தேசீய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தால், நீதித்துறையில் அரசியல் விளையாட்டுகளை நிகழ்த்த துடிக்கிறது பாஜக அரசு! இந்த சட்டம் நீதித் துறையில் தற்போதுள்ள கொஞ்ச நஞ்ச சுதந்திரத்தையும் பறித்து விடும்! ஜெயிக்கப் போவது யார்? சுதந்திரமான நீதித் துறையா? சூது நிறைந்த பாஜக அரசின் சர்வாதிகாரமா?
ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறையும் நீதிபதிகளும் எந்தவித சார்பும் இன்றி சுதந்திரமாக ,நேர்மையாக செயல்படுவது மிக அவசியம் . நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டு மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தவறுகள் திருத்தப்படும், உரிமை மீறல்கள் தடுக்கப்படும் , அரசு மற்றும் பொது மக்களின் நேர்மையான செயல்பாடுகள் நெறிபடுத்தப்படும். ஆனால், தற்போதைய பாஜக அரசு இதை விரும்பவில்லை!
இன்று இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ‘ கொலீஜியம்’ முறையில், உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய அரசியல் சாசன. நீதிமன்ற நீதிபதிகளை – Judges of the Constitutional Courts- நியமிக்கும் அதிகாரம் கொலீஜியத்திடம் (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அவருக்கு அடுத்த மூத்த நீதிபதிகள் கொண்ட அமைப்பு) உள்ளது.
அரசிற்கு கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளின் பெயர்களை மறு பரிசீலனை கேட்க உரிமை உள்ளதே தவிர, புதிய நபர்களை பரிந்துரைக்கும் உரிமை இல்லை.
கேட்கப்பட்ட மறு பரிசீலனையை கொலீஜியம் நிராகரித்து, மீண்டும் முன்வைத்த பரிந்துரைகளை உறுதிப்படுத்தினால் அதை ஏற்று அமுல்படுத்துவதை தவிர, அரசிற்கு வேறு வழி இல்லை.
இதில் கால கெடு வரையரைக்கப்படாத்தால் அரசு வேண்டியவர்களை அரைமணி நேரத்தில் நியமித்தும் வேண்டாதவர்களை ஆண்டுக் கணக்கில் இழுத்தடிப்பு செய்து தனது நோக்கத்தை நிறைவேற்றி கொள்கிறது.
இன்று இஸ்ரேல் தகிக்கிறது! அங்கு லட்சக்கணக்கான மக்கள் வீதிகளுக்கு வந்து நெத்தன்யாகு அரசு, நீதி துறையை முடக்குவதைக் கண்டித்து போராடி வருகின்றனர். நீதிமன்றங்களின் சுதந்திரத்தையும், நேர்மையையும் குலைக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து போராட இஸ்ரேல் நாட்டு மக்கள் துணிந்துள்ளனர்.
ஊழல் வழக்கு சம்பந்தமான நீதி மன்ற உத்தரவினால் பதவி இழந்த நெத்தன்யாகு இன்று மத வெறி, இன வெறியை தூக்கி பிடிக்கும் சில கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு, ஆட்சியில் அமர்ந்துள்ளார். சுதந்திரமான நீதி துறை அவருக்கு “வேப்பங்காயாக” கசப்பதால், நீதிபதிகள் மற்றும் நீதி மன்றங்களின் சுதந்திரமான செயல்பாட்டை முடக்கும் சட்ட திருத்தங்கள் கொண்டு வருகிறார்.
இதைப் போன்றே நீதி துறையின் சுதந்திரத்தை முடக்கி அத் துறையை ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாற்ற விழைந்துள்ளது போலந்து அரசு. போலந்து நாட்டு மக்களும், போலந்து அரசின் நீதி துறையை முடக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.
இந்த இரண்டு நாட்டின் ஆட்சியாளர்கள் விரும்புவதெல்லாம் சுதந்திர சிந்தனை இல்லாத, அரசின் “கைப்பாவை” யாகத் திகழும் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் தான். இந்தியாவின் தற்போதைய பாஜக அரசும் இவ்விதமே எண்ணுகிறது!
இந்திய மக்களும் இவ்விரு நாட்டு மக்களைப் போல் வீதிகளில் இறங்கும் நிலை வந்துவிடும் என்றே தோன்றுகிறது.
இங்கும் நீதி துறை செயல்பாட்டின் மீதும், நீதிபதிகள் மீதும் சந்தேகங்களையும் அபாண்டமான குற்றச்சாட்டுகளையும் ஆளுகின்ற மோடி அரசும், பாஜகவினரும் சமீப காலமாக அள்ளி வீசுவதை நாம் பார்க்கிறோம்.
இங்கே ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு நீதித்துறை செக் வைக்கும் போதெல்லாம்,
“நீதி துறை வரம்பு மீறுகிறது” ,
” ஜனநாயகத்தை புறந்தள்ளும் நீதிமன்ற தீர்ப்புகள்”
” பாராளுமன்றத்தை மறுதலிக்கும் நீதிமன்ற தீர்ப்புகள்”
” அரசியல் சாசனத்தை வளைக்கும் உச்ச நீதி மன்றம்”
என பல வகையான குற்றச்சாட்டுகளை குறிப்பாக ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு அவ்வப்போது தனது ட்விட்டர் பதிவிலும், பேட்டிகளிலும் வெளியிட்டு வருகிறார்.
புதிதாகக் துணை குடியரசு தலைவராக ” தேர்வு” செய்யப்பட்ட ஜெகதீப் தங்கரும் தேசீய நீதிபதிகள் நியமன ஆணையம் National Judicial Appointments Commission சட்டம் செல்லாது’ எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை கடுமையாகச் சாடியுள்ளார்.
ஆட்சியின் உச்சத்தில் இருக்கும் மோடி, வாய் மூடி இருந்து கொண்டே , தனது சகாக்களில் ஒருவரான கிரண் ரிஜிஜு மூலமாக கணைகளை தொடுத்தாலும், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்ற வகையில், கிரண் ரிஜிஜுவின் கருத்தெல்லாம் பாஜக அரசின் கருத்துதான்!
இவருடைய பதிவுகள், பேட்டிகள் பெரும்பாலும் நீதித்துறை நியமனங்களில் நீதிபதிகளை “வழிக்கு” கொண்டு வருவதை எதிர் நோக்கியே இருக்கிறது.
‘கொலீஜியம்’ தனது பரிந்துரைகள் மீது, அரசின் அலட்சிய போக்கையும் காரணமற்ற நிராகரிப்புகள் மற்றும் தாமதங்களை வெளிப்படுத்திய பொழுது அதற்கு முறையான பதில் கிரண்ரிஜிஜுவிடம் இல்லை. ஆனாலும், நீதித் துறை மீதான தாக்குதல்கள் தொடர்கிறது.
2015ம் ஆண்டு ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு , தேசீய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் செல்லாது , அரசியல் சட்ட சாசனத்திற்கு புறம்பானது என்று அளித்த தீர்ப்பை இப்பொழுது, கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் கழித்து, துணை குடியரசு ஜெகதீப் தங்கர் குறை கூறுவதன் நோக்கமும், பொருளும் என்ன?

மற்றுமொரு காரணம் அரசு இன்று ஒரு மிகப்பெரிய லிட்டிகண்ட் டாக -வழக்காடும் வாதியாக நீதி மன்றங்களுக்கு வருகிறது. அப்படி வரும் வாதியே தன் வழக்குகளை யார் விசாரித்து தீர்க்க வேண்டும் என்று கூறுவது எந்த வகை நியாயம்?
கொலீஜியம் முறையே 1970களில் இந்திரா காந்தி முன்வைத்த கமிட்டட் ஜுடீசியரி பற்றுக் கொண்ட நீதி முறை என்ற நிலைப்பாட்டிற்கு எதிர்வினையாக சுதந்திரமான சார்பற்ற நீதிமுறையை நிலைநிறுத்த உச்ச நீதி மன்றம் ஏற்படுத்தியது தான்.
உச்ச நீதி மன்றத்தின் இந்த சட்டமுறையை “நீதிமுறையின் சுதந்திரத்தையும், நடு நிலை தன்மையையும் பேணி பாதுகாக்கும் வழிமுறை என்று, அன்றைய எதிர்கட்சிகளான ஜனதா கட்சியும், ஜனசங்கமும் வரவேற்றன என்பதும் வரலாறு.
கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு 2014ல் மோடி ஆட்சிக்கட்டில் ஏறியவுடன், நீதிபதிகள் நியமனத்தில் அரசின் ( Executive) பங்கு முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை 99வது அரசியல் சாசன திருத்த மசோதாவாக மோடி அரசு கொண்டு வந்தது. அப்பொழுதும் எந்த வகையான முறையான கலந்துரையாடலோ கருத்து பரிமாற்றமோ ஏதுமில்லை. சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுக்கொண்ட நடைமுறையை எட்டுவதற்கு எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.
எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில், இந்த மசோதா அதிகார வெறியோடு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
ஆனால், இச்சட்ட திருத்தம் அரசியல் சாசனத்திற்கு முரணானது, அரசியல் சாசனத்தின் ‘அடிப்படைக் கோட்பாடு’ Basic Structure doctrine of Constitution ஐ இது மீறுகிறது என்று கூறி, ஒன்பது நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இச்சட்டத்தை நிராகரித்தது.
இந்த அடிப்படை கோட்பாடு என்ற உச்ச நீதிமன்ற வரையறையே அன்றிருந்த பிரதமரின் சர்வாதிகார போக்கிற்கு கொடுத்த பதிலடிதான். ஆகவே, இன்றைய அதிகார வெறியர்களுக்கும் இது கசந்ததில் வியப்பில்லை!
தற்போதைய கொலீஜிய முறை மிக சிறந்தது என்று யாரும் வாதிடவில்லை , அது சாலச்சிறந்த முறையும் அல்ல. குறைபாடுகள் அதில் உள்ளன, மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் ஆட்சியாளர்களுக்கு நீதிபதிகளை தேர்வு செய்யும் முக்கியமான பங்கை அளித்து, நீதிபதிகளின் பங்கை மறுதலித்தது.
நீதிபதிகளை நியமிப்பதில் ஏற்கனவே உள்ள கொலீஜியத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படாததால், அவர்கள் பரிந்துரைகளை ஆட்சியிலிருப்போர் நிராகரிக்க இச்சட்டம் வகை செய்கிறது.எனவே, நீதிமுறையின் உரிமையையும், சுதந்திரத்தையும் இம்மசோதா பறிக்கிறது. சுதந்திரமான நீதிமுறை அரசியல் சாசன அடிப்படைக்கோட்பாடுகளில் ஒன்று . எனவே, இச்சட்ட திருத்தம் அரசியல் சாசனத்திறகு முரணானது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
சுதந்திரமான நீதிமுறைக்கு (independent Judiciary) நீதிபதிகள் யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக இருப்பது அவசியம். நீதிபதிகள் நியமனத்தில் அரசில்வாதிகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டால், பதவி கிடைத்த நீதிபதிகள் தங்களை பதவியில் அமர்த்தியவர்களுக்கு கட்டுபட்டே நடப்பார்கள். ஆகவே, இது நீதிமுறையின் சுதந்திர போக்கை சிதைக்கிறது என்று வாதிட்டது உச்ச நீதிமன்றம்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் கட்சியினருக்கு நீதிபதிகள் நியமனத்தில் எந்த பங்கும் கிடையாதா?
ஆளுங்கட்சிக்கு அந்த உரிமை கிடையாதா?
ஆளுங்கட்சியும் பிரதான எதிர்கட்சியும் இணைந்து தேர்வு செய்ய முடியாதா?
அனைத்து கட்சிகளும் ஒத்து கொண்டு தேர்வு நடத்த முடியாதா?
நீதிபதிகள் மட்டுமே தான் நீதிபதிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமா?
போன்ற பல கேள்விகளுக்கு தெளிவான பதில் ஏதும் அளிக்காத இந்த தீர்ப்பு, இரண்டு விஷயங்களை கூறியது.
# ‘ கொலீஜியம்’ அமைப்பு சாலச்சிறந்தது அல்ல(Not Perfect). அதில் குறைபாடுகள் உள்ளன.
# NJAC சட்டம் அதற்கு சரியான மாற்றல்ல, நீதிபதிகளின் சுதந்திர நீதி முறைமையை சீர்குலைக்காத ஒரு சட்ட வரைவை அனைவரையும் கலந்தாலோசித்து அரசு கொண்டு வரலாம் , அதற்கான கதவு திறந்தே உள்ளது எனக் கூறியது.
அதுவரை , நீதித்துறை மற்றும் செயல்துறை(Executive)- அதாவது ஆள்பவர்கள்- இடையே ஒரு சமநிலை நிலவ ஒரு வழிமுறையை ஏற்படுத்த நீதிமன்றம் முனைந்தது. ஆனால் ஒன்றிய அரசு வழிமுறையை வரைவதும் தீர்மானிப்பதும் அரசின் உரிமை அதில் நீதி மன்றம தலையிட முடியாது என வாதிட்டது.
சட்ட வல்லுனர்கள், வழக்கறிஞர்கள்,நீதிபதிகள் ,முன்னாள் அதிகாரிகள் ,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 11,500 பக்கங்களை கொண்ட ஆலோசனைகளை நீதிமன்றம் அரசிடம் கொடுத்து புதிய வழிமுறைகளை ஏற்படுத்த -Memorandum of Procedure- பணித்தது. புதிய சட்ட வரைவையும் தயாரிக்க தூண்டியது நீதி மன்றம்.
ஆனால், கடந்த ஏழு வருட காலமாக தூங்கி கொண்டிருந்த மோடி அரசு 11,500 பக்க ஆலோசனைகளை பரிசீலித்ததாகவே இல்லை, எந்த கலந்தாலோசனையும் நடைபெறவில்லை. சட்டத்தின் மாண்பு மீது அக்கறையும் பற்றும் இருந்திருந்தால் இன்றைக்கு ஆட்சியில் இருப்போர் அதை செய்திருக்க வேண்டும் .
புதிய சட்ட வரைவை அவர்கள் தயாரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இருக்க வேண்டும் . அதைவிடுத்து நீதிபதிகளுக்கு மறைமுக அழுத்தங்கள் கொடுப்பதும், நியமன பரிந்துரைகள் மீது நியாயமான நடவடிக்கைகள் எடுக்காமல், பாரபட்சம் காட்டி தங்கள் நிலைபாட்டை ஏற்றுக் கொள்பவர்களுக்கு பதவியும் ஒத்து போகாதவர்களுக்கு பதவி மறுப்பும் தான் இதுவரை ஒன்றய அரசு காட்டிய நடைமுறையாக உள்ளது..
ஊழல்களை மூடி மறைத்த ரஃபேல் வழக்கு,
தகுதியற்ற சிபிஐ இயக்குனர் நியமன வழக்கு,
பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதை நியாயப்படுத்திய அயோத்தி வழக்கு
ஆகியவற்றின் தீர்ப்பு வந்த போதெல்லாம் நீதித்துறையை போற்றிப் பாடிய பாஜக, இன்று தங்களுக்கு எதிராக ஒரு சில தீர்ப்புகள் வரும் போது மட்டும், நீதிபதிகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று நீதிதுறையை மறைமுகமாக மிரட்டுவது ஏன்?

நாடாளுமன்றம் மட்டுமல்ல, ஆளுவோருக்கு பதில் சொல்ல தேவையில்லாத, சுய அதிகாரங்கள் பெற்ற அமைப்புகளான தேர்தல் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம், தகவல் ஆணையம், ஆடிட்டர் ஜெனரல், ரிசர்வ் வங்கி, அட்டர்னி ஜெனரல் போன்ற அமைப்புகளும் இதில் முக்கியமானவை . இதற்கு முத்தாய்ப்பாக இந்த அமைப்புகள் யாவும் அரசியல் சாசன முறையில் இயங்குகிறதா என்று கண்காணிக்கும் அதிகாரமுடைய நீதி முறைமை, இவை யாவும் சேர்ந்தது தான் ஜனநாயக ஆட்சி முறையாகும்.
இன்று நீதிதுறை தவிர்த்த மற்ற சுய அதிகாரமுடைய அமைப்புகள் அனைத்தும் மத்தியில் ஆளுவோரின் கைப்பாவையாக மாற்றப்பட்ட நிலையில், உயர் அதிகார அமைப்புகள் Civil service அரசியல் தலைமையிடம் அடிபணிந்த நிலையில், எஞ்சியிருப்பது இந்திய நீதி துறை ஒன்று தான் .
அதையும் சர்வாதிகாரமாக கைப்பற்றவே இத்தனை முஸ்தீபுகளும் நடக்கின்றன!. நீதிதுறையின் மீது தொடுக்கப்படும் அரசியல் தாக்குதல்கள் எல்லாம் ஒரு சட்ட மோதலை நோக்கி நாட்டை இட்டுச்செல்கிறது. ஏனெனில், அரசியல் தலைமை, நீதிதுறை, நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகள் ஆகிய அரசியல் சாசன அமைப்புகள் ஒன்றுக்கொன்று மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது.
Also read
அரசியல் சிக்கல்களை , வேறுபாட்டை, சட்டம் வகுத்துள்ள வழியில்தான் தீர்க்க வேண்டும். சட்டரீதியாக அனைவரையும் கலந்தாலோசித்து எதிர்கட்சிகள், சட்ட வல்லுனர்கள்,முன்னாள் நீதியரசர்கள்,முன்னாள் அதிகாரிகள்,சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகிய அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நடைமுறையை தீட்டி அதை சட்டமாக்க நாடாளுமன்றத்தை அணுகுவதை விடுத்து, மிரட்டல்களிலும் தெருச்சண்டையிலும் இறங்கி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறது ஆளும் கும்பல்.
இது பெரும் விபரீத விளைவுகளை ஏற்படுத்து முன்னர், நீதிதுறை மீதான தாக்குதல்கள் அத்து மீறி போவதை தடுக்க வேண்டிய கடமை இந்திய மக்களுக்கு உள்ளது . சர்வாதிகாரம் எந்த வடிவில் வந்தாலும் அதை பொறுக்க மாட்டோம் என வீதிகளில் இறங்க வேண்டிய கட்டாயம் நமக்கும் உருவாகியுள்ளது.
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
இங்கு மக்களை அநீதிக்கு எதிராக ஒன்று திரட்டுவது பெரும் சவாலாக உள்ளது.மனிதன் தீவாகி விட்டான்.ஆடம்பர வாழ்க்கை வாழும் மக்கள் சுயநல வாதிகளாக
மாறி விட்டார்கள்.மறுபுறம் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக மாறிவிட்ட ஏழைகள்.
Your explanation is organized very easy to understand!!! I understood at once. Could you please post about casinocommunity ?? Please!!