மதுரை எய்ம்ஸ் உண்மை நிலவரம் என்ன?

-சாவித்திரி கண்ணன்

மதுரை எய்ம்ஸ் என்பது வெறும் காற்றில் கரைந்த அறிவிப்பா? வெறும் கனவா? அறிவிக்கப்பட்டு எட்டாண்டுகளும், அடிக்கல் நாட்டப்பட்டு நான்காண்டுகளும் கடந்து விட்டன! சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி மாபெரும் போராட்டத்தை நடத்தியது. உண்மையில், இதில் என்ன தான் நடந்தது? தாமதத்திற்கு என்ன காரணம்?

தென் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையின் விளைவாக கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது! ஆனால், மூன்றாண்டுகள் எந்த நகர்வுமின்றி கிடப்பில் போட்டுவிட்டனர். பல்வேறுவிதமான நினைவூட்டலுக்கு பிறகு  தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018-ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது.

அதன் பின் பிரதமர் மோடி, 2019 ஜனவரி 27 ஆம் தேதி மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டி இரண்டரை ஆண்டுகள் வரை அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையில்  ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு மார்ச்சில் தான் செய்யப்பட்டது.

தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் உயர் மருத்துவ வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை 750 ஏக்கர் படுக்கைகளுடன் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. 2019ல் அடிக்கல் நாட்டி நான்காண்டுகள்   கடந்து விட்டன! இன்னும் அடிப்படை கட்டுமானம் கூட எழுப்பப்படவில்லை! வெறும் செங்கல் சுற்றுச் சுவருடன் வெற்று மைதானம் பல் இளிக்கிறது!

ஜே.பி. நட்டாவால் 95% பணிகள் முடிவடைந்ததாக சொல்லப்பட்ட எய்ம்ஸ் எங்கே எனக் கேட்கும் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர்

மதுரை எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட அதே ஆண்டில் தான் ஜம்மு- காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அஸ்ஸாம், பீகார் மாநிலங்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித் தருவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அவையனைத்தும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, ஜரூராக செயல்பாட்டிற்கு வந்துவிட்டன! ஆனால், மதுரை எய்ம்ஸ் மட்டும் தான் அடிக்கல் நாட்டப்பட்டு அம்போவென விடப்பட்ட ஒரே இடமாகும்!

மதுரையில் எய்ம்ஸ் அறிவிப்புக்கு பிறகு, அடுத்தடுத்தகட்டமாக  சொல்லப்பட்ட குஜராத், ஜார்க்கண்ட், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் எய்ம்ஸ் கட்டுமானங்களும்  நிறைவடைந்து செயல்பாட்டிற்கே வந்து விட்டன. மதுரை எய்ம்ஸ் திட்டம் மட்டுமே கடந்த 4 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் அங்கமாக தமிழ்நாட்டை பாஜக அரசு கருதுகிறதா? இல்லையா? எனச் சந்தேகம் வலுக்கிறது.

மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானங்களை மத்திய பாஜக அரசு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்திய நிலையில், மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் மத்திய அரசின் நிதி கிடையாதாம்! ஜப்பான் நாட்டு ‘ஜைகா’  என்கிற கார்ப்பரேட் நிறுவனத்தைக் கைகாட்டி, ”அவர்கள் தான் உங்களுக்கு கட்டித் தருவார்கள்” என்று சொல்லி சமாளித்து வந்தது பாஜக அரசு!

மதுரை எய்ம்ஸ் எங்கே? எனக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தொடர் முழக்க போராட்டம்!

இந்த ஓரவஞ்சனைக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தமிழ்நாட்டின் பாஜக, அதிமுக,வினர் சைலண்ட் மூடில் உள்ளனர். திமுக அரசும் தொடர்ந்து நினைவூட்டல் செய்கிறது. மார்க்சிஸ்ட் எம்பி.சு.வெங்கடேசன் அயராமல் பாராலுமன்றத்தில் மதுரை எய்ம்ஸ்க்காக குரல் கொடுத்து வருகிறார். ஆனால், அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் உள்ளன! இந்த நிலையில் தமிழக பாஜகவும், அதிமுகவும் திமுக அரசு மத்திய அரசுக்கு போதுமான அழுத்தம் தரவில்லை என பிரச்சினையை திருப்பிவிடுகின்றனர்.

ஜப்பான் நிறுவனம் நிதியை எப்போதோ தந்துவிட்டது என்ற நிதர்சனம் வெளிப்பட்ட நிலையில், மத்திய பாஜக அரசு, ”சரி, சரி, இதோ உடனே கட்டித் தருகிறோம்” என்றது!

ஆனால்,சென்ற ஆண்டு செப்டம்பர் மதுரை வந்த பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா  “முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 1,264 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது என்பதில் சிக்கல் இருந்தது. இதைத் தொடர்ந்து அதை மதுரையில் கட்ட நினைத்தோம். உங்கள் உதவியால், நாங்கள் அதில் வெற்றி பெற்றோம். இன்று எய்ம்ஸின் 95% பணிகள் மிக விரைவில் முடிவடைந்துள்ளன. அது இந்திய பிரதமரால் விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்,” என்றார்.

இந்தப் பேச்சு தமிழக மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது! ‘ஏதோ புராண கதை போல வெறும் புருடாவாகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானமும் போய்விடும் போல’ என கலக்கமடைந்தனர். ஏனெனில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடர்பான புளுபிரிண்டோ, வரைபடமோ கூட இன்னும் தயாராகவில்லை என்பதே நிதர்சனமாகவுள்ளது!

இதை உணர்த்தும் விதமாக தமிழக எம்.பிக்கள் சு.வெங்கடேசனும், மாணிக்கம் தாக்கூரும் மதுரை எய்ம்ஸ் கட்டப்பட்டதாக சொல்லப்பட்ட வெற்று நிலப்பரப்பிற்கு ‘விசிட்’ செய்து, ”எங்கே எய்ம்ஸ்?” என்றனர்.

ஜே.பி. நட்டாவின் பொறுப்பற்ற பேச்சு பலமான கிண்டல், கேலிக்கு உள்ளானது. மதுரை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் என்னாச்சு?  என்று கேட்டு வழக்கு தொடரப்பட்டதால் உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டது. உடனே, மத்திய பாஜக அரசு சுதாரித்துக் கொண்டு, ”நாங்க ஒன்னும் சும்மா இல்லையாக்கும். இதோ நடவடிக்கையில் இறங்கி விட்டோம்” என கட்டப்படாத மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் வெங்கட்ராமன் என்பவரை நியமனம் செய்து அறிவித்தது!

மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை மக்கள் கூட்டத்தால் பிதுங்கி வழிகிறது. மதுரை சுற்று வட்டார கிராமங்களுக்கு அது ஒன்று மட்டும் போதுமானதல்ல. எய்ம்ஸ் வருமானால் தென் தமிழகத்தின் 15 மாவட்டங்கள் இதனால் பலனடையும். தரமான மருத்துவ சிகிச்சையை எதிர் நோக்கி தமிழக மக்கள் தவமாய் தவம் கிடக்கிறார்கள்! ஆகவே, எய்ம்ஸ் மருத்துவமனை என்பது பெரும் ஏக்கமாகவே மக்கள் மனதில் நிலை கொண்டுள்ளது.

தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதன் மூலம் தரமான மருத்துவம் மட்டுமல்ல, அதில், பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், மருத்துவப் பணியாளர்கள், லேப்-டெக்னீசியன்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், சிப்பந்திகள் மற்றும் எய்ம்ஸ் கல்லூரிக்கான பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என பல்லாயிரம் பேருக்கான வேலை வாய்ப்பாகவும் அது அமையும்! மேலும், இந்த மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் ஏராளமானோருக்கும் தொழில் வாய்ப்பு அமையும்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு தற்போதைய நிலையில் சுமார் 2,000 கோடிகள் தேவைப்படும். அதன் முதல்கட்டமாக, சில நூறு கோடிகளாவது வரும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டால் தான், திட்டத்தின் துவக்கமே நிகழும்! அப்படி துவங்கினாலும், கட்டுமானம் முடிய ஐந்தாண்டுகள் ஆகும்! மதுரையில் எய்ம்ஸ் என்பதில் பாஜக அரசு முழு மனது வைத்தால் ஒழிய, சாத்தியமில்லை.

‘தமிழ்நாட்டு மக்கள் நமக்கு ஓட்டு போடுவதில்லை. நோட்டாவிற்கு கீழ் தான் நம்முடைய வாக்கு வங்கியை வைத்துள்ளனர். ஆகவே, நம்மை ஆதரிக்காத தமிழக மக்களுக்கு எதற்கு நாம் எய்ம்ஸ் கட்டித் தர வேண்டும்’ என மத்திய ஆட்சியாளர்கள் கருதுவதாகத் தெரிகிறது. உண்மையில், மத்திய அரசுக்கு ஜி.எஸ்டி வரியை மிக அதிகமாகத் தரும் மாநிலங்களில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்த நிலையில் தமிழகம் உள்ளது. தமிழகம் அள்ளித் தந்த நிதியின் சிறு துளியை ஒதுக்கினாலே கூடப் போதும், மதுரை எய்ம்ஸ் கம்பீரமாக எழுந்து நிற்கும்.

ஆக, மதுரை எய்ம்ஸ் என்பது மத்திய பாஜக அரசு நமக்கு தரும் பிச்சை அல்ல! இன்னும் சொல்லப் போனால், தமிழக மக்கள் தரும் அதீத வரியில் இருந்து தான் பின் தங்கிய பல மாநிலங்களுக்கு அதிக நிதி தரப்படுகிறது. ஆயினும், தமிழகம் ஏனோ வஞ்சிக்கபடுகிறது.

குறைந்தபட்ச நாணயமோ, நம்பகத் தன்மையோ கூட இல்லாத இந்த நடிப்பு சுதேசிகள் இன்னும் எத்தனை காலம் தான் நம்மை ஏய்த்துப் பிழைப்பார்களோ..!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time