பனைவளத்தை படுகுழிக்குத் தள்ளியவர் எம்.ஜி.ஆர் தான்! – நல்லுசாமி

சாவித்திரி கண்ணன்

கற்பகத் தருவாக கருதப்பட்ட பனைமரங்கள் தற்போது அழிவின் விளிம்பில் நிற்கின்றன! அடி முதல் நுனி வரை அற்புத பயன் தரும் நம் பாரம்பரிய பனையைக் காப்பதற்கு ஒரு போர்க்கால நடவடிக்கை தேவைப்படுகிறது. எட்டுகோடி பனை மரங்கள் இருந்த தமிழகத்தில் தற்போது சுமார் இரண்டரை கோடி பனைகள் தான் உள்ளன. இது இன்னும் பேரழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதன் அழிவுக்கு வித்திட்டவர் எம்ஜிஆர் தான்..தான் கட்டமைக்க விரும்பிய சாராய சாம்ராஜ்யத்திற்காக பனை வளத்திற்கு சாவுமணி அடித்தார்…இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சமீபகாலமாக விடுதலை சிறுத்தைகள்,நாம் தமிழர்,பா.ம.க போன்ற அரசியல் இயக்கங்கள்,தன்னார்வ தொண்டுநிறுவனங்கள்,விவசாய அமைப்புகள்மற்றும் தனி நபர்கள் லட்சக்கணக்கில் பனைவிதைத்து, பனை வளர்ப்பை ஒரு இயக்கமாக முன்னெடுத்துள்ளனர்.பனைமரம் தமிழகத்தின் அடையாளமாகும்! அதனால் தான் அது தமிழக அரசின் மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

‘கற்பகத் தரு’என்றும்,’இயற்கை தெய்வம்’என்றும் தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட பனை இன்று அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. ஆனால்அதே சமயம் அதை அழிவில் இருந்து மீட்டுத் தீருவதை லட்சிய நோக்கமாக கொண்ட இயற்கை ஆர்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர்.

தலைகீழ் மாற்றங்கள்;

விவசாயப்  போராளியும், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லுசாமி அவர்களிடம் பேசும்போது,‘’1960 களில் தான் வெள்ளை சீனி பிரபலப்படுத்தப்பட்டது. அது வரையிலும் எல்லோர் வீடுகளிலும் காபி என்றால்அது கருப்பட்டி காபிதான்! அந்தச்சுவைக்கு ஈடு இணை இல்லை.அதே காலகட்டத்தில் கரும்பு பயிரை வளர்க்க அரசு ஊக்கப்படுத்தியது. அது‘பணப்பயிர்’ என வேளாண்அதிகாரிகள்விவசாயிகளுக்கு ஆசைகாட்டி, வளர்க்கச் சொன்னார்கள்.அப்படிவளர்த்தால் கரும்பு ஆலைகளே உங்களிடத்தில் வந்து கொள்முதல் செய்து கையோடு பணம் தருவார்கள் என்றனர். கரும்பிலிருந்து வெள்ளைச் சீனிமட்டும் கிடைக்கவில்லை.அதன் சக்கையிலிருந்து மொலாசஸ்,எத்தனால் போன்றவைகளும் கிடைத்தன. இதில் வேறு சில அனுகூலங்களும் உள்ளன. குறிப்பாக இவை மதுபான தொழிற்சாலைகள் உள்ளிட்டதொழிற்சாலைக்கு பயன்பட்டன என்பது கவனத்திற்குரியது.

இந்தவெள்ளைச்சீனியை மக்கள் முதலில் விரும்பவில்லை.ஆனால்,அதற்கு ஒரு மவுசு வலிந்து ஏற்படுத்தப்பட்டது. கருப்பட்டி காபி – 3 பைசா, சீமைச்சீனி காபி -5 பைசா! என்று ஓட்டல்களில் போர்டு மாட்டினார்கள். அதனால், வெள்ளச்சீனி கருப்பட்டியைக் காட்டிலும் உசந்தது என்ற மாயை உருவானது. ஆனால்,தற்போது பனை அழிவுக்குண்டான நிலையில் தான்,‘’ஐயோ வெள்ளை சீனி  ஆபத்து! பனை வெல்லம் எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை..’’என்று,வெள்ளைசீனி விலைகிலோ 45 க்கு மலிவாகக் கிடைத்தாலும், கிலோ ரூ350கொடுத்து பனைவெல்லம் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

பனையின் இன்றைய அவல நிலைக்கு எம்ஜிஆர் தான் முழு முதற் காரணமாவர். காரணம் அவர் அயல் நாட்டுபாணியிலான மது விற்பனையை அதிகரிக்க வேண்டுமானால் கள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும்,அப்போது தான் கள் குடிப்பவர்கள் எல்லோரும் வேறு வழியின்றி இந்த மதுவை வாங்குவார்கள் என கணக்கு போட்டு,கள்ளுக்கு தடை விதித்தார்.அத்துடன் நிற்காமல் பனை மரம் ஏறுவதையே ஒரு குற்றச் செயலாக அறிவித்தார்.

பனை அழிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் எம்ஜிஆர் என்றால்,அவரையடுத்து வந்த ஆட்சியாளர்களும் இன்று வரை அந்த தடையை தொடர்வது தான் கொடுமை. நமது பக்கத்து மானிலங்கள் எவையும் பனைக்கு இன்று வரை தடை விதிக்கவில்லை. ஆனால்,எம்.ஜி.ஏஆர் போட்டதடை இன்று வரை தமிழகத்தில் எடுக்கப்படவில்லை,அப்படியே தொடர்கிறது. காரணம் மது விற்பனைக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்ற கெடு நோக்கம் தான்! அதனால் தான் இங்கு நீரா பானம்,பத நீர் போன்றவற்றின் விற்பனைக்காகக் கூட மரம் ஏற முடிவதில்லை.கேரளாவில் பனங்களை அரசே ஆதரித்து விற்கிறது.பீகாரில் அயல் நாட்டு பாணி மதுவிற்கு தான் தடை, கள்ளுக்கு தடை இல்லை’’ என்றார்.

காட்சன்சாமுவேல் (தீவிர பனை செயற்பாட்டாளர்);

நான் பனையின் சிறப்புகுறித்துநாள்தோறும்எழுதியும்,பேசியும்வருவதோடு, ஏராளமான இடங்களில் ஆயிரக்கணக்கான பனைநடவு செய்து வருகிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது கடற்கரைகளும், ஏரிகளும்,குளங்களும் பனை மரங்களால் சூழப்பட்டு இருந்தன. அவை மண் அரிப்பை தடுத்ததோடு, அவற்றின் அரணாகவும் திகழ்ந்தன.

1980 களில் எம்.ஜி.ஆர் ஆட்சியில், மது விற்பனையைஅரசே ஏற்று நடத்தும் நிலை தோன்றியது. அப்போது கள்ளச்சாராயம் ஒழிக்கப்படுவதாக காரணம் காட்டி, பனை ஏறுவதேகள்ளுக்காக என்பதாக கருதி பனைஏற தடை விதிக்கப்பட்டது.அதாவது, இந்த பயன்மரம்,மது உற்பத்தியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் பகை மரமாகிப் போனது.அன்று முதல் பனை, அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. அன்றையதினம் தமிழ்நாட்டில் 6  கோடி பனை மரங்கள் இருந்தன.சுமார் 12 லட்சம்பனைஏறித் தொழிலாளர்கள் இருந்தனர். இவர்களில் 10 லட்சம் பேருக்கு அன்றே வேலை போனது. எஞ்சியுள்ளவர்களின் வேலையும் படிப்படியாக பறிபோனது.பனை ஏறுவதே குற்றச்செயலாக கருதப்பட்டு போலீஸ் வழக்கு போட்டுத் துன்புறுத்தியதால்,காலப் போக்கில் பனை ஏறுவதே அவமானமாக கருதப்பட்டது.இதனால், இன்று தமிழகத்தில் பனை ஏறுபவர்கள் ஒரு சில ஆயிரங்களில் தான் உள்ளனர்.

உலகில் சுமார் 108 நாடுகளில் பனை மரங்கள் வளர்க்கப் படுகின்றன. இந்தியாவின் பிறமாநிலங்களிலும் பனை வளர்ப்பு உள்ளது.ஆனால், எங்குமே தமிழகத்தைப் போன்று பனை வளர்ப்பும்,பனை ஏறுதலும் குற்றச் செயலாக பார்க்கப்படுவதோ,இழிவாக கருதப்படுவதோ இல்லை.

தொன்மைக்கும் தொன்மை!

பல்லாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்டஒரே மரம் பனை தான். தமிழ் மொழியைப் போலவே இந்தப் பனையின் காலத்தையும் துல்லியமாகக் கணிக்க முடியாத அளவிற்கான தொன்மை கொண்டது பனை. தமிழ் நிலத்தின் தொல்குடி மக்கள், மொழி பேச ஆரம்பிக்கும் முன்பேஅவர்களின் குடியை தாங்கிபிடித்து வாழ வைத்த பெருமை பனையைமட்டுமே சாரும்!

வறட்சி காலத்திலும் வாழவைக்கும்!

பஞ்ச காலத்திலும் பசி போக்கும்!

பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்!

என்பதெல்லாம்..பனை குறித்த தமிழர்களின் பட்டறிவால் விளைந்த பொன் மொழிகளாகும்!

அதனால் தான் தமிழர்கள் தாங்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் எல்லாம் தங்கள் தெய்வங்களை நினைத்து கோயில்கள் கட்டியதைப் போல, பனை விதைகளையும் கொண்டு சென்று பயிரிட்டு வளர்த்தனர். மலேசியா,மொரிசியஸ்,தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பனை வளர்ப்பை நம் தமிழர்கள் தான் அறிமுகப்படுத்தினர். உலகில் இருக்கும் பனைமரங்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்தில் தான் இருந்தது. இந்தியாவில் இருந்த பனை மரங்களில் 60%  தமிழகத்தில் தான் இருந்தது. ஆனால்,ஏன் இன்று நாம் பனையை அழியக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

பனைமரத்தின் பலன்கள்!

அடி முதல் நுனி வரை அத்தனையும் பலனளிக்கும்மரங்களில் பனை தலையானது. பேராசிரியர்.ஆ.சிவசுப்பிரமணியம் தான் எழுதியுள்ள ‘’பனைமரமே,பனைமரமே’’ பனை மரத்தில் 800 க்கும் மேற்பட்ட பயன்களை அந்தகால மக்கள் அறிந்து வைத்திருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். இவரைப் போல தாவரவியல் வல்லுனர் பண்ருட்டி பஞ்சவர்ணம் போன்றவர்களும் பனை குறித்து நீண்ட நெடிய ஆராய்ச்சிகள் செய்து அறிய பல தகவல்களை தந்துள்ளனர்.பஞ்சவர்ணத்தின் ’பனைமரம்’ என்ற நூல் அற்புதமான தகவல்களைக் கொண்டதாகும்.

சுருக்கமாக எல்லோரும் அறிந்த விஷயங்களை இங்கு நினைவு படுத்துவது என்றால்..பனைவெல்லம்,நுங்கு,பனம்பழம்,பனங்கிழங்கு பதநீர், பனங்கள்ளு, ஓலைகள், நார்,தும்பு,,இவற்றைக் கொண்டு தயாராகும் அழகிய கலை வேலைப்பாடுள்ள எண்ணற்ற பொருள்கள்  பனையின் கொடைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில்உள்ளசிறப்புகள்என்னவென்றால், இவை அனைத்தும் உடலுக்கு நன்மை செய்யும் உணவுகள்மற்றும்சுற்று சூழலுக்கு நன்மை சேர்க்கும்பொருட்களாகும். குறிப்பாக இதில் கிடைக்கும் பனைவெல்லம் எனப்படும் கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு ஆகியவை எழும்புக்கு வலு சேர்க்கும்.உடல் சூட்டை குறைக்கும்.இனிப்பு சுவையில் இதற்கு ஈடு சொல்ல வேறொன்று இல்லை எனலாம்! இவ்வளவு நன்மை செய்யக் கூடிய இனிப்பை இன்று இல்லாதொழித்து கேடு செய்யக் கூடிய வெள்ளைச் சீனி விஸ்வருமெடுத்து வியாபித்ததினால் தான் இன்று சக்கரை வியாதிகாரர்களின் தேசமாக நமது நாடு மாறிவிட்டது.

அழிவின் விளிம்பில் பனை;

காமராஜர் ஆட்சியில் பனை வளர்ப்பு ஊக்கப்படுத்தப்பட்டது. அப்போது பனை மரங்களின் எண்ணிக்கை சுமார் எட்டு கோடி இருக்கக் கூடும்.2014 ல்பனை மரங்களின் எண்ணிக்கை நான்கு கோடியானது. அதற்குபிறகான ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் ஒன்றரைகோடி பனைமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. மேற்குமாவட்டங்களில் செங்கற் சூலைகளுக்கும்,சுண்ணாம்பு சூலைகளுக்கும், சாயப்பட்டறைகளுக்கும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான  பனை அழிக்கப்படுகின்றன. இராமநாதபுரத்தில் மட்டுமே 1980 ல் சுமார் இரண்டுகோடி பனைமரங்கள் இருந்தன. ஆனால், தற்போதோ சில லட்சங்கள் மட்டுமே உள்ளன. ஓட்டல்களுக்கு எரிவிறகாக ஐம்பதுக்கும்,நூறுக்கும் பனையை வெட்டிச் சாய்க்கும்அநீதிஅ ரங்கேறி வருகின்றன.குமரி மாவட்டத்தில் முன்பு 25 லட்சம் பனை மரங்கள் இருந்தன. தற்போது ஒரு லட்சம் தான் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பனை இருந்த இடங்களெல்லாம் ரப்பர் தோட்டங் களாகிவிட்டன என குமரி மாவட்டத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் தேரிக்காடுகள் எங்கும் பனைமரங்கள் தான் வியாபித்திருக்கும். காரணம் வறட்சியை  தாண்டி  வளரும்  திறன் படைத்தது பனை! அதன் வேர்கள் சுமார் 100 அடி ஆழம் வரை சென்று நீர் உறிஞ்ச வல்லவை. ஆனால்,தற்போது பல நூறு அடிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால் தேரிக்காட்டில் உள்ள பனைகளும் கருகி வீழ்கின்றன.’’நிலத்திற்கு கீழ் உள்ள தண்ணீர் தாவரங்கள்,மரங்களுக்கானவை! அவற்றை ஆழ்துளையிட்டு மனிதன் எடுப்பது இயற்கை மீது நடத்தும் அத்துமீறலாகும்’’ என்பார் நம்மாழ்வார்.

அரசின்முயற்சிகள்;

பனை அழிந்து வருவது தொடர்பாக அவ்வப்போது விவசாயஅமைப்புகளும், இயற்கை ஆர்வலர்களும்,பொதுநல அமைப்புகளும், நாடார்மகாஜன சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இதன் விளைவாக 1975 ல் தொழிலாளர் வாரியம் உருவாக்கப்பட்ட போது தமிழ்நாடு பனை தொழில் வாரியம் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு1994 ல் ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு பனை பொருள்வளர்ச்சி வாரியம் தொடங்கப்பட்டது.திமுக ஆட்சியில் தமிழ்நாடு பனை தொழிலாளர் நலவாரியம் உருவாக்கப்பட்டு குமரி அனந்தன் தலைவராக்கப்பட்டார்.பனை மீட்புக்கு என்று ஓ.பி.சோசம்மா கமிட்டியிடம்அறிக்கைபெறப்பட்டது. நீதிபதி.கே.பி.சிவசுப்பிரமணியம் குழுவிடம் அறிக்கைபெறப்பட்டது. அவ்வளவே! இவர்களின் பரிந்துரை எதுவுமேநிறைவேற்றப்படவில்லை!

ஆக,இவையெல்லாம் பேரளவுக்குத்தானேயன்றி, இதனால் யாதொரு முக்கிய மாற்றமோ அல்லது பழைய நிலைமையை மீட்டெடுக்கும் முனைப்போ ஒரு சிறிதும் நடக்கவில்லை என்பது தான் யதார்த்தம். இன்றும் பதநீர் இறக்கும்ஏழை,எளிய தொழிலாளர்கள் மீது வழக்கு பாய்கிறது. துயரங்கள் தொடர்கின்றன.

சமீபத்தில் கூட மதுரை உயர் நீதிமன்றம்,’’ பனை மரங்களை காப்பது அரசின் கடமை! அவை வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளது. பனையின் மீதான தடை விலகினால் மட்டுமே பனையை அழிவிலிருந்து காப்பாற்றமுடியும்.

அத்துடன் கள்ளுக்கு அனுமதி தந்து விட்டால் பனை மரத்தை காப்பாற்றி வளர்க்கும் பொறுப்பை யாரும் சொல்லாமலே மக்கள் செய்வார்கள்.

இன்றைக்கு தமிழகத்தில் இரண்டரை கோடி பனை மரங்களே உள்ளன. அவற்றிலும் சுமார் 60 லட்சம் பனை மரங்கள் தான் பயன்பாட்டில் உள்ளன.ஆனால்,அந்த பயன்பாட்டில் உள்ள பனை மரங்களின் முழுப் பலன்களையும் கூட மக்கள் பெற முடிவதில்லை என்பது தான் வேதனையான விஷயம் என்கிறார்கள் கடலூர் மண்டலபனைபொருள்பயிற்சி நிலைய ஊழியர்கள்! ‘’இங்கேஅரசின் கட்டுபாட்டில் 700  பனைமரங்கள்உள்ளன. இதிலிருந்து தினமும் சுமார் 1500 லிட்டர் பதநீர் இறக்க முடியும். ஆனால்,கதர் கிராம தொழிவாரியம் முடங்கி உள்ளதால் தினசரி 200 முதல்300 லிட்டர் பதநீர் தான் இறக்கமுடிகிறது. மக்களிடையே பதநீருக்கு மிக நல்ல ஆதரவு இருக்கிறது.பன்னாட்டு பாட்டில் குளிர்பானங்களை தவிர்க்க விரும்பும் மக்களுக்கு பதநீர் ஒரு வரப்பிரசாதம். ஆனால், பனை ஏறுவதற்கான லைசென்ஸ் பெறுவதே குதிரைக் கொம்பாக உள்ளது…’’ என்கிறார்கள்.

பனைவிவசாயிகள்மற்றும்தொழிலாளர்களின்எதிர்பார்ப்புகள்;

இந்த நிலை மாறி, பனை செழிக்க அனுமதித்தால் பலலட்சம் பேர் தங்களுக்கானவேலை வாய்ப்பை அரசின் தயவின்றி, தாங்களே உருவாக்கி கொள்வார்கள்! மக்களின் ஆரோக்கியத்திற்கும் பனை பொருள்கள் பயன்படும்.

ரேஷனில் நியாய விலையில் பனைவெல்லம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையும் நிறை வேற்ற படுவதோடு, பால் வளத்துறையை போல பனைக்கும் தனி அமைச்சரவை உருவாக்க வேண்டும்..என்பதே தமிழக விவசாயிகளின் வேண்டுகோளாகும்!   பக்கத்து மாநிலமான கேரளத்தில் பனை ஏறும்தொழிலாளர்கள் மாதம் ரூபாய் 20  ஆயிரம் வரை கவுரவமாக சம்பாதிக்கும் நிலைமை உள்ளது. இலங்கையில் பனை மர வளர்ப்புக்கும்,பனை பொருள் விற்பனைக்கும் என்று தனி இலாக்காவும், தனி அமைச்சரும் உண்டு.தமிழகத்தில் பனை செழிக்கும் நாள்எந்நாளோ..,அந்நாளே நம் பாரம்பரியச் சிறப்புகளும், வளங்களும் மீட்டெடுக்கப்படும்.

 பனங்கள் என்பது இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு உணவுப் பொருளாகத்தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுவில் 42% ஆல்கஹால் உள்ளது. ஆனால், பனங் கள்ளிலோ 5% தான்உள்ளது.

  • ஒரு பனை மரத்தின் முலம் ஆண்டுக்கு ரூபாய் 10,000 வருமானம் ஈட்ட முடியும்.தமிழகத்தில் இரண்டரை கோடி பனைமரங்களுக்கு 25,000 கோடி ரூபாய் வருமானம் பெற முடியும். 1960 களில் இருந்ததை போல எட்டு கோடி பனை இருந்தால் நமது வருமானம் சுமார் 80,000 கோடியை தொட்டிருக்கும்.
  • சேர மன்னர்கள் பனம்பூவைத் தான் மாலையாக அணிந்தனர்.
  • தமிழகத்தில் பனையின் பெயரால் ஏராளமான ஊர்கள் உள்ளன.
  • தமிழகத்தில் ஏராளமான கோயில்களில் பனைமரம் தல விருட்சமாக வணங்கப்படுகிறது.
  • அவை முறையாக பயன் படுத்தப்படுமானால் அதன் மூலம் நல்ல வருமானமும்,பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்!

 சாவித்திரி கண்ணன்

 

 

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time