பெரியார் சிலை அகற்றலின் பின்னுள்ள மர்மங்கள்!

-சாவித்திரி கண்ணன்

இதற்குள் புதைந்திருக்கும் அரசியல் என்ன? காரைக்குடியில் இளங்கோவன் வீட்டுக் காம்பவுண்டின் பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் விடை தெரியாத கேள்விகள் பல தொக்கி நிற்கின்றன. இதில் உள்ள மர்ம முடிச்சுகள் அகற்றப்பட்டால் தான், பல அதிர்ச்சிகரமான, சூட்சுமமான உண்மைகள் தெரிய வரும்.

முதலாவதாக இந்த சிலையை அகற்ற வேண்டும் என யாரால் புகார் தரப்பட்டது? அந்தப் புகாரில் சொல்லப்பட்ட காரணம் என்ன? எழுத்து பூர்வமான புகாரா? வாய்மொழியில் சொல்லப்பட்டதா?

ஒருவர் தன் சொந்த நிலத்தில் வைத்துள்ள பிராப்பர்டியை பெயர்த்து எடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இருக்குமானால், தனிநபர் சுதந்திரம் என்பதே நமது ஜனநாயகத்தில் கிடையாதா..?

‘ஒருவர் தன் சொந்த இடத்தில் சிலை வைக்கக் கூடாது’ என சட்டத்தில் சொல்லப்பட்டு உள்ளதா? அல்லது நீதிமன்றம் அவ்வாறு வைக்கக் கூடாது என சொல்லி உள்ளதா? எனில், ஏகப்பட்ட வீடுகளின் காம்பவுண்டு சுவரை ஓட்டினாற் போல பிள்ளையார் சிலைகள் எப்படி வைக்கப்பட்டன? அதை அகற்றும் தைரியம் காவல்துறைக்கு உண்டா?

அங்கே பெரியார் சிலைக்கு மாறாக, பசும்பொன் தேவர் ஐயா சிலையோ, அறிஞர் அம்பேத்கார் சிலையோ அல்லது ராமர் சிலையோ, கிருஷ்ணர் சிலையோ இருந்திருப்பின் இவ்வாறு அவசர அவசரமாக சிலையை அகற்றும் துணிவு காவல்துறைக்கு வந்திருக்குமா?

இந்தியாவிலேயே எளிய மக்களை அழுத்தி வைத்திருந்த சனாதன மதத்தை சமரசமில்லாமல் எதிர்த்து சமர் புரிந்த மாபெரும் ஆளுமை பெரியார் ஈ.வெ.ராமசாமி ஒருவர் தான்! பார்ப்பனியத்துடன் போராடிய காந்தி, அம்பேத்கார் போன்றவர்களை எல்லாம் தன்னகத்தே விழுங்கி செறித்துக் கொண்ட இந்துத்துவ சக்திகளால் விழுங்கவோ, செறிக்கவோ முடியாதவராக திகழ்பவர் தமிழ் மக்களால் தந்தை என அழைக்கப்படும் பெரியார் தான். ஆகவே, பெரியார் என்ற அடையாளத்தை தமிழகத்தில் இருந்து முற்றிலும் துடைத்தெரிய வேண்டும் என்று இந்துத்துவ சக்திகள் துடிக்கிறார்கள்!

அதன் விளைவாகத் தான் அவர்கள் தொடர்ந்து பெரியார் குறித்த அவதூறுகளை செய்த வண்ணம் உள்ளனர். அத்துடன் சில இடங்களில் பெரியார் சிலையை அகற்றவும், சில இடங்களில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமானப்படுத்தவுமான செயல்களைச் செய்கிறார்கள்!

காரைக்குடி பெரியார் சிலை அகற்றல் குறித்து மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் கூறியதாக தி இந்து தமிழ் திசையில் வெளியான செய்தியானது,  ”ஜனவரி 27-ம் தேதி திடீரென பெரியார் சிலையை நிறுவி, அதை திராவிட விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஜன.29-ம் தேதி திறக்க நடவடிக்கை எடுத்தனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அனுமதியில்லாமல் தனியார் இடத்தில் சிலைகள் வைக்க கூடாது. இதனால் சிலையை அகற்ற வீட்டின் உரிமையாளரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து அந்தச் சிலை அகற்றப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிலை வைக்க இளங்கோ அனுமதி கேட்டுவிண்ணப்பித்தால் பரிசீலனை செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

அப்படியானால், மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி தான் பெரியார் சிலை அகற்றப்பட்டு உள்ளது. அதுவும் முதல் நாள் வைக்கப்பட்ட சிலை அடுத்த நாளே அகற்றப்பட்டு உள்ளது! பெரியார் மீதான ஆழ்ந்த வெறுப்புணர்ச்சியும், வன்மமும் உள்ள செல்வாக்கானவர்களின் தூண்டுதலிலேயே இது நிகழ்ந்துள்ளது. அந்த வெறுப்பையும், வன்மத்தையும் அரசு நிர்வாகத்தில் கொண்டு  செலுத்தி, அதை நிறைவேற்றியுள்ளவர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் எனும் போது, அவருடைய உத்தரவுக்கு கீழ்ப்படிந்து சிலையை அகற்றிய சிவகங்கை டி.எஸ்.பி.கே.கணேஷ்குமாரும், வட்டாட்சியர் இரா.கண்ணனும் முறையே காத்திருப்பு பட்டியல் மற்றும் இடமாற்றத்திற்கு ஆளானது ஏன்?

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான செளண்டையா அவர்களிடம் இது பற்றி கேட்ட போது, ”ஒருவரது சொந்த இடத்தில் இருக்கும் சிலையை அகற்ற அரசு நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. அது பொது அமைதியை கெடுக்கக் கூடிய விவகாரம் கொண்ட சிலை என்பதை உறுதிபடுத்தினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கலாம். அதற்குமே கூட, முதலில் சம்பந்தப்பட்ட இடத்தை இன்ஸ்பெக்ட் செய்து நோட்டீஸ் வழங்கி இருக்க வேண்டும். அவர்களுக்கு கால அவகாசம் தந்து இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிகழ்வில் மாவட்ட அரசு நிர்வாகம் முறையாக செயல்பட்டதாகத் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் உத்தரவின்றி பெரியார் சிலை அகற்றல் நடந்திருக்கவே முடியாது’’ என்றார்.

சமூக ஊடகங்களில் பாஜகவின் எச்.ராஜா இது தொடர்பாக பகிர்ந்துள்ள கருத்துகள் இந்த சிலை அகற்றலின் பின்னுள்ள இந்துத்துவ அரசியல் அழுத்தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

-எச்.ராஜாவின் டிவிட்டர் பதிவு

தமிழக அரசை தலைமை தாங்கி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் என்ன நிலைபாடு கொண்டுள்ளார் என்பதை கண்டிப்பாக தெளிவுபடுத்த வேண்டும். நாட்டில் எந்தப் பிரச்சினைகள் நடந்தாலும், எவ்வளவு அநீதிகள் எளியோருக்கு இழைக்கப்பட்டாலும் எப்போதுமே பேசா மடந்தையாக இருப்பவர் நாட்டின் நிர்வாகத்திற்கு தலைமை தாங்க முற்றிலும் தகுதியற்றவர் என்றே பொருள் கொள்ளப்படுவார்.

சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் இளங்கோவனிடம் பேசிய போது, ”எனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் நான் கொண்டாடும் ஒரு தலைவர் சிலையை வைத்துள்ளேன். அப்படி ‘சொந்த இடத்தில் ஒருவர் வைக்கும் சிலையை அகற்றக் கூடாது’ என்பதற்கு இரண்டு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பே உள்ளது. ஒன்று, ஈழத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் சிலையை தஞ்சை மாவட்ட பாடலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சோனார்பட்டி கிராமத்தில் சொந்த இடத்தில் நிறுவிக் கொள்வதற்கான உரிமையை பெ.மணியரசன் அவர்களுக்கு உறுதிபடுத்தி, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 23, 2010 வழங்கிய தீர்ப்பாகும்.

அடுத்தது, இதே போல தந்தை பெரியார் சிலையை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் குமார் என்பவர் வைத்துக் கொள்வதற்கு நவம்பர் 3,2017 ல் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். இதை தெளிவாக எடுத்துக் கூறிய போதும், சிலையை அகற்றுவதில் பிடிவதம் காட்டினார்கள். ஆனால், தற்போது ”அனுமதி கடிதம் தாருங்கள் சிலையை ஒப்படைக்கிறோம்” என்கிறார்கள்! இதைத் தான் சிலை அகற்றும் போதே நான் சொன்னேன். ‘அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டுமானால், அதையும் செய்கிறேன். உங்கள் அனுமதி கிடைக்கும் வரை சிலையை துணியால் மூடி வைக்கிறேன்’ என மன்றாடினேன். அதை பொருட்படுத்தால் உடைத்து அப்புறப்படுத்திவிட்டு, ஆறாத ரணத்தை மனதில் உருவாக்கிவிட்டு, ”தற்போது அனுமதி கடிதம் தா, சிலையை எடுத்துக் கொண்டு போ” என்பதை எப்படி ஏற்பது? ஆகவே, இதை கோர்ட்டில் தான் சந்திக்க போகிறோம்’’ என்றார்.

தமிழகம் பெரியார் மீது பற்றுள்ளவர்கள் நிறைந்த மாநிலமாகும். திமுக இன்று ஆட்சியில் இருப்பதற்கான மூலகர்த்தாவே பெரியார் தான்! அவருடைய சிலையை ஒருவரின் சொந்த இடத்தில் இருந்து, அநீதியாக அப்புறப்படுத்த இந்த அரசு நிர்வாகம் இந்துத்துவ சக்திகளுக்கு பணியுமெனில், அது இந்த ஆட்சியின் மீதான நம்பகத்தன்மையை சுக்கு நூறாக உடைத்துவிடும் என்பதை காலம் கடந்து தான் உணர்ந்ததா திமுக அரசு! எனவே, தான் தங்கள் இமேஜ் சிதைந்துவிடாமல் தற்காத்துக் கொள்ளும் முயற்சியாக கீழ்நிலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது திமுக அரசு!

ஆனால், சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் கருத்தானது திமுக அரசை காட்டிக் கொடுத்துவிட்டது! பெரியார் சிலை அகற்றலை அவர் நியாயப்படுத்துகிறார். ஆட்சித் தலைமையின் எண்ணத்தை தான் மாவட்ட ஆட்சியர் பிரதிபலிக்க முடியுமே அன்றி, தன்னிச்சையாக இப்படிப் பேச முடியாது. அல்லது மாநில ஆட்சித் தலைமையை அலட்சியப்படுத்தி, மத்திய ஆட்சியாளர்களின் மன விருப்பத்திற்கு ஏற்ப மதுசூதன் பேசுகிறார் என்று தான் புரிந்து கொள்ள முடியும்.

மத்திய மதவாத ஆட்சியாளர்கள் நினைப்பதெல்லாம் இங்கு நடக்கும் என்றால், இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி தான் எதற்கு?

மீண்டும், மீண்டும் நமக்கு தெரிய வருவது என்னவென்றால், கள்ளக் குறிச்சி விவகாரம் தொடங்கி, புதுக்கோட்டை வேங்கை வயல், காரைக்குடி பெரியார் சிலை அகற்றல் வரை, அனைத்திலுமே உண்மையை நிலை நாட்டவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழங்கும் ஆளுமையோ. துணிச்சலோ திமுக அரசிடம் அறவே இல்லை. ஏன் இவ்வளவு மோசமாக மதவாத மத்திய பாஜக ஆட்சியாளர்களிடம் பணிந்து போகிறார்கள்?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time