முக்கிய நூல்கள் மூன்றின் விமர்சனம்!

அமரந்த்தா, காயத்ரி மஹதி, பீட்டர் துரைராஜ் 

மறக்கப்பட்ட மக்கள் திரைப்படக் கலைஞர் நிமாய் கோஷ்” 

எதார்த்த திரைப்படத்தின் முன்னோடியும், திரைத்துறை  தொழிற்சங்கத்தை தோற்றுவித்தவருமான நிமாய் கோஷ் இந்திய திரைப்பட வரலாற்றில் தனி இடம் பெற்ற ஓர் அபூர்வ கலைஞர். அவரைப் பற்றிய விவரங்களை நன்கறியும் வாய்ப்பு தற்போது வெளிவந்திருக்கும் “நிமாய் கோஷ் : புதுநெறி காட்டிய திரைக் கலைஞர்” என்ற நூல் மூலம் கிடைத்தது. திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அனைவருக்கும் வங்காள திரைப்பட மேதை சத்யஜித் ராய் பற்றிய அறிமுகம் கிடைத்து விடுகிறது. ஆனால், அவருக்கு  முன்னோடியாகவும், நண்பராகவும் இருந்த நிமாய் கோஷ் பலருக்கும் தெரிவதில்லை. அந்தக் குறையை நீக்க வங்காள எழுத்தாளர் சுனிபா பாசு ஆங்கிலத்தில் எழுதிய நூலை எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர்  அம்ஷன் குமார் சரளமான தமிழில் மொழியாக்கம் செய்து, இந்த திரை மேதையை நாம் அறியத் தந்துள்ளார். குறிப்பாக, தமிழில் வெளிவந்த ஆகச் சிறந்த யதார்த்த சினிமாக்களில்  நிமாய் கோஷ் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ளதோடு, திரைப்பட தொழிலாளர் சங்கத்தை நிறுவி, அதன் துணைத் தலைவராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

1948 இல் வங்கப் பிரிவினையின் துயரங்களை, தான் கண்ணால் கண்டதை, உள்ளதை உள்ளவாறு மிகையின்றி யதார்த்தமாக வெளிப்படுத்துகிற “சின்னமூல்” என்ற படத்தை அவர் தயாரித்தார். அதில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட எளிய மக்கள் முதல், வங்காள இயக்குனர் ரித்விக் கட்டக் வரை பலரும் நடித்திருந்தனர். மிகக் குறைந்த செலவில் அவர் தயாரித்து அளித்த இந்தப் படம் ரஷ்ய திரைத் துறையின் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவின் முதல் யதார்த்த படம் “சின்னமூல்” தான் என்று கூறி, அவரை ரஷ்ய திரைத்துறை மேதையான புடோவ்கின் தனது நாட்டிற்கு அழைத்து கௌரவப்படுத்தி இருக்கிறார். இதனாலேயே நிமாய் கோஷ் கல்கத்தா திரை உலகில் ஒரு கம்யூனிஸ்ட் ஆக பார்க்கப்பட்டு, அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிதாயிற்று.

ரஷ்யாவிற்கு நிமாய் கோஷுடன் சென்ற கலைஞர்கள் குழுவில்  இருந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நிமாய் கோஷின் திறமையைப் புரிந்து கொண்டு, சென்னையில் வந்து தொழில் புரியுமாற கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஏறத்தாழ 40 ஆண்டுகள் சென்னை திரைத் துறையில் நிமாய் கோஷ் கேமராமேனாக, திரைப்பட ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, ஆவணப்பட இயக்குனராக, விளம்பரப்பட இயக்குனராக, திரைத்துறை தொழிலாளர் சங்க துணைத் தலைவராக என பலவாறாகப் பணியாற்றியுள்ளார்.

அவரது இயக்கத்தில் தமிழில் வெளிவந்த படங்கள் சூறாவளி, நாலு வேலி நிலம், பாதை தெரியுது பார் ஆகியவை. அவர் ஒளிப்பதிவு செய்த படங்கள் பொன் வயல், ரத்த பாசம், நீர்க்குமிழி, உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான், அவன் அமரன் ஆகியவை. இதில் “பாதை தெரியுது பார்” படத்தில் நியாயம் கோஷ் கேமரா, எம்.பி.சீனிவாசன் இசை, கே.சி.எஸ். அருணாசலம், ஜெயகாந்தன் ஆகியோர் இணைந்து உருவாக்கியது. 1960 இல் தான் வந்துள்ளது. அதன் பிரதி இல்லவே இல்லை என்கிறார்கள்.

ஒளிப்பதிவிலும், இயக்கத்திலும் அவரது மேதமையையும், கடும் உழைப்பையும் கண்டு பட முதலாளிகள்  வியந்திருக்கிறார்கள். ஆனால், அவர் ஒரு இடதுசாரியாக – தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டவராக – அதற்காக கடும் உழைப்பை செலுத்தியதால், பட முதலாளிகள் அவருக்கு புகழோ, பணமோ கிடைக்க விடாமல் பார்த்துக் கொண்டார்கள். பலமுறை அவமதிப்புக்கும் ஆளாகியிருக்கிறார். அதைப் பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொண்டதுமில்லை. இறுதி வரை தன்னை ஒரு தொழிலாளியாகவே கருதி அவர் கடுமையாக உழைத்து அருமையான படங்களை உருவாக்கினார். ஒருபோதும் பெருந்தொகையை அவர் சம்பளமாக பெற்றதில்லை. சினிமாவில் பணியாற்றிய கடைநிலை ஊழியருக்கும் பென்ஷன் கிடைக்க வேண்டும் என்று போராடிய நிமாய் கோஷ், தனது முதுமைக் காலத்திற்காக எதையும் சேர்த்து வைக்கவில்லை. அவர் இறுதி வரை ஒரு தொழிலாளியாகவே நிறைவுடன் வாழ்ந்தார். அவருக்கு பெரிய படக் கம்பெனிகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காமல் பெரு முதலாளிகள் பார்த்துக் கொண்டார்கள்.

சென்னையில் உள்ள சோவியத் கலாச்சார மையம் புடோவ்கின் ஃபிலிம் சங்கத்தை 1988 ஜனவரி 29 அன்று தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் புடோவ்கின் பற்றி பேசுவதற்காக மேடையேறிய நிமாய் கோஷ், பேச்சின் இடையே திடீரென மயங்கிச் சரிந்தார்.  அருகில் இருந்த அவரது நண்பர் எம்.பி. சீனிவாசன், அவரது தலையைத் தன் மடி மீது சாய்த்துக் கொண்டார். நிமாய் கோஷ் விரும்பியபடியே அவர் “பூட்ஸ்களை அணிந்தவாறே” உயிர் துறந்தார்.  அவர் இல்லாமல்  அன்றைக்கு மாலையில் புடோவ்கின் பிலிம் க்ளப் சென்னை சோவியத் கலாச்சார மையத்தில் துவக்கப்பட்டது.

அவருக்காக அவரைச் சுற்றிலும் வாழ்ந்த ஏழை எளிய மக்கள் கண்ணீர் சிந்தினார்கள். நடிகர்கள் முதல் ஒளிப்பதிவாளர்கள், உதவி இயக்குனர்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் ஆசிரியராக இருந்து கலை நுட்பங்களை பொறுமையுடன் கற்றுக் கொடுத்தவர் நிமாய் கோஷ்.  “நிமாய் தா” என்று அன்புடன் அவரை அழைத்த அவர்கள் தான் அவரது இழப்பில் துயருற்றார்கள்.  சினிமாத் துறை அவரது இழப்பைப் பெரிதாகக் கருதவில்லை. ஆனால் தொழிற்சங்கங்களும் சினிமா சங்கங்களும் அவரது இழப்பை பெரிதும் உணர்ந்தன.

திறமை வாய்ந்த இயக்குனர், மேதமை வாய்ந்த ஒளிப்பதிவாளர், நிமாய் கோஷ் அவர்களின் போராட்டமான வாழ்வை, தமிழர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த அரிய நூலை மொழிபெயர்த்த  அம்ஷன் குமார், நூலை வெளியிட்ட போதி வனம்  பதிப்பகத்தின்  கருணா பிரசாத்,  இருவருக்கும்  வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

நூல் விமர்சனம்; அமரந்த்தா

நிமாய் கோஷ்  புது நெறி காட்டிய திரைக் கலைஞர்

ஆசிரியர் : சுனிபா பாசு.

தமிழில் : அம்ஷன் குமார்

வெளியீடு: போதிவனம்

விலை-190

12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை,

இராயப்பேட்டை, சென்னை 600 014.

பேச: 9841450437.

———————————    ———————————-   —————————  —————–

குறவர்களின் வாழ்வியலை வலியோடு சொல்கிறது!

இன்றைய  மக்களிடம், ‘அரசியல் பழகு’ என்று கூவி கூவி கூறிக் கொண்டு இருக்கும் போது, ஒரு சமூக மக்களிடம், அவர்களின் ’வாழ்வியலில் சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்காதீங்க’ என்று பேசிய புத்தகம் தான் எழுத்தாளர் பாண்டிய கண்ணன் எழுதிய சலவான் நாவல்.

நகர்ப்புறத்தை சுத்தம் செய்யும் தொழிலாளர்களை தினம், தினம் பார்த்து கடந்து செல்வோம். அதற்கு மேல் அவர்களின் வாழ்வியலை நாம் யோசித்துக் கூட பார்த்து இருக்க மாட்டோம். தற்போது ‘விட்னஸ்’ மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படங்கள் இந்தச் சமூக மக்களின் வாழ்வியலை பற்றி பேசி இருந்தாலும், அவை எல்லாமே மேலோட்டமாக இருக்கும் நிகழ்வு தான் என்பது இந்த புத்தகம் படித்து முடிக்கும் போது புரிகிறது. ரெண்டு மணி நேரத்தில் படத்தில் என்ன சொல்ல முடியுமோ, அதை அந்தந்த இயக்குனர்கள் செய்து இருக்கிறார்கள்.

ஆனால், நாவலோ குறவர் சமூக மக்களின் ஒட்டு மொத்த வாழ்வியலை பேசுகிறது.

ஒரு திருமணம் என்பது ஒரு கள்ளு குடிக்கும் வைபவம் மாதிரி எளிமையாக நடக்கிறது. திருமணத்திற்கு அழைப்பதே கள்ளு குடிக்க வாங்க என்று தான் அழைக்கிறார்கள். யாரும் யாரிடமும் கொள்ளை அடிப்பதில்லை. அதே போல் மரணம் நிகழ்ந்து விட்டாலோ, எல்லாரும் சேர்ந்து கைக்காசு போட்டு செலவு செய்து அந்தச் சடங்கை செய்து விடுகிறார்கள். காசு என்பதெல்லாம் சுத்தம் செய்யும் வீட்டில் இருந்து கிடைத்தால் மட்டும் தான் அவர்களுக்கான பணப் புழக்கம் உண்டு. ஆனால் நம் சமூகமோ கஞ்சியும், நேத்து வச்ச குழம்பும் கொடுத்து பசியை பற்றி மட்டுமே யோசிக்க வைக்கிறார்கள். வேறு எதுவும் அவர்களால் சிந்திக்க முடியாது. அந்த மாதிரியான ஒரு வாழ்வியலை தான் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது சமூகம்.

வலியில்லாத ஆபரேசன் செய்யப்படும் என்று நம் மருத்துவ உலகில் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் வாங்கும் அடிகளுக்கு, இவர்களைத் துரத்தும் கும்பல்களுக்கு இடையில் சிக்கி உடலில் உள்ள அத்தனை ரத்தமும் வெளியாகி, உடம்பில் தழும்பு இல்லாமல், காயம் இல்லாமல் வாழும் மனிதர்கள் குறைவு என்றே சொல்கிறார். அப்ப வலியில்லாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கையை நாம் ஒரு சிலருக்கு மட்டும் தான் சொல்கிறோம்.

முதல் நாள் வடித்த சாதத்தை சாப்பிடுவதே கவுரவக் குறைச்சல் என்ற சூழல் வர ஆரம்பித்து விட்டது. சுடச்சுட சாப்பிட்டே பழக்கம் என்று சொல்லும் நபர்களைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் நாவலில் ஹீரோவின் அம்மா சொல்லும் இடம் மூன்று நாள் முன்னாடி வடித்த கஞ்சியைக் கரைத்துக் கொடுத்துவிட்டு, அவரும் குடிப்பார். இப்படி கஞ்சியும், மோரும், காபியும், வடையும் முதல் நாள் வைத்த குழம்புமாகத் தான் இந்த நாவல் முழுக்க சாப்பாட்டின் நிலையை விவரிக்கிறார்.

பெண்களின் பாலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு  குரல் கொடுக்கும் அமைப்புகளை பார்க்கிறோம். அவர்களோடு பேசுகிறோம். விவாதம் செய்கிறோம். ஆனால், நாவலில் இங்கு வாழும் பெண்களின் நிலையோ வன்புணர்வு என்பது அடிக்கடி நடக்கும் விபத்து போல் பார்க்கிறார்கள். அடுத்த நாள் குளித்து, வேலைக்கு கிளம்புகிறார்கள். அப்ப அவர்களின் உடம்பின் வலியோ, வன்புணர்வுக்கான சிகிச்சையோ, வன்புணர்வு செய்யப்பட்டு விட்டது என்று புகார் கொடுக்கும் அமைப்புகள் பற்றியோ எதுவும் பேசவில்லை நாவல். பேசாமல் போவதற்கு நாவலில் எழுத்தாளர் சொல்லி விட்டார். அது ஒரு விபத்து காயத்திற்கு மருந்து போட்டு போவது போல் பெண்கள் கடந்து செல்லும் மனநிலையில் தான் இருக்கிறார்கள் என்கிறார்.

இதை எல்லாம் படிக்கும் போது மொழிப் பெயர்ப்பாளர் கார்குழலி மென்மையான வன்முறையாளர்கள் என்று தொடர் எழுதி இருக்கிறார். இந்நாவல் சொல்லுவது இங்கு உள்ள ஒட்டு மொத்த சமூகமே வன்முறையாளர்கள் தான். அதில், அனைவருக்கும் பங்குண்டு என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

மலக்குக்குழியில் இருந்து கழிவறை வரை இன்னும் எந்த ஒரு கருவியும் கொடுக்காமல், மனிதர்களை வைத்தே தான் அனைத்தும் செய்ய வைக்கிறார்கள். ஆனால், அவர்களின் சமூக மக்களோ மலை முகட்டில் வசித்து தேன் எடுத்து வந்தவர்கள். அத்தனை இனிப்பான கைகளைத் தான் வெள்ளைக்காரர்களும், நம் அரசும், சமூகமும் சேர்ந்து புற்றுஈசல் போல் அவர்களை குதறி எடுக்கிறோம். அதுவும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம், டிஜிட்டல் உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பெருமை பேசும் சமூகத்தில் தான் இந்நாவல் வெளிவந்து நம்மை கூனிக் குறுக வைக்கிறது.

நான் முதலில் சொன்ன வார்த்தை தான், இந்த புத்தகம் படித்து முன்னேறு என்று எல்லாம் பேசுவதை விட, முதலில் தனி மனித சுய அடையாளம் எதுவாக இருந்தாலும், மனிதனுக்கான அறத்தோடு தன்னைத்தானே பார்த்து பழகக் கற்றுக் கொள் என்கிறார். பிச்சைக்காரன் என்ற அடையாளத்தில் கூட ஒரு தன்மானம் இருக்கிறது.  நகர்ப்புறத் தொழிலாளர்கள் நாவலில் மக்கள் அவர்களுக்குள் ஒரு பிரிவினை உருவாக்கும் போது, மற்றவர்களும் இறங்கிப் போகும் சூழல் வந்து விடுகிறது. அதனால் கூட  இருக்கும் நபர்களுக்காக தன்மானம் என்பதை யோசிக்க கூட முடியவில்லை என்றே நாவல் பேசுகிறது.

பத்து வருடத்திற்கு முன் எழுதிய நாவல் தற்போது பல நபர்களால் பேசப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருகிறது. பல்கலைக்கழக மாணவர்களும் தங்களுடைய ஆய்வுக்காக இந்நாவலை பயன்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இந்நாவல் பிரஞ்சு மற்றும் ஆங்கில மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்படுகிறது.

நகர்ப்புறம் வாழ்வியலை பேசும் சலவான் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான புத்தகம். அதற்காகவே எழுத்தாளர்  பாண்டிய கண்ணனுக்கு வாழ்த்துக்கள்

நூல் விமர்சனம்; காயத்ரி மஹதி

புத்தகம் – சலவான்

எழுத்தாளர் –  பாண்டிய கண்ணன்

பதிப்பகம் – தடாகம்

விலை – 280

பக்கங்கள் – 262

சமகாலத்தில் இருந்து வரலாற்றைப் பார்க்கும் ராஜபுதனத்து நாவல்!

கிரண் நகர்க்கர் என்ற மராத்தி எழுத்தாளர் எழுதிய Cuckold ,  சாகித்திய அகாதமி விருதைப் பெற்ற ஆங்கில நாவலாகும்.  இதனை தமிழில்,  ‘கனவில் தொலைந்தவன்’ என்று அக்களூர் இரவி மொழி பெயர்த்துள்ளார்.  இராஜபுதனத்து மேவார் அரசை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்த நாவலில்,  பாபர் –  இப்ராகிம் லோடி பங்குபெற்ற பானிபட்டு யுத்த காலத்து வரலாறு வருகிறது.

வரலாற்று நாவல்களில் போர், அந்தப்புரம், கோட்டை, அரசாட்சி, ஒற்றறிதல்  போன்றவை வருவது இயல்புதான். ஆனால் கிரண் நகர்க்கர் (Kiran Nagarkar)  படைத்திருக்கும் இந்தப் படைப்பு, புதிய நோக்கில் வரலாற்றைப் பார்க்கிறது. ‘கதை சொல்பவர்கள் பொய்யர்கள். நமக்கு இது நன்றாகத் தெரியும்’ என்று சொல்லி, இந்த நூலை முடிக்கும் கிரண் நகர்க்கர் அக்கால வாழ்வியலை, மாறுபட்ட கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்கிறார். அதனாலேயே இந்த வரலாற்று நாவல், சமகால நாவலாகவும் மாறிவிடுகிறது.

மேவார் அரசன் ராணா பிரதாபின் மூத்த மகன் மகராஜ்குமார் . அரசுரிமைக்கு தகுதி உள்ள இளவரசன். இவன் மூலமாகத்தான் கதை நமக்குச் சொல்லப்படுகிறது. இவன்  வித்தியாசமானவன். ராஜபுத்திர கதைகளில் வழக்கமாகச் சொல்லப்படும் ‘வெற்றி அல்லது வீரமரணம்’  போன்ற  வசனங்களில் இவனுக்கு நம்பிக்கை இல்லை. போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினால் உயிரிழப்புகள் குறையும் என்றால், அப்படியே செய்யலாம் என்கிறான். தனது  படைகளில் இசுலாமியர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறான். பீரங்கிகளை போர்த்துக்கீசரிடமிருந்து வாங்க  நினைக்கிறான். புதிய தொழில்நுட்பத்தை, பயிற்சிகளை  தனது படைக்கு அறிமுகப்படுத்த நினைக்கிறான். மறைந்திருந்து தாக்குதல், இரவுநேரத்தில் தாக்குதல், எதிரியைக் குழப்புதல் என பல மரபுசாரா முறைகளை மீறி,  ஓரிரு வெற்றிகளையும் பெறுகிறான். போரில் வெற்றி பெறும் வல்லமை இருந்தும், எப்படி போரைத் தவிர்க்க  பாண்டவர்கள், துரியோதனனிடம்  கீழிறங்கி பேச்சுவார்த்தை நடத்தினார்களோ அவ்வாறே  போரைத்தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்பது இவனது மனப்போக்கு. இறுதி கட்டமாகத்தான் போரிட வேண்டும் என்கிறான். இது ராஜபுத்திரர்கள் மத்தியில் நிலவிய பொதுப்புத்திக்கு  மாறுபட்ட சிந்தனையாகும். கழிவுநீரை அகற்ற திட்டமிடுகிறான்; போர் நடந்தால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையால், நகரின் குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணி தடைபடும் என்று கவலை கொள்கிறான். இதனாலேயே மற்றவர்கள் மத்தியில் இகழ்ச்சிக்கும் ஆளாகிறான். ஒரு இரங்கத்தக்க பாத்திரமாக இவரை அற்புதமாக வடித்திருக்கிறார் கிரண் நகர்க்கர். இவனுடைய கனவுகள் நிறைவேறுமா !

இவனது மனைவி  கிருஷ்ண பக்தை. கிருஷ்ணனை தனது காதலனாக வரித்துக்கொள்கிறாள். அவனை நினைத்துப் பாடுகிறாள். அரச மரபுகளை மீறி பொதுமக்கள் மத்தியில் நடனமாடுகிறாள். தனது கணவனுடன் உடலுறவு கொள்ள மறுக்கிறாள். கிருஷ்ணனோடு கூடுவதாக எண்ணிக்கொண்டு  படுக்கையறையில் விம்முகிறாள். இதைப் பார்த்து ஏதும் செய்ய முடியாத கையறுநிலையில் அவன் கணவன் இருக்கிறான்.  அதனால்தான் cuckold (நடத்தை கெட்டவளின் கணவன்) என்ற பெயரை மூல ஆசிரியர் சூட்டியுள்ளார். இது மீராபாயின் பாத்திரம் என்று பின்னுரையில் ஆசிரியர் சொல்கிறார். அதாவது அரச குடும்பத்தைச் சார்ந்தவளான மீராபாய் என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டிருப்பாள் என்பதை அவளது கணவன் பார்வையில் இந்த நாவல் பார்க்கிறது.

குஜராத், தில்லி, மேவார் என பரந்துபட்ட களத்தில், முஸ்லிம் நாட்டு இளவரசன் தஞ்சம்  உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் வருகின்றன. காபூல் நாட்டில் இருந்து வரும் மொகலாயலான பாபர், ஒரு சிறிய படையை வைத்துக்கொண்டு தில்லி சுல்தானை வெற்றி கொண்டது எப்படி ! அந்தக்  காரணங்கள், ஒருவேளை  இன்றைக்கும் பொருத்தப்பாடு உள்ளவையாக இருக்கலாம். பாபர் நாமா என்ற பெயரில் இப்போது அறியப்படும் பாபரது நாட்குறிப்புகள், ஒற்றர்படை தலைவனா மங்கள் சிம்மா மூலம்  இளவரசனுக்கு கிடைக்கிறது. அந்த தகவல் பொய்யாக இருந்தால் ! ஒற்றுச் செய்திகளை  வியாக்கினம் செய்யும் விதம், அதற்கான காப்பு நடவடிக்கைகள்  சுவைபட சொல்லப்பட்டுள்ளன. படை வரும் இடங்களில் இருக்கும் மலைவாழ் மக்களுக்கு எந்தத் தொந்தரவும் தரக் கூடாது என பாபர் தனது படைகளுக்கு உத்தரவிடுகிறான். அதே சமயம் தில்லியில் இருந்த லோடி, தனக்கு விசுவாசமாக இல்லாதவர்கள் என நினைத்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்கிறான். இந்நிலையில் மக்கள்  யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் !

இளவரசனுடைய தம்பி விக்கிரமாதித்தன் எந்தவிதமான அறநெறிகளும் இல்லாதவன். தனது தாய் கர்மாவதியின் ஒத்துழைப்போடு அரியணையை கைப்பற்ற துடிக்கிறான். அரசனான ராணா, தனது மகன் பக்கம் நிற்பதா அல்லது இரண்டாவது மனைவி பேச்சைக் கேட்டு விக்கிரமாதித்தனுக்கு  ஆதரவாக இருப்பதா என அல்லாடுகிறார்.

அந்தப்புரத்தை காவல் காக்கும் ஹிஜிராக்களுக்கு (மூன்றாம் பாலினம்) ஆண்மைத் தன்மை வந்துவிட்டால் ! சிறுவயதிலேயே விதைப்பையை நசுக்கி பணியமர்த்துகிறார்கள். ராணி கர்மாவதியின் முதன்மை ஹிஜிராவான பிருஹன்னடா  வாயிலாக அவர்கள் வாழ்வியல் நமக்குச் சொல்லப்படுகிறது. இவன் தன்னை பீஷ்மரோடு  ஒப்பிட்டுக்கொள்கிறான். அவன் மீது நடக்கும் விசாரணையும், அதன் முடிவும் அற்புதம்.

வயதான ஏகாலி ஒருவன் தனது மனைவி சுனேரியா- வைச் சந்தேகப்பட்டு தொடுக்கும் குற்றச்சாட்டை விசாரிப்பதன் மூலம்,  நீதி பரிபாலமுறை விளக்கப்படுகிறது.  ஜைன மத வியாபாரியிடம் (இவர்தான் நிதி அமைச்சர்) அரசர் கடன் பெறுகிறார். அவருடைய பேத்தி லீலாவதி இளவரசனை வரும்புகிறாள் – ஒருவிதத்தில் இவனும் ; முடிவு என்னவாகும் !  இளவரசனுக்கு முலைப்பால் கொடுத்து, அவனுக்கு ‘சகலத்தையும்’ கற்றுக்கொடுத்த கௌசல்யா ஒரு நல்ல பாத்திரம். அவள் மூலமாக அரண்மனை இரகசியம் சொல்லப்படுகிறது.

கிரண் நகர்க்கர் சித்தரிக்கும் அரசாட்சி வாசகர் மனதில் மனதில் பதிகிறது. ‘மேடை நாடக நடிகன் இரகசியம் பேசுவது போல’  என்ற, கதைப்போக்கில் வரும் சொல்லாடல்கள்   சுவாரசியமாக உள்ளன.1997 ல் வெளிவந்த இந்த நாவலை சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ளது. அக்களூர் இரவி, திறம்பட மொழிபெயர்த்துள்ளார். பல  வார்த்தைகளை நேர்த்தியாக பயன்படுத்தி உள்ளார். துணி துவைப்பவருக்கு ஏகாலி என்ற வார்தையை பயன்படுத்தியுள்ளார். கிரண் நகர்க்கரின் மற்ற படைப்புகளும் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

கனவில் தொலைந்தவன்

ஆசிரியர் ; கிரண் நகர்க்கர்

தமிழில்; அக்களூர் ரவி

சாகித்திய அகாதமி,

அண்ணாசாலை, சென்னை-18/

பக்கம் 800/ விலை ரூ.1100.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time