‘சூது கவ்வும்’ சேது சமுத்திர திட்டம்!

-சாவித்திரி கண்ணன்

கைவிடப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமாம்! இத் திட்டத்தை முன்பு அதிமுகவும், பாஜகவும் கைகோர்த்து எதிர்த்துள்ளன! இந்த திட்டம் மன்மோகன் சிங் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எதனால் கைவிடப்பட்டது? என்ன நடந்தது? மீண்டும் இதை செயல்படுத்த வாய்ப்புள்ளதா? 

பத்தாண்டுகளுக்கு முன்பு “சேது சமுத்திர திட்ட பணிகளை மீண்டும் தொடர்ந்தாக வேண்டும்” என தி.மு.க எம்.பிகள் வலியுறுத்த, அதை எதிர்த்து அ.தி.மு.க, பா.ஜ.க எம்.பிகள் இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி பாராளுமன்றமே ஸ்தம்பித்து, அவையை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று என்பதை நாம் மறக்க முடியாது! ஆனால், தற்போது தமிழ் நாடு சட்டமன்றத்தில் சேது சமுத்திர திட்ட நிறைவேற்றலுக்கு ஸ்டாலின் கொண்டு வந்த, தனி நபர் தீர்மானத்தை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் ஆதரித்துள்ளன!

‘தமிழர்களின் லட்சியக் கனவு திட்டம்’ என்ற உணர்வுடன் சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த திட்டம்  அணுகப்பட்டு வந்துள்ளது. தமிழகத்தின் பல பெரும் தலைவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கனவு இருந்தது என்பதை மறுக்க முடியாது.

முன்பு, ”ராமர்பாலம் பாதிக்கப்படும்” என்ற காரணம் சொன்ன பாஜகவினர், தற்போது அந்த நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளனர். ”சேது சமுத்திரப் பகுதியில் பாலம் இருந்ததற்கான ஆதாரமே இல்லை” என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இப்போது சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே, சுப்பிரமணிய சுவாமி, ‘ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க கோரி’ வருகிறார். அதற்கு ஒன்றிய பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. அதனால், அவர் ராமர் பாலத்தை புராதானச் சின்னமாக அறிவிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டார்! அதற்கு பாஜக அரசு உரிய பதிலை சொல்லாமல் எட்டாண்டுகளாக இழுத்தடித்து வருகிறது!. இந்த நிலையில், ‘சேது சமுத்திரப் பகுதியில் பாலம் இருந்ததற்கான அறிகுறியே இல்லை’ என நாடாளுமன்றத்திலேயே பாஜக அமைச்சர் தெரிவித்ததன் பின்னணியில் தான், ஸ்டாலின் இந்த திட்டத்தை மீண்டும் வலியுறுத்த தொடங்கி உள்ளார்!

சட்ட மன்றத்தில் ஸ்டாலின்

நம்மைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ள உணர்ச்சி நிலைகளைக் கடந்து அறிவுபூர்வமாக நாட்டு மக்கள் நலன்சார்ந்து இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்பதே  நோக்கம். சற்றே வரலாற்றை பின் நோக்கிப் பார்ப்போம்.

1860ல் ஆங்கில கடற்படை தளபதி ஏ.டி டெய்லர் என்பவரால் விதைக்கப்பட்ட ‘சேது சமுத்திர திட்டம்’ என்ற விதை நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மண்ணில் விரும்பப்படும் ஒரு விவாதப்  பொருளாகி, சுதந்திரம் பெற்ற பிறகு அது விஸ்வரூபமெடுத்து நேரு, இந்திராகாந்தி கால அரசுகளால் கமிட்டிகள் அமைத்து ஆராயப்பட்டு கைவிடப்பட்டன!

1999 முதல் 2004 வரை பாஜகவுடன் மத்திய அரசில் அங்கம் வகித்திருந்தது திமுக! அப்போது சேது சமுத்திர திட்டத்தின் தொடக்க ஆய்வுப் பணிக்காக ஐந்து கோடி ரூபாயை அன்றைய பா.ஜ.க. அரசின் நிதி அமைச்சரான யஷ்வந்த் சின்கா  1999 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தார். அந்த ஆய்வு அறிக்கை இரண்டு ஆண்டுகளில் தரப்பட்ட நிலையில், 2004 வரை ஆட்சியில் இருந்த வாஜ்பாயின் பாஜக அரசு, ‘சேது சமுத்திர திட்டம் நடைமுறை சாத்தியமற்றது’ என்ற நிலையில், பின் வாங்கி விட்டது

2005 ல் சேது சமுத்திர திட்ட அடிக்கல் நாட்டு விழா

பிறகு தி.மு.க வின் தயவில் மத்திய அரசு காங்கிரஸ் அரசு இயங்க வேண்டிய சூழலில்  2005 ஜுலை 2ந்தேதி பிரதமர் மன்மோகன் சிங்கால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது ”இத்திட்டத்தால் தென் தமிழகம் வளம் பெறும், இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல்கள் இனி, சேது கால்வாய் வழியாக பயணிக்கும் இதனால் பயணநேரம், எரிபொருள் மிச்சம் போன்ற நன்மைகளோடு  தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச முக்கியத்துவம் பெறும்” என்று இத்திட்டம் குறித்து விவரிக்கப்பட்டது.  சுமார் 2,500 கோடி செலவில் 3 ஆண்டுகளுக்குள்ளாக இத்திட்டம் முடிக்கப்படும்  என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், வேலை தொடங்கப்பட்ட பிறகு தான் தெரிந்தது. தோண்டப்பட்ட இடத்திலேயே வெகு விரைவில் மீண்டும் மண் வந்து விழுவதானது இந்த திட்டம் இயற்கைக்கு எதிராக உள்ளது என்பதை நெற்றி பொட்டில் அறைந்தாற் போல் உணர்த்தியது. அதே சமயம் இந்த மண் தோண்டுவதற்கான காண்டிராக்டில் பணத்தை எவ்வளவு அள்ள முடியுமோ, அவ்வளவையும் அள்ளிக் கொண்டு இருந்தார் அன்றைய மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு!

மற்றொரு புறம் பக்கம் இத்திட்டத்தை மிக கடுமையாக எதிர்த்து ,தென் தமிழக கடலோரப் பகுதி மீனவர்கள் பல போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தனர்.  சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் இந்த திட்டத்தில் உள்ள பாதகமான அம்சங்களைக் எடுத்துக் கூறி,  எதிர்ப்பு தெரிவித்து போராடினர்.

இவற்றோடு இத் திட்டத்தால் இராமர் பாலம்  இடிபடுகிறது என்ற  இந்துத்துவ  இயக்கங்களின்  எதிர்ப்பும் சேர்ந்து  வலுப்பெற்று,  இத்திட்டம்  உச்சநீதி  மன்றத்தால்  செப்டம்பர் 2007 ல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பிறகு தி.மு.க  மற்றும் இடது சாரிகளால் இத் திட்டத்திற்கு  மேன்மேலும்  அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தாலும் கூட,  ‘இது மீண்டும் தொடங்கும்’ என்பதற்கான அறிகுறிகள் தென்படாமல் தான் இருந்தது!

கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் ஏன் விரும்பவில்லை;

இதற்கான காரணங்கள் என்ன? என்று பார்க்கும் போது இந்த திட்டம் நடைமுறையில் சாத்தியமற்றது மாத்திரமல்ல, இதை இயற்கைக்கு மாறாக கடும் தொழில் நுட்ப உதவியுடன் நிறைவேற்றினாலுமே கூட, இந்த பாதையை பயன்படுத்திக் கொள்ள, கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிய வந்தது. கப்பல்  போக்குவரத்தில் பலன் பெறும் இந்திய நிறுவனங்கள் எதுவுமே இத்திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை என்ற நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக இதை செயல்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது!

“குறுகலானபாதை, குறைந்த ஆழம் என்பதால் பெரிய சரக்கு கப்பல்கள் ஒரு போதும் இந்தப் பாதை வழியே பயணிக்க வாய்ப்பில்லை. சிறிய உள்ளூர்  கப்பல்கள் மட்டுமே பயணிக்க முடியும், மிகக் குறைந்த வேகத்திலேயே பயணிக்கமுடியும், இதற்கு எரிபொருள் செலவும் கூடும், இதனால்  இலங்கையைச்சுற்றி பயணிப்பதற்கும் இப்பகுதி வழியே செல்வதற்கும் நேரம், செலவு போன்றவற்றில் பெரிய வித்தியாசமில்லை.  இந்த கால்வாய் பகுதியில் மீண்டும் மீண்டும் மணல் சேர்ந்து கொண்டேயிருப்பதால் பராமரிப்பு செலவு அதிகமாகும்” என்று  தொழில் சார்ந்த நிபுணர்கள் கூறினர்.

மன்மோகன் சிங் அரசு மறுத்தது ஏன்?

சேது சமுத்திர திட்ட கால்வாயின் மொத்த நீளம் 167கி.மீ. இதில் ராமர்பாலம் எனப்படும் ஆதாம்பாலம் பகுதியில் 11 சதவிகிதமும், பாக்ஜலசந்தி பகுதியில் 30 சதவிகிதமும் பணிகள் முடிவடைந்த  நிலையில் தான்  இத்திட்டம் கைவிடப்பட்டது. இதற்கே ஆயிரம் கோடிக்கு மேல் செலவாகிவிட்டது. இத்திட்டத்தை மேலும் தொடரமுடியாததற்கு தோண்டப்படும் பகுதியில் மீண்டும், மீண்டும் மணல் சேருவது ஒரு பிரச்சினையாகவும், தோண்டிய மணலை எங்கே கொட்டுவது என்ற நடைமுறைசிக்கலும் பிரதான காரணமாக சொல்லப்பட்டது.

மேலும், மூன்றாண்டுகளில் இத்திட்டத்தின் மதிப்பீடு அதிகரித்து, 4000 கோடி  என்ற நிலையை எட்டியதும் ஒரு முக்கிய காரணமாகும்!  ‘இவ்வளவு செலவழிந்தாலும் இத்திட்டத்திற்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது’ என நிபுணர்கள் கூறிய விபரங்கள் தான் அன்றைய மன்மோகன்சிங் அரசின் பின்வாங்கலுக்கு பிரதான காரணமாகும்.

சுழலியல் பாதிப்புகள் என்ன?

சேது சமுத்திர பாதையில் இயற்கையாக உள்ள மணல் திட்டும், அபரிமிதமாக உள்ள கடல் வளமும்!

”3,600 வகையான கடற்செடி கொடிகள், கடற் பாசிகள், கடல் வாழ் உயிரினங்கள், 450 வகை அரிய மீன் இனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பவளப் பாறைகள்.. இந்த திட்டத்தால் சர்வ நாசமாகும். இதனால், தென் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, கடலின் இயற்கை சூழலே கடும் பாதிப்புக்கு ஆளாகும்” எனக் கூறப்பட்டது.   இந்த பகுதியில் உள்ள இயற்கை மணல் திட்டுகள் தென் இந்திய கடற்பகுதியில்  சுனாமியின்  சீற்றத்தை குறைக்கும் அரணாகத் திகழ்கின்றன” என்ற சூழலியல் விஞ்ஞானிகளின் கூற்று மேலும் வலுப் பெற்று வந்தது! இதைத் தொடர்ந்து இந்த திட்டம் அதிகாரபூர்வமாக கைவிடப்படுவதாக மார்ச்- 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது! இந்த அறிவிப்பை மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இனிப்பு வழங்கி,  மகிழ்ச்சி வெளிப்படுத்தினர் என்பதும் நினைவுகூறத்தக்கது.

தமிழ் நாடு சட்டமன்றத்தில் இந்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.

”காசு பணம் துட்டு மணி மணி — சேது சமுத்திரத் திட்டம் எனும்  சூது கவ்வும்.  திமுகவின், குறிப்பாக,  டி ஆர் பாலுவின் தீராத பேராசை. தி.மு.க-பாஜக மறைமுக கூட்டுச்சதி.  குஜராத்தி தொழிலதிபர்களுக்கும்,  இடைத்தரகர்களுக்கும், திராவிட மாடல் கட்சித்தலைவர்களுக்கும் கப்பல் கப்பலாக கப்பல் கப்பலாக  கரன்சி , வடமாநிலப் பொறியாளர்களுக்கும், வடமாநில காண்டிராக்டர்களுக்கும்,  வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் நல்ல வேலை, வருமானம். தமிழக இளைஞர்களுக்கு பட்டை நாமம்.  இதுவா விடியல்?”’ எனக் கேட்டுள்ளார் பாடம் நாராயணன்.

மக்கள் நலன்சார்ந்தும், நடைமுறை சாத்தியப்பாடுகள் சார்ந்தும் இந்த திட்டத்தை நாம் ஆய்வு செய்யும் போது, இந்த திட்டம் நடைமுறையில் சாத்தியப்படாது. ஒரு வேளை சாத்தியப்பட்டாலும், பயன்கள் மிகக் குறைவு. தீமைகளோ அதிகம். செலவும் மிக அதிகம்! இவ்வளவும் தெரிந்த நிலையில், இந்த திட்டத்தை அமல் படுத்த போகிறோம் என்பது, ‘ஆன வரை கூட்டுக் கொள்ளை அடித்து கொள்ளலாம்’ என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? மேலும் பாஜகவுடன் திமுக அரசியல் ரீதியாக வெளிப்படையாக கைகோர்க்கும் சூழல் உருவாக, இந்த திட்டம் துவக்க புள்ளியாக அமையலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time