சார்மீகாவின் தவறுக்காக சித்த மருத்துவத்தையே சிதைப்பதா?

மருத்துவர் விஜய் விக்கிரமன்

எல்லா துறைகளிலும் தவறாக உளறுபவர்கள் உண்டு! சார்மீகா தவறாகப் பேசுவதை விமர்சிப்பது தவறில்லை! ஆனால், ஒட்டு மொத்த சித்த மருத்துவத்தையே கேள்விக்கு உள்ளாக்கலாமா? இதோ எம்.பி.பி.எஸ் டாக்டர் தமிழிசை உளறுவதைப் போல, கதையளக்கும் அலோபதி மருத்துவர்களின் ஆயிரம் உளறல்களை பட்டியலிடவா?

தற்பொழுது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சித்த மருத்துவத்தின் மீதும், சித்த மருத்துவர்கள் மீதும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன அவற்றை தர்க்க ரீதியாக எதிர் விமர்சனம் வைப்பதற்கான அவசியம் இங்கு ஏற்பட்டுள்ளது! ஆனால், அதை பொறுமையாக கேட்பார் தான் இங்கு யாரும் இல்லை

தனி நபர்களின் தவறுகளை அவர்கள் சார்ந்த துறையின் தவறாக இங்கு  கம்பி கட்டப்படுகிறது.

சுயம் இழந்த சுயாதீன ஊடகங்கள்

You tube , பேஸ்புக்  போன்றவற்றில் செயல்படும்   சுயாதீன  ( youtube சேனல்கள்) ஊடகங்கள் எந்தவித பொறுப்பற்று.

தங்களின் வணிக நலனுக்காக, முரண்பட்ட  controversy  செய்திகளை முன்னிலைப் படுத்துகின்றன அல்லது தாங்களே அவற்றை உருவாக்குகின்றன.

அடுத்த தலைமுறைக்கான செய்தி  ஊடகமாக கருதப்படும் இந்த சுயாதீன  you tube சேனல்கள். சமூகப் பொறுப்புடன்  செயல்படுவதற்கும், தங்கள் செயலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய கடமை உள்ளது. விதிகளை உருவாக்கி, அவர்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் அமைப்புகள் எதுவும் தற்போது வரை இல்லை. அதை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

ஒருவர் ,  cell phone,editing software இருந்தால் போதும், பல்லாண்டு அனுபவம் பெற்ற செய்தி ஊடக மூத்த பத்திரிகையாளர் போல  அவர்  மாறி விடுகிறார். பெரும்பாலும்  Whats App செய்திகளை உண்மை என்று நம்பி கேலி, கிண்டல், சுய கோமாளி கூத்துகள், வசவு, வெறுப்பு , இவற்றில் ஊடாக ஒரு செய்தியை பரப்புகின்றனர்.

இந்த உதிரி ஊடகங்களுக்கு .எந்தவித பொறுப்பும், கடமையும் இல்லாமல் இவர்களின் நோக்கம் பார்வையாளர்களை அதிகரித்து பணம் சம்பாதிப்பது மட்டுமே.

இவர்கள்  viral  news க்காக  ஒருவருக்கு பணம் கொடுத்து தங்களுக்கு தேவையான கருத்தை உருவாக்குகிறார்கள். அல்லது ஒருவரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவரின் புகழ் பாடுகின்றனர். மேலும் பணம் கொடுத்து தங்களுக்கு நிகழ்ச்சிக்கு அதிக  likes  உருவாக்குகின்றனர்.

இந்த விசில் அடிச்சான்  குஞ்சுகள் தனி நபர்களையும், சமூகங்களையும் ,நிறுவனங்களையும் , பெரும் துறைகளையும் சில சமயங்களில் எந்தவித பொறுப்புமற்று “விஷ” தேனீக்களைப் போல சூழ்ந்து  கொட்டுகின்றனர்.

எந்தவித வரலாற்று பார்வையும் , மானுடவியல் புரிதலும் ,தர்க்க ரீதியான அறிவியல் பூர ஆய்வுகளையும் இல்லாமலே இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்கு இங்கு நிலவுகிறது.

இது கண்டிக்கத்தக்கது ! அபாயகரமானது.!

சார்மிகா என்ற இளம்பெண் புகழ் பெற வேண்டும் என்பதற்காக செய்யும் “கோமாளி” கூத்துக்களை விமர்சனம் செய்கிறேன் என்ற போர்வையில் உள்நோக்கத்துடன், வன்மத்துடன், திசை  மாற்றி   ஒட்டு மொத்தமாக அவர் சார்ந்த துறை மீதே சேற்றை  வீசுகின்றனர்.

ஒரு துறையின் தவறை அந்த துறை சார்ந்தவர்களே தான் சரி செய்ய வேண்டுமே ஒழிய, இன்னொரு துறையிலிருந்து விமர்சனம் என்ற பெயரில் வன்மத்தை கக்க கூடாது.

தனிநபர்  ஒழுங்கீன பிரச்சனையை  அவர்கள் சார்ந்திருக்கும் துறை சார்ந்த பிரச்சனையாக மாற்றக்கூடாது.

இரு துறை சார்ந்தவர்களும் விமர்சனத்திற்கு ,எதிர் விமர்சனம்  என்று போக்கும் போது ஒட்டு மொத்த சமூகத்தையும்  இது பெரிய பிளவு ஏற்படுத்தி பல பாதிப்புகளை  உண்டாக்க வல்லது.

”சித்த மருத்துவத்தில், ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பிற்போக்கு கருத்துக்கள் உள்ளன” என்று விமர்சனம் வைக்கும் போது, அதற்கு எதிராக  அலோபதி  துறை டாக்டர் கூறிக் கொண்டிருக்கும்,

”பெயிண்ட் அடித்தால்  நோய் தொற்று வராது”

”LED பல்பு போட்டால் 85%   bacteria கிருமிகள் சாகும், பிறந்த குழந்தை  கிருமிகளிடமிருந்து பாதுகாக்கப்படும்”

”சோப்பு போட்டு குளித்தால், கொரோனா வைரஸ்  உட்பட அனைத்து தோல் வியாதிகளும் ஓடும்”

”Horlicks  குடித்தால் மூளை வளரும்”

போன்ற உளறல்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் வளர்ச்சிக்காக, இந்திய அலோபதி மருத்துவ  சங்கம் முத்திரையுடன் விளம்பரம் செய்யப்படுவதற்கு ஒட்டு மொத்த அலோபதி  மருத்துவர்களும் பொறுப்பேற்க வேண்டி வரும்.

தவறான ரீபைண்ட் ஆயில்களின் சமூகப் பரவலுக்கு வித்திட்டது அலோபதி மருத்துவர்களே!

செக்கில் ஆட்டிய ஆரோக்கியமான எண்ணெய்களை மக்கள் பயன்படுத்தி வந்த காலத்தில், ”அவற்றை உட்கொண்டால் கொலஸ்டிரால் ஏற்படும், ரீபைண்ட் ஆயில் உட்கொள்ளுங்கள்” என்று கேடுகெட்ட ரீபைண்ட் ஆயில்களை சமூக புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்கள் அலோபதி மருத்துவர்கள்! இது குறித்த விமர்சமனமோ, குற்ற உணர்வோ இல்லாமல் அதை கடந்து போகிறோம்.

சென்னை  மூட்டு வலி சிகிச்சைக்கு சென்ற கால்பந்தாட்ட மாணவி தவறான சிகிச்சையால் கால் அழுகி பின் கால் எடுக்கப்பட்டு அதற்கான சிகிச்சையின் போது உயிரிழந்தார்,

விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைவர் முன்னிலையும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபல திரைப்பட  நடிகர் விவேக்கின் மரணம்  பற்றிய உண்மையான காரணம் என்ன.  முதலான கேள்விகளுக்கான பதில் என்னவென்றால்.

முதல் நிகழ்வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின்  கவனக்குறைவு அதற்குக் காரணம் அவருக்கு அதிக பணி ஒதுக்கப்பட்டது.

இரண்டாவது நிகழ்வுக்கு அந்த நடிகர் அவசரப்பட்டு இறந்து விட்டார்,   அல்லது அவர் தன்  உடல் நிலையை சரியாக பேணவில்லை.  அவர் செலுத்திக் கொண்ட மருந்துக்கும், இறப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று  பதில் அளிக்கப்படுகிறது.

டாக்டர் சார்மிகாவை எல்லோரும் விமர்சனம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் தெலுங்கானா , பாண்டிச்சேரி ஆளுநர் Dr. தமிழிசை சௌந்தரராஜன் MBBS அவர்கள் அந்தக் காலத்திலேயே  இணைய வசதி[ internet, Facebook YouTube ]technologyஇருந்தது. இதனை அனைவரும் நம்ப வேண்டும் . என்று கூறினார் .

ஒரு  அலோபதி மருத்துவர் எவ்வாறு இப்படி பேசலாம்? என்று யாரும் இங்கு கேள்வி எழுப்பவில்லை. அவரின் மருத்துவ கல்வித் தகுதி பற்றி யாரும்  சந்தேகிக்கவில்லை. அவரின் தவறு  ஒட்டுமொத்த அலோபதி மருத்துவத் துறையின் தவறாக விமர்சிக்கப்படவில்லை.

மருத்துவத்திற்கு எதிரான கருத்துகள் வெளியிட்ட சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் இந்திய மருத்துவ இயக்குனரகம் 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  நல்லது, வரவேற்போம். ஆனால், இதைவிட கோமாளித்தனமாகப் பேசும் அலோபதி மருத்துவரிடம் இது போல இந்திய மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பதில்லையே!

ஏனெனில் “இந்திய அலோபதி “துறை என்பது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அது ” ஆசீர்வதிக்கப்பட்ட”  துறை .

இந்தியாவைப் பொறுத்தவரை M.B.B.S என்பது “புனித” பட்டம். புனித பட்டம் பெற்றவரை யாரும்  நிந்திக்க கூடாது அப்படி செய்தால் அந்த “அறிவியல்  கடவுளையே “நிந்தித்ததற்கு சமம் .

நம் சமுதாயத்தைப் பொறுத்தவரை,ஒரு அலோபதி மருத்துவர் செய்யும்” தவறு ” அந்த “மருத்துவரின் தவறாக” மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால்

ஒரு சித்த மருத்துவர் செய்யும்” தவறு” ஒட்டுமொத்த “சித்த மருத்துவ துறையும்  ” பொறுப்பேற்க நிர்பந்திக்கப்படுகிறது.

அலோபதி M.B.B.S படித்தவர்கள் எல்லாம் “முற்போக்கும்” அல்ல .

சித்த மருத்துவம் B.S.M.S படித்தவர்கள் எல்லாம் பிற்போக்கும் அல்ல.

மூளை உள்ளோர்க்கு புரிந்தால் சரி.

கட்டுரையாளர்; விஜய் விக்கிரமன்

சித்த மருத்துவர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time