கஸ்தூரிரங்கன் குழுவின் தேசிய கல்விக் கொள்கை வரைவு கல்வியின் மீதும், சமூகத்தின் மீதும் தாக்குதலை ஏற்படுத்தும் அச்சுறுத்தலாகவே தெரிகிறது. சாவித்திரிபாய் பூலே தொடங்கி ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், அம்பேத்கர்.. உள்ளிட்டோர் கல்வித் தளத்தில் ஆற்றிய பங்கை மடைமாற்றும் கஸ்தூரிரங்கன் அறிக்கை குறித்த ஒரு பார்வை!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950ல் இயற்றப்பட்டது. சட்டம் நடைமுறைக்கு வந்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது 14ஆவது வயது முடியும் வரை இலவச கட்டாய கல்வி தர அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தியது.
தொடர்ந்து கல்வியில் நவீன மயமாக்களை முன்மொழிவதற்கு 1964-ல் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இரண்டு ஆண்டுகளில் 12 உண்மை அறியும் குழுக்கள், 7 செயல் அமைப்பு குழுக்கள் என இயங்கி 9,000 பேரிடம் கருத்துகளை கேட்டறிந்து 2,400 பக்க அறிக்கையை 1966ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. கோத்தாரி குழுவின் பரிந்துரையின் பெயரிலேயே 1968-ல் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.
கோத்தாரி கல்வி குழுவின் பரிந்துரைகளில் சமச்சீர் கல்வி, அருகாமைப் பள்ளிகள் கல்விக்கு ஜி.டி.பியில் 6% சதவீதத்தை ஒதுக்கீடு செய்தல் போன்ற பரிந்துரைகளுக்கு மாற்றாக தங்களுக்கு உகந்த மும்மொழிக் கொள்கை, தனித்தொகுதி மையங்கள், பல்கலைக்கழக நிர்வாக முறைகளில் தேவைப்படும் மாற்றங்கள் உள்ளிட்ட ஆலோசனைகளை மட்டுமே ஏற்று செயல்பட ஆரம்பித்தது. எனவே கல்வி, விவசாயம் தொழில் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளில் அரசின் மூலதனம் செலவிடப்பட்டது.
1980களின் மத்தியில் இதில் மாற்றம் ஏற்பட தொடங்கியது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களை தாங்களே எடுத்துக்கொண்டு, அன்னிய மூலதனத்தோடு சேர்த்து புதிய பகுதியில் விரிவடைய தயாராக இருந்ததால் இதற்கு ஏற்றார் போல் கல்விக் கொள்கையை வடித்தெடுக்கும் திட்டம் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் தொடங்கியது. கல்வியை வழங்குவது அரசின் கடமை என்பது காலாவதியாகிப் போன முழக்கமாக மாற்றப்பட்டது. வணிக சேவை துறைக்கு உகந்ததாக கல்வி அமைப்பு மாற்றப்பட்டு, அத்தோடு மக்களுக்கு கல்வி கொடுக்கும் கடமையிலிருந்தும் அரசு விலகிக் கொண்டது.
இனி, கல்வி என்பது உலகச் சந்தையின் ஒரு பண்டமாக கருதப்படும் என 1990-ல் உலக வங்கியும், ஐ.நா.வும் இணைந்து நடத்திய எல்லோருக்கும் கல்விக்கான உலக மாநாட்டில் வெளியிடப்பட்ட ஜோமிதியன் பிரகடனம் கூறியது.
பிரதமர் வாஜ்பாய் காலத்தில் அம்பானி, பிர்லா தலைமையில் குழு அமைப்பு கல்வி சீரமைப்புக்கான கொள்கை வரையறையை உருவாக்கியது. இக்குழு பெரும் லாபம் தரக்கூடிய சந்தையாக கல்வியை பார்த்தது! கல்வி கட்டணத்தை முழுமையாக மாணவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். உயர்கல்வியை தனியார் மயமாக்க அதில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என அம்பானி, பிர்லா அறிக்கை கூறியது. பின்னர் 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த உடன் பல்வேறு குறைபாடுகளுடன் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது.
இதைத் தொடர்ந்து புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்க விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் 2017ல் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது பற்றி நாடறிந்த கல்வியாளர்கள் கூர்மையான பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
கஸ்தூரிரங்கன் குழு உருவாக்கிய புதிய தேசிய கல்விக் கொள்கை தற்போது 93 சதவீத கல்வித் துறையின் அதிகாரம் மாநில அரசுகளின் கையில் தான் உள்ளது. அதை முற்றாக மையப்படுத்தும் போக்குக்கு உகந்த மாற்றங்களை ஏற்படுத்த பல்வேறு புதிய அமைப்புகளை கல்வி குழு பரிந்துரைத்துள்ளது. கஸ்தூரிரங்கன் அறிக்கையானது தாய்மொழிக் கல்வியை தகர்க்க, இந்தி மொழியை திணிக்க மும்மொழி கல்வி திட்டத்தை புகுத்த வழி வகை செய்கிறது.
உலகத்திலேயே சுமார் 32 கோடி மாணவர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இத்தனை மாணவர்கள் உருவாவதற்கு தனியார் துறை பங்களிப்பு தான் காரணம் என பலரும் சொல்லி வருகின்றனர். ஆனால், அது முழு உண்மை அல்ல அரசு கல்வி நிலையங்களின் வாயிலாகவே மாணவர்கள் கல்வி பயில்வதற்கான தளமும், வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கல்வித் துறையில் வணிக மையம் என்பது சமத்துவ, சமூக நீதியை குழி தோண்டி புதைத்துள்ளது. தனியார் பள்ளிகளும், தனியார் உயர் கல்வி நிலையங்களும் தங்கள் விருப்பம் போல் கல்வி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என கஸ்தூரிரங்கன் குழு அனுமதி அளிக்கிறது.
இந்த வரைவு அறிக்கையானது சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிராக கல்வியாளர்களால் கவலையோடு உற்று நோக்கப்படுகிறது.
அடித்தட்டு மாணவர்களிடத்தில் ஏற்படுத்த போகும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து புதிய கல்விக் கொள்கை கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்த்ததாக தெரியவில்லை.
Also read
எல்லா மட்டத்திலும் நுழைவுத் தேர்வுகள் என்பதன் வாயிலாக பயிற்சி மையங்களை திறந்து வைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் ஈட்ட வழிகாட்டி உள்ளது, இந்த வரைவு! இதனால், கஸ்தூரிரங்கனின் வரைவு அறிக்கை எத்தகைய சமூக சீர்கேடுகளை இந்திய சமூகத்தில் ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்த ஐயத்தையும், விடை தெரியாத கேள்விகளையும் நமக்குள் உருவாக்கி உள்ளது.
இனி வரக்கூடிய காலகட்டங்களில் தேசிய கல்விக் கொள்கை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ என்ற அச்ச உணர்வு கல்வியாளர்கள் மத்தியிலும், மாணவர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு மாற்றாக தமிழ்நாடு அரசு மாநில கல்வி கொள்கையை விரைந்து உருவாக்கி எதிர்கால தலைமுறையை காத்திட முன் வரவேண்டும் என்பதே கல்வியாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
கட்டுரையாளர்; தி. மருதநாயகம்
உதவிப்பேராசிரியர்
ஆங்கிலத் துறை
இராஜபாளையம்
Email : [email protected]
Leave a Reply