வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் வருகை சரியா ?

- டில்லி ராணி

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியா வர உள்ளன! இதை இடதுசாரிகளும், தேச பக்த அமைப்புகளும் கடுமையாக எதிர்க்கின்றன!  ‘இது கல்வி கட்டணங்கள் தாறுமாறாவதற்கும்,  உயர் கல்வி கட்டமைப்பு சீர்குலைவதோடு, இந்திய இறையாண்மைக்கே ஆபத்தாக முடியலாம்’ போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன!

கல்வியின் பெருமையை உலகறிய உரக்கச் சொன்ன வள்ளுவர் தோன்றிய திருநாட்டில் விரைவில் அயலக உயர் கல்வி நிலையங்கள் வரவிருக்கின்றன. நன்மை தரும் எதுவாக இருப்பினும் வரவேற்பதும், போற்றுவதும் அறிவுடைமையே. ஆனால், இது நன்மை தருமா? என்பதை பார்க்க வேண்டும்.

இந்திய தேசிய விடுதலை போராளியும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மவுலானா அபுல் கலாம் ஆசாத்  இந்தியக் கல்வியை செழுமைபடுத்த, வெளிநாடுகள் சென்று அங்கே கல்வி நிலையங்கள் செயல்படும் முறைகளை கவனமாக குறித்து வந்து, இந்தியாவில் நடைமுறைப் படுத்தினார்.அந்த வகையில் அபுல்கலாம் ஆசாத், உலகத் தரத்திலான இந்திய  கல்விக் கொள்கைக்கு வித்திட்டவர்.

மவுலானா அபுல்கலாம் ஆசாத்

கல்வித் திட்டம்  பன்முக செயல்பாடு கொண்டதாக இருக்க வேண்டுமென செயல்பட்டவர். கல்வி  இந்திய மக்களின் பிறப்புரிமை என்று உரத்துக் கூவினார்.  பல்முனைகளிலும் அவர் எடுத்த துவக்கம் தான் இந்தியாவை கல்வித் துறையில் வேகமாக வளர வைத்தது.

ஆஸாத்திற்கு ஒரு நூற்றாண்டு முன் வாழ்ந்த சர் சையத் அகமது கான்  மக்களின் அறிவுக் கண் திறக்க தன் வாழ்நாள் முழுதும் தன்னை அர்பணித்தவர். ஒரு நூற்றாண்டை எளிதாக கடந்து செயல் படும் இன்றைய அலிகர் முஸ்லீம் பல்கலைக் கழகத்தின் நிறுவனர்.

1868 ம் ஆண்டு தனது மகனுக்கு கிடைத்த இங்கிலாந்து செல்லும் வாய்ப்பை பயன்படுத்தி, தானும் பயணித்தார். தன் நூலகத்தையும், அச்சு இயந்திரத்தையும் விற்று,வீட்டையும் அடகு வைத்துப் பயணப்பட்ட அவர் அங்கே இருந்த புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகங்கள் செயல்படும் முறையை  ஓராண்டுகள் ஆராய்ந்து ,நுட்பமான தகவல்களை தேடித் தேடி சேகரித்து வந்து இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார்!

கல்வியாளர் சர்.சையத் அகமது கான்

அந்த வகையில் 1875-ல் ஆங்கிலோ இந்தியன் கல்லூரியை இங்கிலாந்து பல்கலைகழகங்களின் பாணியில் துவக்கினார். 1920-ல் அலிகர் முஸ்லீம் பல்கலை கழகமாக அவரது கனவு மெய்ப்பட்டது.  15 மாணவர்களுடன் துவங்கிய கல்லூரி, இன்று ஓர் ஆண்டில் 40,000 மாணவர்கள் பட்டம் பெறும் பெரும் நிறுவனமாக பிரம்மாண்டமாக  விசுவரூபம் எடுத்து நிற்கிறது. இதில் பயின்ற மாணவர்கள்  உலகளவில் பரவியுள்ளனர். வெளி நாட்டு மாணவர்களும் இங்கு வந்து பயில்கின்றனர்!

இவ்விரு கால கட்டங்களில் நிகழ்ந்துள்ள மாறுபட்ட சிந்தனைகளால், நாம் பெறுவதும் இழப்பதும் என்ன என்று சிந்திக்க வேண்டும்.

டெல்லி ஐஐடி, மும்பை ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி, டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை, காரக்பூர் ஐஐடிஉள்ளிட்ட இந்தியாவின் உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட 20 கல்வி நிறுவனங் களில் படித்தவர்களை வெளி நாட்டில் உள்ள புகழ் பெற்ற தொழில் நிறுவனங்கள் விரும்பி வரவேற்று வேலை தருகின்றன!

இந்திய  உயர் கல்வி நிலையங்களில் 47,427 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்று வருவதாக மனித வள மேம்பாட்டு அமைச்சரகத்தின் உயர் கல்வி பற்றிய அகில இந்திய ஆய்வறிக்கை 2018-19 கூறுகிறது. எனில், வெளி நாட்டு மாணவர்களையே ஈர்க்கத்தக்க அளவில் இந்தியக் கல்வி உள்ளது என்று தான் அர்த்தமாகிறது.

இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள்!

இந்தச் சூழலில் அயலக பல்கலைக்கழகங்கள் இங்கே வருவதற்கான ஆயத்தங்கள் பலவற்றை மத்திய பாஜக அரசு கல்வித் துறையில் செய்து வருகிறது. மதிப்பெண்கள் கொடுத்து வந்த நாம் தற்போது கிரெடிட் கொடுக்க துவங்கி ஆண்டுகள் பலவாகிவிட்டது.  அதாவது 100 மதிப்பெண்களுக்கு என்று கணித்த நாம் தற்போது ஏ, பி,சி என்று கொடுக்கிறோம். அது தான் வெளி நாடுகளின் முறை. இதில் மாணவ சமூகத்திற்கு சில நன்மைகளும் உள்ளதை மறுக்க இயலாது. இரண்டாவதாக உலக நாடுகளில் பரவலாக பட்டப்படிப்பு நான்காண்டுகளாக உள்ளது. புதிய கல்விக் கொள்கை வழியே நம் நாட்டிலும்  நான்கு ஆண்டுகளாக மாற்றம் அடைந்துள்ளது.

இந்தியாவிலிருந்து அதிகமான மாணவர்கள் வெளிநாட்டிற்கு படிக்கச் செல்கிறார்கள். இதனால் நம் நாட்டின் பெரும் பணம் வெளிநாட்டில் இழக்கிறோம். இதைக் கட்டுப்படுத்தும் நல்ல நோக்கத்தில் அரசு இந்த முடிவை எடுப்பதற்கான பலகாரணங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. உண்மை தான். உக்கிரைன் போரின் போதும் கூட உணர்ந்த உண்மையே. அதே சமயம் உக்ரைனில் மருத்துவக் கல்வி கட்டணம் மிகக் குறைவாக இருந்ததும் கவனிக்கத்தக்கது! அப்படி மருத்துவம் கற்று வருபவர்கள் இங்கு சுலபத்தில் ‘பிராக்டிஸ்’ செய்ய முடியாத அவலங்களும் உள்ளன!

இங்கே,வெளிநாடுகளுக்கு செல்பவர் யார். என்ன படிக்கச் செல்கிறார்கள். அவர்கள் நோக்கம் என்ன? பெற்றோரின் எதிபார்ப்பு என்ன. ..? இவற்றையெல்லாம் இங்கு வரவிருக்கும் அயலக கல்வி நிலையங்கள் ஈடுசெய்யுமா..?  என்று ஆராய்வது மிக அவசியம். ஒவ்வொன்றாக விடை காண்போம்.

பொறியியல், மருத்துவம் , அறிவியல் சார் பலதுறைகளுக்கு பெரும்பாலான மாணவர்கள் ஐரோப்பிய ஆஸ்திரேலிய நாடுகளுக்கு உயர்கல்விக்காக பரவலாக செல்கின்றனர். இப்படி செல்பவர்களிலும் இரு வகை உண்டு. அங்கே பகுதி நேர வேலை வாய்ப்பு மாணவர்களுக்கு உண்டு. அதில் கணிசமான வருமானம் ஈட்டி, அதில் தனது படிப்பு , வாழ்வாதாரம் ஆகிய செலவுகளை செய்து கொள்கின்றனர். அதாவது, படிக்க மட்டுமின்றி, வெளிநாடு வாழ் சூழலை விரும்பியும், சம்பாதிக்கவும் செல்கின்றனர்.

தொழில் நுட்பத்தில் உலகில் முதலிடம் வகிக்கும் ஜெர்மனியின் அரசு தொழில் நுட்ப பல்கலைக் கழகங்கள் ஒன்பது  உள்ளன. அவற்றில் சிலவற்றில் மட்டுமே ஆங்கில வழி கற்பித்தல் உண்டு. ஆனால், கல்விக் கட்டணம் இல்லை. இந்தியாவின் பட்டப் படிப்பை அடிப்படையாகக் கொண்டே நமது மாணவர்கள் முதுகலையில் இடம் பிடிக்கின்றனர்.

இந்த வெளிநாடுகளில் அங்கு படித்த மாணவர்களுக்கே பணியில் முதலிடம் தருவதை அரசின் கொள்கையாக உள்ளது. அதனால், அங்கே பணி செய்து அங்கேயே வாழும் மனநிலையில் தான் பெரும்பான்மையானவர்கள் செல்கின்றனர். வாழ்ந்தும் வருகின்றனர்.  இந்த எதிர்பார்ப்பு உள்ளவர்கள் இந்தியாவிற்கு வரும் கல்வி நிலையங்கள் வழியே படிக்க விரும்புவார்களா? இங்கே கடைவிரிக்கும் கல்வி நிலையங்கள், அவர்கள் நாட்டில் பணியில் சேர முக்கியத்துவம் தருவார்கள் என்று எண்ண வாய்ப்பில்லை.

அடுத்து இங்கே துவங்க இருக்கும் கல்வி நிலையங்களின் தரம் குறித்து பேசுவோம். அரசு நிறுவனங்கள் வரப் போவது இல்லை. தனியார் நிறுவனங்களே வரும்.  பல்கலைக்கழக மானியக் குழு அறிக்கைப்படி முதல் 500 தரத்தில் இருக்கும் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. ஆக, முதல் தர நிறுவனங்கள் இங்கு வர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது!

கடந்த ஒன்பது ஆண்டுகளாக கொள்கை மாற்றம், செயல் மாற்றம் என இந்த அரசு பச்சோந்திகே உரித்தான நிறமாற்றம் மேற்கொள்கிறது என்பது நமக்கும் பழகிப் போன தகவல் தான். இந்த அனுபவம் தான் இன்னும் என்னென்ன மாறுமோ என நம்மை எதிர் நோக்க வைக்கிறது. அதனால் தரம் நிறைந்த கல்வி நிலையங்களின் வருகை என்பது பெரிய கேள்விக் குறி தான்.

அடுத்த கேள்வி, இந்த நிறுவனங்கள் எந்த துறைகளைச் சார்ந்தது…? நமக்குத் தேவையான மருத்துவம் சொல்லித் தருமா? அதில் நமது ’ஆயுஷ்’ பாடத் திட்டங்கள் செயல்படுத்தப்படுமா? அப்படியே வந்தாலும் நமது நீட் தேர்வை ஏற்குமா..?

மொழி குறித்த கேள்வி முக்கியமானது. ஏற்கனவே, கிராமத்து மாணவர்கள் நகர மாணவர்களுடன் முட்டி மோதி முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.  அது ஹிந்தி என்றாலும் சரி, தமிழ் என்றாலும் சரி. நிலைப்பாடு ஒன்று தான். இவர்களுக்கு அன்னிய நிறுவனங்கள் எப்படி பயன்படும்?

அன்னிய நாட்டினர் அல்லது இந்திய ஆசிரியர்களை நியமிக்கும் உரிமை நிறுவனங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த ஊதியத்திற்கு இங்கு கல்வியாளர்கள் கிடைப்பார்கள் என்பதற்காகவே அவர்கள் இங்கு கடைவிரிக்க வருகிறார்கள் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. நமது ஆசிரியர்களை குறைந்த ஊதியதில் நிச்சயம் நியமிப்பார்கள். அயல் நாட்டினர் சொற்ப ஊதியத்திற்காக இந்தியாவில் குடியேறமாட்டார்கள்.

இவை எல்லாம் நமக்குச் சொல்வது என்னவெனில், பெரும்பான்மையான சாதாரண குடிமக்களுக்கு இது பயன்படாது. வெளிநாட்டில் வேலை தேடும் நடுத்தர குடிமக்களுக்கும் பயன்படப் போவதில்லை. உயர்தட்டு செல்வந்தர்களின் வாரிசுகளுக்கு வெளிநாட்டு பட்டம் பெற உதவும்.

நமது நாட்டிலேயே உயர் கல்வி கட்டமைப்பு சிறப்பாகத் தான் உள்ளது. வெளி நாட்டு கல்வியை விரும்புவர்கள் அங்கு சென்று கற்கவே விரும்புவார்கள்! அதை தடுக்க முடியாது. மாறாக இங்கே வெளி நாட்டு கல்வி நிறுவனங்களின் வருகை கல்வி குறித்த ஏற்றத் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கவும், இந்த மண்ணுக்கான கல்வியும், கலாச்சாரமும் இளைய தலைமுறையினரிடம் இருந்து அன்னியப்படவும் துணை போகலாம்!

கட்டுரையாளர்; டில்லி ராணி

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time