ஆறுமுகசாமி ஆணையமும்,  அவிழ்க்கப்படாத மர்மங்களும்..!

சாவித்திரி கண்ணன்

ஜெயலலிதா இறப்பு தமிழக மக்களுக்கு இன்னும் ஒரு அவிழ்க்கப்படாத மர்மமாகவே தொடர்கிறது! ஜெயலலிதா மரணத்தில் பல ஆழமான சந்தேகங்கள் இன்னும் மக்கள் மனதை அழுத்திக் கொண்டே உள்ளன…! விசாரணை கமிஷன் அமைத்து ஒரே ஆண்டில் உண்மையை வெளிக் கொண்டு வருவோம் என்ற ஆட்சியாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ ஏற்படுத்தியுள்ள தடையைக் கூட அகற்றாமல், ஒன்றரை ஆண்டுகளாக அலட்சியம் செய்கிறார்கள்.விசாரணையே நடக்காமல் பலகோடிகள் ஆணையத்திற்கும்,வழக்கிற்குமாக விரயமாகிக் கொண்டுள்ளதன் பின்னணி என்ன…?

’’அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்களே ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிவருவதை விரும்பவில்லை…’’ என்ற குற்றச்சாட்டையும் சுலபத்தில் புறம் தள்ள முடியாதவாறு தான் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும் நான் கவனப்படுத்த விரும்புகிறேன்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழகத்திலிருந்து பல புகார்கள் கொடுக்கப்பட்டன. அதிமுகவின் எம்.பி.சசிகலா புஷ்பாவே உள்துறை அமைச்சகத்தில் புகார் மனு கொடுத்தார். ஆனால், பாஜக அரசு இதில் ஏனோ துளியும் அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை. ஒரு வகையில் ஜெயலிதாவின் மரணம் அவர்களுக்கு இந்த கொத்தடிமை ஆட்சியாளர்களை ஆட்சி வைக்க கிடைத்த பொன்னான வாய்ப்பாகிவிட்டது என்பது தான் உண்மை!

ஆனால்,இங்கு ஜெயலலிதாவால் வாழ்வு பெற்றவர்கள்,அதிகாரம் அடைந்தவர்கள்  ஆட்சியிலிருந்தும் எந்த உண்மையும் வெளிவரவில்லையே ஏன்?

ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவின் மீது சந்தேகத்தைக் கிளப்பியவர் பன்னீர் செல்வம். அவர் ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா பிணமாகக் கிடப்பதை கட்அவுட்டாக வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.

அப்படிப்பட்ட பன்னீர்…,ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராகும் வாய்ப்பு பெற்றவர் ஆறுமுகசாமி ஆணையம் ஆறு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை…!

 தன் பதவிக்கு ஏதாவது ஆபத்து என்றால்,தலைவி சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தும் ஒ.பி.எஸுக்கு,தலைவியின் மர்ம மரணத்திற்கு  காரணமானவர்களை அடையாளம் காட்ட என்ன தயக்கம். ஒருவேளை அந்த சக்திகளோடு அவர் ஏதேனும் மறைமுக ஒப்பந்தங்களுக்கு வந்துவிட்டாரா…?

அதே போல ஜெயலலிதாவால் சுகாதாரத்துறை அமைச்சராகும் வாய்ப்பு பெற்ற விஜயபாஸ்கர், ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும், மீண்டும் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இத்தனைக்கும் ஜெயலலிதா அப்பல்லோவில் இருக்கும் 75 நாட்களும் மருத்துவமனையோடு சுகாதாரத்துறை அமைச்சர் என்ற வகையிலும், தானே ஒரு டாக்டர் என்ற வகையிலும்  தொடர்பில் இருந்தவர் விஜயபாஸ்கர். அவருக்கு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஒத்துழைக்கும் கடமை உண்டு தானே? ஆனால்,ஏன் கடைசி வரை அவர் ஆணையத்தின் அழைப்பைப் புறக்கணித்தார் எனத் தெரியவில்லை.

ஆறுமுகசாமி ஆணையம் உண்மையிலேயே அக்கறை காட்டியதாகத் தான் அதனுடைய அணுகுமுறைகள் இருந்தன. இது வரை அது 154 பேரை அழைத்து விசாரித்து விட்டது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள்,உறவினர்கள்,அரசுத் துறை அதிகாரிகள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள்…பெர்சனல் டாக்டர்கள்,அரசு மருத்துவமனையை சேர்ந்த 12 மருத்துவர்கள்,எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ஐந்து மருத்துவர்கள்…என பலதரப்பிலும் விசாரித்தது. ஆனால்,அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மட்டும் சரியாக ஒத்துழைக்கவில்லை. பெரும்பாலும் அவர்கள் அழைத்த நேரத்திற்கு வராமல் போக்குகாட்டி வந்தனர். ஆணையம் கடும் எச்சரிக்கை செய்ததையடுத்து சிலர் வந்தனர். ஆனால், மருத்துவமனையின் சி.சி.டிவி புட்டேஜ் கேட்டபோது, அப்பல்லோ தரவில்லை. பல சந்தேகங்களுக்கு உரிய பதில் தராமல் திசைதிருப்பவும் முயன்றனர்.

பிறகு, ’’மருத்துவம் பற்றிச் சொன்னால் நீதிபதிக்குப் புரியாது.அதனால், அவர் 21 துறைகளைச்  சேர்ந்த ’எக்ஸ்பர்ட்’ டாக்டர்களை வைத்துக் கொண்டு தான் விசாரிக்க வேண்டும்’’ என உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது,அப்பல்லோ! ஆனால், நீதிபதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை அதஅதற்கான டாக்டர்களை அழைத்து தெளிவுபடுத்திக் கொண்டார் என்பதே உண்மை என்பதால், உயர் நீதிமன்றம் அப்பல்லோ மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

அதையடுத்து, அப்பல்லோ உச்ச நீதிமன்றத்தில் மனுசெய்து தடை பெற்று ஒன்றரை வருடத்திற்கும் மேல் ஓடிவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் அதிகாரத்தையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. ’’மருத்துவ சிகிச்சை பற்றியெல்லாம் விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரமில்லை.ஆணையம் தன் வரம்பை மீறுகிறது…’’ என குற்றம் சாட்டியது. அப்பல்லோவின் குற்றச்சாட்டுகள் ஆணையத்திற்கானதாக பார்க்க முடியாது.அரசுக்கானதாகவே பார்க்க வேண்டும்.ஏனென்றால், ஆணையம் அமைக்கப்பட்டதிற்கான அரசின் நோக்கங்களுக்கே அப்பல்லோ தடை ஏற்படுத்துகிறது. ஆகவே, அப்போலோ தமிழக அரசுக்கு சவால்விட்டதாகவே அர்த்தமாகிறது.  அப்பலோவால் போடப்பட்ட மனுவை அரசால் ஏன் அகற்ற முடியவில்லை! ஆறுமுசாமி கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் போராடுகிறது. ’’ 90 சதவிகித விசாரணை முடிந்த நிலையில் ஏதோ சில உண்மைகளை மறைப்பதற்காக அப்பல்லோ இப்படியான தடைகளை ஏற்படுத்துகிறது’’ என ஆறுமுகசாமி கமிஷன் சொல்லியுள்ளது.

ஆறுமுகசாமி கமிஷன் ஒரு வருடத்தில் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வரும் என அரசால் சொல்லப்பட்டது. கமிஷன் அமைக்கப்பட்டு மூன்றாண்டுகள் கடந்த நிலையில் இது வரை எட்டு முறை அதற்கு விசாரணை நீட்டிப்பு செய்யப்பட்டுவிட்டது. இந்த மாதம் மீண்டும் ஒன்பதாவது முறை நீட்டிப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விசாரணை காலத்தை நீட்டிக்க, நீட்டிக்க ஒவ்வொரு மாதமும் சம்பளத்திற்காக மட்டுமே அரசுக்கு 4.26 லட்சம் செலவாகிறது. அப்பல்லோ, ’ஜெயலலிதாவிற்கு சிகிச்சை தருகிறேன்’ என பேர் பண்ணிக் கொண்டு மக்கள் பணம் பல கோடிகளை ஏப்பம்விட்டது. தற்போது விசாரணை  ஆணையத்தை செயல்படவிடாமல் பல கோடிகளை அரசுக்கு நஷ்டமாக்கியுள்ளது.

நாம் கேட்பதெல்லாம் இது தான்! தங்கள் தலைவியின் மரணத்தில் உள்ள ஒரு உண்மை மறைக்கப்படுவதை விலக்க அரசுக்கு ஏன் அக்கறை இல்லை? கொரானா காலத்தில், ’’மதுக் கடைகளை திறக்கக் கூடாது’’ என உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட மனுவை ஒரு சில நாட்களில் அப்புறப்படுத்த முடிந்த அரசுக்கு அப்பல்லோ விஷயத்தில் ஏன் முடியாமல் போனது? மதுக்கடைகளுக்கு தாங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட மறைந்த தலைவிக்கு கொடுக்க மறுக்கிறார்களே ஏன்?

அவர் இருக்கும் போது அவரது கண் அசைவுகளுக்கே ஓடியாடி வேலை செய்தவர்கள், மறைவுக்குப் பின் மறந்தும் கூட அவர் மரணத்தின் அநீதிகளைக் கேட்பதில்லையே! ’’அப்போலோவிற்கு,அரசுக்கும் ஏதாவது மறைமுக உடன்பாடு உண்டா?’’ என்ற சந்தேகம் மக்களுக்கு வருமா? இல்லையா? அல்லது தமிழக அரசைக் காட்டிலும் ஒரு தனியாரான அப்பல்லோ சக்தி வாய்ந்ததாக உள்ளதா? அல்லது எந்த அரசியல் சக்தி தரும் அழுத்ததால்  அப்போலோ இப்படியெல்லாம் பேச வேண்டிய நிலைக்கு உள்ளானது..? எது உண்மை?

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time