உச்சபட்ச கோழைத்தனத்தின் உதாரணமே ஸ்டாலின்!

-சாவித்திரி கண்ணன்

கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கவர்னருக்கு எதிராக களம் கண்டு காவல்துறை தடியடி பெறுகிறார்கள்! கவர்னரின் தேனீர் விருந்தை புறக்கணிக்கிறார்கள்! ஆனால், முதல்வர் ஸ்டாலினோ கமுக்கமாக அமைதி காத்து, கவனரின் தேனீர் விருந்தில் பங்கேற்கிறார்! அங்கே தெலுங்கானாவில் தமிழிசைக்கு என்ன நடந்தது ?

நட்போ மோதலோ எதுவும் வெளிப்படையாக இருப்பது நல்லது! மோதுவது போல பாவனை காட்டுவது உள்ளுக்குள் கள்ளக் காதல் கொள்வது என்பதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் ஆளுனராக பொறுப்பேற்றது முதல் மாநில அரசாங்கத்தை துச்சமாக மதித்து, ஆணவத்தோடு செயல்படுகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி! நமக்கு திமுக அரசோடு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நம் முதல்வரோ, அரசோ அவமானப்படும் போது, அது நமக்கே நிகழ்ந்தது போல சுளீரென்று உறைக்கிறது.

நீட் மசோதா தொடங்கி, ஆன்லைன் ரம்பி சூதாட்டத் தடை மசோதா வரை, பல மசோதாக்களுக்கு கையெழுத்துப் போடாமல் தொடர்ந்து கிடப்பில் வைத்திருப்பது, தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது, தமிழ் மக்களின் கலாச்சாரத்தை சிதைக்கும் வண்ணம் சனாதனக் கருத்தை பரப்புவது என ஒரு தீய நோக்கிலான எதிர் அரசியல் செய்து வருகிறார் கவர்னர்!

ஆனால், கவனரின் இந்த அடாவடிச் செயல்களுக்கு தமிழகத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் மாத்திரமே தொடர்ந்து களம் கண்டு வருகின்றன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தை கட்சியும் கவர்னர் மாளிகையை முற்றுகை செய்து போராடினர். நாளும்,பொழுதும் கவர்னர் செயலை கண்டிக்கின்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலினோ பலத்த மெளனம் சாதித்து வந்தார்.

அதே சமயம், சட்ட சபையில் மாநில அரசு எழுதி தந்ததை படிக்காமல், மரபுகளை மீறி தானே சிலவற்றை கவர்னர் பேசி பெருத்த அவமானம் செய்த போது மட்டும், இது நாள் வரை பம்மிக் கிடந்த ஸ்டாலின் தற்போதும் அமைதி காத்தால் தன் இமேஜ் சுக்கு நூறாகிவிடும் என மென்மையான முறையில் தன் எதிர்ப்பை பதிவு செய்தார். ஆனால், அன்றே தன் கட்சியினரை அழைத்து, ”யாரும் கவர்னருக்கு எதிராக பேசக் கூடாது” என கட்டளை போட்டுவிட்டார்.

இது போன்ற எதிர் அரசியலை கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் செய்த போது, அங்கு மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தெருவில் இறங்கி கவர்னரை எதிர்த்து போராடினர். துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் உத்தரவுகளை மீறிச் செயல்பட்டனர். வெளி நாட்டுப் பயணங்களை மேற்கொண்ட போது கவர்னரை சந்தித்து தெரியபடுத்த வேண்டும் என்ற மரபை மீறினார் பினராயி விஜயன். ”கவர்னரை விமர்சித்த அமைச்சரின் பதவியை பறிக்க வேண்டும்” என்ற ஆரிப் முகமதுகான் அலறலை துச்சமாக புறந்தள்ளினர்.

”இது எங்கள் மண். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இது எங்கள் ஆட்சி. நீ வெளியில் இருந்து வந்த ஆள்! மரியாதை தந்தால் மட்டுமே உனக்கும் திருப்பி மரியாதை தார்ப்படும்”  என நன்கு ஆரிப் முகமதுகானுக்கு புரிய வைத்தனர் கேரள கம்யூனிஸ்டுகள்! அதன் பிறகு தான் சற்றே அடங்கிப் போனார் கவர்னர்.

தெலுங்கானாவில் சட்ட சபை கூட்டத் தொடருக்கு கவர்னரை பேசவே அழைப்பதில்லை.

தமிழிசையின் தலைகனத்தை தவிடு பொடியாக்கிய சந்திரசேகர ராவ்!

”நீ என்ன தொடங்கி வைப்பது? எங்களுக்கே தொடங்கவும் தெரியும், முடிக்கவும் தெரியும்” என கவனரை அழைப்பதையே முற்றிலும் தவிர்த்து விட்டார் சந்திரசேகர ராவ்! ”நாங்க உனக்கு மரியாதை கொடுத்தால் தான் உனக்கு மவுசு. நாங்களே உன்னை மதிக்காவிட்டால், இந்த தெலுங்கானாவில் ஈ, காக்கா கூட உன்னை மதிக்காது” என தமிழிசையை அரசின் அனைத்து நிகழ்விலும் தவிர்த்து வருகிறார், முதல்வர் சந்திரசேகர ராவ்!

அதன் உச்சமாக கவர்னர் முக்கியத்துவம் பெறும் குடியரசு தினவிழாவை மாநில அரசு நடத்தவே இல்லை. வழக்கமாக செகந்திரபாத்தின்  மிகப் பெரிய போலீஸ் பயிற்சி மைதானத்தில் தான் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறும். தெலுங்கானா மக்களின் பாரம்பரியம் மற்றும் கலைகளை விளக்குகின்ற வகையில் அழகிய அணி வகுப்புகளும் நடக்கும். ‘அதை, ஆணவப் போக்குள்ள தமிழிசை செளந்திரராஜனோடு உட்கார்ந்து பார்க்க வேண்டிய தலை எழுத்து எனக்கில்லை’ என குடியரசு தின விழாவையே முற்றிலும் தவிர்த்து, அதற்கு கொரானா பரவல் காரணத்தை கூறிவிட்டார் சந்திரசேகர ராவ்! இதற்காக நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து குடியரசு தினவிழா நடத்த உத்தரவு வாங்கப்பட்டது. ஆயினும் துணிச்சலாக, ”தவிர்த்தது, தவிர்த்தது தான், முடியாது ‘ என உறுதிபட இருந்துவிட்டார் சந்திரசேகர ராவ்!

இதனால், ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயே மிகச் சிறிய அளவில் கொடியேற்றி கொண்டாட வேண்டியதாகிவிட்டது! இதற்கு தலைமைச் செயலாளரை அனுப்பி வைத்தார் முதல்வர். அமைச்சரவை சகாகக்கள் ஒருவருமே அந்தப் பக்கம் தலை காட்டவில்லை!

கவர்னர் மாளிகைக்குள் குடியரசு தின விழா கொண்டாடிய தமிழிசை!

மற்றொரு முக்கிய விவகாரம் என்னவென்றால், தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு சிற்றரசரைப் போல நாளும் வலம் வருகிறார். அவர் போகுமிடங்களில் எல்லாம் அவருக்கு மாநில அரசு அதிகாரிகள் வரவேற்று உரிய மரியாதை செய்கிறார்கள். பல கோவில்களில் அவருக்கு முதல் மரியாதை செய்யப்படுகிறது. இது தவிர, கவர்னர் மாளிகையில் தினசரி ஏதாவது விழா நடந்த வண்ணம் உள்ளது. அதற்கு மிக ஆடம்பரமாக செலவிடப்படுகிறது! பல்துறைக் கலைஞர்களின் நிகழ்வுகள் நடக்கின்றன. அவர்கள் கவர்னரை மகிழ்விக்கின்றனர். பல்துறை வல்லுனர்களும் அங்கு அழைக்கப்பட்டு, விருந்து உபச்சாரங்கள் நடக்கின்றன! இதற்கு கோடிக்கணக்கில் தமிழக மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது.

டெல்லியில் துணை நிலை ஆளுநரை எதிர்த்து அமைச்சரவை சகாகளுடன் போராடும் கெஜ்ரிவால்!

இந்த பப்பெல்லாம் தெலுங்கானாவில் வேகாது! தெலுங்கானாவில் தமிழிசையை கிட்டதட்ட ஒரு அதிகாரமற்ற அநாதையாக்கிவிட்டார், முதல்வர் சந்திரசேகர ராவ்! இதே போல டெல்லி துணை நிலை ஆளுன ரை எதிர்த்து முதலமைச்சர் கெஜ்ரிவாலே அமைச்சரவை சகாக்களுடன் சமீபத்தில் தெருவில் இறங்கி களமாடினார்! இது தான் ஆண்மை மிக்க அரசியல்! நேர்மையும், துணிவும் ஒருங்கே நிற்கும் அரசியல்! பாஜக கவர்னர்களின் பாஸிசத்தைக் கண்டு அஞ்சினால், தமிழகத்திற்கு விமோச்சனமே இல்லை.

துணிந்தால் தான் வரலாறு வாழ்த்தும். மேற்குவங்கத்தில் முந்தைய கவர்னர் ஜெகதீப் தன்கரை ரோட்டில் செல்ல முடியாதபடிக்கு கொட்டத்தை அடக்கினார் மம்தா பானர்ஜி. அதன் விளைவாக அடுத்து தற்போது பதவி ஏற்றுள்ள கவர்னர் சி.வி.அன்வுல்ஸ் முதல்வரிடம் பனிவை காட்டுகிறார்!

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவிற்கு பணிந்து வணக்கம் சொல்லும் கவர்னர் சி.வி.அன்வுல்ஸ்

தமிழகத்திலோ எதிர்கட்சியாக இருந்த போது அன்றைய கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை எதிர்த்து அவ்வளவு பேசிய திமுக, தற்போதோ அத்தனை அவமானங்களையும் விழுங்கிக் கொண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதந் தாங்கியாக சேவை செய்கிறது!

ஆனால், தமிழ்நாட்டில் அனைத்து கூட்டணி கட்சிகளும் கவர்னரின் தேனீர் விருந்தை புறக்கணித்தாலும், முதலமைச்சர் சென்று கலந்து கொள்கிறார். தன் ஊழல் மிக்க ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளும் சமரசமாக ஸ்டாலின் கவர்னர் இழுத்த இழுப்புக்கு எல்லாம் செல்வது அவரது கட்சியினரையே தர்ம சங்கடப்படுத்துகிறது என்பதை கூட ஏனோ அவர் உணரவில்லை.

கவர்னரின் தேனீர் விருந்தை புறக்கணிப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போகப் போவதில்லை. முதலமைச்சரின் இமேஜ் மக்கள் மனதில் உயர்ந்திருக்கும். ஆனால், தற்போது முதலமைச்சரின் கோழைத்தனம் தமிழக மக்களின் நெஞ்சை ரணப்படுத்துகிறது. குறைந்தபட்ச தன்மானம் கூட இல்லாத ஒருவர்  நாட்டுக்கோ, மக்களுக்கோ தலைவராக முடியாது. அடிமைக் கூட்டத்தின் தலைவராக வேண்டுமானால் இருக்கலாம்.

தமிழ்நாட்டின் அரசியல் விசித்திரத்தை கவனித்தால் அருவெறுப்பும், வியப்பும் ஒரு சேர எழுகிறது. ஒரு பக்கம் முக்கிய எதிர்கட்சித் தலைவரான அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி உள்ளுக்குள் பாஜகவிற்கு எதிரான பகையை புதைத்துக் கொண்டு, எதிர்க்கத் துணிவின்றி, ஆலாபனை செய்து வருகிறார். மறுபக்கம் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு அரசியல் செய்வது போல மக்களை ஏமாற்றி, ஆதாய, சந்தர்ப்பவாத- படு கோழைத்தனமான – அரசியல் செய்கிறார்! இந்த கோழைத்தனத்திற்கு மகத்தான உதாரணம், குஜராத்தில் இஸ்லாமியர் படுகொலை நிகழ்த்திய மோடி அரசை அம்பலபடுத்தும், ‘பிபிசி ஆவணப் படத் திரையிடலை’ காவல் துறை கொண்டு மூர்க்கமாக தடுத்து , இளைஞர்களை கைது செய்துவரும் திமுக அரசின் செயல்பாடுகளாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time