கட்டுக்கடங்கா ஆர்வ மிகுதி, தலைகால் தெரியாத கொண்டாட்ட மன நிலை, உயிரையும் துச்சமாக மதிக்கும் துணிச்சல்..இப்படிப்பட்ட இளம் ரசிகர்கள் தான் இவர்களின் இலக்கு! கொஞ்சம் ஸ்டைல், பைட், துள்ளலான பாட்டு, டான்ஸ், தொழில் நுட்ப மிரட்டல்கள்… இவை போதுமானது! கதையாவது, கருத்தாவது, புடலங்காவாது!
பொங்கல் தினத்தையொட்டி, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் துணிவு, வாரிசு ஆகியவை வெளியாகி இருக்கின்றன. மிகுந்த ஆரவாரத்துடனும் அதீத எதிர்பார்ப்புகளுக்கிடையிலும் இவ்விரண்டு படங்களும் தற்போது ஓடிக் கொண்டிக்கின்றன. பொதுவாக தமிழ்நாட்டில், வேறு எந்த மாநிலம் அல்லது மொழிப்படங்களுக்கும் இல்லாத கேளிக்கையான முதல் நாள், முதல் காட்சி என்ற FDFS என்ற நச்சுச் சூழல் நிலவுகிறது.
தொடர் விடுமுறை நாட்களில் வெளியாகும் இது போன்ற அதி நாயக சூப்பர் ஸ்டார் படங்கள் ஒரு வாரத்திற்குள்ளாகவே போட்ட முதலை எடுத்து விட வேண்டும் என்கிற திட்டத்துடன் களம் காண்கின்றன. என்ன நடக்கிறது தமிழ் சினிமாவில்? இதை புரிந்து கொள்ள தமிழ் சினிமா வரலாற்றை சற்று புரட்டிப் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் இருந்தே இரு துருவ சூப்பர் ஸ்டார் யுத்தம் துவங்கி விட்டது. எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யூ சின்னப்பா ஆகியோரின் இணையே இதன் தொடக்கம். அதன் பின்பு எம் ஜி ஆர் – சிவாஜி ரசிகர்கள் இரு துருவங்களாக பிளவுபட்டு நின்றனர். எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்களுக்கு இடையிலான மோதல்கள் அன்று பிரபலம்!
ரஜினி – கமல் என்ற இரு துருவ மோதல் நெடுங்காலம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தது. அப்போதும் கூட ரசிகர்களுக்கு முட்டல் மோதல்கள் நடந்தது உண்டு. ரஜினி – கமல் துருவ காலத்தில், ஒரு புறம் ரஜினி படம், மற்றொரு புறம் கமல் படம் என்று வெளியானாலும் கூட பிரபு, சத்யராஜ், மோகன், கார்த்திக், சரத்குமார், பாக்யராஜ், டி. ராஜேந்தர், நடித்த படங்களும், பெரிய இயக்குனர்களான கே. பாலசந்தர், பாரதிராஜா, மணிவண்ணன், மணிரத்னம் ஆகியோரின் படங்களும் வெளியாகும். பொங்கல் அல்லது தீபாவளிக்கு சராசரியாக 12 படங்கள் வரை வரும். இதுபோக, இளையராஜா இசையமைப்பில் வெளியாகும் படங்களுக்கும் நல்ல டிமாண்ட் இருந்தது. ராகதேவனின் இசையில்…. என்ற டைட்டில் இருந்தாலே படங்கள் ஓடியது உண்டு.
திருவிழா காலங்களில் வழக்கம் போல முதல் காட்சி 9 மணிக்கு துவங்கும். கூடுதலாக ஒரு காட்சி இருக்கும். எல்லா படங்களுக்கும் கூட்டம் இருக்கும். நல்ல படங்கள் ஓடத் துவங்கி அந்த படங்களுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் மற்ற படங்களை பார்க்கும் சூழல் நிலவியது. ஓரளவு ஆரோக்கியமான நிலையில் இருந்த சினிமா வணிகத்தில் ரசிகர் ஷோ என்ற புதிய முறை புகுந்தது.
குறிப்பாக, ரஜினிகாந்த் படங்களுக்கு சிறப்புக் காட்சியாக ரசிகர் மன்றங்களுக்கு திரையிடும் முறை வந்தது. அதாவது ஒரு ஊரில் இருக்கும் ரஜினி ரசிகர் மன்றம் படத்தின் மொத்த டிக்கெட்டையும் வாங்கி கொள்வார்கள். அதை தங்கள் மன்ற ரசிகர்களுக்கு அதை கொடுத்து முதல் காட்சியை பார்த்து விடுவார்கள். அன்றைய காலகட்டத்தில் ஒரு டிக்கெட் விலை ரூ. 50 எனில் ரசிகர்களுக்கு 100 ரூபாய்க்கு அதை விற்று கிடைக்கும் உபரி பணத்தில் கட் அவுட் வைப்பது போன்ற கொண்டாட்டங்களுக்கான செலவுக்கு வைத்துக் கொள்வார்கள். இந்த் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக சிறு சிறு நகரங்கள், கிராமங்கள் வரை அறிவிக்கப்படாத நடைமுறையாக விரிவடைந்தது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்ற யூகங்கள் கிளம்பிய காலகட்டத்தில் இந்த முதல் காட்சி என்ற நடைமுறைக்கு அரசியல் சாயம் கிடைக்க ஆரம்பித்தது. அப்போதைய ரசிகர் மன்ற தலைவர்கள்தான் எதிர்கால எம். எல் ஏக்களாகவும் அரசியல்வாதிகளாகவும் தங்களை கற்பனை செய்து கொள்ளத் தொடங்கினர். குறிப்பாக, பாட்ஷா படத்திற்கு பிறகு முத்து படத்தில் இருந்து இந்த விஷயம் தீவிரம் அடையத் தொடங்கியது. அதிகாலை 1.00 மணிக்கு ரசிகர் ஷோ என்ற சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த ரசிகர் ஷோவை தொடர்ந்து 4.00 மணி, 9. 00 மணி என்று காட்சிகள் தொடர்ந்தன. ஆரம்ப நாட்களில் இந்த காட்சிகளுக்கான விலையை திரையரங்கங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு இந்த நடைமுறைக்கு வசதியாக போயிற்று.
ரஜினிகாந்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய், அஜித் காலத்தில் இந்த முதல் நாள் முதல் காட்சி என்ற கொண்டாட்டம் உச்சத்தை அடைய தொடங்கியிருக்கிறது. சூப்பர் ஸ்டார் படங்களின் தயாரிப்பு செலவில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களின் சம்பளத்திற்கு போகிறது. உதாரணமாக ஒரு படம் 30 முதல் 40 கோடியில் தயாரிக்கப்படும் என்றால், அதனுடன் நடிகரின் சம்பளமாக 100 முதல் 150 கோடி வரை தரப்படுகிறது.
தற்போதைய நடிகர்களில் விஜய் 150 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த முதலீட்டை திருப்பி எடுப்பது என்பது தான் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கான நெருக்கடியாக மாறுகிறது. எனவே லாபத்துடன் சேர்த்து முதலீட்டை விரைவில் எடுப்பது ஒன்றே வழி. எனவே, முதல் நாள் முதல் காட்சி என்ற பரபரப்புடன் ஒரே வாரத்தில் பணம் மீட்டெடுக்கப்படுகிறது.
தற்போது, தொடர் விடுமுறைக்காலங்களில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் படம் மட்டுமே வெளியாகிறது. தமிழ்நாட்டில் அனைத்து திரைகளிலும் (Screens) வெளியாவதால் வசூல் மொத்தமாக அள்ளி விடுகிறது. ஆனால், இங்கே ஒரு சிக்கல் வருகிறது. ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைப்பது எப்படி? இதற்கு விடையாகத்தான் சூப்பர் ஸ்டார் நாயக பிம்பம் ஊதிப் பெரிதாக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, அப்டேட், பாடல்கள் வெளியீடு, டீசர், ட்ரெய்லர் வெளியீடு, கதாநாயகனின் சர்ச்சை பேச்சுகள், அரசியலுக்கு வரப்போவதாக சொல்லப்படும் ஹேஷ்யங்கள், அது குறித்த விவாதங்கள், இணைய தளங்களில் விவாதங்கள் என களை கட்டும். இதன் இறுதியில் படம் வெளியாகும் முன்பே அது குறித்த செயற்கையான Hype உருவாக்கப்பட்டு, ரசிகர்களின் வெறி தூண்டப்படுகிறது. இதற்கு பலியாகும் ரசிகர்கள் என்ன விலை கொடுத்தேனும் முதல் காட்சி அல்லது முதல் நாளே பார்த்து விடவேண்டும் என்று உந்தப்படுகிறார்கள். இதைப் பயன்படுத்தி சிறப்பு காட்சிகள் போட்டு மிக அதிக கட்டணம் வசூலித்து பணத்தை அள்ளிவிடுகிறார்கள்!
தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் படம் எப்படி இருந்தாலும் பார்த்து விட வேண்டும் என்ற முனைப்பு பார்வையாளர்களிடம் உருவாக்கப்படுகிறது. இந்த பின்னணியில் தான் தற்போது அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ளது. இந்த இரு படங்களும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், கிட்டத்தட்ட எல்லா காட்சிகளும் புக் ஆகி விட்டன. படங்கள் மோசமாகவோ, சுமாராகவோ இருந்தாலும், வசூலில் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதே இங்கு சுவாரஸ்யமான செய்தி. இன்னும் சொல்வதென்றால், படம் எவ்வளவு குப்பையாக இருந்தாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹைப்பர் மன நிலை காரணமாக ரசிர்களிடம் இருந்து பணத்தை அள்ளிவிடுவது தான் திட்டமே!
இந்த இரண்டு படங்களும் திரையிட்ட நாட்களில் கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக இருந்ததாக சொல்லபடுகிறது. பல அலுவலகங்களில் இளைஞர்கள் லீவு போட்டு சென்றுள்ளனர்.
நமக்கு கிடைத்த தகவல்களின் படி, ஒரு டிக்கெட் 1000 முதல் இரண்டாயிரம் வரை விற்கப்பட்டதாக சொல்கிறார்கள். சிலர் முன்பதிவு செய்து கொண்டு, அந்த டிக்கெட்டை ஐந்தாயிரம் வரை விற்றுள்ளனர். பெரும்பாலும், ஏழை,எளிய நடுத்தர வர்க்கத்து இளைஞர்களே இப்படி சினிமாவிற்கு தங்கள் சேமிப்பையோ அல்லது பெற்றோர் பணத்தையோ போட்டு அழிக்கின்றனர்!
படம் வெளியான அன்று இரவு 11 மணி முதல் ரசிகர்களின் கொண்டாட்டம் என்ற பெயரில் வெறித்தனம் அரங்கேறி இருக்கிறது. சென்னை ரோகிணி திரையரங்கில் இரு தரப்பு ரசிகர்களுக்கிடையே மோதல் நிகழ்ந்து இருக்கிறது. முதலாவதாக இரவு ஒரு மணி காட்சிக்கு வந்த அஜித் ரசிகர்கள் விஜய்யின் வாரிசு பட பேனர்களை கிழித்து, அடித்து, நொறுக்கியுள்ளனர். பிறகு நான்கு மணி ஷோவிற்கு வந்த விஜய் ரசிகர்கள் அஜித்தின் துணிவு பட பேனர்களை கிழித்து,அடித்து, நொறுக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் பரவலாக இந்த மோதல்கள் ஆங்காங்கே சிறிய அளவில் நிகழ்ந்துள்ளன. திரையரங்குகளில் போலீஸ் தடியடி நடந்திருக்கிறது. பாண்டிச்சேரி ரசிகர் ஒருவர் முதுகில் அலகு குத்தி தனது பக்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதையெல்லாம் மிஞ்சும் விதமாக நடிகர் அஜித் குமாரின் ரசிகர் பரத்குமார் ஓடும் லாரி மீது தாவி ஏறி லாரியின் மீது டான்ஸ் ஆடியதில் கீழே விழுந்து இறந்து போயிருக்கிறார். அவர் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். உணவு டெலிவரி வேலைக்கு செல்லும் அவர் இந்த படத்திற்காக ரூ3,500 செலவழித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது..! சம்பவம் நடந்த அன்றே அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
பால் முகவர்கள் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அஜித்,விஜய்,ரஜினி போன்றோர் படங்கள் வெளியாகும் போது அவர்களின் ரசிகர்கள் ஆவீன் பால் பூத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள பால் பாக்கெட்டுகளை அதிரடியாக அள்ளிச் செல்கின்றனர்! இதனால் பால் முகவர்கள் பொருளாதார இழப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பால் அபிஷேகம் செய்யக் கூடாது என கறாராக அரசும் நடிகர்களும் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்கிறார்.
ரசிக மனப்பான்மை, தற்போது வெறியாக மாறி உயிரிழப்பும் நிகழ்ந்திருக்கிறது. உழைக்கும் மக்களின் பணம் மிக பகிரங்கமாக சுரண்டப்படுகிறது. சினிமா வியாபாரம் சூதாட்டமாக மாறி நிற்கிறது. ஏன் இந்த அவல நிலை? எழுத்தாளர் வாசுதேவன் முகநூலில் மிகுந்த வேதனையுடன் தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
“இந்த மாதிரி சினிமா வெறி பிடித்த மாநிலத்தை வேறெங்கும் பார்க்கமுடியாது. இரண்டு நட்சத்திரங்கள் படங்கள் வெளிவந்துள்ளன. இருவரின் ரசிகர்கள் மோதிக்கொள்கிறார்கள். ஒரு ரசிகன் உயிரிழக்கிறான். மற்றொரு ரசிகன் 30 அடி கிரேனில் முதுகில் அலகு குத்தி பாலாபிஷேகம் செய்கிறான். பல ஆம்புலன்சுகள் சாலையில் நிற்கின்றன.திருவான்மியூர் சிக்னலில் ஒரே களேபரம். ஒருபக்கம் அருவருப்பு. தமிழ் பண்பாட்டுத்தளத்தில் வெகுஜன திரைப்படங்கள் பலத்த கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றன. திரைப்படக் கலையை இந்தளவுக்கு எவரும் கொச்சைப்படுத்த முடியாது. இந்த உச்ச நட்சத்திரங்களுக்கு அவர்களின் ரசிகர்கள் உண்டாக்கும் பொது சொத்து நாசம் பற்றி எந்த கவலையும் இல்லை. மிகை உணர்ச்சி வழிபாட்டு மனநிலைதான் தமிழ்நாட்டை சீரழித்து வருகிறது. இந்த பக்தி மனநிலை அரசியல், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் நுழைந்து திரும்பின பக்கமெல்லாம் சர்வ நாசமாக தெரிகிறது. தங்கள் உயிரை பணயம் வைக்கும் சிறுவர்கள் மிக எளிய வறிய பின்புலத்தில் வருகிறவர்கள். பெற்றோர்களின் கனவை ஒரு நொடியில் சிதைத்து தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள்”
இது வெறும் பண்பாட்டு சீரழிவு என்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. எளிய குடும்பங்களின் பொருளாதாரம் சூறையாடப்படுகிறது. இதற்கு மாற்றுதான் என்ன? ஒரு டிக்கெட் 2000 எனில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு 5000 முதல் 6000 வரி ஆகிறது. இது எவ்வளவு பெரிய சுரண்டல்? ஏற்கனவே டாஸ்மாக் கடைகளின் மூலம் மது கலாச்சாரம் தமிழக இளைஞர்களை சூறையாடிக் கொண்டிருக்கிறது.
சிறிய பட்ஜெட் படங்கள் எளிய கதைகளுடன் வரும் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. சூப்பர் ஸ்டார் படங்கள் வராத அபூர்வமான நேரத்தில் மட்டுமே அவை வெளிவருகின்றன. அவ்வாறு வெளிவந்த, லவ்டுடே, கட்டா குஸ்தி போன்ற படங்களும் இயல்பாக நல்ல வசூலை பெற்று இருக்கின்றன. இந்த படங்கள் குறைந்த பட்ஜெட்டில் நிறைய லாபத்தை சம்பாதித்து இருக்கின்றன.
Also read
சினிமா வினியோகம் சனநாயகப்படுத்தப்பட வேண்டும். ஒரு சிலரின் கைகளில் அது சிக்குண்டு கிடக்கிறது. யார் படம் எடுத்தாலும், திரையரங்குகளை கட்டுப்படுத்தும் இடத்தில் ஒரு சிலரின் ஆதிக்கமே நிலவுகிறது. அதிக திரைகள், குறைந்த நாட்கள், அதிக வசூல் என்ற பார்முலாவே இந்த சிக்கல்களுக்கு காரணம். அதீத சம்பளம் பெறும் ஹீரோக்களின் படங்கள் பெரும் வசூலை ஈட்டியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமே இத்தனை சிக்கல்களுக்கும் மூல காரணம்.
ரசனையை பொறுத்தவரை, ரசிகர்களின் இந்த வெறித்தனமான சினிமா ஆர்வம், தமிழில் நல்ல சினிமா கூட அல்ல; சுவாரஸ்யமான கதை அம்சம் கொண்ட வணிக சினிமாக்கள் கூட உருவாக வாய்ப்பில்லை. வணிக சினிமா வளர்த்தெடுக்கும் இந்த வெறித்தனமான சினிமா ரசிக மனோபாவம் தமிழ் சினிமாத் துறையையே அழிக்கும் சக்தி கொண்டது. நமது மனதில் உள்ள கேள்வி “எங்கே செல்லும் இந்த பாதை?”
கட்டுரையாளர்; தயாளன்
எழுத்தாளர், விமர்சகர்
சிறந்த பார்வை!
நன்றி அய்யா
Well articulated article. Well done com. Dayalan
dayalan
நன்றி அய்யா
சிறப்பான கட்டுரை ! இதற்க்கு யாராவது பொதுநல வழக்கு பதித்தால் நன்றாக இருக்கும்.