சாகா புகழ் பெற்ற சமூகநீதிப் போராளி சரத் யாதவ்!

-D.ராஜகோபால்

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களின் அரசியல் எழுச்சிக்கு வித்திட்டவரும், கிங் மேக்கர் என்றும், இரும்பு மனிதர் என்றும் போற்றப்பட்டவர் சரத்யாதவ்! மண்டல் கமிஷன் அறிக்கை அமலாவதற்கு மட்டுமின்றி, பல முதல்வர்கள் உருவாக்கத்திற்கும் காரணமான சரத்யாதவின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது!

1947ம் ஆண்டு ஜுலை  1ம் தேதி மத்தியப் பிரதேசம் பாபாய் கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்தவர்  சரத் யாதவ். பொறியியல் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர். 1974ல் நெருக்கடி நிலை காலத்தில் மாணவர் அணித் தலைவராக போராட்டத்தை வழிநடத்திய வகையில் மிசாவில் கைது செய்யப்பட்டார். காந்தியவாதியும், எமர்ஜென்சியை எதிர்ப்பதில் அன்று தலைமை பாத்திரம் வகுத்தவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நம்பிக்கைக்கு உரியவராக இவரது அரசியல் பயணம் ஆரம்பமானது. இந்தச் சூழலில்  1974ல் மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் பாராளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில்  சாதாரண கல்லூரி மாணவனான சரத் யாதவை  வேட்பாளராக நிற்க வைத்து இந்திரா காந்திக்கு சவால் விட்டார் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.. அந்த இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான சரத் யாதவ் அமோக வெற்றி பெற்றார். பிறகு, இந்திரா காந்தி எமர்ஜென்சிக்காக நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை  நீட்டிக்க முடிவு செய்த போது, அதை எதிர்த்து சரத் யாதவ்  தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை  மார்ச் 1976ல் ராஜினாமா செய்தார்.

பிறகு, மீண்டும் வந்த 1977  பொது தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாராளுமன்றத்தில் இளம் தலைவராக மிகப் பெரிய தலைவர்கள் எல்லாம் பாராட்டும் வகையில் அறிவார்ந்த முறையில் பணியாற்றினார். ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், சரண்சிங் போன்ற தலைவர்களின் நன்மதிப்பை பெற்றார். மொத்தம் ஏழு முறை பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றும், மூன்று முறை ராஜ்ய சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு  ள்ள சரத் யாதவ் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். அவரின் பணியினை அங்கீகரிக்கின்ற வகையில், இந்திய பாராளுமன்ற குழு 2012ம் ஆண்டு ‘out standing parliamentarian award ‘ விருதை அவருக்கு வழங்கியது.

சரண்சிங்குடன் சரத் யாதவ்

சரத்யாதவிற்கும், தமிழகத் தலைவர்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது! ஜனதா தளத்தின் தேசிய தலைவராக சரத்யாதவ் இருந்த போது அதன் தமிழகத் தலைவர்களாக இரா.செழியனும், சிவாஜிகணேசனும் இருந்தனர்! இவர்கள் மூவரும் தமிழகம் தழுவிய சுற்றுப் பயணம் செய்து மண்டல் கமிஷன் தொடர்பாக பேசியுள்ளனர்.ஏராளமான முறை தமிழ் நாட்டிற்கு வந்து கட்சி நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் இருந்தும்,  பீகாரில் இருந்தும் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டு வென்ற வகையில், மூன்று மாநிலங்களில் போட்டியிட்டு வென்ற ஒரே தேசிய தலைவர்  சரத் யாதவ்  மட்டும் தான்! ஜனதா தளத்தின் எம்.பிக்கள் 55 பேர் இருந்த காலத்தில் அதன் நாடாளுமன்றத் தலைவராக சிறப்பாக செயலாற்றினார். ஜார்ஜ் பெர்ணாடஸ், இராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோரின் நெருங்கிய சகாவாக இருந்தார்! பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்  சரத் யாதவ். மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதற்கு முக்கிய காரணகர்த்தாகவாகத் திகழ்ந்தார்  சரத் யாதவ்! அவருடைய ஆதரவு மற்றும் பின்புலத்தில் தான் 1989ல் ஜனதா தளம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அப்போதைய பிரதமர் வி.பி.சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தினார்.

வி.பி.சிங்கும்,சரத் யாதவும்

பிறகு உச்சநீதி மன்றத்தில் ஒருசில ஆதிக்க சக்திகள் அதற்கு தடை வாங்கவே 27% இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்திய அரசுப் பணிகளில் பெற முடியாமல் போனது. அப்போதிருந்த மத்திய அரசு உச்சநீதி மன்றத்தின் தடையை விலக்க, எந்த முயற்சியும் எடுக்காத போது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மிகப் பெரிய எழுச்சியை உருவாக்க சரத் யாதவ்  திட்டமிட்டார். 1992-93ம் ஆண்டில் ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக மாபெரும் ரத யாத்திரையை நடத்தினார். இறுதியில் லட்சக்கணக்கான மக்களை டெல்லி போட்ஸ் கிளப் மைதானத்தில் திரட்டி, இட ஒதுக்கீட்டிற்கு அவர் முழக்கமிட்ட போது அன்றைய காங்கிரஸ் அரசு அதிர்ந்தது. இந்த வகையில் சரத் யாதவ் மிக வலுவாக அழுத்தம் கொடுத்ததின் விளைவாகவே மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் மனு செய்து தடையை நீக்கியது. அதன் பின் தான் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 27% இட ஒதுக்கீட்டை பெற ஆரம்பித்தார்கள்.

சமகாலத் தலைவர்களுடன் சரத் யாதவ்!

மண்டல் கமிஷன் அமலாக்கத்திற்கு பிறகு இந்தியாவில் பிற்பட்ட சமூகத்தின் தலைவர்களான லாலுபிரசாத் யாதவ், நிதிஸ்குமார், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தனிபெரும் தலைவர்களாக உருவாதற்கும், முதல்வர்களாவதற்கும் வித்திட்டவர்! தேவகெளடா பிரதமராக வருவதற்கும் காரணமானார்! அதனால் தான் சரத் யாதவை ‘கிங்மேக்கர்’ என வட இந்திய ஊடகங்கள் எழுதின! அதிகார ஆசைக்காக சமரசம் செய்து கொள்ளாதவர்! அரசியலில் கொண்ட கொள்கைக்காக ஏராளமான இழப்புகளை, அவமானங்களை தாங்கி, உறுதிபட நின்றவர் என்ற வகையில் இவரை ‘இரும்பு மனிதர்’ என்றும் அழைப்பார்கள்!

சமூக நீதியில் மிக ஆழமான, அழுத்தமான ஈடுபாட்டை கொண்ட சரத் யாதவ்  எல்லா மக்களுக்கும் சமுக நீதி கிடைக்க வேண்டும் என்றால், ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என  தொடர்ந்து பாடுபட்டார். பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வி, பெண்கள் இடஒதுக்கீடு ஆகியவற்றில் உறுதியாக குரல் கொடுத்தவர். பெண்களுக்கு சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளில் உள் ஒதுக்கீட்டுடான பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று மசோதாவை திருத்தி அமைக்க குரல் கொடுத்தார். காரணம், ”பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கின்ற பட்சத்தில் அதிலும், இட ஒதுக்கீடு பின்பற்றினால்தான் பிற்படுத்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட பெண்கள் முன்னேற முடியும் என்பதால் பெண்கள் இட ஒதுக்கீட்டில் சமூக நீதி வேண்டும்” என்று கூறி தொடர்ந்து குரல் கொடுத்தவர் சரத் யாதவ் !

”பெண்களை சமமாக மதிக்க வேண்டும். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும்” என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அதன் விளைவாகவே  தான் இறந்தவுடன் தனக்கு தன் மகனும் மகளும் சேர்ந்து இறுதி சடங்குகளை செய்ய வேண்டுமென கூறினார். அதன்படியே அவரது மகனும் மகளும் சேர்ந்து அவரின் இறுதி சடங்குகளை செய்தனர்.

ராகுல் காந்தி, சரத் யாதவ், சீதாராம் யெச்சூரி

வேலையில்லா திண்டாட்டம், லஞ்ச ஒழிப்பு,  காவல் துறை அடக்குமுறை, ஆசிரியர்கள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர் , ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினைகள்.. ஆகியவற்றுக்காக பாராளுமன்றத்திலும், வெளியிலும் குரல் கொடுத்தவர் சரத் யாதவ் . இரண்டு முறை மத்திய அமைச்சராகவும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் பணியாற்றிய  சரத் யாதவ் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காமல் பொது வாழ்வில் உலா வந்தவர்.

‘மதவாத பிற்போக்கு சக்தியான பாஜகவை எதிர்ப்பதில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’ என்பதற்காக தொடர்ந்து பாடுபட்டார்! பாஜகவின் பாஸிச செயல்பாடுகளை எதிர்ப்பதற்கு காங்கிரஸாரையும், கம்யூனிஸ்டுகளையும் கைகோர்க்க வைத்தவர்!

தனது இறுதி காலத்தில் கூட எல்லா ஜனதா தள பிரிவுகளையும் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த மீண்டும் ஜனதா தளத்தை உருவாக்க முயன்றார். எல்லா எதிர்க் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அவருடைய உடல் நிலை மோசமான காரணத்தால் அவர் மறைந்து விட்டார்.

கட்டுரையாளர்; D.ராஜகோபால்

வழக்கறிஞர்,

மாநில தலைவர் – ஜனதா தளம் (LJD)

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time