ஈரோடு இடைத் தேர்தல் – முதல் பார்வை!

-சாவித்திரி கண்ணன்

காங்கிரஸ் கட்சியில் யார் வேட்பாளர்  என்பது குறித்து திமுக ஸ்டாராங்காக முடிவெடுத்த பிறகு, அதை தட்ட முடியாமல் ஏற்க வேண்டியாதாகி விட்டதாம்! இடைத் தேர்தலை திமுக அரசின் கெளரவ பிரச்சினையாக ஸ்டாலின் பார்ப்பதன் விளைவே இது! ஆட்சி அதிகாரம் இருந்தும் திமுகவிற்கு ஏன் இந்த பதற்றம்?

தங்கள் அணி வெற்றி பெறுவதற்காக திமுக கையாளும் முதல் அத்துமீறலாகவே இதை பார்க்கத் தோன்றுகிறது!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனே எனக்கு 74 வயதாகிவிட்டது. உடல் நலனும் சரியில்லை. பல உடல் நலப் பிரச்சினைகள் இருப்பதால் நான் நிற்கவில்லை. என் இரண்டாவது மகனுக்கு வாய்ப்பு தாருங்கள் என கேட்ட நிலையில், தற்போது அவர் வலுக்கட்டாயமாக களத்தில் நிற்க வைக்கப்பட்டு உள்ளார்.

மிகவும் பரிச்சியமான ஒரு முகம்! துணிச்சலான, அதிரடி பேச்சுக்கு சொந்தக்காரர் என்பதைத் தவிர்த்து, ஈ.வி.கே.எஸ் ஒரு நல்ல மக்கள் தொண்டரல்ல! அவரால் பிரச்சாரத்தில் கூட முழுமையாக எல்லா இடங்களுக்கும் வர முடியாது. பாராளுமன்றத் தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு பறிபோனதற்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்பட்டது, அவரால் பிரச்சாரத்திற்கு கூட முழுமையாக வர முடியாமை! அவருக்காக மற்றவர்கள் மணிக் கணக்கில் காத்திருந்து சோர்வடைந்தனர்! ஜே.எம்.ஹாரூண் அந்தத் தொகுதியைக் கேட்டு இருந்தார்! அவருக்கு கிடைத்திருந்தால், ஒ.பி.எஸ் மகனை ஓவர்டேக் செய்திருப்பார் என்பது மட்டுமல்ல, கடைசி நேரத்தில் ரவீந்திரநாத் செய்த தில்லுமுல்லுகளுக்கும் ‘செக்’ வைத்திருப்பார்!

இந்த ஈரோடு கிழக்கு தொகுதியை எடுத்துக் கொண்டால், அங்கு மக்கள் ராஜன் என்ற காங்கிரஸ்காரர் தொகுதி மக்களிடம் நன்கு பெயரெடுத்த களச் செயற்பாட்டாளர் எனத் தெரிய வருகிறது! பல ஆண்டுகளாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அயராது பணியாற்றி தொடர்ந்து வாய்ப்புக்காக முட்டி மோதி வருகிறார்! நியாயப்படி அரசியலே வேண்டாம் என விலகி தொழில் செய்து கொண்டிருந்த இளைய மகனை வம்படியாக இழுத்து வந்து சீட் கேட்ட ஈ.வி.கே.எஸ், மக்கள் ராஜனுக்கு தாருங்கள் எனக் கேட்டிருந்தால் அது காங்கிரஸின் எதிர்காலத்திற்கே சிறப்பாக இருந்திருக்கும்!

ராகுல் கந்தியுடன் மக்கள் ராஜன்.

எந்த தொகுதி மக்களுக்கும் ஒரு நல்ல களச் செயற்பாட்டாளர் தான் தேவைப்படுவாரே அன்றி, வெற்று பேச்சு வீணரல்ல! உண்மையில் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களைக் கடந்து, யதார்தத்தை தரிசிக்கும் மனநிலையில் அரசியல் தலைமைகளும் இல்லை. மெயின் ஸ்டீரீம் மீடியாக்களும் இல்லை! நிச்சயமாகச் சொல்வேன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு பளபளக்கும் அட்டைக் கத்தி தானே அன்றி, செயல் வீரல்ல!

இந்த இடைத் தேர்தலுக்கு திமுக படுபயங்கர முஸ்தீபுகளை உடனே செய்யத் தொடங்கிவிட்டது. 33 பெருந்தலைகளைக் கொண்ட – ஏகப்பட்ட அமைச்சர்களை உள்ளடக்கிய – தேர்தல் பணிக் குழுவாம்!

கள்ளக் குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரம், அதைத் தொடர்ந்து பள்ளிக் கூடத்தை தீவைத்து எரித்து, அதை தலித் இளைஞர்கள் மீது திசை திருப்பிய விவகாரம், வேங்கை வயல் குடி நீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் ..போன்ற மக்கள் இதயங்களை உலுக்கும் எந்த விவகாரத்திலும் நீதியை நிலை நாட்ட, குற்றவாளிகளை தண்டிக்க களம் காணாத – குறைந்தபட்சம் அக்கறை கூட காட்டாத திமுக தலைவர்கள் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் ரோடு, ரோடாக வலம் வர உள்ளனர். எளிய மக்கள் பாதிக்கப்படும் போது இறங்கி வர மறுக்கும் ஆட்சியாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் பெரும் சரிவை சந்தித்துள்ளதைப் பற்றி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாதது ஆச்சரியமாக உள்ளது.

தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை சந்திக்க தயாராகும் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே கிடையாதா?

ஏழையின் சொல் அம்பலத்தில் ஏறாது! ஊடகங்களுக்கு இனி, நல்ல தீனி கிடைக்கும். தேர்தல் முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது! நிதர்சனங்களை நினைத்துப் பார்க்க யாருக்கு நேரம் இருக்கப் போகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time