பேனா சின்னம் கடல் சூழலியலைப் பாதிக்குமா?

-கி.கோபிநாத்

திருவள்ளுவர் சிலையைவிட உயரமாகக் கடலுக்குள் கருணாநிதிக்கான பேனா அடையாளச் சின்னம் அமைய உள்ளது! கடலுக்குள் கட்டுமானம் அமைவதால் உண்மையிலேயே சுற்றுச் சூழல் பாதிப்பு உள்ளதா?  அல்லது திராவிட எதிர்ப்பின் அம்சமாக எதிர்க்கிறார்களா..? சுற்றுச் சூழல் சொல்லும் உண்மை என்ன?

தமிழ் மொழிக்கே அடையாளம் தரும் ஒற்றை நபராக கலைஞர் கருணாநிதியை முன்னிலைப் படுத்தும் முயற்சியாக பேனா வடிவ நினைவுச் சின்னம் சென்னை மெரினாவில் அமைப்பதில் இந்த அரசு உறுதி காட்டி வருகிறது. மெரினா கலைஞரின் சமாதியில் இருந்து நேராகச் செல்லும் வகையில், கடலின் நடுவே 134 அடி உயரத்துக்கு அவரது பேனா வடிவ சிலை அமைப்பதற்கான முன்னெடுப்புகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. திருவள்ளுவரை விட மேலானவராக கருணாநிதியை காட்ட நினைக்கும் முயற்சியோ, என்னவோ வள்ளுவர் சிலையை விட ஒரு அடி உயரமாக கருணாநிதியின் பேனா வடிவம், கடலின் நடுவே நிற்கப் போகிறது!

கலைஞர் ஒரு பெரிய தமிழ் படைப்பாளி என்ற வகையில் அவருக்கான நினைவு சின்னமே கூடாது என்பது நியாயமல்ல! ஆனால், கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்திலும், கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்திலும் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. கரையின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் தூரத்துக்கும் வீணை வடிவில் பாலம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு மொத்தமாக 81 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் தொடர்ச்சியாகப் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. சென்னைக்கான காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கையானது, “அடுத்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 7 செ.மீ. உயரும். இதனால், சென்னையின் 300 அடி கடற்கரை பகுதிகள் நீருக்குள் மூழ்கிவிடும்” என எச்சரிக்கிறது.

நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகள் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக  சூழலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்! இங்கே கடலில் கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும் என்றும், கூறுகிறார்கள். நியாயப்படி பார்த்தால் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி, நிபுணர் குழுவை அமைத்து விதிகளுக்கு மாறாக மெரீனாவில் கட்டுப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் சூழலியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

வட சென்னையில் கடல் அரிப்பால் சாலையை விழுங்கத் துடிக்கும் கடல் அலைகள்!

ஐ.நா.வில் உறுப்பினர்களாக உள்ள 195 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்து, ஐ.பி.சி.சி., எனப்படும் அறிக்கையை ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடுவார்கள். அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியான அறிக்கையில், சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டிணம், மும்பை என 12 இந்திய நகரங்கள் கடல் மட்டத்தைவிட 3 அடி வரை ஆழத்தில் இருக்கும், அதாவது மூழ்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை மணி அடிக்கிறது.

இதையெல்லாம் புறந்தள்ளவிட்டு, மெரினாவில் கடலுக்குள் 134 அடி உயரத்துக்கு பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்காக ஜீன்-20, 2022 அன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் அடிப்படையில் அனுமதி கோர, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதலும் வழங்கியது.

இதையடுத்து, திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கான அனுமதி கோரி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு பொதுப்பணித் துறை கடிதம் எழுதியது. ஆய்வை மேற்கொள்ள மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதித்தது. திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை ஏன் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமே மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி சூழலியல் ஆர்வலர்களிடம் இருந்து வெளிப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் கருத்து கேட்டு, சுற்றுச்சூழல் அனுமதி பெற்று, அடுத்த கட்டப் பணியை துவங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது ஒரு வகையில் அனைவருக்கும் வியப்பையே ஏற்படுத்தி உள்ளது. பேனா நினைவு சின்னம் அமைப்பது பற்றி தேசிய கடலோர மண்ட மேலாண்மை ஆணையத்துக்கும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதி IV(A)யின் கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில், விதிவிலக்கான நேரங்களில் மட்டுமே நினைவிடங்கள் / நினைவுச் சின்னங்கள் அமைக்கலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பேனா வடிவ நினைவுச் சின்னம் அப்படியானது அல்ல என்பதைக்கூறி ஆய்வு மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம்.  ஆனால், மத்திய அரசை அரசியல் தடுத்திருக்கலாம்.

இது மட்டுமா, மத்திய புவி அறிவியல் துறை வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில், சென்னையில், குறிப்பாக மெரினா கடற்கரையில், அதிகமாக மணல் சேர்ந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் மெரினாவையொட்டிய கடலுக்குள் இவ்வளவு பெரிய கட்டுமானத்தை அமைப்பதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு எதன் அடிப்படையில் ஒப்புக் கொண்டது என்று தெரியவில்லை.

குமரியில் பாறை மீது வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதால் சூழலியல் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடலின் நடுவே பாறைகளை கொட்டி பெரிய பரப்பளவிலான மேடு உருவாக்கப்பட வேண்டும். இதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்பை மத்திய அரசு கவனத்தில் கொண்டதா? என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. .

கடலிலும், கடற்கரையிலும் திட்டங்களைக் கொண்டு வரும்போது மீனவர்களுக்கு பாதிப்பு உள்ளதா, இல்லையா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கடல் நடுவே பேனா நினைவுச் சின்னத்தை அமைத்தால், கடல் சார் தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென மீனவர்கள் எழுப்பும் குரல் மத்திய, மாநில அரசுகளின் செவிகளுக்கு எட்டவே இல்லை.

கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ந்த பேனா நினைவு சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற பணம் இல்லையென கூறும் தமிழ்நாடு நிதியமைச்சர், இதற்கு எப்படி பணம் 81 கோடி ஒதுக்கப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

பல்வேறு குழுக்களின் வரிசையில் கால நிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்துள்ளது. மாண்டேக் சிங் அலுவாலியா, நந்தன் நிலகேனி தொடங்கி, நம்மூர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் வரை பல நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பேனா நினைவுச் சின்னத்துக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. காலநிலை மாற்றத்துக்கான குழுவிடம் பேனா நினைவுச் சின்னம் பற்றி தமிழக அரசு ஆலோசித்ததா? நிபுணர்கள் பரிந்துரைத்தது என்ன? என்பது பற்றி தமிழக அரசு பொதுத்தளத்தில் வெளியிட வேண்டும்.

மத்திய அரசு கூறியதன் அடிப்படையில், கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற ஒன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னையில் ஜனவரி 31 அன்று சம்பிரதாயமாக நடந்தேறியது. இது தொடர்பான காணொளியில் தமிழ், ஆங்கிலத்தோடு இந்தியிலும் வர்ணனை இடம்பெற்றிருந்தது. இந்தியை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு, இந்தியில் ஏன் வர்ணனை?

பேனா வடிவ நினைவுச் சின்னத்தால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளை பட்டியலிட முற்பட்டவர்கள் முழுமையாக பேச அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்துக்குக் கூட ஆட்களை திரட்டி இறக்குமதி செய்திருந்தது ஆளும்கட்சி. அவர்கள் கூச்சலெழுப்பி, எதிர் கருத்தாளர்களை பேச விடாமல் தடுக்க முற்பட்டார்கள். பெரும்பாலானோருக்கு தாங்கள் எதற்கு கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டோம் என்பதே தெரியவில்லை.

இந்த கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு முன்னர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், அபாய மதிப்பீடு ஆய்வு, பேரிடர் மேலாண்மைத் திட்டம் மற்றும் அவசரகால செயல் திட்டம் ஆகியவை முறையாக தயாரித்து பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டதா? என்பதும் தெரியவில்லை. கருத்து கேட்பு கூட்டத்தின் மூலம் பெறப்பட்ட கருத்துருக்கள் மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் தரும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இறுதி அனுமதி வழங்கப்படுமாம்.

பேனா நினைவுச் சின்னத்தினால் ஒரு பகுதியில் ஏற்படும் கரையோரப் மணல்பெருக்கம், மற்றொரு பகுதியான வடசென்னையில் ஏற்படவிருக்கும் கடல் அரிப்பு ஆகியவற்றின் தாக்கம், கடலோர மக்கள் பாதுகாப்பு, கடல்வாழ் உயிரினங்களின் தாக்கம், கடல் ரோந்து, மீன்பிடி நடவடிக்கை விவரங்கள் மற்றும் நினைவுச் சின்னத்தால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய பாதிப்பு ஆகியவற்றை நிபுணர் மதிப்பீட்டுக் குழு கருத்தில் கொண்டு பரிந்துரை வழங்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் இந்த விவகாரத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக சுற்றுச்சூழல் பாதிப்பை மத்திய அரசு கவனத்தில் கொள்ளாவிட்டால், இயற்கை வலுவாக திருப்பி அடிக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது. சூழலுக்குப் புறம்பாக வலிந்து திணிக்கும் எதையும் கடல் தன்னகத்தே இருத்திக் கொள்வதில்லை, வெளியேற்றிவிடும். அது பேனா நினைவுச் சின்னமாக இருந்தாலும் சரி, பட்டேல் சிலையாக இருந்தாலும் சரி.

கட்டுரையாளர்; கி.கோபிநாத்

ஊடகவியலாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time