நீட் விலக்குமசோதா: தாமதத்தின் பின்னணி என்ன ?

- பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு

நீட் தேர்வு எதற்காக கொண்டு வரப்பட்டது. யாருடைய நலனுக்காக கொண்டு வரப்பட்டது, ‘நீட் விலக்கு மசோதா’ நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதற்கு என்ன காரணம்? நீட் விலக்கு விவகாரத்தில் என்ன தான் நடந்து கொண்டுள்ளது..? அனைத்தையும் மிக எளிமையாக, துல்லியமாக விளக்குகிறார், பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு.

தமிழ்நாடு மக்களின் ஐந்து வருடப் போராட்டத்தின் விளைவாக,  மக்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றம்  “நீட்” விலக்கு மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தமிழ்நாடு ஆளுநர், ஐந்து மாத காலத்திற்கு நீட் விலக்கு மசோதாவைத் தானே வைத்திருந்து, தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் திருப்பி அனுப்பினார்.

திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவு குறித்து விவாதிக்க, தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டப்பட்டு, மீண்டும் நீட் விலக்கு சட்ட முன் வடிவை நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட  முன்வடிவை மேலும், இரண்டரை மாதத் தாமதத்திற்குப்  பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் மசோதா குறித்து சில கேள்விகளை வடிவமைத்து, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்தது. உள்துறை அமைச்சகத்தின் கேள்விகளுக்கான தனது கருத்துகளை இரண்டு அமைச்சகங்களும் தங்களது பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தன.

இக் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் மீது தனது கருத்தைத் தெரிவிக்கக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆளுநர் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது.

தமிழ்நாடு அரசு தனது பதிலை ஜூலை 2022 ல் அனுப்பி உள்ளது.

நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பதினைந்து மாதங்கள் ஆகியும், இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்காததற்கான காரணம் என்னவென்று மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையான நீட் விலக்கு மசோதா குறித்த கடிதங்களைப் பெற்று ஆழ்ந்து படித்தோம்.

நீட் விலக்கு மசோதா எந்தச் சட்டப்படியான தகுந்த காரணமுமின்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது என்பதை அறிந்தோம்.

குழந்தைகளின் கல்விமற்றும் எதிர்காலம் குறித்த  தமிழ்நாடு நீட் விலக்கு மசோதாவிற்கு தனது ஒப்புதலை விரைந்து வழங்கிட வேண்டுமென்று கோரி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

விரிவான விளக்கங்களோடு சட்டப் பிரிவுகளை எடுத்துக் காட்டி குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் சாராம்சத்தைத் தமிழில் சுருக்கமாக இங்கே விவரிக்கிறேன்.

உள்துறை அமைச்சகத்தின் குதர்க்கங்கள்!

ஒன்றிய உள்துறை அமைச்சகம் வடிவமைத்துள்ள கேள்விகளில் ஒன்று “ இந்த மசோதா தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை, மற்றும் ஒருமைப்பாட்டை ஆபத்துக்குள்ளாக்குமா?” என்பதாகும். இந்தக் கேள்வி மசோதா குறித்த தவறான புரிதலை உருவாக்குவதாகும். மாநிலச் சட்டப் பேரவை  இந்திய அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கியுள்ள சட்ட மசோதா, எந்த வகையிலும் தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை ஆபத்துக்குள்ளாக்க முடியாது. தேவையில்லாத இந்த கேள்வியாகும்!

மாநில அரசு இயற்றும் சட்டம், ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குச் சவால் விடுவதாகப் பார்க்கக் கூடாது. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்குத் தனித்தனியே அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

‘நீட் விலக்கு மசோதா’ தேசியக் கல்விக் கொள்கைக்கு முரண்பட்டு அமைந்திருப்பதாக ஒன்றிய அமைச்சகங்கள் கருதுகின்றன.

ஒரு சட்ட முன் வடிவு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதா என்பதைத் தான் பார்க்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் ”நீட்” சட்ட முன்வடிவைப் பார்த்தால், இதில் எந்தக் குழப்பம் இல்லை!

”நீட்” விலக்கு மசோதா சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானதாக ஒன்றிய அமைச்சகம் கருதுகிறது. சமத்துவக் கோட்பாடு அல்லது சமத்துவம் குறித்த சட்டத்தைப்  பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் ஒன்றிய அமைச்சகங்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளன.  உண்மையில், இந்த நீட்  தேர்வு தான் சமத்துவ கோட்பாட்டிற்கு எதிரானது! ஆனால், நீட் விலக்கு மசோதாவோ, சமத்துவத்தை வலியுறுத்தி கொண்டு வரப்பட்டதாகும்!

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள்

இந்திய மருத்துவ கவுன்சிலின் தகிடுதத்தமே நீட்!

#  இந்திய மருத்துவக் கவுன்சில், வணிக நோக்கம் கொண்ட தனியாரை மருத்துவக் கல்லூரிகள் திறக்க  லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதித்தது. இதனால், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடை முறையில் பல்வேறு சீர்கேடுகள் உருவாகி,  பணபலம் கொண்ட யாரும் மருத்துவப் படிப்பில் சேரலாம் என்ற சூழல் உருவானது. இச் சீர்கேடுகளை இந்திய மருத்துவக் கவுன்லால் கட்டுப்படுத்த இயலாமல் திணறியது. இதனால், தான் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க, 2010 ஆம் ஆண்டு நீட்டை அறிவித்தது இந்திய மருத்துவக் கவுன்சில்.

#  இந்திய மருத்துவக் கவுன்சில் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையிலும், அந்த அறிக்கையை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையிலும் நீட் பரிந்துரைக்கப்படவில்லை என்பது கவனத்திற்கு உரியது.

#   இந்த இரண்டு அறிக்கைகளும் பரிந்துரைத்த தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க சட்ட முன் வடிவுக்கான வரைவைத் தயாரிக்கச் சொல்லி, நிதி ஆயோக்கிடம் பொறுப்பு ஓப்படைக்கப்பட்டது.

#   ஆனால், நிதி ஆயோக்  இதிலிருந்து மாறுபட்டு, ”தனியார் கல்லூரியின் கட்டணத்தை  அரசு கட்டுப் படுத்துவதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அதே சமயம் மாணவர் சேர்க்கை நீட் அடிப்படையில் அமைய வேண்டும்” என்று பரிந்துரைத்தது.

நிதி ஆதியோக் தயாரித்து அளித்த அநீதியே நீட்;

வல்லுநர் குழு மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு கவலையும் நிதி ஆயோக்கின் கவலையும் வெவ்வேறானது. வணிகமயத்தை ஒழிக்க வேண்டும், தகுதி பெற்ற மாணவர்களே மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்ற அடிப்படையில் வல்லுநர் குழு மற்றும் நாடாளுமன்ற நிலைக் குழுவும் பரிந்துரைகள் தந்தன. ஆனால், நிதி ஆயோக்கோ, தனியார் நிர்வாகங்களின் வசதிக்கேற்பக் கட்டணங்களை வசூலித்துக் கொள்வதற்கு வழி செய்து, வணிகச் சந்தையின் நலனுக்காக   மாணவர் சேர்க்கையைப் பரிந்துரைத்தது. இதுவே நீட் எனப்பட்டது! ஆக, தனியார் கல்வி முதலாளிகள் சுரண்டி கொழுக்கவே நீட் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவு!

தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 ன்  தோற்றுவாயும், நீட்டின் தோற்று வாயும் வேறு வேறானது!  நோக்கங்களும் வெவ்வேறானது. தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் மருத்துவக் கல்லூரி  திறப்பதற்கான அனுமதி, மருத்துவப் பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தகுதியான மருத்துவர்களை உருவாக்கும் ஆக்கபூர்வமான நோக்கங்களை கொண்டதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக இடங்களுக்கான மாணவர் சேர்க்கை மற்றும்  தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை ஒன்றிய அரசு வகுப்பதில் தமிழ்நாடு அரசு தலையிடவில்லை. தனியார் நிறுவனங்களில் மருத்துவப் பட்டப் படிப்புக்கான இடங்களை நீட் தேர்வின் மூலமாக நிரப்பிக் கொள்வதை தமிழ்நாடு அரசு தடுக்கவில்லை.

நீட் விலக்கு மசோதாவின் நோக்கம்

கல்லூரிக்குள் கால் வைக்கும் முதல் தலைமுறை மாணவர்கள் சமூகப் பின் தங்கல், கல்விச் சூழல், ஏழ்மை ஆகிய பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து பள்ளிப் படிப்பை முடித்து, மருத்துவராகி, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆண்டு கட்டணமாக 13,000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இத்தகைய மாணவர்கள் தங்களின் மருத்துவப் படிப்பிற்குப் பிறகு , மாநில அரசின்  மருத்துவ மனைகளில்  அர்ப்பணிப்போடு சேவை செய்கின்றனர். இந்த மருத்துவ மாணவர்களே, மாநில அரசு பொதுச் சுகாதாரத்துறையின் தூண்களாகும். இவர்கள்  எவ்வித இடையூறும் இல்லாமல், மருத்துப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கு வழி செய்வது தான் தமிழ்நாடு நீட் விலக்கு மசோதாவின் நோக்கமாகும்.

பள்ளிப் படிப்பின்போது சுமையில்லா கற்றல் வாய்ப்பை உருவாக்கி, பள்ளி இறுதித் தேர்வில் தங்களது திறன்களை வெளிப்படுத்தி, தகுதி பெற்றவர்களை கூடுதல் சுமையில்லாமல் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளில் அரசு இடங்களில் மட்டும் மருத்துவப் பட்டப் படிப்பில் சேர வழி செய்வதே தமிழ்நாடு நீட் விலக்கு மசோதா.

தமிழ்நாடு நீட் விலக்கு மசோதா மருத்துவ சேவையின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தகுதி வாய்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதை உறுதி செய்கிறது.

நீட் ஒரு சூதாட்டமே!

பயிற்சி மையங்களின்மூலம் நீட் விடைத்தாளை எதிர் கொள்ளக் கூடிய தந்திரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். நீட்டுக்கான பயிற்சி மூலம் மாணவர்கள் புதிதாக அறிவு எதையும் பெறுவதற்கு வாய்ப்பில்லை. நீட் தரவரிசையில் முதன்மை இடங்களைப் பெற முடியாதவர்கள் மீண்டும், மீண்டும் நீட் எழுதவும் அதற்கான பயிற்சியை மேற்கொள்ளவும் தள்ளப்படுகிறார்கள்.  நீட் பயிற்சிக்காக குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் தொலைத்து விட்டு, இறுதியில் எதிர்பார்த்த தரவரிசை இடம் கிடைக்காமல் மருத்துவப் பட்டப்படிப்பில் சேர முடியாமலேயே மாணவர்கள் வெளியேறுகின்றனர்.

நீட் ஒரு மிகப்பெரிய சூதாட்டமாக உருவெடுத்துள்ளது. தகுதி வாய்ந்த  திறமை படைத்த மாணவர்கள் நீட் மூலம் நடக்கும் சூழ்ச்சிகளால் மருத்துவப்  பட்டப்படிப்பில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக விலகி நிற்கின்றனர்.

நீட் மூலமான மாணவர் சேர்க்கையில் மெய்யான அறிவும், ஆற்றலும், சேவை புரியும் நோக்கமும் கொண்ட மாணவர்கள்  மருத்துவ பட்டப்படிப்பில் சேர்வதற்கு வாயப்பற்றவர்களாக விலக்கப்படுகிறார்கள்.

வசதி படைத்த மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளில் பல லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி பயிற்சி மேற் கொள்கின்றனர். இந்த கட்டணங்களுக்கு பதினெட்டு விழுக்காடு ஜி எஸ் டி வரி விதிக்கப்படுகிறது. தனியார் பயிற்சி மையங்களுக்கு பல கோடி ரூபாய் லாபமும், அரசிற்கு ஜி எஸ் டி வருமானமும் கிடைக்கிறது.

நீட் மூலம் நடக்கும் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை தயாரிப்புப் பட்டியலில் பெர்சன்டைல் முறை ஏன் எதற்காக, யாருடைய நலனுக்காக கடைப்பிடிக்கப்படுகிறது என்பது ஆராயப்பட வேண்டும்.  இந்த முடிவுக்குப்  பின்னால் இருக்கும் மர்மங்கள் குறித்த சந்தேகம் வலுக்கிறது.

மருத்துவ கல்வியின் தரத்தை சிதைக்கிறது நீட்

பெர்சண்டைல் முறையில் 720 மதிப்பெண்ணிலிருந்து 138 மதிப்பெண் வரை உள்ளவர்களை ஒரே தர வரிசையில் 50 வது பெர்சண்டைல் என்று அறிவிக்கப்படுகிறார்கள். அதாவது,  500 மதிப்பெண் பெற்றவர் பணமில்லாத காரணத்தால் சேர முடியாமல் விலகும் இடத்தை,  138 மதிப்பெண் மட்டுமே பெற்றவர்கூட, பணத்தைக் கொண்டு தட்டிப் பறிக்கும் வாய்ப்பை நீட் உருவாக்குகிறது. ஆக, காசு, பணம், துட்டு அதுவே, நீட்டு!

பள்ளிப் படிப்பின் இறுதியில் நடக்கும் மேல்நிலைப் பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையில், பொதுத் தேர்வு  மதிப்பெண்களில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் சமமாக, அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பில் சேர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். ஆனால், நீட்டில் அப்படியல்ல! ஏதாவது, ஒரு சப்ஜெக்டில் அதிக மதிப்பெண் பெற்றாலே போதுமானது!

கல்வி கொள்ளைக்கு கிடைத்த சட்ட அங்கீகாரமே நீட்

நீட் தேர்வு வருவதற்கு முன்பு, சட்டத்திற்குப் புறம்பாக, ஒரு வித தயக்கத்துடன் நடந்தது தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளை! ஆனால்,  நீட்டிற்குப் பிறகு கல்லூரிக் கட்டணம் என்ற பெயரில், மிக அதிக பணம் சட்டப்படி வசூலிக்கப்படுகிறது. நீட் வணிக மயத்தை ஒழித்து, தரத்தை உறுதி செய்தது என்பது வடிகட்டிய பொய்.

நீட் நடைமுறையில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள், முறைகேடு மூலமாக மருத்துவப் பட்டப்படிப்பில் சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டவுடன், அவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டதின் விளைவாக, மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் வீணாகிப் போகிறது! மாணவர்களின் நலம், மாநில அரசின் உரிமை ஆகியவற்றுக்கு எதிராக நீட் திணிப்பட்டுள்ளது.

நீட் ஒரு வரலாற்று மோசடியே

நீட் ஒரு வரலாற்றுப் பிழையாகும். ஆனால், நீட் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் என்று புனையப்படும் கருத்துகள் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதது. மருத்துவ சேர்க்கையில் பல்வேறு சீர்கேடுகளுக்கும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் புகழ் பெற்ற  இந்திய மருத்துவக் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட நீட் ஒரு வரலாற்று மோசடியே!

நீட்  தேர்வால் தகுதியை உறுதிப்படுத்த முடியவில்லை. கட்டணக் கொள்ளையையும் தடுக்க முடியவில்லை. வணிக மயத்தை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் நோக்கத்திற்கு நேர் எதிராக நீட் அமைந்துள்ளது, நீட் தேர்வு!

மருத்துவ கல்வி மாநில அரசின் உரிமை

2016 மே 2ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில், ”கல்வி குறித்து ஒன்றிய அரசின் அதிகாரமென்பது, உயர்கல்வியில் தரத்தை தீர்மானித்து ஒழுங்குபடுத்துவதே ஆகும். பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை உள்ளிட்ட ஒழுங்குமுறைகள் மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதே. பட்டபடிப்பு மாணவர் சேர்க்கையில் மாநில அரசிற்கு உண்டான அதிகாரம் எந்த வகையிலும் கரைந்து போகவில்லை” என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் மருத்துவமனை, மருந்தகங்கள் ஆகிய துறைகளை மாநிலப் பட்டியலில் வைத்துள்ளது. எல்லோருக்கும் தரமான மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்தும் கடமை மாநில அரசிற்கு உள்ளது. மாநில அரசு தனது கடமையை நிறைவேற்ற தேவையான மருத்துவர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மருத்துவக் கல்வியும், மருத்துவ சேவையும் ஒன்றோடொன்று தொடர்பு உடையது.

தமிழ்நாடு சட்டப்பேரவை சட்டம் இயற்றி 15 மாதங்கள் கழிந்துள்ளது. காலதாமதம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகப் பெரும் மன உளைச்சலை தருகிறது என்பதை கருத்திலெடுத்து குடியரசு தலைவர் தமிழ்நாடு நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திலிருந்து கோரிப் பெற்று, விரைந்து ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

கட்டுரையாளர்; பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு

கல்வியாளர்,

பொதுச்செயலாளர்

பொதுப் பள்ளிக்கான மாநிலமேடை

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time