ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் நடந்த ஒரு குற்றச் செயலை ஒரிரு நாளில் கண்டுபிடித்து விடக்கூடிய சூழல் இருந்த போதிலும், விவகாரத்தை ஜவ்வாக இழுத்துக் கொண்டே செல்வதன் பின்னணி என்ன? இந்தப் பிரச்சினையில் தமிழ் நாட்டரசை பின்புலத்தில் இருந்து இயக்குவது யார்? குற்றவாளி பாதுகாக்கப்படுவது ஏன்?
பலதரப்பட்ட பத்திரிகையாளர்கள், உண்மை அறியும் குழுவினர், நெஞ்சு பொறுக்காத தனிப்பட்ட சமூக ஆர்வலர்கள்.. என்று பலரும் பல்வேறு நுட்பமான தகவல்களை வெளிக் கொண்டு வந்துள்ளனர்! நாளும், பொழுதும் பல்வேறு இயக்கங்கள் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க போராடி வருகின்றன!
ஆனால், மிகப் பெரிய அளவில் உள்ள அரசு நிர்வாகத்தாலும், காவல் துறையாலும் சின்ன முன்னேற்றத்தைக் கூட எட்ட முடியவில்லை.
முதலில் ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது! தற்போது சிபி.சிஐடி போலீசாருக்கு விசாரணை மாற்றப்பட்ட நிலையில், பெரும் படை கொண்ட 10 குழுக்கள் இந்த குற்றத்தை கண்டு பிடிக்க களம் இறங்கியுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கையை விட குற்றத்தை விசாரிக்கும் போலீஸ் படையின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போலத் தெரிகிறது!
நியாயமாக பார்த்தால், சம்பந்தப்பட்ட ஊருக்கான காவல் நிலையத்தை சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டரும், ஒரு ஏட்டையாவும் களத்தில் இறங்கி ஒரிரு நாளில் உண்மை குற்றவாளிகளை பிடித்து விடுவார்கள்! அவர்களுக்கு வேறு எந்த தரப்பில் இருந்து அழுத்தம் வராமல், அவர்களை சுதந்திரமாக இயங்குவதற்காக உத்திரவாதம் ஒன்று போதுமானது. அப்படியான உத்திரவாதத்தை இன்றைய ஆட்சித் தலைமையால் தர முடியாததால் தான் இத்தனை பெரிய, பெரிய முஸ்தீபுகள் அரங்கேறுகின்றன!
நடைபெற்ற சம்பவங்களை வரிசைபடுத்திப் பார்த்தால், நமக்கு சில உண்மைகள் பட்டவர்த்தனமாகப் புரிய வரும்.
டிசம்பர் 20 தொடங்கி பட்டியலின மக்கள் வசிக்கும் வேங்கைவயல் பகுதியில் குடிதண்ணீர் மிக மோசமான நாற்றத்துடன் வருகிறது. அதைக் குடித்த வயதானவர்களும், குழந்தைகளும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். அதில் அரசு மருத்தவமனை சிகிச்சையில் உள்ள போதாமை காரணமாக, தனியார் மருத்துவமனையில் ஒரு குழந்தை சேர்க்கப்படுகிறது. அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர், ”குடி தண்ணீர் மாசுபாட்டால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது! எந்தக் குடிநீரைக் குடிக்கிறீர்களோ, அது எங்கிருந்து வருகிறது என்று செக் பண்ணிப்பாருங்க” என சொல்லிய பிறகே, டிசம்பர் 26 ஆம் தேதி வாக்கில் சில இளம் வாலிபர்கள் டேங்க் மீது ஏறிச் சென்று பார்க்கிறார்கள்!
அப்போது குடிநீரில் மலம் மிதப்பது வேங்கை வயல் மக்களுக்கு தெரிய வருகிறது. அதை போட்டோவாகவும், வீடியோவாகவும் எடுத்து தங்கள் வாட்ஸ் அப் குழுவில் போடுகின்றனர். ஊர் பஞ்சாயத்து தலைவராக பத்மா என்பவர் இருந்தாலும், அவரது கணவர் முத்தையா தான் நிஜத்தில் அங்கு தலைவராக வளம் வருகிறார். அவருக்கும், ஊர் கவுன்சிலருக்கும், தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சின்னதுரைக்கும் தகவல் கிடைக்கிறது. சின்னதுரை தான் இதை பொது வெளிக்கு கொண்டு வருகிறார்.
அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவும், மாவட்ட எஸ்.பியும் அந்த கிராமத்திற்கு நேரடியாக ‘விசிட்’ செய்கின்றனர்! அங்குள்ள மக்களிடம் பல ஊடகங்களின் முன்னிலையில் மிக நீண்ட நேரம் விசாரிக்கிறார் கவிதா ராமு. இதுவே ஒரு மிகத் தவறான அணுகுமுறையாகும். தலித் மக்கள் ஊடக வெளிச்சத்தில் உண்மைகளை எடுத்த எடுப்பில் பேசிவிட முடியாது! ஏனெனில், அதற்கான எதிர்வினைகளை அந்த கிராமத்தில் நிரந்தரமாக வாழ வேண்டிய அவர்கள் தான் சந்திக்க வேண்டும். அப்போது அவர்களிடம் ”சம்பந்தப்பட்ட பிரச்சினையை தவிர்த்து, வேறென்ன பிரச்சினைகள் உள்ளது” என அவர் கேட்ட போது கூட, இயன்ற வரை அவர்கள் தவிர்த்துப் பார்த்தனர். ஆனால், தொடர்ந்து வலியுறுத்தியதிலும், அவரது கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையிலும் மிக இயல்பாக கோவில் அனுமதி மறுப்பை சொல்கின்றனர். அதே போல இரட்டை குவளை முறையும் அவருக்கு தெரிய வருகிறது!
உடனே, அவர் அந்த இடத்திலேயே அவர்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றதும், அதை தடுக்க முனைந்த சாமியாடியையும், தேனீர் கடைக்காரரையும் கைது செய்ததும் பெரும் பாராட்டுகளை அவருக்கு குவித்தன! ஏற்கனவே முகநூலில் தன்னை ஒரு முற்போக்குவாதியாக அடையாளம் காட்டி வந்த கலெக்டர், ”புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கெல்லாம் இரட்டை குவளை முறை, கோவில் அனுமதி மறுப்பு உண்டோ இந்த தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க” என அறிவிக்கவும் உண்மையான புரட்சிவாதியாக புகழின் உச்சத்திற்கு சென்றுவிட்டார்! ஊடகங்களிலும்,சமூக வளைத்தளஙக்ளிலும் பாராட்டுகள் குவிந்தன! போதக்குறைக்கு முதல்வரே பாராட்டினாராம்!
ஆனால், குறுகிய விளம்பரங்களுக்கு ஆசைப்படுவது எவ்வளவு பெரிய பின்னடைவைத் தரும் என்பதை அப்போது யோசிக்கவில்லை. கோவில் அனுமதி சம்பவம் எதிர்பாராமல் நிகழ்ந்தது என்றாலும், தங்கள் சமூகத்தை சேர்ந்த இருவர் கைதானதும், அதிரடி கோவில் நுழைவும் அந்த சமூகத்தை தமிழகம் தழுவிய வகையில் ஒட்டுமொத்தமாக எதிர் நிலையில் திரட்டிவிட்டது! அவர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் மனத் துணிவு ஆட்சி தலைமைக்கு இல்லை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 33 கிராமங்களில் சாதியப் பாகுபாடுகள் நிலவுகிறது என்பதும், 49 கோவில்களில் தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு என்பதும், 14 கிராமங்களில் இரட்டை குவளை முறை உள்ளது என்பதும் குறுஞ்செய்தியாகவும, கடிதமாகவும் கலெக்டருக்கு ஏராளமான புகார்கள் அனுப்பட்டன! கலெக்டர் கவிதா ராமு அதன் பிறகு படுமெளனமாகி விட்டார். அவரால் எந்த செயல்பாட்டிலும் இறங்க முடியவில்லை! இதனால், இது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்காகவே பதியப்பட்டுவிட்டது.
இது ஒருபுறமிருக்க, அவர் ஆலய நுழைவு நடத்திய பிறகு, அந்த கோவில் தீட்டுக் கழியப்பட்டு உள்ளது! பட்டியலின மக்கள், ‘எப்போது தாங்கள் தாக்கபடுவோமோ’ என்ற அச்சத்தில் உறைந்துள்ளதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
கலெக்டர், ‘மாவட்ட ஆதி திராவிட நலத்துறையின் வழியாக தகவல்களை பெற்று, ஆட்சித் தலைமையோடு கலந்தாலோசித்து, இது போன்ற சாதியப் பாகுபாடுகளைக் களைய என்னவிதமான நடவடிக்கைகளை எடுக்கலாம்’ என கவனமாக திட்டமிட்டு செயல்பட முன் வந்திருந்தால் இவ்வளவு பின் அடைவு ஏற்பட்டு இருக்காது.
இந்த சாதியப் பாகுபாடுகள் ஏதோ புதுக்கோட்டை என்று மட்டுமல்ல, கடந்த முப்பதாண்டுகளாக என்னைப் போன்ற ஊடகவியாளர்கள் இரட்டை குவளை முறை தமிழகத்தின் பல கிராமங்களில் நடைமுறையில் இருப்பதை தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறோம். ஆனால், ஆதிதிராவிட நலத்துறை இந்த விவகாரத்தில் முடங்கி கிடக்கிறது. எல்லாம் சரியாக இருப்பது போன்ற தோற்றத்தை தருகிறது! புகார்களே இல்லையாம்!
தற்போது ஜனவரி 17 ஆம் தேதி ஜாதிக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் மெய்யநாதன், ரகுபதி, கயல்விழி என மூவரை அனுப்பி இறையனூர் கிராமத்தில் சமத்துவ பொங்கலுக்கு வேங்கைவயல் பட்டியலின மக்களை அழைத்துள்ளனர். இந்த அழைப்பை பட்டியலின மக்கள் புறக்கணித்து விட்டனர்! ”உங்க விளம்பரங்களுக்கு நாங்க பலிகடா ஆகமாட்டோம்” என ஒதுங்கிக் கொண்டனர்.
ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் ரகுபதி, ”தமிழ் நாட்டில் எங்குமே இரட்டை குவளை முறையோ, சாதிபாகுபாடோ இல்லை” என ஊடகங்களுக்கு கூசாமல் பேட்டி தந்து உள்ளார். இதை அங்கிருந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிக்கு மறுத்துப் பேசக் கூட தைரியம் இல்லை!
ஆக, இந்த திமுக அரசுக்கு இருக்கும் யதார்த்ததை ஏற்கும் மனநிலை கூட இல்லை. குறையை உணர்ந்தால் தானே அதை களைய முடியும். ”குறைகளே இல்லை” என அதிரடியாக சாதித்தால், இருக்கும் நிலை அப்படியே தொடரத்தான் செய்யும்.
இதே அணுகுமுறை தான் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளியைக் கண்டுபிடிப்பதிலும் நிலவுகிறது. இது நாள் வரையிலான விசாரணையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதை எப்படி தவிர்ப்பது என்பதே காவல்துறையின் கவலையாக இருந்துள்ளது என்பதை விசாரணையின் அணுகுமுறை காட்டுகிறது.
26 ஆம் தேதி டேங்க் மீதுஏறி குடிநீர் தொட்டியில் என்ன உள்ளது என்பதை அறிந்து வெளி உலகத்திற்கு தெரிவித்த தலித் இளைஞர்களை குற்றவாளியாக்கிவிட காவல்துறை பெரு முயற்சி செய்து வருகிறது என்பதை விசாரணைக்கு போன அந்த இளைஞர்கள் ஊடகங்களிடம் சொல்லி அழுதது நெஞ்சைப் பிழிகிறது! ” நீங்க ஒத்துக்கிட்டால், நாங்க இரண்டு லட்சம் பணம் தருகிறோம். அரசு வேலை வாய்ப்பை பெற்றுத் தருகிறோம்..’’என அந்த இளம் வாலிபர்கள் நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது ஏன்? இந்த அஜந்தாவை காவல்துறைக்கு போட்டுக் கொடுத்தது யார்? யாருடைய அழுத்தம் அல்லது பின்புலத்தில் விசாரணையின் போக்கு இவ்விதம் சென்றது என்ற கேள்விகளுக்கு விடை தேடினால், அது ஆர்.எஸ்.எஸ், பாஜக வைத் தான் காட்டுகிறது. திமுக அரசு சுயாதீனமாகத் தான் செயல்படுகிறது என்றால், இவ்விதம் பேசிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
சம்பவம் தெரிய வந்தவுடன் ஆர்.எஸ்.எஸ்சுக்கு வேலை செய்யும் தடா பெரியசாமியும், கருப்பு முருகானந்தமும் அந்த கிராமத்திற்கு சென்று தலித்துகளைத் தவிர்த்த மற்ற இரு சமூகத்தவரிடமும் பேசி உள்ளனர் எனத் தெரிய வருகிறது. அதன் பிறகு அவர்கள் தான், ”இந்த கிராமத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டி தலித் மக்கள் பகுதியில் தான் உள்ளது. ஆகவே, அவர்களை விசாரித்தால் தெரியா வரும்” என்ற செய்தியை பரப்பினர். அதையே, பாஜகவின் சில முக்கியஸ்தர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் மேற்கோள் காட்டி தலித் இளைஞர்கள் தண்ணீர் தொட்டி மீது ஏறி மலம் கலந்திருப்பதை கண்டறிந்த வீடியோவை பகிர்ந்தனர்! அவர்கள் காட்டிய வழியில் தான் அரசின் விசாரணையும் சென்று கொண்டுள்ளது!
ஆனால், பலதரப்பட்ட கள ஆய்வில் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் முத்தையா தலித் குடியிருப்புகளுக்கு தண்ணீர் தருவதை ஏற்கனவே விரும்பாதவராக இருந்துள்ளார் என்பதும், அதற்காகவே தலித் மக்களுக்கு சீரிய முறையில் 25 ஆண்டுகளாக தண்ணீர் வழங்கி வந்த ஒரு ஆபரேட்டைரை வேலையைவிட்டு நீக்கினார் என்பதும், தலித் மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில் தடையாக இருந்துள்ளர் என்பதும், இதனால் தனக்கு ஓட்டுபோட மறுக்கும் தலித் மக்களிடம் பகைமை பாராட்டி வந்துள்ளார் என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆனால், காவல்துறை அவரை சந்தேகிக்கவும் இல்லை, விசாரிக்கவும் இல்லை.
Also read
தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சினை நடந்தாலும், அதில் உள்ள கூற்றவாளிகளை பாதுகாக்கவும், தலித் மக்களை குற்றவாளியாக்கி சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளாக்கவுமான செயல்திட்டத்துடன் தான் இங்கு ஆர்.எஸ்.எஸ் களம் காண்கிறது! அதையே கள்ளக் குறிச்சி விவகாரத்தில் குற்றத்திற்கு சம்பந்தமில்லாத நூற்றுக்கும் மேற்பட்ட தலித் இளைஞர்களை கைது பண்ணி கொடுமைக்கு ஆளாக்கியது நடந்தது! தற்போது அது தான் இறையூர் வேங்கை வயல் நிகழ்விலும் நடக்கிறது!
தமிழ்நாட்டு அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும், காவல் துறையையும் திமுக அரசு தான் நிர்வகிக்கிறதா? அல்லது ஆர்.எஸ்.எஸ்சிடம் அடகு வைத்துவிட்டதா? என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
பட்டியல் இன மக்கள் ஓட்டு மட்டும் வேண்டும். அந்த மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் காணாத நிலையில் தான் அவர் இந்த அரசு இருக்கிறது.
கூட்டணி யில் இருந்தாலும் கம்பூனிஸ்ட் இந்த பிரச்சனையை வெளி உலகுக்கு கொண்டு வந்தது.
ஆனால் கூட்டணி தர்மத்திற்க்காக திருமாவளவன் அவர்களின் செயல்பாடு மிக மோசம்.
இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்று என சொல்லி வரும் பாஜக, சாதிய பாகுபாட்டில் திராவிட கட்சிகளை விட மிக கீழ்தரமாக நடந்து கொள்கிறது என்பதற்கு கீழையூர் , கள்ளகுறிச்சி சம்பவம் உதாரணம்.
சட்டசபையில் முதல்வர் செயல்பட்ட வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் இந்த விடயத்தில் செயல்படவேண்டும்.
மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள ஒரு துறையின் வஞ்சத்தையும் , இழிவான செயல்பாட்டை மூடிமறைக்க துணைநிற்கும் அலங்கோலத்தை சுட்டாமல் திசைதிருப்புகிறது இந்த கட்டுரை
//புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 33 கிராமங்களில் சாதியப் பாகுபாடுகள் நிலவுகிறது என்பதும், 49 கோவில்களில் தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு என்பதும், 14 கிராமங்களில் இரட்டை குவளை முறை உள்ளது என்பதும் குறுஞ்செய்தியாகவும, கடிதமாகவும் கலெக்டருக்கு ஏராளமான புகார்கள் அனுப்பட்டன! கலெக்டர் கவிதா ராமு அதன் பிறகு படுமெளனமாகி விட்டா//