மலையாளத் திரையில் மகத்தான மக்கள் படைப்பாளியாக, கேலிச் சித்திர ஓவியராக , சமூக செயற்பாட்டாளராக சுமார் 40 ஆண்டுகள் இயங்கியவர் கே பி சசி, அண்மையில் மறைந்தார். வணிகமயமான திரையுகில் அவர் வாழ்வியல் அறங்களை துணிந்து பேசியதோடு, சமகால சமூக, அரசியலை நேர்மையாக பதிவு செய்தார்!
உண்மையான கலைஞனான அவரது கேலிச் சித்திரங்கள், திரைப்படங்கள் போன்றவை மக்களுக்கான அரசியலையே பேசின! அவரது ‘இலையும்,முள்ளும்’ படம் பெண்களுக்கு இழைக்கப்படும் உளவியல் ரீதியான வன்முறைகளைப் பேசின!
ஹிந்து ராஷ்ட்டிரம் என்கிற மதவெறித் தேசியம், இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் எந்த அளவுக்குச் சீரழித்திருக்கிறது என்பதற்கான நிறைய சான்றுகளை நாம் கண்முன் கண்டுவருகிறோம். கடந்த சில பத்தாண்டுகளில் ஹிந்துத்துவ வளர்ச்சியால், மதச் சிறுபான்மையினர் படும்பாடு, கலவரங்கள், இசுலாமியர்களுக்கு எதிரான படுகொலைகள், இவை மட்டுமின்றி, அரசமைப்புக் கொள்கைகள், உரிமைகளின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் ஆகியவை தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அவருடைய ஆவணப்படங்களில் அவர் இவற்றையே பதிவு செய்தார்!
“A Valley Refuses to Die”,
“We Who Make History”,
“Living in Fear”,
“In the Name of Medicine”
“Voices from a Disaster”,
America America,
Resisting Coastal Invasion and Development at Gunpoint.
போன்றவை சமகால சமூக மற்றும் அரசியலை தெளிவாக மக்கள் முன் வைத்தன! உத்திகரகண்டில் ஆதிவாசிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ஒரிசாவில் கிறிஸ்த்துவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நர்மதை அணை எதிர்ப்பு போராட்டம் என தான் வாழ்ந்த காலகட்டத்தின் பல முக்கிய வரலாற்று சம்பவங்களை கலை வடிவில் ஆவணப்படுத்தினார்!
ஹிந்துத்துவ மதவெறியர்களுக்கு எதிராக, இயல்பாக ஒன்றுசேரக்கூடிய அனைவரும் ஒன்றிணைந்து, சமூக அமைதி, மதச் சார்பற்ற கொள்கைகள், ஜனநாயகத்தின் நியதிகள் ஆகிவற்றைக் காக்கவேண்டும் என்பதே சசி அனைவருக்கும் அனுப்பிய குறிப்பாகும். மனித உரிமை அமைப்புகள், பண்பாட்டு அமைப்புகள், மாணவ அமைப்புகள், இளைஞர், பெண்கள் அமைப்புகள், ஆதிவாசிகள் மற்றும் தலித் அமைப்புகள், மீனவ அமைப்புகள், சிறுபான்மை மத அமைப்புகள், விவசாய அமைப்புகள், ஊடகங்கள், திரைப்பட இயக்குநர் சங்கங்கள் மற்றும் தனி நபர்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என அவர் விரும்பினார். யாரெல்லாம் பா ஜ க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என நினைக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கான கருவியாக அவரது படைப்புகள் இருந்தன!
அவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், தனது நண்பர்களிடமும், உடன் பணிபுரிந்தோரிடமும், தொடர்பில் இருந்த அனைவரிடமும் ஒரே ஓர் இலக்கை மட்டுமே அவர் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தார். அது 2024 – ஆம் ஆண்டு பா ஜ கவைத் தோற்கடிப்பது.
மறைவிற்குச் சில மாதங்கள் முன்பாக, தனது நண்பர்கள் அனைவருக்கும் இதனையே ஒரு கோரிக்கையாக அவர் முன்வைத்தார். எக்காரணம் கொண்டும் மூன்றாவது முறையாக பா ஜ க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. பா ஜ கவும், ஆர் எஸ் எஸ்ஸும் நடத்தும் மத வெறுப்பு அரசியலையும், மதத்தின் பெயரால் மனிதர்களைப் பிரிப்பதையும் தன் வாழ்நாள் முழுக்க எதிர்த்தவர் சசி. இத்தகைய மதவாத சக்திகள் அதிகாரத்திற்கு வருமாயின், இந்தியாவிற்கு அது மாபெரும் கேடு என அறிவுறுத்தினார்.
வேறு வேறு நிலைப்பாடுகளையும், பார்வைகளையும் கொண்டிருந்தாலும், இச்சமூக அமைப்புகள் பா ஜ கவைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற ஒற்றை இலக்கை இன்றியமையாததாகக் கொண்டு ஒத்திசைவுடன் போராடவேண்டும் என அவர் விரும்பினார்.
மக்களுடனான உரையாடல்களை, மாநில மொழிகளில் நிகழ்த்தவேண்டும் என்றும், அதற்காக மாநில அளவிலான அணிகளை உருவாக்கி, நாடு முழுக்க அவற்றை அனுப்பி, பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான உரையாடல்களை, அறிவார்ந்த பெரியோரின் அமைப்பே கவனமாகத் தெரிவு செய்து, வடிவமைக்க வேண்டி அவர் களம் கண்டார்!
இப்பணிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சசி, கெடுவாய்ப்பாக இன்று நம்மிடையே இல்லை. ஹிந்துத்துவ சக்திகளின் நச்சுக் கருத்துகளிடமிருந்தும், கேடு விளைவிக்கும் செயல்களிலிருந்தும், எதிர்கால இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று சசி கனவு கண்டார். நம் எல்லோருக்கும் அதுவே பெரும் கனவு. காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது தொடங்கி, இந்தியா தனது மத சகிப்புத்தன்மையின் விழுமியங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று சசியும் அவரது எண்ணற்ற நண்பர்களும் பாடுபட்டனர்.
பண்பாட்டுத் தளத்தில், ஹிந்துத்துவத்திற்கு சவால் விடுவதே இன்றியமையாத ஒன்றாக இருந்தது. ஒரு திரைப்பட இயக்குநராகவும், கேலிச்சித்திர ஓவியராகவும் இத்தளத்திலேயே மிக ஆழமாக தனது கவனத்தை அவர் குவித்திருந்தார். மதம் பற்றிய கருத்துரிமை விடுதலை, ஆதிவாசிகள் அல்லது மீனவ சமூகங்களின் மரபுகளைப் பாதுகாத்தல், இனக்குழுக்கள் அல்லது பெண்களின் கோரிக்கைகளை ஏற்றல் போன்ற பல கருத்தாக்கங்களில் சசி மிகத்தெளிவாகச் சிந்தித்தார்.
பணபலம் கொண்ட பெரிய நிறுவனமயமாக்கப்பட்ட மதத்திற்கும், எளிய மனிதர்களின் நம்பிக்கைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அவர் தெளிவாகப் புரிந்திருந்தார். ஒரு நாத்திகராக இருந்தபோதும், மதச்சிறுபான்மையினரை ஹிந்துத்துவக் கொடுங் கோன்மையிலிருந்து, பாதுகாக்க அவர் விரும்பினார்.
தென் மாநிலங்களில் இந்தித் திணிப்பைக் கடுமையாக சசி எதிர்த்தார். தமிழீழ அமைப்பிற்கு உறுதியான ஆதரவாளராக அவர் இருந்தார். 2009 – ஆம் ஆண்டு சிங்கள ராணுவம் நிகழ்த்திய தமிழர் படுகொலைகளை அவர் கடுமையாக எதிர்த்தார்.
மக்களுக்கெதிரான நடவடிக்கைகள், எளிய மனிதர்களை ஏழையாக்கும் முயற்சி, பெரு நிறுவனங்களின் கவலைதரக்கூடிய மிருக வளர்ச்சி போன்றவை குறித்து சசி ஆழ்ந்த கவலையோடு த படைப்புகளில் வெளிப்படுத்தினார். வலிமையான இடதுசாரி பின்புறத்திலிருந்து அவர் வந்திருந்தாலும், மேற்கூறிய சிக்கல்கள் குறித்து இடதுசாரிக் கட்சி கொண்டிருந்த நிலைப்பாடுகளை ஒரு மார்க்சியவாதியாக அவர் மிகுந்த துணிச்சலுடன் எதிர்த்துவந்தார். சுருங்கச் சொன்னால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பிரிவினரை, அதிகார சக்திகள் நசுக்க முனைந்த ஒவ்வொரு சூழலிலும், சசி சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் மிக்க ஒரு மனிதராகச் செயல்பட்டார்.
Also read
பொறுப்புகளைத் தோளில் சுமக்கக்கூடிய மக்கள் அணிகளை, நாடளவிலும், மாநிலங்கள் அளவிலும், உள்ளூர் அளவிலும் அமைத்து செயல்படுவதே நடைமுறை சவால் என்றே அவர் கருதினார். வெளிப்படையான, பொறுப்புக் கூறத்தக்க அமைப்பாக இது உருவாகும் போது தான், மக்களின் பரந்துபட்ட பங்கேற்பையும், நம்பிக்கையையும் பெற்று, இத்தளம் வலுவடையும் என அவர் கருதினார்.
பா ஜ கவை, 2024 தேர்தலில் தோற்கடிப்பது என்பது கடினம்; ஆனால் அது சாத்தியப்படக்கூடியதே. என அயராமல், கலை மற்றும் பண்பாட்டுத் தளத்தில் அயராது களமாடிய சசியின் கனவை நாம் மென்னெடுக்க வேண்டும்.
கட்டுரையாளர்;தயாநிதி
முனைவர்
Countercurrent.org இணையத் தளத்தில் சத்யா சாகர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையைத் தழுவி, தமிழில் எழுதப்பட்டது.
நல்ல அஞ்சலி, ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதனுக்கு ஆதர்சமாக இருந்தவர்.
பீட்டர் துரைராஜ்.