உலகப் பொதுமறை தந்த வள்ளுவர் நாம் வாழும் நெறியை வகுத்து தந்துள்ளார். அதில் அடக்கமுடைமை அதிகாரத்தில் தன்னைத் தானே அடக்க வல்ல – தவ வலிமை கொண்ட – சான்றோரின் சிறப்பை எடுத்து இயம்பும் அழகே தனித்துவமானது! திருவள்ளுவர் தினத்தின் சிறப்பு கட்டுரை!
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
“நிலையில் திரியாது’ என்றால், ‘ஊசலாட்டமற்ற மனம்’ என்று பொருள்; ‘தவநிலை’ என்று பொருள். தவநிலை என்பது மூன்று படிகள் கொண்டது. தவத்திற்காக அமர்ந்த கோலம்!
2) அப்படி அமர்ந்த பின்னர் மூச்சுக்காற்றைச் சீரான விசையுடன் உள்ளிழுத்து வெளியேற்றுகிற முறையொழுங்கு
3) உள்ளிழுத்த மூச்சைக் கட்டி நிறுத்துதல்; அடுத்ததாக, மூச்சை வெளியேற்றிய பின்னர் காற்றுப் பைகளை வெற்றிடமாக்கி வைத்தல்.
இந்த மூன்று படிகளிலும் ஒருவர் ஒழுகி நிற்றலை, உடலும் மனமும் அசைவை நிறுத்தி இசைமை கொள்ளுதலை – ‘நிலை’ என்று சுட்டுகிறார் வள்ளுவர்.
தவநிலையில் அமர்ந்து மூச்சைச் சீர்படுத்தும்போது மனமானது, அங்கிங்கு என்று திரியாமல் நிலைகொள்கிறது. மூச்சுக்காற்று உட்புகுந்து வெளியேறும் இயக்கத்தின்போது, உடலத்தில் உண்டாகிற சிற்றதிர்வுகளும், நுண்ணசைவுகளும் நின்று போன பின்னர்தான் அகத்தின் அசைவாட்டம் நிற்கும். . எண்ணங்கள் எழும்பாத நிலை தான் மனம் அடங்குகிற நிலை.
அடக்கம் என்ற சொல், இன்னொருவரின் முன்னால் கைகட்டி நிற்பதல்ல. தனக்குள் எண்ண அசைவை, கால ஒட்டத்தை, அகந்தையின் அலைவை நிறுத்துவதாகும். இப்படி அடங்கியவரின் தோற்றம் எப்படிப்பட்டதாக இருக்கும்? தோற்றம் என்ற சொல், விரித்துக் காட்டுவது என்று பொருள் பெறும். கண்ணால் காணுகின்ற உருவத்தைத்தான் நேரடியாகக் குறிக்கிறது. மறைபொருள் என்னவென்றால், தான் என்ற அகந்தையை அடக்கிய ஒருவர், தான் என்ற அகந்தையைக் கைவிடாத பொதுமக்களோடு புழங்குகிறார் என்பதாகும்.
அப்படித் தோற்றம் எடுக்கிற ஒருவரின் தோற்றம், மலையைக் காட்டிலும் ஓங்கியுயர்ந்ததாகும். மலையைக் காட்சிப் பொருளாக்கி, மலையோடு ஒப்பிட்டு, தன்னடக்கம் கொண்டவரின் ஓங்கிய தோற்றத்தை நம் முன்னே உயர்த்தி நிறுத்தியிருக்கிறார் வள்ளுவர். மறை பொருள் என்னவெனில், மலையைக் காட்டிலும் மாண்பு கொண்டவர்கள் என்கிறார். அதாவது, அந்த மாண்பு, தானடங்கிய மெய் விழிப்பரால் மக்களுக்கு கிட்டுகிற நற்பயன்களை கொண்டு அளவிடப்படுகிறது.
இங்கு மலை என்பது படிமம் ஆகிறது. மலை இல்லையெனில், மழை இல்லை. மழை இல்லையெனில், ஆறில்லை. ஆற்றோட்டம் இல்லையெனில், ஊரில்லை; நாடில்லை; நகரில்லை. மலையில் தான் தேன் விளைகிறது. உயிரினங்கள் தழைக்கின்றன. நீரிலும், நிலத்திலும், வானிலும் உயிரினங்கள் நடத்துகிற ஒத்திசைவு நடனத்தின் நாட்டிய அரங்கமாகிறது மலை. மலை இல்லையெனில், மனித வாழ்க்கை இல்லை. இப்படியாக எவ்வுயிர்க்கும் நலம் பயக்கிற மலையைக் காட்டிலும் உயிர்க் குலத்திற்கு நலம் பயக்கிற தூயவர் என்பதால், தானடங்கியவரை, மலையை விட ஓங்கியுயர்ந்தவர்’’ என்கிறார் வள்ளுவர்.
இந்தக் குரலில் வள்ளுவர் கடத்த நினைப்பது ஒரு கருத்தை மட்டுமல்ல; அனுபவத்தையும் ஆகும். அதாவது, தான் கண்டடைந்த மெய்யை, ஒரு செய்தியாகக் கடத்திவிடாமல், கலைக் கூறுகளைக் கையாண்டு, அழகியலுடன் கடத்துகிறார். அதற்காக அவர், கலையின் சொல்லாடலில் இயங்குகிற முரண்களை அடுத்தடுத்து அணிப்படுத்தி குறளுக்கு வடிவம் தருகிறார்.
நிலை என்ற சொல், அசைவற்ற என்று பொருள் பெறுகிறது; திரி என்ற சொல், மாற்றம், கெடுதல், அலைவுறுதல் … இப்படியாக, பல்பொருள் கொண்டிருக்கிற சொல்லாகும் . ‘இயக்கமற்ற’ எதிர் ‘இயக்கம்’ என்கிற முரண் இங்கு கையாளப்பட்டிருக்கிறது.
அடுத்து, அடங்கியான் தோற்றம் என்கிற சொற்றொடரில், அடங்கியான் என்பது அடங்குதலையும், தோற்றம் என்ற சொல் அடங்காமல் புறத்தில் எழுவதையும் சுட்டுகிறது! அடங்குதல் என்பது ஆழத்தில் உள்நோக்கிப் போய், தன்னையிழத்தல் ஆகும். தோற்றம் என்பது, வெளிநோக்கி விரிந்து தன்னைக் காட்டுவதாகும். இப்படியாக ‘உள் – வெளி’ என்கிற எதிர் நிலைகளையும், ‘தன்னடக்கம் -அகந்தை’ என்கிற எதிர் நிலைகளையும் நமக்கு அனுபவமாக்குகிறார்.
அடுத்ததாக, மலையைக் காட்டிலும் சிறப்பு பெற்றது என்கிற ஒப்பிடானது – ‘மழை பெரிதுதான் ; ஆனால், அதைவிடப் பெரிது’ என்கிற முரண்களை விளைவிக்கிறது. இப்படி வள்ளுவர் முரண்களைக் கையாளுகிற வகையைக் கண்டால், இருபதாம் நூற்றாண்டின் ரஷ்ய நாட்டுத் திரைக்கலை மேதையாகிய செர்ஜிவ் ஐஸன்ஸ்டைன் வகுத்துக் கொடுத்திருக்கிற முரணியக்க விதிகள் நினைவுக்கு வருகின்றன. மார்க்சியத்தின் இயங்கியலை நன்கு பயின்றவர் செர்ஜிவ் ஐஸன்ஸ்டைன்.
திரைப்படத்தின் ஓரொரு காட்சித் துண்டும் முரணியக்க கூறுகளை கொண்டிருக்கவேண்டும் என்கிறார். ஒரு காட்சித் துண்டும், (Shot), மறு காட்சித் துண்டும் வெட்டப்படுவதற்கோ அன்றி, ஒட்டப்படுவதற்கோ கறாரான முரணியக்க விதிகளை அவர் வகுத்துக் கொடுத்திருக்கிறார். அந்த விதிகளைத்தான் வள்ளுவர் இந்தக் குறளில் கையாண்டிருக்கிறார். வள்ளுவரின் குறளைப் படிக்கும் பொழுது செர்ஜிவ் ஐஸன்ஸ்டைனின் முரணியக்கக் கோட்பாடு நினைவுக்கு வந்து, வள்ளுவரின் கலையாற்றல் மலைக்க வைக்கிறது
Also read
வள்ளுவரின் குறள், பொருள்வயப் பார்வையை நேர்பொருளாகத் தருகிறது. அதே நேரத்தில் அருள்வயப் பார்வையை மறைபொருளாகக் கொண்டிருக்கிறது. செய்யுளின் ஆரம்ப அடிகளாகிய ‘நிலையில் திரியாது’ என்கிற சொற்றொடர், கண்டபடி திரியாமல் நிலை கொள்ளுதல் என்று நேரடிப் பொருள் தருகிறது. விளையாடுவதற்காக வீட்டுக்கு வெளியே துள்ளிக் குதித்தோடும் குழந்தையை, ‘கண்ட பக்கம் திரியாதே’ என்று எச்சரித்து அனுப்புகிறோமே, அந்தத் திரியாதே, நேர்பொருள். கெட்டுப் போதல், வடிவங்குலைதல் என்பன மறைபொருள். ‘உண்மையைத் திரிக்காதே’ என்கிறோம்; பால் திரிகிறது; நூல் கற்றைகளைக் கயிறாகத் திரிக்கிறோம். தவநிலை மேற்கொள்பவர், எண்ணங்களின் ஊசலாட்டமற்ற அமைதி நிலை திரியாது அகவிழிப்பைப் பேணுவார். இப்படியாக இரு பொருள் தரக்கூடியதாகும் ‘நிலையில் திரியாது’ என்ற சொற்றொடர்.
மறைபொருள் பொதிந்து கிடப்பதால் தான் திருக்குறளை மறைநூல் என்கிறோம். தம்மபதம், பைபிள், குர்ஆன், தேவாரம், திருவாசகம், திருவருட்பா, அறிந்ததனின்றும் விடுதலை ஆகிய நூல்களும் இப்படியாக அகவிழிப்பை உண்டு பண்ணக் கூடியவை. அதனால் தான் இவை யாவற்றையும் ‘மறை’ என்றனர் தமிழ்ச் சான்றோர்.
கட்டுரையாளர்; தங்கம்
திரைக்கதை ஆசிரியர்
இயக்குனர்
ஃ அடக்கமுடைமை ஃ
“நிலையில் அடங்கியக்
கதவு வழி அடைக்கவும்
திறக்கவும் வழிசெய்யும்”
சிறப்பு, அருமை வாழ்த்துக்கள்