ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் நாடகம்!

- ரதன் சந்திரசேகர்

 ‘68,85,45 + 12 லட்சம்’ என்ற இந்த நாடகம் ஒரு தலித் இளைஞனின் பார்வையில், நிலம், நீர், தீ, காற்று ஆகியவை  மீதான உரிமைகள் தலித் மக்களுக்கு  மறுக்கப்படுவதை காட்சிப்படுத்தி, பௌத்தம் தழுவிய அம்பேத்கரின் செய்தியை இறுதியாக வைக்கிறது! ஆடல், பாடல், இசை என்ற மூன்றும் இணைந்த வழியில் காட்சிப் படுத்தப்படுகிறது!

சமீபத்திய புதுக்கோட்டை வேங்கை வயல் அவலம் நெஞ்சைத் தைக்கிறது.

ஸ்ரீராமானுஜர், காந்தி, பெரியார், அம்பேத்கார் தொட்டு எத்தனையோ ஆயிரம் பெரியவர்களின் கருத்துப் பிரச்சாரத்தாலும் உபதேசங்களாலும் சாதி ஒழியவில்லை என்பது மட்டுமல்ல; இன்னமும் ஆழப் பதியப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பது நடைமுறை உண்மை நெஞ்சில் அறைகிறது.

பெரும்பாலான  அரசியல் கட்சிகளும் தொகுதிகளில் சாதிவாரி எண்ணிக்கையைப் பார்த்துத் தான் வேட்பாளரை நிறுத்துகின்றன என்ற

கூசவைக்கும் உண்மையின் வெளிச்சத்திலிருந்து சொல்லப்பட்ட ஒரு நவீன மேடை நாடகம் கடந்த வாரம் சென்னை நகரில் அரங்கேறியிருக்கிறது.

காலங்காலமாக இந்திய மண்ணை சாதியும், தீண்டாமையும் பின்னிப் பிணைந்து எளிய மக்களின்  வாழ்வைக் கபளீகரம் செய்துவருவதை உண்மை நிகழ்வுகளின் விவரிப்போடு சித்திரிக்கும்  துயர வெளிப்பாடு இந்த நாடகம்.

நிலம், நீர் காற்று, வானம், நெருப்பு அனைத்தும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே,   திருப்பப்படும் – ஆக்கிரமிக்கப்படும் அவலம் குறித்து காத்திரமாகக் பேசுகிறது!

தமிழகத்தின் கீழவெண்மணிப் படுகொலைகள்!

மேற்கு வங்கத்தின் மரிஜாபிப் படுகொலைகள்!

ஆந்திரத்தின் கரமச்சேடுப் படுகொலைகள்!

ஆகியவற்றை மையப்படுத்தி, அம்பேத்கரின் தீக்ஷா பூமி மத வெளியேற்றம், நாளும் தொடரும் மலக்குழி மரணங்கள் போன்ற செய்திகளோடு பிணைத்து, பார்வையாளர்களிடயே உரையாடி உணர்த்த முற்படுகிற ஒரு  கலை முயற்சி இந்த நாடகம்.

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் நிகழ்ந்த கீழ்வெண்மணிக் கொலைகள் எளிதில் மறக்கப்படக் கூடிய நிகழ்வா? சங்கம் வைத்துக் கூலி உயர்வு கேட்ட குற்றத்துக்காக தலித் குடும்பங்களைச் சார்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 44 பேரை வீட்டில் பூட்டித்  தீயிட்டுக் கொளுத்தின கொடுமையை செய்துமுடித்தது மேல்சாதியின் ஆதிக்க வெறி!

1968 டிசம்பர் 24இல் நடந்த இந்த உயர்சாதிக் கோரத் தாண்டவத்துக்கு கிடைத்த நீதி, பத்துப் பேருக்கு வழங்கப்பட்ட பத்தாண்டு சிறைத் தண்டனை! ஆனால், அதுவுமே, மேல்முறையீட்டில் நீதிமன்றம் தண்டனைகளை ரத்து செய்தபோது, நீதிதேவதை  கண்ணீர்விட்டாள்.

1979 ஜனவரி 31இல் நிகழ்ந்த மரிஜாபிப் படுகொலைகளை நிகழ்த்தியது மேற்கு வங்க இடதுசாரி அரசு என்னும் உண்மை படுதுயரமானது. சுதந்தரத்துக்குப் பிறகு, நாட்டுப் பிரிவினையால் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து உயிர் பிழைத்தோடி வந்த தலித் மக்களை பொருளாதாரத் சிக்கல்களினூடே தண்டகாரண்ய வனப்பகுதிகளுக்கு அனுப்பியது மத்திய அரசு. அங்கு அவர்கள் வாழ்வும் சாவுமாகப் போராடி வந்த துயர நிலைமையில், இடதுசாரித் தலைவர்களின் அழைப்பை நம்பி லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வங்கத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.

ஆனால் அரசக் கொள்கைகளில் மாற்றம் கொண்ட மாநில அரசாங்கம், அவர்களில் பெரும்பாலானோரை தண்டகாரண்யத்துக்கே திருப்பி  அனுப்பியது. மாநிலத்துக்குள் தங்கிவிட்ட அகதி மக்களில் ஒரு பிரிவினர் ஆள் அண்டாத புதர்கள் மண்டிய மரிஜாபித் தீவில் அடைக்கலமானார்கள். ஆனால் வன உரிமைச் சட்டத்தை மீறியதற்காக அவர்களை விரட்ட முற்பட்ட முயற்சியில், காவல்துறையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும்  கடந்தது என்கிற உண்மை சுதந்திர இந்திய வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் அச்சேறிய  கொடுமை!

ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மாவட்டத்தின்  கரமச்சேடுவில் தலித் மக்களின் தண்ணீர்க் குட்டையில் மாட்டைக் குளிப்பாட்டி, அழுக்குத் தண்ணீரை குடிநீர்த்தொட்டியில் கலந்த உயர்சாதி சிறுவனைத் தட்டிக் கேட்ட பாவத்துக்காக – நிலப்பிரபுக்கள் நடத்திய கொடூர வெறியாட்டத்தால்   ஆறு தலித்துகள் கொலை செய்யப்பட்டார்கள். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் மூவர்; படுகாயமடைந்தவர்களோ  நூற்றுக்கணக்கில் ; வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு தெருவில் நின்றது கரமச்சேடு கிராமத்தின் ஒட்டுமொத்த தலித் சமூகம்.

1985 ஜூலை 17இல் நடந்த இந்த சமூக அநீதிக்கு 23 ஆண்டுகளுக்குப் பிற்பாடே நீதி வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை போன வழக்கு –  ஒரே ஒருவனுக்கு ஆயுள் தண்டனையையும் 30 பேருக்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனையையும் வழங்கியது. இழப்பை ஈடுநோக்கிப் பாருங்கள்! நீதியின் குறைபாடு முகத்தில் அறையும்!

தலித் மக்களின் மீது தொடுக்கப்பட்ட இந்த மூன்று ரத்தக்களரி நிகழ்வுகளையும் நடைமுறை அவலங்களோடு கோத்து சபை முன்வைக்கிறார் பிரசன்னா ராமஸ்வாமி.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக என்று எவரின் ஆட்சியிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று சொல்லும்  நாடகம்,

மாற்றாக புதிய தேடல்களுக்கான கேள்விகளை   முன்வைக்கிறது.

உண்மையில் – அரசியல் இயக்கங்களை,  அவர்களின் அதிகாரங்களைக் கடந்து – வேரோடியிருக்கும் சமூக விஷம் தான் சாதி. இட ஒதுக்கீடு, சாதிவாரிக் கணக்கெடுப்பு போன்றவை – தீர்வுகளை முன்னெடுப்பதைவிட –

மேலும் சாதியை இறுக்கமாகப் படிய வைக்கிற சிக்கலை ஒருபுறத்தில் ஏற்படுத்தி வருவதை  நாம் நிதர்சனத்தில் உணர்ந்துவருகிறோம்.

காந்தியின் அச்சம் உண்மையாகி வருவதைப்  பார்க்க முடிகிறது.

எந்த நியாயத்தைக்கொண்டும், அல்லது அகப் புறச் சூழல் காரணிகளை முன்வைத்தும் – சாதித் தீண்டாமையை சகித்துக் கொண்டிருக்கவும் நீட்டித்துக்கொண்டிருக்கவும் அனுமதிக்க முடியாது; அது மானுட நாகரிகத்துக்கு இழிவுதான்!

எனவே- ஒரு கோணத்திலிருந்து உரையாடும் பிரஸன்னா ராமஸ்வாமியின் நாடகம் – சாதிக்கு எதிரான ஓர் அவசியமான  விவாதம் என்பதில் அய்யமில்லை.

ஆனால், இன்றைய அரசியல் பின்புலத்தோடு பார்க்கும் சூழலில் – தேசத்தை ஆளுகிற பாஜகவின் மதம் சார்ந்த சமூக பொருளாதார அரசியல் தாக்குதல்கள் சிறுபான்மை மக்களுடன் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் இணக்கத்தையும், அமைதியையும் சூறையாடுகிற பின்னணியில் – தலித் சமூகத்தை மட்டும் பிரித்தெடுத்து, பொது அரங்கத்திலிருந்து விலக்கிவைக்க  முற்படுகிற சூழ்ச்சி முறைமை நடைமுறைப் படுத்தப்படுவதையும்  இந்த நாடகம்  பேசியிருக்கவேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறது.

அவ்விதம் பேசியிருந்தால்,  தலித் மக்களின் சமநீதி வாழ்வுக்கான புதிய தேடல்களுக்கான நாடகத்தின் கேள்விகள்  முழுமைப்பட்டிருக்கும்.

மற்றபடி, மேடையை பார்வையாளர்களுடன் இணைத்து முடிச்சுப்போட்டு அவர்களை காட்சிகளுக்குள் கொண்டு அமிழச் செய்கிற வித்தை எப்போதும் கைவரப் பெற்றவர் பிரஸன்னா ராமஸ்வாமி என்பது இந்நாடகத்தில் உறுதிப்படுகிறது.வண்ண விளக்குகளின் ஒளியை சூழலுக்கு மட்டுமல்லாது, பாத்திரங்களாகவும் ஆக்குகின்ற கலை அவருக்கே உரியது. நீர், நெருப்பு, ஆகாயமெல்லாம்  மேடையில் நிறங்களாக உருமாறி கதை சொல்கின்றன.

பிரபல நாட்டிய, திரைப்படக்  கலைஞர் அனிதா ரத்னம் ஒரு கட்டியங்காரப்  பாத்திரமாக  நாடகத்தை முன்னெடுப்பதைத் தொடர்ந்து, நிக்கிலா, ரேவதி, திவாகர், விஷ்ணு, பிரேம், ஆரா அஜித், சூர்யா, ஸ்நேகா, சுகுமார், இன்னும் பேர் குறிப்பிடாத நடிகர்கள் பாத்திரங்களாக உருமாறிக் கொண்டிருந்த காட்சிகளினூடே, கர்நாடக இசை பெருக்கெடுக்கிறது; ரவிக்குமார், சுகுமாரன் கவிதைகள் ஊடுருவுகின்றன; பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல், உழைப்பவன் குரலாக ஒலிக்கிறது.

இசை, நடனம், இருள், வெளிச்சம், வண்ணங்கள், ஓவியங்கள், கவிதை, பாடல், ஒலி இவற்றையெல்லாம் வசனங்களாக்குவது  பிரஸன்னா ராமஸ்வாமியின் மேடை உத்தி. அவற்றை ஒன்றுடன் ஒன்று பிணைக்கிற கலையை மேடையில் படைப்பதற்கு  ஓவியர் குரு, இசைக் கலைஞர் ஆனந்த், ஒளிக்கலைஞர் சார்லஸ் போன்றோர் பங்களிக்கிறார்கள்.

எல்லாக் கலைகளும் வணிகமாகிவிட்ட இக்காலச் சூழலில், வணிக நோக்கின்றி, கைக்காசைச் செலவழித்து சமூக அவலங்களைப்  பேசுகிற சிற்சில அரிய கலைஞர்களில்  பிரஸன்னா ராமஸ்வாமி குறிப்பிடத்தகுந்தவர் !

கட்டுரையாளர்; ரதன் சந்திரசேகர்,

எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time