சமீப காலமாக காடுகள் பல்வேறு வகைகளில் காவு கொள்ளப்படுகின்றன! சுற்றுலா தளம், ஆன்மீகப் புனித தளம், தொழிற்சாலைகள், விடுதிகள்..என பலவாறாக ஆக்கிரமிக்கப் படுகின்றன! காடுகளை அழித்தால் பெரும் தண்ணீர் பஞ்சம் உருவாகும்! காடுகளை காப்பாற்ற செய்ய வேண்டியது என்ன..?
காவிரி, வைகை, தாமிரபரணி, அமராவதி, பவானி என எத்தனையோ ஆறுகளின் ஊற்றுக்கண், மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள்தான். அங்கே பொழிகின்ற மழை நீர்தான், இந்த ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது; தமிழ்நாட்டு மக்களின் தாகத்தைத் தீர்க்கின்றது; நெல், கரும்பு, வாழை எனப் பயிர்களை விளைய வைக்கின்றது. எனவே, மேற்குத் தொடர்ச்சி மலையை, தமிழ்நாட்டின் நீர்க்குடம் என்று அழைக்கின்றோம்.
மேற்கு மலைத் தொடர் என்பது, உலகத்தின் பழமையான பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று (Unesco Heritage site) என, யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளைத் தங்களுடைய வேட்டைக் காடாக ஆக்கினர்; பல நூறு ஆண்டுகளாக நன்கு செழித்து, வான் உயர வளர்ந்து நின்ற தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களை வெட்டி எடுத்து, தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்று வீடுகளைக் கட்டிக் கொண்டனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அடர்ந்த காடுகளை அழித்து வெட்டவெளியாக ஆக்கி, அங்கே தேயிலை, கேரட், முட்டைக்கோஸ் என தங்களுக்குத் தேவையான பயிர்களைப் பயிரிட்டனர். வீடுகளைக் கட்டி, கோடை வாழிடமாக ஆக்கினர். நீர்மின்சாரம் எடுப்பதற்காக பல அணைகளைக் கட்டினர்; ஊட்டி, சிம்லா, டார்ஜிலிங் போன்ற மலைகளில், தொடரித் தடங்களையும் அமைத்தனர்.
இந்தப் பணிகளின் போது இடையூறாக இருந்த புலிகளை வேட்டையாடிக் கொன்றனர்; இறந்த புலிகளின் உடல் மீது தங்கள் காலை வைத்து, துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு படம் பிடித்து, இங்கிலாந்து நாட்டில் தங்கள் வீடுகளில் மாட்டி வைப்பதைப் பெருமையாகக் கருதினர்.
புலி வேட்டையின்போது, நமது குறுநில மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு உதவியாக இருந்தனர். அவர்களும் வேட்டைக்காரர்கள் தான்.
1900 ஆம் ஆண்டு, இந்தியா முழுமையும் புலிகளின் எண்ணிக்கை 1 இலட்சம். ஆனால், ஆங்கிலேயர்கள், குறுநில மன்னர்களின் வேட்டை காரணமாக, புலிகள் முற்றிலும் அழியக்கூடிய நிலை ஏற்பட்டது. 1,500 க்கும் குறைந்து விட்டன.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளின் விளைவாக, புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது. தற்போது 3,500 முதல் 4,000 புலிகள் தான் இருக்கின்றன.
புலி ஒரு அரிய உயிர். காடுகளைப் பாதுகாக்க, இயற்கை படைத்த காவலன். எளிதில் யாரும் உள்ளே புகுந்து, மரங்களை வெட்டிக் கடத்துவதைத் தடுக்கும் பாதுகாப்பு அரண். எனவேதான், இயற்கைக் சூழலைப் பாதுகாக்க, புலிகளின் எண்ணிக்கையைப் பெருக்க, உலக நாடுகள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆசியக் கண்டத்தில், சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டுக் கோவில்களிலும் சிங்கங்களின் கற்சிலைகள் உள்ளன; ஆனால், இன்று இங்கே சிங்கங்கள் கிடையாது. அப்படியானால், அவர்கள் எதைப் பார்த்து அந்த வடிவத்தைச் செதுக்கினார்கள்?
அங்கெல்லாம் முன்பு சிங்கங்கள் வாழ்ந்தன; இப்போது அறவே இல்லை.
காரணம் என்ன? மனிதர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, நாடு முழுமையும் இருந்த காடுகளை அழித்து, வசிப்பிடங்களைக் கட்டினார்கள். அதனால், பல அரிய விலங்குகள் முற்றிலும் அழிந்து போய்விட்டன. ஆசியக் கண்டத்திலேயே தற்போது குஜராத் கிர் காடுகளில் மட்டும்தான் 500 க்கும் குறைவான சிங்கங்கள் உலவுகின்றன. அங்கேயும் காடுகளின் பரப்பு குறைந்து வந்ததால், மான் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
எனவே, மனிதர்களை வேட்டையாடுகின்றன. சில நாள்களுக்கு முன்பு, குஜராத்தில் ஐந்து வயதுச் சிறுமியை சிங்கம் தூக்கிக் கொண்டு ஓடியது. ஊர்க்காரர்கள் விரட்டினார்கள். சிங்கம் குழந்தையைப் போட்டு விட்டு ஓடியது. ஆனால், குழந்தை இறந்து போனது.
மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளில், புலிகளுக்கும், மனிதர்களுக்கும் வாழிடப் பிரச்சினை ஏற்பட்டு இருக்கின்றது. அங்கே நூற்றுக்கணக்கான மனிதர்களை புலிகள் கொன்று இருக்கின்றன.
சுற்றுச்சூழலைப் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், இன்றைக்கு உலகம் முழுமையும் ஓங்கி ஒலிக்கின்றன. காடுகளின் பரப்பைக் கூட்டுவதற்காக, இந்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மேகமலை – திருவில்லிபுத்தூருக்கு இடைப்பட்ட பகுதியை, இந்தியாவின் 51 ஆவது மற்றும் தமிழகத்தின் 5 ஆவது புலிகள் காப்பகமாக, 2021 பிப்ரவரி மாதம் 9 ஆம் நாள், தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து இருக்கின்றது.
மொத்தம் 1.01 இலட்சம் ஹெக்டேர் நிலம். 64,186 ஹெக்டேர் புலிகள் உலவும் இடமாகவும், 37,470 ஹெக்டேர் காடுகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அங்கே வீடு கட்டி இருப்பவர்கள் அனைவருக்கும் 10 முதல் 15 இலட்சம் இழப்பு ஈடு தரப்படும் என அரசு அறிவித்து இருக்கின்றது. அவர்கள் அதை வாங்கிக் கொண்டு வெளியேற வேண்டும்.
ஆனை மலை மற்றும் பெரியாறு புலிகள் காப்பகத்தின் தொடர்ச்சியாக, மேகமலை புலிகள் காப்பகம் அமைகின்றது. திருவில்லிபுத்தூர் விலங்குகள் காப்பகம், இத்துடன் இணைக்கப்படுகின்றது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில், 25 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000 மக்கள் வசித்து வந்தனர். ஆனால், அந்தத் தேயிலைத் தோட்டத்தின் குத்தகைக் காலம், அடுத்த சில ஆண்டுகளில் முடிவுக்கு வருகின்றது; அந்தப் பகுதி முழுமையும், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிக்கு உள்ளே வருவதால், இனி அங்கே தேயிலை பயிரிடக் கூடாது; தனியார் நிறுவனத்திற்குக் குத்தகையை நீட்டிக்கக் கூடாது என, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது.
எனவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து மக்கள் வெளியேறி, சமவெளிக்கு இடம் பெயர்ந்து வருகின்றார்கள். தற்போது அங்கே 2500 பேர்தான் இருக்கின்றார்கள். அவர்களும், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அங்கிருந்து வெளியேறி விடுவார்கள்.
புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்துகின்ற நாட்டுக்கு டி.எஸ்-2 எனும் பன்னாட்டு விருது வழங்கப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. நீலகிரி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 1,455 ஏக்கர் வனப்பரப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது. அடர்ந்த காடு, நீரோடைகள், புலிகள் வாழ்வதற்கான தட்ப வெப்பநிலை கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், 10 வனச்சரகங்கள் உள்ளன.
அதை ஒட்டி, முதுமலை, பந்திப்பூர், பி.ஆர்.ஹில்ஸ், ஈரோடு மற்றும் கோவை வனப்பிரிவு, மலை மாதேஸ்வரர் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இதனால், புலிகள் எளிதாக பிற இடங்களுக்குப் புலம் பெயர்ந்து இரை தேடியும், புதிய எல்லையில் வாழவும் முடிகின்றது. இதனால் புலிகள் எண்ணிக்கை தற்போது 2 மடங்குக்கும் கூடுதலாக உயர்ந்து இருக்கின்றது.
கடந்த 2013 ஆம் ஆண்டு 30 புலிகளாக இருந்த காப்பகத்தில், தற்போது 80 புலிகள் உள்ளன. உலக அளவில் புலிகளைப் பாதுகாப்பதற்கு ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, பங்களாதேஷ் உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள கன்சர்வேஷன் அண்டு டைகர், ஸ்டேன்டர்டு, வேர்ல்டு லைப் கன்சர்வேஷன் ஆப் சொசைட்டி, உலகளாவிய நிதியகம் என 13 அமைப்புகள் சேர்ந்து ஒரு கூட்டு அமைப்பு ஏற்படுத்தி உள்ளன.
இந்தக் கூட்டு அமைப்பு 10 ஆண்டுகளில், புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தும் நோக்கில் அமைக்கப்பட்டது. 2022 -ம் ஆண்டில் புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்துகின்ற நாட்டுக்கு டி.எஸ்-2 எனும் பன்னாட்டு விருது வழங்கப்படும் என கூட்டமைப்பு அறிவித்தது.
அதன்படி, பன்னாட்டு அளவில் 10 ஆண்டுகளில், புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தியதற்காக டி.எஸ்-2 என்ற விருதை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பெற்று வரலாறு படைத்து உள்ளது; உலக அளவில் முதல் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தை நேபாளம் நாட்டில் உள்ள பார்டியா தேசிய பூங்கா பெற்று உள்ளது.
தமிழக அரசின் ஒத்துழைப்பு, வனத்துறையின் முயற்சி, பழங்குடி மக்களின் ஆதரவு போன்றவற்றால் புலிகள் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்தது என, கூட்டு அமைப்பு தெரிவித்து உள்ளது. அதனால், சத்தியமங்கலம் காடுகளின் மேற்குப் பகுதியையும், புலிகள் காப்பகமாக அறிவிக்க வேண்டும்; அதற்காக, தெங்குமரஹடா கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இருக்கின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 158 விலங்குகள், ஊர்திகளில் அடிபட்டு இறந்ததால், சத்தியமங்கலம் மைசூரு சாலையில் இரவு நேர சரக்குப் போக்குவரத்து கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருக்கின்றது.
சில நாள்களுக்கு முன்பு, கொடைக்கானல் மலைவழியின் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் ஒரு சிறுத்தை ஊர்தியில் அடிபட்டு இறந்து கிடந்தது; அந்த உடலை மூன்று காட்டுப் பன்றிகள் சேர்ந்து குதறிய காட்சியைச் சிலர் படம்பிடித்து, சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என்கிறது கேரளம்.
காரணம் என்ன? அங்கே ஏராளமான சொகுசு விடுதிகளைக் கட்டி விட்டார்கள். நீர் மட்டம் உயர்ந்தால் அவை பாதிக்கப்படும். அதே போல, நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித் தடங்களை மறித்து, 200 க்கும் மேற்பட்ட விடுதிகளைக் கட்டி விட்டார்கள்.
கடந்த ஆண்டு ஒரு சொகுசு விடுதிக்கு அருகில் வந்த யானையின் மீது, அங்கே இருந்தவர்கள் டயர்களைத் தீ வைத்துக் கொளுத்தி, அந்த யானை மீது எறிந்தனர். அந்த டயர், யானையின் காதுகளில் சிக்கிக் கொண்டு தீப்பிடித்து அலறி ஓடி விழுந்து இறந்த காணொளியைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. நூற்றுக்கணக்கான யானைகள், மின்வேலிகளில் சிக்கி இறந்துள்ளன; தொடரிகளில் அடிபட்டுச் சிதைந்து உள்ளன.
ஒரு யானையை நம்மால் ஆக்க முடியுமா? இருப்பதைக் காக்க வேண்டாமா?
அவை ஊருக்கு உள்ளே வருவதாகக் குற்றம் சாட்டுவது தவறு. மனிதர்கள்தான், விலங்குகளின் வாழிடத்திற்கு உள்ளே ஊடுருவி விட்டார்கள். இந்தக் கொடுமைக்குக் காரணமான சுற்றுலா விடுதிகள் அனைத்தையும் இடித்து அகற்ற வேண்டும் என, உச்சநீதிமன்றம் இறுதி ஆணை பிறப்பித்து பல ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அகற்றப்படவில்லை. .
மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய தொடரித் தடம் அமைத்து, ஐயப்பன் கோவிலுக்குப் போவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, ஐயப்ப பக்தர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். அப்படி ஒரு தொடரித் தடம் தேவையா? இல்லை.
தமிழ்நாட்டுக்கும் கேரளத்திற்கும் இடையே, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 13 இடங்களில் சாலை அமைத்து இருக்கின்றார்கள். மூன்று இடங்களில் தொடரிகள் ஓடுகின்றன. இத்தனைச் சாலைகள் தேவையா? இல்லை. 8 சாலைகளை மூடிவிட்டு, ஐந்து சாலைகளை மட்டும் பயன்படுத்தினால் போதுமே?
அண்மைக் காலமாக, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புதிது புதிதாகப் பல இடங்களில் கோவில்களை விளம்பரப்படுத்தி வருகின்றார்கள். பாபநாசம் மலையில் அகத்தியர் கோவில் என்ற பெயரில், ஒரு சிறிய கற்சிலையை அமைத்து இருக்கின்றார்கள். முன்பு அங்கே யாரும் போகின்ற வழக்கம் இல்லை. அண்மைக்காலமாக, சமூக வலைதளங்களின் வழியாக அந்தக் கோவிலை விளம்பரப்படுத்தி வருகின்றார்கள்.
1990 கள் வரையிலும், சதுரகிரி மலைக்கு ஒரு சிலரே சென்று வந்தார்கள். எனக்கு 30 வயது வரையிலும், அப்படி ஒரு பெயரை நான் கேள்விப்பட்டதே கிடையாது. இப்போது அதுவும் ஒரு பக்தி சுற்றுலா மையம் ஆகி இருக்கின்றது.
100 ஆண்டுகளுக்கு முன்பு, ஐயப்பன் கோவிலுக்கு ஒரு சிலரே சென்று வந்தார்கள். அந்தக் கோவில் வணிகம் வளர்ந்து, வருமானம் பெருகுவதால், இப்போது ஆண்டுக்கு 100 நாள்களுக்கு மேல் திறந்து வைக்கின்றார்கள். அதனால், அந்தக் காட்டு வழி இப்போது, கடைவீதி ஆகி வருகின்றது. அங்கே ஒரு வான் ஊர்தி நிலையம் அமைக்க வேண்டும் என்ற கருத்து உருவும், கேரள அரசின் பார்வையில் உள்ளது.
கணினி நிறுவனங்களில் பணிபுரிந்து 50,000 சம்பளம் வாங்குகின்ற இளைஞர்கள், பெண்களின் சுற்றுலா மையமாக மேற்குத் தொடர்ச்சி மலை உருவாகி வருகின்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் குரங்கணி அருகே ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, 35 இளைஞர்களும் பெண்களும் கருகி இறந்தனர். ஆனால், அதற்குப் பிறகும் கூட, காடுகளுக்கு உள்ளே சென்று, துணிக் கொட்டகைகள் அமைத்து, அதற்கு உள்ளே தங்கி, அதைப் படம் பிடித்துப் பரப்புகின்றார்கள்.
இதைத் தடுப்பதற்கு, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? தேனி மாவட்டம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில், ஒன்றரை இலட்சம் டன் கருங்கற் பாறைகளை வெட்டி எடுத்துக் குகை குடைந்து, நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த, ஒன்றிய அரசு முயற்சிக்கின்றது.
ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் விலங்குககள் நடமாட்டம் மிக்க அடர்ந்த யானைக்காடுதான் இந்த விளாங்கோம்பை வனக் கிராமம். சாலை வசதி உள்ளிட்டவை, எட்டாக்கனி.8 கிலோமீட்டர் நடந்து வந்தால்தான், ரேசன் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வாங்க முடியும். இவ்வாறு இருக்கின்ற நிலையில் கல்வி குறித்துச் சிந்திப்பது எங்கே? என்று ஒரு சிலர் வருத்தப்படுகின்றனர்!
மொத்தம் எத்தனைக் குழந்தைகள் இருக்கின்றார்கள்?
பத்துக் குழந்தைகள் படித்தார்கள்; பிறகு 15 இப்போது 25 குழந்தைகள் என்கிறீர்கள்.
இவர்களுக்கு எதற்காகக் காட்டுக்கு உள்ளே பள்ளிக்கூடம் கட்ட வேண்டும்? இதே அளவிற்கு, ஆண்டுதோறும் அங்கே குழந்தைகள் பிறக்கின்றார்களா? இந்தக் குழந்தைகள் எதற்காக, நாள் தோறும் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டும்? விலங்குகளுக்குத் தொல்லை தர வேண்டும்? காட்டு ஆறுகளை ஏன் கடந்து செல்ல வேண்டும்?
அதைவிட, அவர்கள் அத்தனைப் பேரையும் அருகில் உள்ள நகரத்தின் அரசு மாணவர் விடுதிகளில் சேர்த்து விடலாமே?
அடர்ந்த காட்டுக்கு உள்ளே, எந்தக் காலத்திலும், எந்தத் தொழிலும் வளர வாய்ப்புகள் அறவே கிடையாது. எனவே, அவர்கள் அங்கிருந்து வெளியேறி, நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து வருவதை, யார் தடுக்கின்றார்கள்? தொழிற் பயிற்சிகளைப் பெற்று, தொழிற்கூடங்களில் பணி புரியலாமே?
இலட்சக்கணக்கான மக்கள் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு சேர்ந்தனர். ஏழை எளிய அடித்தட்டு மக்கள், கூவம் ஆற்றின் கரைகளில் குடிசைகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர். படிப்படியாக அந்த ஆறு இறந்து விட்டது. உயிர்ப்பிக்கின்ற முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற் கொண்டு வருகின்றது. அங்கே வாழ்ந்த சுமார் இரண்டு லட்சம் பேரை அங்கிருந்து வெளியேற்றி, தமிழக அரசு குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடி அமர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தினார்கள். அங்கிருந்து வெளியேற மாட்டோம் எனப் மக்கள் போராடினார்கள்.
ஆனால், தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் விளைவாக, அவர்களுள் பெரும் பகுதியினர் கூவம் ஆற்றுக்கு உள்ளே இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள்; அடுக்கு மாடி வீடுகளில் குடி அமர்த்தப்பட்டு விட்டார்கள். கூவம் ஆற்றின் இரு கரைகளிலும், தடுப்புச் சுவர் கட்டி வருகின்றார்கள். ஆனால், கூவம் ஆற்றில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளை இது வரை தடுக்க முடியவில்லை!
குற்றாலம் அருவிக்கு மேலே 3 கிலோமீட்டர் நடந்தால் செண்பகாதேவி, மேலும் 2 கிலோமீட்டர் நடந்தால் தேனருவி போகலாம். பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்தக் காட்டு வழியில் நடப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அந்த வழியை மூடி விட்டார்கள். யாரும் மேலே போக முடியாது. எனவே, இப்போது அங்கே விலங்குகளின் நடமாட்டம் பெருகி இருக்கின்றது.
Also read
1988 ஆம் ஆண்டு, இந்தியக் காடுகள் கொள்கை வரையப்பட்டது. இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கை, முற்றிலும் காடுகளாக ஆக்குவது என இலக்கு என அறிவித்தார்கள். ஆனால், தற்போது இந்திய நிலப்பரப்பில் 21 விழுக்காடுதான் காடுகள்.
அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, 2019 ஆம் ஆண்டு, 7 இலட்சத்து 12 ஆயிரத்து 249 ஆக இருந்த காடுகளின் பரப்பு, 2021 ஆம் ஆண்டு அறிக்கைப்படி, 1540 சதுர கிலோமீட்டர் கூடி இருக்கின்றது. அதாவது, வெறும் 0.4 விழுக்காடு மட்டுமே கூடி இருக்கின்றது என்றால், குறித்த இலக்கை எப்போது அடைய முடியும்?
இந்த நிலையில், காட்டுக்கு உள்ளே பள்ளிக் கூடம் வேண்டும், சாலைகள் அமைக்க வேண்டும், மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்பதற்கு இல்லை.
தமிழ்நாட்டின் நீர்க்குடத்தைப் போட்டு உடைத்து விடக் கூடாது. காடுகளைக் காப்போம்.
காக்கை கூடு நடத்திய ‘செங்கால் நாரை ‘ சூழலியல் கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை!
கட்டுரையாளர்; அருணகிரி
Leave a Reply