நீதிமன்றமே ஆணையிட்டாலும் தமிழுக்கு இடமில்லை!

-சாவித்திரி கண்ணன்

எவ்வளவு போராட்டங்கள்! எத்தனை தீர்ப்புகள்! தமிழக அரசே தமிழ் அர்ச்சனைக்கான பயிற்சி பள்ளி நடத்தியது! தமிழ் அர்ச்சகர்களை உருவாக்கியது. ஆயினும், நடைமுறையில் கோவில்களில் தமிழை ஒலிக்கச் செய்வது சாத்தியமற்றே உள்ளது என்பதற்கு பழனி முருகன் கோவில் குட முழுக்கே சாட்சியாகும்! என்ன நடந்தது பார்ப்போம்.

16 வருடத்திற்கு பிறகு நடந்துள்ள பழனி கோவில் குட முழுக்கு முழுக்க, முழுக்க சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கின் முன்னேற்பாடாக  ஜனவரி 23 அன்றே  கால பூஜையுடன் யாக வேள்வி தொடங்கியது. பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் என்ற அந்தணர் தலைமையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள்  வேள்வி சாலை யாகத்தில் ஈடுபட்டனர். வேள்விக் குண்டங்கள் 90 அமைக்கப்பட்டது. இவை அனைத்திலும் பிராமண அர்ச்சகர்கள் மட்டுமே அமர்ந்து சமற்கிருதத்தில் மந்திரம் சொல்லினர்.

இதையடுத்து ஜனவரி 26 ல் அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில் முதல் படி வழிப்பாதையில் அமைந்துள்ள இரட்டை பிள்ளையார்,வள்ளி அம்மன், இடும்பன், கடம்பன், கருப்பண்ணசாமி என  தமிழ்க் கடவுளர்களின் 27 சன்னதிகளுக்கும், கிரிவீதியில் உள்ள ஐந்து மயில்களுக்குமே கூட,  குட முழுக்கு விழா, சமஸ்கிருதத்தில் அந்தணர்களைக் கொண்டு தான் நடத்தப்பட்டது. இப்படியாக’ தமிழகக் கோவில்களில் கருவறை தொடங்கி யாகசாலை, கலச நீராட்டு என அனைத்திலும் பிராமண அர்ச்சகர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுத்தப்படாமல் தமிழ் அர்ச்சகர்களையும் இணைத்து தமிழ் அர்சனைக்கும் சரி முக்கியத்துவம் தர வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை நினைவுறுத்தி தெய்வத் தமிழ் பேரவை சார்பிலும், பல்வேறு ஆன்மீக அமைப்புகள் சார்பிலும் இந்து அறநிலையத் துறையில் மனு கொடுத்து தமிழ் குட முழுக்கையும் இணைத்து செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது.

ஆனால், ” இந்தக் கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது மட்டுமின்றி, எங்களை யாக வேள்வி நடத்தும் இடத்திலோ, கோபுரக் கலச நீராட்டுதல் இடத்திலோ அனுமதிக்காமல் தூரத்திலேயே தடுத்து விட்டனர்…’’ என அந்த அமைப்பின் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இந்த அமைப்பின் நிர்வாகிகளிடம் பேசிய போது, ’’உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி, 90 குண்டங்களில் 45 குண்டங்கள் தமிழ் மந்திரம் சொல்லி அர்ச்சிப்போர் அமர்ந்து பூசைகள் செய்து இருக்க வேண்டும். ஆனால் 90-இல் ஒன்றில் கூட தமிழ் மந்திரம் சொல்வோர் அமர்த்தப்படவில்லை; எங்கும் தமிழ் மந்திரம் இல்லை. அனைத்திலும் பிராமண அர்ச்சகர்கள் சமற்கிருத சுலோகங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தனர். மேலும், குட முழுக்கு நாளன்றும் முழுக்க, முழுக்க தமிழ் ஓதுவார்களை புறக்கணித்து, கோபுரக் கலச நீராட்டலை பிராமண அர்ச்சகர்களே நடத்தினர்! தமிழ் மந்திரங்களில் குட முழுக்கை நடத்தி வரும் அனுபவமுள்ள தமிழ் அர்ச்சகர்களின் பட்டியலை நாங்கள் முன் கூட்டியே இந்து அறநிலையத் துறைக்கு அவர்களே கேட்டதற்கிணங்க வழங்கினோம். ஆனால், அவர்களில் யாரையுமே அழைக்கவில்லை என்பது உள்ளபடியே ஆழ்ந்த வேதனையைத் தருகிறது’’ என வருத்தப்பட்டனர்.

அரசு அமைத்துள்ள ஆன்மிக வல்லுநர் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள பேரூர் ஆதீனகர்த்தர், மு.பெ.சத்தியவேல்முருகனார் போன்றோர் கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகிய இடங்களில் தமிழ்க்கிரியை மந்திரங்கள் சொல்லி அரச்சிக்கப் பலருக்குப் பயிற்சி கொடுத்துள்ளார்கள். நடைமுறையில் இவர்கள் யாவரும் முழுமையான தமிழ்க் குடமுழுக்கை நடத்தி வருகிறார்கள். இவர்கள் ஏனோ தமிழ்நாடு அரசின் இந்து அற நிலையத் துறையால் புறக்கணிக்கப்பட்டு  வருகின்றனர்.

வேள்விச் சாலைக்கு வெளியே தமிழ் பாடல் பாடிய ஓதுவார்கள்!

அதே சமயம் வேள்விச் சாலைக்கு வெளியே சற்று தள்ளி ஓதுவார்கள் சிலரை திடலில் உட்கார வைத்து அவ்வப்போது பன்னிரு திருமுறை, கந்த புராணம் ஆகியவற்றை பாட வைத்து, திருஒளி வழிபாடு செய்தனர். இப்படி வெட்ட வெளியில் தமிழ்ப் பாடல்கள் பாடப்படுவதை காணவும், ஒளிபெருக்கி வழியாக கேட்கவும்  நேர்ந்த மக்களுக்கு ஒட்டுமொத்த குட முழுக்கும் தமிழில் தான் நடத்தப்பட்டுள்ளது என்ற மாயத் தோற்றத்தையும் உருவாக்கிவிட்டனர்.. என்பது தான் கவனத்திற்கு உரியதாகும். மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட இந்த தமிழ் புறக்கணிப்பு செயல் திட்டத்தை வெகுஜன ஊடகங்கள் எதுவுமே கவனம் கொள்ளவில்லை. இந்த தமிழ் குடமுழுக்கு புறக்கணிப்பு எந்த பிரபல செய்தி ஊடகத்திலுமே ஓரிரு வரி செய்தியாகக் கூட வெளி வரவில்லை.

தமிழ்நாடு அரசு வட பழனி முருகன் கோவில் தொடங்கி தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்புகளைப் புறக்கணித்து சமஸ்கிருதத்தில் மட்டுமே கோவில் குட முழுக்குகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டுக் கோவில்கள் சேர, சோழ, பாண்டிய மற்றும் நாயக்க மன்னர்களாலும், தமிழ் மக்களாலும்  கட்டப்பட்டவை! அவற்றில் தமிழுக்கே இடமில்லாமல் போய்க் கொண்டுள்ளது.  ”பழனி தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு சமஸ்கிருதத்துடன் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்தப்படும்” என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஊடகங்களில் சொன்னது எல்லாம் சமாளிப்பதற்கான பொய் என்பது தற்போது நிருபணமாகியுள்ளது.

தமிழ் நிலத்திற்கே உரிய தனிச் சிறப்பு பெற்ற தமிழ் கடவுளான முருகனுக்கு, தமிழ் சித்தர்களால் உருவான பழனி கோவிலில், தமிழில் குட முழுக்கு நடத்த முடியாத நிலைமை தான் தமிழ் நாட்டில்  நிதர்சனமாக உள்ளது! நம் தமிழக ஆட்சியாளர்களின் லட்சணம் இது தான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time