குற்றவாளிகளை காப்பாற்றுவதா? குட்டு வைத்த நீதிமன்றம்!

-சாவித்திரி கண்ணன்

தமிழ்நாட்டில் அநீதிகளை அரங்கேற்றும் தீய சக்திகள் சிலருக்கு துணை போகும் வண்ணம் நீதி துறையில் சில தீர்ப்புகள் வெளியாயின! அவற்றில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, உண்மையை நிலை நாட்டுகின்ற நகர்வுகள் தற்போது அரங்கேறி வருகின்றன! இந்த வகையில் மாரிதாஸும், ரவிக்குமாரும் மறுபடி சிறைப்படலாம்!

வெறுப்பு, வன்மம், துவேஷம் ஆகியவற்றை பரப்புவதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருபவர் மாரிதாஸ்! இந்தியாவின் மிகப் பெரிய முப்படைத் தளபதி தமிழ்கத்தில் நடந்த விமான விபத்தில் இறந்த அதிர்ச்சியில் இந்த தேசமே உறைந்திருக்கும் வேளையில்,

தடாலடியாக அவதூறு பரப்பும் வண்ணமும், மத துவேஷ கருத்துக்களை விதைக்கும் நோக்கத்திலும்,  ”திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்தப் பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்’’ என டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார் மாரிதாஸ்.

இது விஷமத்தனமான கருத்து என பலரும் கண்டணம் தெரிவிக்கத் தொடங்கியவுடன் அதை போட்ட சில நிமிடங்களில் அந்த டிவிட்டை எடுத்துவிட்டார். ஆனால், அதை பாஜகவினர் பலர் ஸ்கீரின் ஷாட் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்ப ஆரம்பித்துவிட்டனர்! இந்த விஷமக் கருத்திற்கு மாரிதாஸ் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை!

இந் நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகி வி.பாலகிருண்ணன் என்பர், சைபர் கிரைம் பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 124A (தேசவிரோதம்), 153A (இரு பிரிவினருக்கு இடையே பகைமையை தூண்டுதல்), 504 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்), 505 (2), 505 1(b) (அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடுதல்) ஆகிய பிரிவின் கீழ் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, மாரிதாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்  விசாரித்தார்!

அப்போது மாரிதாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது செல்லாது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன் உத்தரவில் தெரிவித்து, அதற்கான காரணங்களையும் விளக்கினார்.

மாரிதாஸை டிவிட்டரில் சுமார் இரண்டு லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்த கருத்தை அவரவர்கள் தங்கள் புரிதலுக்கு ஏற்ப எடுத்துக் கொள்வர்!  என்னைப் பொறுத்த வரை மாரிதாஸ் வெளியிட்ட கருத்தை, தேசத்தின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பாகவே புரிந்துகொள்ள முடிகிறது என்று மாரிதாஸுக்கு நற்சான்றிதழ் வழங்கி,  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505(1)(b)ன் கீழ் மாரிதாசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது செல்லாது என்று கூறி வழக்கை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது!

மேலும் தானே வலிந்து “சுப்பிரமணிய சுவாமியும் இது போன்ற கேள்வியை எழுப்பயிருந்தாரே, அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா, ஜெயலலிதா மரணத்தின் போதும் இது போன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டனவே” என்றெல்லாம் மாரிதாஸூன் வழக்கறிஞராகவே மாறிப் போய் பேசினார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

இது தொடர்பாக தமிழக காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்றைய தினமான ஜனவர் 9-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “இந்த வழக்கில் எதிர்மனுதாரருக்கு ( மாரிதாஸ்) நோட்டீஸ் அனுப்பியும், இதுவரை பதிலளிக்கவில்லை. மேலும், காவல் துறையின் புலன் விசாரணைக்கு உரிய கால அவகாசம் வழங்காமல், எதிர்மனுதார் மீதான கிரிமினல் வழக்குகளை நீதிபதி அவசரகதியில் நான்கே நாட்களில் ரத்து செய்துவிட்டார். எனவே, உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவதூறு பரப்பியதாக கடந்த டிசம்பர் 9, 2021-ல் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை ரத்து செய்ய மாரிதாஸ்  அடுத்த நாள் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை அவசரமாக விசாரித்த உயர் நீதிமன்றம் டிசம்பர் 14,.2021 அன்று அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளது.

மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக புலன் விசாரணையை நடத்த தமிழ்நாடு காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்  உரிய கால அவகாசம் கொடுக்கவில்லை. உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்த செயல் அதிருப்தி அளிக்கிறது. ஏற்றுக் கொள்ள முடியாதது. மேலும், இது யூடியுபர் நிகாரிகா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு முரணாக உள்ளது. எனவே, வழக்கின் தன்மையை கருதி காவல் துறையினர் புலன் விசாரணை நடத்த ஏதுவாக மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த   நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தனர். இதன் மூலம் அன்று மிகவும் சார்பு நிலையில் நிதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியது அம்பலப்பட்டதோடு. அது ரத்து செய்யவும்பட்டு உள்ளது. இந்துத்துவ ஆதரவாளராக தன்னை அடையாளம் காட்டி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் போன்றவர்கள் இனியாவது பொது நிலையில் நின்று தீர்ப்பளிக்க வேண்டும்.

அதே போல கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சக்தி பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு அவசரப்பட்டு ஜாமீன் கொடுத்தார் நீதிபதி ஜி.கே.இளந்திரையன். அத்துடன் மேற்கொண்டு இந்த வழக்கின் நேர்மையான விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வரம்பு மீறி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நற்சான்று தரும் விதமாக பேசியிருந்தார்! ஸ்ரீமதி எழுதியதாக காட்டப்பட்ட கடிதம் உண்மையானது தானா? என தடய அறிவியல் துறை உறுதிபடுத்தும் முன்பே அந்த கடிதத்தை நீதிபதி மேற்கோள் காட்டியது கடுமையான விமர்சனம் பெற்றது!  ஜாமீன் பெற்றதனால், ஸ்ரீமதியை கொலை செய்த பள்ளி நிர்வாகிகள் சிறையில் இருந்து வெளி வந்து பத்திரிகையாளர்களை தாக்குவது உள்ளிட்ட அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்!

இந்தச் சூழலில் தான் சொலிசிடர் ஜெனரல் ரமணியின் நண்பரான பிரபல வழக்கறிஞர் தானாகவே முன் வந்து கட்டணமின்றி ஸ்ரீமதி வழக்கில் அவசர கதியில் ஜாமீன் தரப்பட்டதை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார் வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா! இவரது முயற்சியால் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் சார்பு நிலை எடுத்து, குற்றவாளீகளை விடுவித்ததை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டு உள்ளது! அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளராக வெளிப்பட்டுள்ள நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மிக விரைவில் உச்ச நீதிமன்றத்தின் கண்டணத்தை பெரும் சூழல் நெருங்கி வருகிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது, எத்தனை பேரால் இது போல அநீதியாக தீர்ப்பு தரும் நீதிபதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல முடியும்! இந்த இரண்டு வழக்குகளும் தமிழக மக்களை கொந்தளிக்க வைத்த வழக்குகளாகும்! நீதிபதிகளாக பார்த்து நடு நிலை தவறாமல் இருக்க வேண்டும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time