அதானிக்கு சேவையே மோடியின் பிறவிப் பயனாம்!

-ச.அருணாசலம்

ஒரு தனி நபரின் பகாசூர மோசடிகளுக்கு துணை போன ஒரு பிரதமரையும், ஆட்சி நிர்வாகத்தையும் இந்தியா இது வரை கண்டதில்லை! ஒரு சாதாரண  அதானியை, உலக பணக்காரனாக்க பாஜக அரசானது சட்டம், விதிமுறைகள் அனைத்தையும் வளைத்து, நீதித் துறையையும் கறைபடுத்தியது அம்பலப்பட்டு உள்ளது!

இந்தியாவின் நம்பர் ஒன் கார்ப்பரேட் குழுமம் அதானியின் ஷேர்கள் அதிரடியாக சரிவை சந்தித்ததில் 4,25,000 கோடிகள் இழப்பை சந்தித்துள்ளது. மோடிக்கு மிக நெருக்கமானவரான குஜராத்தின் கௌதம் அதானியின் கம்பெனி ஷேர்கள் சரிந்ததற்கு  அமெரிக்காவை சார்ந்த ஹின்டன்பர்க் ரிசர்ச் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கைகளே காரணமாகும்!

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக புலனாய்வு செய்து ஆதாரங்களை திரட்டி, அதானியின் தில்லாலங்கடி வேலைகளை ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளது, ஹிட்டன்பர்க் ரிசர்ச்!  அதானி குரூப் , ஷேர் மோசடி, அக்கௌண்டிங் மோசடி, பண மோசடி, அரசு மற்றும் பொது சொத்தை கொள்ளையடித்தல் , மணி லாண்டரிங் ஆகிய வேலைகளில் பல பத்தாண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என ஆய்வறிக்கையை தனது வலைத்தளத்தில் ஜனவரி 24ல் வெளியிட்டுள்ளது. மேலும், அதானி குரூப் கம்பெனிகள் பெருமளவு கடனில் மூழ்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளதை தொடர்ந்து அதானி கம்பெனி ஷேர்கள் சரிவை சந்தித்துள்ளன.

வலுவான ஆதாரங்களையும் தகவல்களையும் உள்ளடக்கிய இவ்வாய்வறிக்கை அதானி நிறுவனங்களின் மோசடிகளை ஆவணங்களுடன தோலுரித்து காட்டியுள்ளது. பல பக்கங்களை கொண்ட அந்த ஆய்வறிக்கை யின் சாராம்சத்தை சுருக்கமாக முன்வைக்க  இக்கட்டுரை முயல்கிறது.

உலகின் மூன்றாவது பணக்கார நபரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது. இதில் 100 பில்லியன் மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் கூடியுள்ளது. அதாவது 2018ல் வெறும் 20 பில்லியனாக இருந்த சொத்து, இன்று 2022ல் 120 பில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளது. (1பி.=100கோடி ஒரு டாலர்=80ரூ).

17.8 டிரில்லியன் ரூபாய் (1டிரில்லியன்=1 லட்சம்) மதிப்புள்ள அதானி குரூப் பல பத்தாண்டுகளாக ஷேர் மோசடிகளில் ( ஷேரின் விலையை கம்பெனிகளே செயற்கையாக – போலியாக – விலையேற்றி கொள்வது) ஈடுபட்டும் அக்கௌண்டிங் மோசடிகளில்  (பொய் கணக்கு) ஈடுபட்டும் வந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை பல முக்கியமான நபர்களுடனும், முன்னாள் அதானி குரூப்பின் 12 மூத்த அதிகாரிகளுடன் உரையாடியும், ஆயிரக்கணக்கான் ஆவண ஆதாரங்களை பரிசீலித்தும் நூற்றுக்கணக்கான கள ஆய்வுகளின் மூலமாகவும் உண்மை நிலவரங்களை கண்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதை படிப்பவர்கள் இந்த ஆய்வை முழுமையாக நம்பாவிட்டாலும் கூட, அதானி குரூப்பின் முக்கியமான 7 கம்பெனி ஷேர்கள் அதன் அடிப்படை மதிப்பிலிருந்து பல மடங்கு போலியாக உயர்த்தி மதிப்பிட பட்டுள்ளதால் அதன் சரிவு 85% சதவிகிதம் வரை இருக்கும் என்பதை மறுக்க முடியாது என்று ஹின்டன்பர்க் அறிக்கை கூறுகிறது.

பங்கு சந்தைகளில்  பட்டியலிடப்பட்ட 22 அதானி கம்பெனிகளில் முக்கியமான நிறுவனங்கள் தங்களது பங்குகளை அடமானம் வைத்தும் பல வகையிலும் ஏராளமான கடன்களை வாங்கியுள்ளன. கடனை திருப்பி செலுத்தும் மதிப்பான current ratio  இக் கம்பெனிகளிடம் 1ற்கும் குறைவாகவே உள்ளது. நெருக்கடி ஏற்பட்டால் மொத்த குழுமமே நெருக்கடியில் நொறுங்கும் அபாயம் உள்ளதாக இவ்வறிக்கை எச்சரிக்கிறது.

சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத சண்டி நிறுவனம்! 

மேலும்,  அதானி குழுமம் எந்த ஒரு நிறுவனத்திற்குமான சட்ட திட்ட இலக்கணங்களை கடைபிடிக்காமல், ஒரு குடும்ப தொழிலாகவே நடைமுறையில் உள்ளது என்பதை ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது இவ்வாய்வறிக்கை.

இந்த குழுமத்தின் அனைத்து உயர் பதவிகளுமே அதானி குடும்ப உறுப்பினர்கள் வசம் தான் உள்ளதாக குறிப்பிடுகிறது.

இந்த பகாசுர கம்பெனி பல தொழில்களில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக அடிப்படை கட்டுமான  திட்டங்களான துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள், தகவல் மையங்கள், எரிசக்தி தயாரிப்பு எரிசகதி பகிர்வு போன்ற துறைகளில் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு  ஊக்கம் தரும் வகையில் இந்திய அரசு (ஆள்கின்ற மோடி கும்பல்) பொது சொத்துகளை இவர்களுக்கு அடிமாட்டு விலையில் தாரை வார்த்து கொடுக்கிறது.

இவர்களுடைய 9 முக்கியமான நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ. 17.8 லட்சம் கோடி எனப் பார்த்தோம் . இவற்றின் மூலம் அதானி குடும்பம் கடந்த 3 வருடங்களில் 100 பில்லியன் சம்பாதித்துள்ளது. இந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை தாறுமாறாக எகிறியதால் தான் இது சாத்தியமாயிற்று.

அதானி குழும உறப்பினர் பரம்பரை தொழிலதிபர்களா? அல்லது பரோபகாரிகளா ? பொது சொத்தை ஆள்வதற்கு!

அதானி குடும்ப உறுப்பினர்களும், நிறுவனங்களும் பல சந்தர்ப்பங்களில் மணி லாண்டரிங், பொது சொத்தை கொள்ளையடித்தல், மோசடி ஊழல் போன்ற குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் மொரீஷியஸ், யு ஏ இ, சிங்கப்பூர் மற்றும் கரீபியன் தீவுகளில் போலி நிறுவனங்களை (shell companies)  ஏற்படுத்தி பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன.

மோசடிகளுக்கு கிடைத்த பரிசுகள்!

கௌதம் அதானியின் இளைய சகோதரான ராஜேஷ் அதானி வைரங்கள் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருந்தார் . 2004-2005ல் போர்ஜரி மற்றும் வரி ஏய்ப்பு மற்றும் மோசடி குற்றங்ஙகளுக்காக இரண்டு முறை கைதானார். போலி  நிறுவனங்கள் மூலம் போலி இன்வாய்சுகள் தயாரித்து நடக்காத ஏற்றுமதி நடந்ததாக மோசடி செய்ததால் கைது செய்யப்பட்டார். அதற்குரிய தண்டனை கொடுக்காமல் வழக்கை நிலுவையிலேயே வைத்து அவரை பாதுகாக்கிறது மோடி அரசு! ஆனால், இந்த மோசடிக்கு பரிசாக அதானி குரூப்பின் மேனேஜிங் டைரக்டர் M.D. பதவி தேடி வந்தது.

ராஜேஷ் அதானியின் வைர வணிக மோசடி திட்டத்தில் ( Diamond Trading Scam) கூட்டாளியாகவும், மோசடி கும்பலின் தலைவராகவும் செயல்பட்ட சமீர் வோரா ராஜேஷ் அதானியின் மைத்துனர் ஆவார்.இவரையும் DRI Directorate of Revenue intelligence  கைது செய்தது.   இவருக்கும் அதானி குடும்பம் எக்சிக்யூட்டிவ் டைரக்டர் (ஆஸ்திரேலியா)  ஆக பதவி “உயர்வு”கொடுத்து கௌரவித்தாக இவ்வறிக்கை கூறுகிறது.

வெறும் லெட்டர் பேட் போலி நிறுவனங்கள்

அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி வெளிநாடுகளில் போலி கம்பெனிகளை (shell companies) ஏற்படுத்தி, அவற்றின் மூலம் பண மோசடி, பங்கு மோசடி ஆகியவற்றின் முக்கிய செயல் தலைவராக இருக்கிறார். 38 போலி கம்பெனிகள் மொரிஷீயஸ் நாட்டிலும், அதே எண்ணிக்கையில் சைப்ரஸ்,சிங்கப்பூர் மற்றும் கரீபியன் தீவுகளிலும் நிறுவி மோசடிகளுக்கு அடித்தளம் அமைத்தார்.,இந்த நிறுவனங்களுக்கு முறையான முகவரியோ, தொலைபேசி எண்களோ, எந்தவித நடவடிக்கைகளோ இல்லை. ஆனாலும், இந்த போலி நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர்களை இந்திய நாட்டில். உள்ள அதானி நிறுவனங்களுக்கு வழங்கியது. 9அதற்கு வரி வில்லக்கும் தரப்ப்பட்டது) ஆனால், இதற்கான முறையான தகவலோ, ஆவணமோ இந்நிறுவனங்களிடம் இல்லை, இவர்கள் எப்படி ஏன் பணம் கொடுக்கிறோம் என்ற தகவலை இந்திய ஒழுங்கு நிறுவனங்களிடம் தெரிவிக்கவும் இல்லை.

இப்படி 13க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஒரே நாளில் நிறுவி, அவைகளுக்கு ஒரே நாளில் வலை தளம் ஏற்படுத்தி கொடுத்த பெருமை வினோத் அதானியை சாரும் என தோலுரித்துக் காட்டும் இவ்வறிக்கை, இந்நிறுவனங்கள் குறிப்பாக இரண்டு பணிகளை செய்ததாக கூறுகிறது.

ஸ்டாக் பார்க்கிங் அல்லது ஸ்டாக் மேனிப்புலேசன் என்றழைக்கப்படும் ஷேர் மோசடிகளில் இவை ஈடுபட்டன. இரண்டு,  முறையாக அறிவிக்காமல் கள்ளப்பணத்தை அதானியின் இந்திய நிறுவனங்களுக்குள் நுழைத்த ‘மணி லாண்டரிங்’  வேலையிலும் இவை ஈடுபட்டன.

இக்குற்றங்கள் பற்றியெல்லாம் SEBI பங்கு பத்திர  விற்பனை ஒழுங்கு மையம் ‘இன்னும்’ விசாரணை நடத்தி கொண்டிருப்பதாக பாவனை செய்து கொண்டுள்ளது! குறிப்பிடும் இவ்வறிக்கை ஊழல் நிறைந்த செபியின் அதிகாரிகளின் உதவியுடன்தான் இம்மோசடிகள் நடைபெற்று வருகின்றன என குற்றம் சாட்டுகிறது.

மோசடி வழக்குகளை நிர்மூலமாக்கும் மோடி அரசு!

பண மோசடி, ஊழல், திருட்டு , பொது மக்களின் (Tax payers fund)  பணத்தை திருடுதல்  மணி லாண்டரிங் போன்ற மோசமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் பல அதானி குழுமத்தின் மீது எழுப்பப்பட்டாலும்  விசாரணையை மெதுவாக நடத்துவது அல்லது விசாரணைய முடக்கி வைப்பது இந்திய அரசின் கைங்கர்யமாக இருக்கிறது.

அதானி குழும ஏற்றுமதி- இறக்குமதி மோசடி, அவை வைர வணிகமானாலும் சரி, இரும்பு தாது, நிலக்கரி மற்றும் எரி சக்தி உபகரணங்களானாலும் சரி அவற்றின் மொத்த மதிப்பு 17.8 பில்லியன் டாலர்களாகும் . இந்திய ரூபாய் மதிப்பில் கூறினால் 1லட்சத்து 36 ஆயிரம் கோடியாகும்.

அதானி இந்தியாவில் கொள்ளையடித்த பணங்களை வெளிநாட்டிற்கு கடத்தி பின் அங்கிருந்து போலி நிறுவனங்கள் மூலமாக இந்தியாவிற்குள் புகுத்துவதற்கு பல உதாரணங்களை குறிப்பிடும் அறிக்கையில் ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்.

மண்டரோசா இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ், 360 பில்லியன். இந்தியாவிற்கு அனுப்பியது.இந்த மண்டரோசா  நிறுவனத்தின் ஐந்து இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனங்களின் மூலம் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது. யார் இதன் உண்மையான உடமையாளர் என்று ஆராய்ந்தால் அதன் விடை அதானி குரூப் தான் . அதாவது தாங்களே சில போலி நிறுவனங்களை வெளி நாடுகளில் ஏற்படுத்தி அதன் மூலம் பணத்தை இந்தியாவிற்குல் கொண்டு வருகிறார்கள்! இதில் வரிவிலக்கும் பெற்ருவிடுகிறார்கள்! ஆனால், இந்திய அரசு மற்றும் செபி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை கண்டும்,காணாமல் இருந்து விடுகின்றன!

இத்தகைய பணத்தின் மூலந்தான் இவரால் இந்திய அரசு தாரை வார்க்கும் அனைத்து துறைமுகங்கள் , விமான நிலையங்களை மிக குறைந்த விலையில் ஏலத்தில் எடுக்க முடிகிறது.

இதைப் போன்றே எலரா கேப்பிடல் மூலம் (83 பி. டாலர்) 66,000 கோடி ரூபாய் இந்தியாவிற்குள் அதானி கொண்டுவந்தார் என்று பல்வேறு ஆதாரங்களுடன் இவ்வறிக்கை பிட்டு பிட்டு வைக்கிறது.

நியூ லெய்னா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் 423 மி. டாலர் அதானி எனர்ஜி கம்பெனிக்கு கொண்டு வரப்பட்டதும் இப்படித்தான் .

இதைப் போன்ற நிறுவனங்கள்  மூலம் வெளியிலிருந்து கணக்கு எதுவும் காட்டாமல், அதானியால் நிதியை இந்தியாவிற்குள் கொண்டு வர முடிகிறது என்றால், இந்தியாவிலிருந்து சுருட்டி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பணத்தையே அதானி குழுமம் இந்த வழிமுறைகள் மூலம் வெள்ளை பணமாக்குகிறது என்று நாம் அனுமானிக்கலாம்!

வைர கடத்தலில் ஓவர் இன்வாய்சிங் முறையை கடைபிடித்து பணம் சுருட்டிய இக்கும்பல்  கர்நாடகா மற்றும் கோவாவில் இருந்து இரும்பு தாதுவை (Iron Ore) அரசிற்கு கணக்கு காட்டாமல் வரி ஏதும் செலுத்தாமல் பாலகேரி துறைமுகத்தில் இருந்து ரூ.  60000 கோடி பெறுமான கனிமத்தை ஏற்றுமதி செய்தது அதானி குழுமம்.

 

உச்ச நீதி மன்றமே தலயிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது, ஊரறிந்த ரகசியம். சின்ன மீனான ‘ரெட்டி சகோதர்ர்கள் ‘ சில ஆண்டு காலம் சிறையிலிருந்தனர் ஆனால், அதானி மீது யாராலும் கை வைக்க முடியவில்லை.

நிலக்கரி இறக்குமதியில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில அரசுகளுக்கு இறக்குமதி அனுமதி தராமல் அதானிக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய வழி வகை செய்கிறது பாஜக அரசு!

அடிமாட்டு விலைக்கு இந்தோனேஷியாவில் வாங்கப்பட்ட நிலக்கரியை ஒப்பந்தத்தை மீறி அதிகவிலைக்கு மாநில அரசுகளுக்கு விற்று கொள்ளையடித்து வருகிறது அதானி குழுமம் என்பதும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையில் அதானி அடித்த லாபம் 29,000 கோடி ரூபாய்கள்.

இதைப்போன்றே எரிசக்தி உபகரணங்கள் இறக்குமதியிலும் ஓவர் இன்வாயசிங் முறையில்  இந்திய மக்கள் பணத்தை கொள்ளையடித்ததையும் இவ்வறிக்கை பட்டியலிடுகிறது.

இத்தனை அட்டூழியங்களையும் செய்ய அதானிக்கு யார் பக்க பலமாக, உறு துணையாக உள்ளனர்.

இக் கேள்விக்கு விடைகாணுமுன் இவரை எதிர்த்து, இவர்களின் மோசடிகளை திருட்டை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் – முன்னாள் ஊழியர்கள், பொதுநல விரும்பிகள் , பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் அதானி நிறுவனங்களால் மிரட்டப்படுகின்றனர். சிலர் கொல்லவும் பட்டனர் , சிலர் அரசின் உதவியால் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

நிதின் மாஞ்சோல் என்ற பத்திரிக்கையாளர் கைது செய்யபட்டார் .

சமூக வலைதளங்களில் அதானிக் கெதிராக வரும் செய்திகளை முடக்க நீதி மன்றங்களை நாடியதையும் அறிக்கை காட்டுகிறது.

அதானி குரூப் செய்த வரி ஏய்ப்பை, சட்டங்களை மதியாமல் நடக்கும் போக்கை பொது வெளிக்கு கொண்டு வந்த எக்கனாமிக் அன் பொலிட்டிக்கல் வீக்லி Economic and Political Weekly இதழின் ஆசிரியரான பரஞ்ஜோய் குகா தாக்குர்த்தா மீது மான நஷ்ட வழக்கு தொடுத்து அவரை முடக்க முனைந்தார். அரசின் ஒத்துழைப்போடு தாக்குர்த்தாவை கைது செய்ய அதானி முனைந்தார்.

இந்தியாவில் மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவில் இவரது அட்டூழியங்களை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளரை மிரட்டுவதும் , தனியார் துப்பறியும்  நிறுவனங்கள் மூலம் தாக்க முற்படுவதும் உலகின் கவனத்திற்கு வந்தன. ஆஸ்திரேலியாவில் அபாட் சுரங்கம் துறைமுக திட்டத்தை நடத்துவதோடு பெரும் சர்ச்சைக்குள்ளான கார்மைக்கல் சுரங்க மற்றும் தெர்மல் பவர் பிளாண்ட்டையும் ஏலத்தில் எடுத்து  ‘அதானி ஆஸ்திரேலியா ‘ நிறுவனம் நடத்துகிறது. இதற்கெதிராக STOP ADANI  என்ற பெரும் இயக்கமே ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது

இந்த கொள்ளை கும்பலுக்கு பணத்திறகு ஆசைபட்டு  இந்திய அதிகாரிகளும் ஊழல் அரசியல் வாதிகளும் உதவி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நீதிபதிகளும், அமைச்சர்களும் கூட உதவி செய்து அதானியை காப்பாற்றுகின்றனர்.

நீதித்துறையிலும் அதானியின் அதிகாரம்! 

குஜராத்திலும்,மகாராஷ்டிராவிலும் அதானி எனர்ஜி நிறுவனம் ஒப்பந்தத்தை மீறி, மிக அதிக விலை கேட்டு, மின் வினியோகத்தை நிறுத்தியது! இதை எதிர்த்து அந்த மாநிலங்களின் மின்வாரிய அமைப்புகள் வழக்கு தொடுத்தன. வழக்கு உச்சநீதி மன்றம் வரை சென்ற பொழுது அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அரசுக் கெதிராக, அதானிக்கு ஆதரவாக தீர்ப்பெழுதியது. இதைவிட ஆச்சரியம் அதானி வழக்குகள் அனைத்தையும் இந்த நீதிபதியே விசாரிக்கும்படி  காய்கள் நகர்த்தப்பட்டன. இதன் விளைவு, அதானிக்கு பெருத்த லாபம் இந்திய மக்களுக்கும் இந்திய மாநில அரசுகளுக்கும் பெருத்த நட்டம் பரிசாக கொடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் மத்திய பாஜக அரசு இருப்பது தான் கொடுமையாகும்!

 

அதானியின் வழக்குகளையெல்லாம் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதி மன்ற அமர்வு விசாரிப்பதும் அவற்றில் எல்லாம் அதானிக்கு சாதகமாக – மாநில அரசுகளுக்கு எதிராக- தீர்ப்பு வழங்கியதும் கவனத்திற்கு உரியது.

#   ஜனவரி 29/2019 ல்  அதானி  காஸ் vs  ராஜஸ்தான்  மாநிலம்  வழக்கு,

#   மே02/2019ல்                   அதானி  ~  டாடா பவர் வழக்கு

#    மே07/2019ல்             அதானி ~ சட்டீஸ்கர் மாநிலம் வழக்கு

#    மே23/2019ல்             அதானி    ~ ராஐஸ்தான்  மின் வாரியம்  வழக்கு

#    ஜூலை 02/2019ல்  அதானி    ~ குஜராத் மாநிலம்  வழக்கு

#    ஜூலை22/2020ல்     அதானி   ~     பவர் கிறீட் கார்ப் .(ஒன்றிய அரசு) வழக்கு

#    செப். 20/2020 ல்       அதானி ~  ராஜஸ்தான் மாநிலம்  வழக்கு

மேற்கூறிய வழக்குகளில் எல்லாம் உச்ச நீதிமன்ற நடைமுறை விதிகளுக்கு புறம்பாக நீதிபதி அருண் மிஸ்ரா  அமர்வே  அவசர அவசரமாக விசாரித்து  அதானிக்கு ஆதரவாக தீர்ப்புகள் வழங்கியது சர்ச்சைக்குரியது ஆகும்.

இந்த நீதிபதி அருண்மிஸ்ரா தான் பிரதமர் மோடியை, வல்லவர், அறிவாளி என புகழ்ந்து பேசி , பதவி ஓய்வு பெற்றபின்  தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்  தலைவர் பதவியை பெற்றவர்.

அதானிக்கு வேலை செய்வதையே பிறவிப் பயனாம்!

இப்படிப்பட்ட அக்மார்க் மோசடி பேர் வழியான அதானியைத் தான் இந்திய பிரதமர் மோடி, எப்போதும் வானளாவ புகழ்ந்து பேசுவார். அதானிக்காக பல நாட்டு தலைவர்களுடன் பேசி , அங்கெல்லாம்  சுரங்கங்களை ஏலத்தில் பெற வகை செய்தார் . மோடியின் விமானப் பயணங்கள் அனைத்தும் அதானி குழுமத்து வளர்ச்சிகானதாகவே உள்ளது.

ஆஸ்திரேலியாவில் கார் மைக்கல் சுரங்கம் மற்றும் தெர்மல் பிளாண்ட் திட்டத்தை அதானிக்காக ஆஸ்திரேலிய பிரதமரிடம் பேசியுள்ளார் மோடி,

ஶ்ரீலங்காவில் அதிபர் கொத்தபயா ராஜபக்சே விற்கு அழுத்தம் கொடுத்து பலவற்றை பெற காரணமானார்!.

2012 ல் மோடி குஐராத் முதல்வராக முதல்வராக இருந்தபோது அதானி  நிறுவனத்திற்கு விதியை மீறி எரிசக்தி இலவசமாக வழங்கப்பட்டதை மத்திய தலைமை கட்டுப்பாட்டாளர்  மற்றும் தணிக்கையாளர்  சி ஏ ஜி கண்டித்துள்ளார் .குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த  காலத்திலேயே 44 திட்டங்களை (Projects)  அதானிக்கு வழங்கியதன் மூலம் அப்போதே சி.ஏஜியால் கண்டணம் செய்யப்பட்டவர் தான் மோடி!

இந்திய மக்களின் பொது சொத்துக்களான துறைமுகங்கள் விமான நிலையங்கள், உணவு கிடங்குகள் கனிம வளங்கள் ஆகியவற்றை அதானிக்கு தாரை வார்க்கிறார் பிரதமர் மோடி.

அடுத்தடுத்து, மானிட்டைசேஷன் என்ற பெயரில் அனைத்து பொதுதுறை நிறுவனங்களையும், கட்டுமான திட்டங்களையும் ஏன் போக்குவரத்து பாதைகளையும் அதானிக்கு கூட வழங்கி பெருமைபடுகிறார் மோடி. எரிசக்தி உற்பத்தியிலும், அதன் பகிர்விலும் அதானி ஏகபோக முதலாளியாக வலம் வருவது பாஜக அரசின் ஆதரவால்தான்.

கடந்த எட்டு வருட மோடி ராஜியத்தில் குஜராத்தியான அதானி குழுமம் துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கம் மற்றும் இறக்குமதி, பவர் ஜெனரேஷன், காஸ் விநியோகம், விமான தளங்கள், ஏரோஸ்பேஸ் டேட்டா சென்டர் தண்ணீர் மற்றும் எண்ணைய் விநியோகம் எனப் பல தளங்களில் துறைகளில் விரிந்து பரந்து உள்ளது.

இவ்வளவையும் அம்பலப்படுத்தி. அதானி குரூப்பிற்கு 88 கேள்விகளையும் கேட்டுள்ளது.  ஹிட்டன்பர்க் ரிசர்ச்!

இந்த வகையில் இங்கு வேலிக்கு ஓணான் சாட்சியாக இருப்பதை  அனைவருக்கும் புரிய வைத்துள்ளது.

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time