவையெல்லாம், ஸ்டாலின் யாருக்கானவராக இயங்கிக் கொண்டுள்ளார் என்பதை அன்றி, வேறென்ன உணர்த்துகின்றன! கள்ளக் குறிச்சி மாணவியின் மர்ம மரணம் விவகாரத்திலும் திமுக ஆட்சி, ஆர்.எஸ்.எஸ் காரான பள்ளி முதலாளியை காப்பாற்றுவதில் தான் பெரும் பிரயத்தனம் செய்து கொண்டுள்ளது. அதிலும் அப்பாவி தலித் மற்றும் விளிம்பு நிலை இளைஞர்கள் பலரை அநியாயமாக கைது செய்து கொடுமைக்கு உள்ளாக்கியது!

மொத்தத்தில் இது பெரியார் வழி நடக்கும் திமுக அரசல்ல, பெரியவா வழியில் பயணிக்கும் அரசே என்பது தான் பட்டவர்த்தமான உண்மையாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time