இயற்கை வேளாண் விஞ்ஞானி, சூழலியல் போராளி, இயற்கை விவசாயத்தில் 30 ஆண்டுகால முன்னோடி,இயற்கை விவசாயப் பயிற்சியாளர்,எழுத்தாளர்,இதழாளர்.. என பன்முகம் கொண்டவர் பாமயன்!. தமிழகத்தின் தற்போதை விவசாயச் சூழல்கள் குறித்தும், சமீபத்திய மூன்று வேளாண்மைச் சட்டங்கள் குறித்தும் பீட்டர்துரைராஜுக்கு அவர் தந்த நேர்காணல்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண்மைச் சட்டங்கள் குறித்து்?
மத்திய பாஜக அரசானது, அதிர்ச்சிகரமான வகையில்,
# உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு)
# விலை உறுதிப்பாட்டில் உழவர் (அதிகாரப்படுத்தல், பாதுகாத்தல்) ஒப்பந்தம்,
# பண்ணைச் சேவை
ஆகிய மூன்று சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இந்தச் சட்டங்கள் பெருநிறுவனங்களுக்கும், தனியார் வணிக நிறுவனங்களுக்கும் ஆதரவாக உள்ளன.
இந்த சட்டத்தில் குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் முடியாது. அதைக் கொடுக்காதவர்களைத் தண்டிக்கவும் இடமில்லை. கடைகளில் ஒரு பொருளை குறைந்தபட்ச விலையை(MRP) விட அதிக விலைக்கு ஒரு வணிகர் விற்றால் அவரை தண்டிப்பதற்கு சட்டத்தில் வழிவகை உண்டு.அவர் மீது நுகர்வோர் வழக்குத் தொடரலாம்.ஆனால்,இந்த மாதிரி பாதுகாப்பு கூட இந்த சட்டத்தில் இல்லை.
இந்தச் சட்டப்படி வெங்காயம், உருளைக்கிழங்கு,பருப்புவகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கி விட்டார்கள். விவசாய பொருட்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்; கிடங்குகளில் அதிகமாக சேமித்து வைக்கலாம்.இதனால் பதுக்கல் என்பது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றின் விலை உயரும். உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இந்தச் சட்டம் விவசாயிகளுக்கும் ,நுகர்வோருக்கும் எதிரானது.
இந்த சட்டத்தை பெரியவர்,மூத்தவிவசாயி மன்னார்குடி ரங்கநாதன் ஆதரிக்கிறாரே ?
பதில் : எதற்காக அவர் ஆதரிக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த சட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ள ஒரு பிரிவையாவது அவரை காட்டச் சொல்லுங்கள்.
விவசாயம் என்பது மாநில அரசுப் பட்டியலில் உள்ளது. ஆனால் மத்திய அரசு வணிகம் என்று விளக்கம் சொல்லி, இந்தச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஏனெனில், வணிகம் என்பது பொதுப் பட்டியலில் (Concurrent List) உள்ளது.
விவசாயப் பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு விற்பனை நடக்கும்போது ஏழுசதம் வரி போடப்படுகிறது. இந்தப் புதிய சட்டத்தால் மாநில அரசு இந்த வருவாயை இழக்கும்.ஏற்கனவே மாநில அரசுகள் ஜிஎஸ்டி- யினால் வரி இழப்பைச் சந்தித்து வருகின்றன.
இத்தனை ஆண்டுகாலம் மாநில அரசுகள் உருவாக்கி வைத்திருந்த அரசு கொள்முதல் நிலையங்களை ஊழல் நிர்வாகக் கோளாறு என்ற பெயரில் மற்ற பொதுத் துறை நிறுவனங்கள் போல மூடப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் தனியாரை மட்டுமே நம்ப வேண்டிய நிலை வரும் போது அவனது பேரம் பேசும் சக்தி (Bargaining Power) குறையும்.
ரேஷன் கடை மூலம் விவசாய பொருட்களை கொள்முதல் செய்யலாம் என்று கூறியுள்ளீர்களே ?
இது சாத்தியம்தான். உதாரணமாக அருப்புக்கோட்டையில் நெல்லும் விளைகிறது; அங்கு அரிசி ஆலைகளும் இருக்கின்றன. எனவே அங்குள்ள ரேஷன் கடைகள் மூலம் அரிசியை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு அங்கேயே விநியோகம் செய்யலாம்.இதனால் போக்குவரத்துச் செலவு குறையும். பொது மக்கள் கையில் பணப்புழக்கம் வரும்.வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அரசுத்துறைகள் பலப்படும்.உள்ளூர் வியாபாரம் பெருகும்.பொருளும் கெட்டுப் போகாது.எப்படி கொள்முதல் செய்வது, எப்படி விற்பனை செய்வது என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் நிர்வாகம் செய்யலாம்.ரேஷன் கடைகள் மூலமாகவே நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விற்பனை செய்ய முடியும். நாம் ஏற்கனவே பாமாயிலுக்கு மானியம் தருகிறோம். அதை எள்ளுக்கும் கடலைக்கும் கொடுத்தால் உழவர்களின் வருமானம் பெருகும். தருமபுரி போன்ற பகுதிகளில் சாமை, தினை போன்றவைகளை வாங்கி ரேஷன் கடைகளில் இந்தப் பணிகளில் உள்ளாட்சிகளையும் இணைத்துக்கொள்ள முடியும்.
எப்படி சத்துணவு மையங்களுக்கு உள்ளூரிலேயே காய்கறி வாங்குகிறார்களோ அதேபோல அரிசி, பருப்பு போன்றவைகளையும் உள்ளூரிலேயே வாங்கலாம். ஒரு ரேஷன் கடைக்கு எத்தனை அட்டைகள் உள்ளன; அதில் உள்ள உறுப்பினர்கள் எத்தனை என்பது போன்ற விவரங்களைக் கொண்டே எளிதாக இதனை கணக்கிட்டு நிறைவேற்ற முடியும். இதனால் பெண்களும் பலன் அடைவர்.
இந்தச்சட்டம் ஒப்பந்த விவசாயத்தை (Contract Farming) ஆதரிக்கிறது.இது பற்றி ?
பதில் : விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை கரும்பு ஆலைகள் தருவதில்லை.அதை அரசு வாங்கித் தருவதும் இல்லை.கரும்பு ஆலைகள் நொடித்துப் போனால் ஆலையை விற்று பங்குதாரர்கள் பிரித்து எடுத்துக் கொள்ளுவார்கள். ஆனால், கரும்பு விவசாயிகளுக்கு வரவேண்டிய தொகையை கம்பெனிச் சட்டப்படி தரவேண்டியதில்லை. இது போல,தான். புதிய சட்டமும்! அரசு சொல்லுகிற ஒப்பந்த விவசாயமும் இப்படித்தான் இருக்கும்.
, சந்தையில் விலை உயர்ந்து போனால் அதற்கேற்றவாறு ஒப்பந்த விவசாயிகளுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள். தரம்,குணம்,அளவு ( Standard, Quality,Grade) என்ற பல்வேறு அளவு கோல்களை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் பணம் கொடுப்பார்கள். உதாரணமாக, ஒவ்வொரு தக்காளியும்200 கிராம் எடையுள்ளதாகத் தரவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அதன்படி இல்லையென்றால் அந்த தக்காளியை கொள்முதல் செய்ய மாட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் இப்படித்தான் நடந்தது. விவசாயிகள் விலை கிடைக்காததால் தாங்கள் உற்பத்தி செய்த தக்காளியை சாலையில் கொட்டினார்கள். இந்த கம்பெனிகள், விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதை உறுதி செய்ய சட்டம் உதவுவதாக இல்லை.
பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் நடைபெறுகின்ற அளவுக்கு விவசாயிகள் போராட்டம் தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெற வில்லையே…?
மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் விவசாயத்தை நம்பி வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இங்கு,பருத்தியை அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம், யாரும் விற்பனை செய்வதில்லை. உள்ளூர் வியாபாரிகளிடம்தான் விற்பனை செய்கிறார்கள்.தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் மட்டும்தான் இப்போது பெருமளவு நெல்விவசாயம் நடைபெறுகிறது. எனவே அங்கு போராடுகிறார்கள்.
கிராமங்களிலுள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கவில்லை. இருக்கமுடியாத நிலைமை உருவாகிவிட்டது.ஒரு கிராமத்தில் 45 சதம் பேர் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலோர் நகரங்களில் கட்டட வேலைக்கு போகிறார்கள்.நூறு நாள் வேலை செய்கிறார்கள். தமிழகத்தில் விவசாயத்தை நம்பி 5 முதல் 10 சதவீதம் விவசாயிகள்தான் இருக்கின்றனர். எனவேதான் தமிழ்நாட்டில் கடுமையான போராட்டம் நடக்கவில்லை.
மாநில அரசுகள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?
இந்த சட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றுள்ளார். கேரளா அரசாங்கம் இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்கிறது. விவசாயம் என்பது மாநில அரசு பட்டியலில் இருப்பதால், மாநில அரசுகளும் வேறு ஒரு புதிய சட்டத்தை, இன்னும் சொல்லப்போனால் சிறப்பானச் சட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளை பாதுகாக்க முடியும். பஞ்சாப் மாநில அரசு இது போன்ற ஒரு சட்டத்தை கொண்டு வரப்போகிறது.காங்கிரஸ், ஆட்சி செய்கின்ற மாநில அரசுகள் புதிய சட்டங்களை இயற்றலாம் எனத் தெரிகிறது. தெலுங்கானா மேற்கு வங்காளம்,ஒரிசாபோன்ற அரசுகள் புதிய சட்டங்களை இயற்ற வய்ப்புள்ளது.அது போல ஒரு முயற்சி இங்கு நடந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பாதுகாப்பு..
Also read
குறைந்த பட்ச ஆதாரவிலை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
எம்.எஸ்.சுவாமிநாதன் குழு உற்பத்தி செலவோடு ஐம்பது சதத்தை சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறுகிறது. உற்பத்திச் செலவு என்றால் உரம், பூச்சி மருந்து, விதைகள் போன்ற இடுபொருட்களை மட்டுமே உற்பத்திச் செலவு என்று அது கணக்கிடுகிறது. நிலத்திற்கான முதலீடு, விவசாயிகளின் உடல் உழைப்பு, நிர்வாகம், வங்கிக் கடனுக்கு வட்டி போன்ற அனைத்தையும் சேர்த்து கணக்கிட்டு அதோடு சிறு லாபத்தையும் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.இன்றைய அரசு அவ்வாறு செய்யவில்லையே…
கால்நடைத் துறையில் இந்த சட்டம் எத்தகைய மாற்றங்களை உருவாக்குகிறது ?
ஆடு,மாடு,மீன் வளர்ப்பைக் கூட இந்த சட்டத்தின் கீழ் வணிகம் என்று வரையறைக்குள் கொண்டுவிட்டார்கள். எனவே ஒப்பந்த முறை இங்கும் இருக்கும்.இது பெரும் பின்னடைவையே தரும்.
அந்தந்த பகுதிக்கு ஏற்ற கால்நடை மேம்பாட்டை அரசு ஊக்குவிக்க வேண்டும். கடலோரமாக இருந்தால் மீன் வளத்தையும் மற்ற பகுதிகளில் அதற்கேற்ற வகையில் கால்நடைகளையும் இணைத்து ஒருங்கிணைந்த பண்ணைமுறையை ஊக்குவிப்பு செய்தால் வருடத்திற்கு 365 நாளும் வேலை கிடைப்பது சாத்தியமே. ஆனால் இப்போது சிலநேரங்களில் மட்டுமே விவசாயிகளுக்கு வேலை கிடைக்கிறது.
மேலை நாடுகளில் விவசாயம் எப்படி இருக்கிறது ?
ஐரோப்பிய நாடுகளில் விவசாய முறை வேறு;
லத்தீன் அமெரிக்க நாடுகளில் விவசாய முறை வேறு;
அமெரிக்காவின் விவசாய முறை வேறு.
உதாரணமாக, ஜப்பானில் ஒருவர் மாடு வளர்த்தால் அவருக்கு நாள் ஒன்றுக்கு 450 ரூபாய் கிடைக்கும். அமெரிக்காவில் சிறு விவசாயி என்று சொன்னால் 500 ஏக்கர்,1000 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் தான் சிறு விவசாயி. ஆனால் இந்தியாவில் இரண்டரை ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்தான் சிறு விவசாயி. இந்தியாவில் 85 சதவீதம் பேர் சிறு விவசாயிகளே. ஆனால் அமெரிக்காவில் 3 சத பேர் மட்டுமே விவசாயம் செய்கிறார்கள். உலகப் பொருளாதாரத்தை அவர்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்; டாலர் மதிப்பில் கணக்கிடுகிறார்கள். எனவே அவர்கள் அதிக மானியம் விவசாயிகளுக்கு கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் 150 சதம் மானியம்; ஆனால் இந்தியாவில் 20 சதம் மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது. இந்த சட்டம் அமலானால் இந்தியாவிலும் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும்.அதாவது ஏராளமான விவசாயிகள் விவசாயத்தில் இருந்தே வெளியேறிவிடுவார்கள்.
பாமயன் என்று பரவலாக அறியப்பட்ட மு.பாலசுப்பிரமணியன் தமிழக இயற்கை வேளாண் அறிஞர் மற்றும் சூழலியல் களச் செயற்பாட்டளர். “வேளாண் இறையாண்மை” “அள்ளித் தரும் நிலம்” “அணுகுண்டும் அவரைக்காயும்” “விதை அரசியல்” போன்ற பல நூல்களை எழுதியவர். ரசாயன உரங்களுக்கு மாற்றான இயற்கை உரங்களை கொண்ட வேளாண்மையை லாபகரமாகவும் ,வெற்றிகரமாகச் செய்பவர்.
தொடர்புக்கு ; 9842048317
Leave a Reply