பாஜக ஆட்சி யாருக்கானது எனச் சொல்லும் பட்ஜெட்!

-ச.அருணாசலம்

வாவ்! கார்ப்பரேட்களுக்கு வரிச் சலுகைகள் அள்ளி வழங்கப்படுவெதென்ன? எளிய மக்கள் மீதான மறைமுக வரிச்சுமை பற்றி கப்சிப்! பல கோடி தொழிலாளர்களின் அமைப்பு சாரா துறைகளுக்கு அரோகரா! விவசாயத்திற்கும், கல்விக்கும், மருத்துவத்திற்கும் நிதியே இல்லை! ஆக, பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சமும் இந்த ஆட்சி யாருக்கானது என்பதை காட்டுகிறது!

2024 -ல் தேர்தலில் மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நரேந்திர மோடி அரசு தனது “கடைசி” பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது!

உலக பொருளாதாரமே , உக்ரைன் போரினாலும், உலக நாடுகள் இருவேறு அணிகளாக பிரிந்து மோதுவதாலும்   பெரும் சிக்கல்களை எதிர் நோக்கியுள்ள சமயத்தில், இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீத்தாராமன், இந்தியா ஒளி மயமாக எழுந்து அமிர்த காலத்தில் நுழைய தயாராய் உள்ளதாக வசனம் பேசியுள்ளார் .

வரலாறு காணாத வேலையின்மை, இருக்கும்  வேலைகளில் இருந்தும் (சிறப்பான துறைகளாக கருதப்படும் ஐ.டி. மற்றும் சேவை துறைகளில் இருந்து) ஆட் குறைப்பு, விண்ணை முட்டும் விலையேற்றம், பண வீக்கம்,  “உண்மையான” வளர்ச்சியின்மை இதற்கெல்லாம் மேலாக  சாதாரண மக்களுக்கும் கொழுத்த பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள ஏற்ற தாழ்வு பன் மடங்கு பெருகியுள்ள இந்த சவாலான இந்திய சூழலை இந்த அம்மையார் புரிந்து அதற்கான  அதை மாற்றுவதற்கான வழிமுறைகளை, திட்டங்களை இந்த பட்ஜெட்டில் ஏதும் அறிவித்திருக்கிறாரா ? என்றால், வருத்தமே மிஞ்சுகிறது.

இந்த சூழலையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு , இந்தியா 2014- க்குப் பிறகு வேகமாக வளர்ந்து வருகிறது , இப்பொழுது அமிர்த காலத்தை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது என்று பட்ஜெட் உரையில் முழங்குகிறார் நிர்மலா, மோடி மேஜையை தட்டி வரவேற்கிறார்!

இந்தியா பிரிட்டனையும் பின்னுக்கு தள்ளி வேகமாக வளர்ந்து வரும் நாடு என்றால் ஏன் 80 கோடி மக்களுக்கு ரேஷன் இலவசமாக கொடுக்க வேண்டும்?

வளர்ச்சி எல்லாம் இல்லாமல் இல்லை, ஆனால் அந்த வளர்ச்சி யாருடைய வளர்ச்சி ? யாருக்கான வளர்ச்சி என்று பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

ஆர்கனைஸ்டு செக்டார் என்று சொல்லக்கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட சில தொழில் துறை நிறுவனங்களுக்கு “வளர்ச்சி” இந்த பத்தாண்டு காலங்களில் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ்வளர்ச்சி ஒழுங்கமைக்கப்படாத அல்லது அமைப்பு சாரா துறைக்கு , சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற் துறைக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. உண்மையில் ஒழுங்கமைக்கப்படாத துறைகளின் (Informal Sector) வீழ்ச்சியை அடித்தளமாக கொண்டே இந்த வளர்ச்சி கட்டமைக்கப்படுகிறது.

அதனால்தான் இத்தகைய வளர்ச்சியில் வேலை வாய்ப்புகள் இல்லை, மக்களுக்கு போதிய வருமானம் இல்லை, சந்தையில் பொருள்  வாங்குவோர் இல்லை அதனால், புதிய முதலீடுகளும் இல்லை. உண்மையில் பொருளாதாரம் வளரவில்லை.

இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய அரசு இத்தகைய ” கோளாறே”  (வேலையில்லா வளர்ச்சி) தனது பெருமையாக எண்ணுகிறது. பொருளாதாரத்தை இப்படித்தான் டிஜிட்டல் மயமாக்குவோம் என மார் தட்டுகிறது. இந்த பார்வையில் விளைந்ததுதான் இந்த பட்ஜெட்!

உண்மையில் இந்திய பொருளாதாரம் வளர வேண்டுமெனில், பாதிப்படைந்துள்ள கோடிக்கணக்கான மக்களும், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களும் நிமிர வேண்டுமெனில், அமைப்பு சாரா தொழில்கள் தலைதூக்க வேண்டுமெனில், அதற்கு பட்ஜெட்டில் போதிய நிதிகளை ஒதுக்கி முன்னேற்றத்திற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். இடைக்காலமாக சலுகைகள் அறிவிக்க வேண்டும் . மறைமுக வரி சுமையை குறைத்து நேர்முக வரிகளை சீர்படுத்தி கொழுத்த பண முதலைகள், ஏகபோக கம்பெனிகள் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகள் மீது சொத்து வரி அதீத லாப வரி போன்ற நேர்முக வரிகள் மூலம் அரசு வருமானத்தை பெருக்க முற்படவேண்டும் . மக்களின் வாழ்வாதாரம் கூடினால் நுகர்வும் சேமிப்பும் கூடும் தேவைகள் பெருக தோழில் முதலீடும் வளரும்.

ஆனால், பணக்காரர்களுக்கு நேர்முக வரியை (Corporate Tax) குறைக்கும் இந்த பட்ஜெட் மக்கள் மீதான மறைமுக வரிச்சுமையைகுறைக்க எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

# அமைப்பு சாரா துறைகளின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

# வேளாண்துறைக்கு நிதி குறைப்பு

# மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்திற்கு நிதி குறைப்பு

#  பொது சுகாதாரத்துறைக்கு நிதி இல்லை

#  கல்வி துறைக்க்கான ஒதுக்கீட்டில் மாற்றமில்லை.

#  உணவு சலுகை மூன்றில் ஒரு பங்காக குறைப்பு

இன்ஷூரன்ஸ் மற்றும் விவசாய பாதுகாப்பிற்கு ஒதுக்கீடு குறைப்பு  ஆகிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

நரேந்திர மோடி அரசிற்கு நாட்டு மக்களின் பரிதாப நிலையும் அவர்படும் அல்லல்களும் புரிகிறதா அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறதா என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது.

மிகச் சமீபத்தில் வெளியான ஒன்றிய அரசின் எக்கனாமிக் சர்வே தெளிவாக இந்திய மக்களின் உண்மையான வாழ்வு நிலைகளை Hunger, Under nutrition, Malnutrition  போன்ற தலைப்புகளில் தெளிவாக எடுத்துரைத்த பின்னும் உணவு மானியத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மூன்றில் ஒரு பங்காக குறைத்து ஒதுக்குவதும், பொது சுகாதார நிதி ஒதுக்கலில் கூடுதல் நிதி ஒதுக்காமல் இருப்பதும் நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா?

இந்திய மக்களுக்காக அரசு செய்யவேண்டிய சமூக செலவினங்களை இந்த அரசு குறைத்துள்ளதை வார்த்தை ஜாலங்களால் மறைக்க முடியுமா?

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான மன்ரேகா  MNREGA  திட்டத்திற்கு நிதி மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டு வெறும் 60,000 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூறு நாட்களுக்கான வேலைக்கு தேவைப்படும் நிதி 2,72,000 யாக கணக்கிடப்பட்டிருந்த நிலையில், வெறும் 60,000 கோடி மட்டும் ஒதுக்கியிருப்பது எதைக் காட்டுகிறது?

இதைப் போன்றே உணவப்பொருள்களுக்கான் அரசு மானியத்தையும் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது இந்த பட்ஜெட்டில் !

PM சுவஸ்தியா சுரக்‌ஷா யோஜனா திட்டத்திற்கு சென்ற ஆண்டு 10,000 கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால் செலவிடப்பட்டதோ 8,270 கோடி மட்டுமே, இந்த ஆண்டு மொத்த நிதியே 3,365 கோடியாக சுருக்கப்பட்டுள்ளது வேதனை. இத்திட்டத்தில் சேர்ந்துள்ள பயனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ் அளிக்கப்படுமா அல்லது அது கலாவதியாக்கப்படுமா?

பெருந் தொற்றினால் பள்ளிகூடங்கள் அடைபட்டநிலையில் மாணவர்களின் கற்கும் தரம் உயர்த்த அனைத்து உலக நாடுகளும் அதற்காக மெனக்கிட்டு நிதி ஒதுக்கி செலவு செய்தன.

மோடி அரசு மட்டும் தான் இதற்கு விதிவிலக்காக நிதி ஒதுக்கவில்லை. இப்பொழுது புதிய தேசியக் கல்விக் கொள்கை பற்றி வாய் கிழிய பேசும் மோடி அரசு உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்குவதில் கஞ்சத்தனம் பண்ணுவது ஏன் ? வெறும் 3,267 கோடி மட்டுமே சென்ற ஆண்டைவிட அதிகமாக ஒதுக்கியுள்ள அரசு பணவீக்கத்தை பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை.

பொதுவாக கல்விக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 63,449 கோடி , இது சென்ற ஆண்டைவிட 5,356 கோடி அதிகம் என்று ஆரவாரமாக அறிவித்த நிர்மலா சீத்தாராமன் சென்ற  நிதி ஆண்டில்  விழுந்த துண்டான 4,396 கோடியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலே பேசுகிறார் . அதை கணக்கில் எடுத்து கொண்டால் உண்மையில் கிடைக்கும் நிதி வெறும் 960 கோடி கூடுதல் தொகையே ஆகும். பணவீக்கம் காரணமாக உண்மையான நிதி சென்ற ஆண்டைவிட குறைவு தான் என்பதை அவரால் மறுக்க இயலாது.

விவசாயத்தை பற்றியும் விவசாயிகள் பற்றியும் கரும்பாக பேசும் நிர்மலா சீத்தாராமன்,  உண்மையில் இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவு குறைத்துள்ளார் , ஊரக வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளது இந்த அரசு.

விவசாயிகளுக்கு உரியவிலை கிடைக்காத பொழுது அவர்களுக்கு உதவ மார்க்கெட் இன்டர்வென்ஷன் ஸ்கீம்  சில ஆண்டுகள் முன்பாக கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 1,500 கோடி ரூபாய்களில் இருந்து வெறும் 1 லட்ச ரூபாயாக இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் இந்த அரசு விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறது போலும்!

அதை போன்றே, ”PM KISAN திட்டத்தில் ஆண்டு ஒன்றிற்கு விவசாயி ஒருவருக்கு ரூ. 6,000 கொடுப்பதில் இருந்து ரூ 8,000மாக இனி கூட்டி கொடுப்போம்” என்று ஆரவாரமாக மோடி சில மாதங்கள் முன்பு (தேர்தல் வேளையில் ) அறிவித்தார் அல்லவா? ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்பது வேதனை. சென்ற ஆண்டு ஒதுக்கிய அதே 60,000 கோடி ரூ. தான் இந்த ஆண்டிலும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரும் முதலீடு என்ற செலவினத்தை பற்றி பக்கம் பக்கமாக நிர்மலா சீத்தாராமனால் பேசப்படும் Capital Expenditure ன் கணக்குகளும் இப்படித்தான் ; ஒளிந்து கொண்டிருக்கும் நம்பர்கள் சுரண்டினால் தான் தெரிய வரும் .

இயற்கை எரிசக்திக்கான முதலீட்டு கணக்கில் எண்ணெய் கம்பெனிகளுக்கு கொடுக்கப்படும் நிதியும் சேர்க்கப்பட்டிருக்கும்!

அடுத்து, இந்த பட்ஜெட் மாநில அரசுகளுக்கு அவர்தம் முதலீட்டு செலவினங்களுக்காக ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக கூறுகிறது. உண்மையில் அதிக நிதி மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறதா? என்றால், இல்லை என்றே புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

2021-2022ல்  வழங்கப்பட வேண்டிய  நிதி 4,60,575 கோடி ரூ. ஆனால் அதை 3,67,204 கோடியாக 2022-2023 பட்ஜெட்டில் குறைத்து அறிவிக்கப்பட்டது, அதுவே பின் திருத்தப்பட்ட மதிப்பில் ரூ.3,07,204 கோடியாக மாற்றப்பட்டது.

2023-2024 பட்ஜெட் ரூ. 3,59,470 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. வரி மூலம் கிட்டும் வருமானத்தில் மாநிலங்களின் பங்கு தற்பொழுது (2023-2024ல) 30.4% சதவிகிதமாக உள்ளது .

2021-2022ல் மாநிலங்களின் பங்கு 33.2% சதவிகிதமாக இருந்ததை எண்ணிப்பார்த்தால் மாநிலங்களுக்கு கிடைக்கும் பங்கு -14வது நிதி கமிஷன் உறுதி அளித்தவாறு- கிடைக்க வெகு நாட்களாகும் போல தோன்றுகிறது.

இவையெல்லாம் மாநிலங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை தரும் விஷயங்கள் அல்ல.

மாநிலங்கள் நிதி சுதந்திரமோ, நிதி அடிப்படையோ இல்லாமலிருந்தால் அது மக்களின் வாழ்வாதாரங்களையும் அவர்களது வாங்கும் திறனையும் வெகுவாக பாதிக்கும் . அதனடிப்படையில் பொருள் உற்பத்தியும், அதற்கான முதலீடும் பாதிப்படையும்.

ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சண்டி மாடுபோல் போன திசைவழியிலேயே தொடர்ந்து பயணிக்கும் மோடி அரசு பெரும் முதலீட்டு திட்டங்களை அறிவித்து விட்டாலே, மக்கள் உண்மை வாழ்நிலைகளை மறந்து மோடி அரசின் “பொற்காலத்தை ” ஆதரிப்பார்கள் என்று நம்புகிறதா?

பங்கு சந்தை கூட நேற்று காலையில் ஏறுமுகமாக காட்சியளித்து பின்னர் மாலையில் நாங்கள் ஏமாறவில்லை என்ற பாணியில் இறங்குமுகமாக முடிந்தது நினைவிருக்கிறதா?

வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்த பட்ஜெட் அறிவிப்பை கண்டு ஏமாறவில்லை. இதை அதானி பங்குகள் உலக சந்தைகளில் பட்ட கதியிலிருந்து புரிந்து கொள்ளலாம் .

”இந்திய மக்கள் தாங்கள் இவ்வாறு மீண்டும் முட்டாளாக்கப்படுவதை விரும்புவார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று கூறுகிறார் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் ஜயதி கோஷ்.

நாமும் பொறுத்திருந்துபார்ப்போம்!

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time