சுயம் வெளிப்பட்ட ரவி! ஆளுநரா? எதிர்கட்சித் தலைவரா?

-சாவித்திரி கண்ணன்

சட்ட சபை உரையில் தன் கொள்கைக்கு ஒவ்வாதவற்றையும், திமுக அரசு தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதாக தயாரித்து தந்த உரையையும் ஆளுநர் ஆன்.என்.ரவி தெளிவாக தவிர்த்ததோடு, தன் கொள்கைபடி ‘ஜெய்ஹிந்த்’ கோஷத்தையும் போட்டு, வெளி நடப்பு செய்துள்ளார்.

இது வரை ஆளுநர் எவ்வளவு மசோதாக்களை கிடப்பில் போட்டாலும், எவ்வளவு ஆட்சேபகரமாக பேசினாலும் மெளனம் சாதித்து வந்த ஸ்டாலினுக்கு இன்று சுய மரியாதை உணர்வு பீறிட்டு வந்து, கவர்னரை அவையில் வைத்துக் கொண்டே அவருக்கு எதிரான கண்டணத் தீர்மானத்தை வாசித்தார்! அந்த வகையில் மக்கள் எதிர்ப்பையும் மீறி, தொடர்ந்து ஒன்றிய அரசின் சட்ட திட்டங்களை அமல்படுத்தி, பாஜக அரசின் தாசானுதாசனாக இருந்த ஸ்டாலினின் சுயமரியாதை வெளிப்பட்டதில் உண்மையிலேயே நாமும் மகிழ்ச்சி அடையலாம்!

கவர்னர் எந்தெந்த வார்த்தைகளை தவிர்த்தார் என்று ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்!

தன் அரசை, இது வளர்ச்சியுடன் கூடிய திராவிடமாடல் அரசு என்றும், அம்பேத்கார், பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் பயணிக்கும் திராவிட மாடல் அரசு என்றும் தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்ட ஸ்டாலின் அரசு தயாரித்து கொடுத்த உரையை அவர் தவிர்த்துள்ளார்! இதன் மூலம் ‘இது வளர்ச்சியுடன் கூடிய அரசு’ என்ற கருத்தாக்கத்தை அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதும், ‘மேற்படி பெரியவர்களின் வழியில் நடக்கும் அரசு’ என்பதோ, ‘திராவிட மாடல்’ என்ற சொல்லோ அவருக்கு உவப்பில்லை என நமக்கு அவர் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி உள்ளார் என்பது தான் செய்தி! இதில் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை! ‘ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை, பேச்சுக்களை  கவனிக்கும் யாருக்கும் திமுக அரசின் இந்த சொல்லாடலில் அவருக்கு ஏற்பு இருக்கும்’ என நம்ப இடமில்லை!

சரி, அடுத்ததாக, ”ஆளுநரின் சொந்தக் கருத்து எதையும் அவர் வெளிப்படுத்தக் கூடாது! அரசு எழுதித் தந்ததை அவர் அப்படியே படிப்பது தான் மரபு. அவர் மரபை உடைத்துவிட்டார். இதை ஏற்கமுடியாது” என்கிறார்கள்! இது மரபாக இருந்தால், அந்த மரபு ஆளுனரின் ஜனநாயக உணர்வையும், கருத்து சுதந்திரத்தையும் அழுத்துகிறது தானே! ஆகவே, அந்த மரபை அவர் மீறி இருக்கிறார்!

கவர்னரை வைத்துக் கொண்டே அவருக்கு கண்டணத் தீர்மானம் வாசித்த ஸ்டாலின்

அதே சமயம் அவர் மரபை உடைத்ததும், மிக இயல்பாக தானும் மரபை உடைத்து, அவர் பேசியதற்கு அல்லது பேச தவிர்த்ததற்கு தன் வருத்ததையும் , கண்டணத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படுத்தியது மிகச் சரியே! ஆனால், தான் மரபை உடைக்கும் போதும், எதிர் கருத்து வைக்கும் போதும் அமைதி காத்த சபைக்கு கொஞ்சம் கூட நன்றி உணர்வு இல்லாதவராகவும், முதலமைச்சரின் வருத்ததையும், கண்டணத்தையும் ஒரு ஜனநாயகச் செயல்பாடாக எதிர் கொள்ளத் திரானியற்றவராகவும் கவர்னர் வெளி நடப்பு செய்துள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இறுதியில் தேசிய கீதம் பாடப்படும். அதற்கு மரியாதை தந்தே வெளியேற வேண்டும் என்பதைக் கூட உணராமல், ஆத்திரம் மேலிட கவர்னர் சபையில் இருந்து வெளி நடப்பு செய்ததானது, அவர் வகிக்கும் உயர் பதவிக்கு அழகல்ல! ‘ஒரு வகையில் கவர்னர் இன்று சட்ட சபையில் உண்மையான எதிர்கட்சித் தலைவராக தன்னை அடையாளம் காட்டிவிட்டார்’ என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், எதிர்கட்சியான அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எதிர்கட்சி பாத்திரத்தை உணராமல், கவர்னரின் கூஜா தூக்கியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் துர் அதிர்ஷ்டவசமானதாகும்!

ஆளுநருக்கு எதிராக கோஷமிடும் எதிர்கட்சி உறுப்பினர்கள்

அதே சமயம் திமுகவின் தோழமை கட்சிகள் இன்று மிக காத்திரமாக ஆளுநருக்கு சபையில் கண்டணம் தெரிவித்தன் மூலம், ‘தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்’ என்று தான் சொல்ல வேண்டும்.

எது எப்படியானாலும், தொலைந்து போன திமுக தலைவர் ஸ்டாலினின் தன்மானம் இன்றாவது வெளிப்பட்டமைக்கும், கவர்னரை நேருக்கு நேராக அவர் எதிர்க்க துணிந்தமைக்கும் நாம் நம் மகிழ்ச்சியையும், பாராட்டையும் வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் ஒரே நேரத்தில் அவர் கவர்னராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் இருக்க முடியாது! இதை அவர் உணராவிட்டால் திமுக அவருக்கு உணர்த்த வேண்டும்.

கவர்னர் நினைத்திருந்தால், தனக்கு நான்கு நாட்களுக்கு முன்பே கொடுக்கப்பட்ட உரையில் தனக்கு ஆட்சேபகரமானயான வார்த்தைகளை அரசே நீக்கிவிட சொல்லி அறிவுறுத்தி இருக்க முடியும். ஆனால், அதை தவிர்த்து, சட்ட சபைக்கு வந்து, தன் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி உள்ளார் என்பது அவர் வெளிப்படையான மோதலுக்கு தயாராக உள்ளார் என்பதைத் தான் காட்டுகிறது!

பார்க்கலாம், இனியாவது திமுக அரசின் பாஜக உறவு எப்படி போகப் போகிறது என்பதை!

சாவித்திரி கண்ணன்!

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time