அரை நூற்றாண்டாக ஒலித்த அமுதக் குரல்!

-சாவித்திரி கண்ணன்

 50 வருடங்களாக கேட்டு உருகியும், மயங்கியும், நெகிழ்ந்தும், அழுதும், தவித்தும் நம்மை பலவித மனநிலைகளுக்கு கொண்டு சென்ற கான தேவதையின் குரல் தொடர்ந்து அனைவர் மனதிலும் மேலெழுந்து வருகிறது. வாணி ஜெயராமின் நவரசம் சொட்டும் தேனிசை கீதங்களை மீளவும் நினைவு கூர்ந்தால்.. சில ரகசியங்கள் சொல்கிறது!

வாணி ஜெயராம் இந்திய இசை உலகில் பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர், யார் மனதையும் காயப்படுத்தாமல் பேசும் பண்பாளர் எனப் பெயரெடுத்தவர். 50 ஆண்டுகளைக் கடந்த போதிலும் அவரது குரலில் மாற்றமோ, நடுக்கமோ, பிசிரோ சிறிதும் இல்லை! இறை பக்தியும், தமிழ்ப் பற்றும் ஒருங்கே கொண்டவர்! கடந்த இருபது ஆண்டுகளாக அவர் பெரிய வாய்ப்புகளின்றி இருந்தாலும், மிகுந்த சுயமரியாதையுடனும், கம்பிரத்துடனும் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக வெளிப்பட்டார்.

தமிழ்த் திரையில் வாணிஜெயராம் கொடிகட்டிப் பறக்க காரணமானவர் புன்னகை அரசி எனப் புகழப்பட்ட கே.ஆர்.விஜயா தான். கே.ஆர். விஜயாவின் அந் நாளைய ஒரு பேட்டி வாயிலாகத் தான் இது தெரிய வந்தது! தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் வட இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்த காரணத்தால் அவர் முதலில் இந்தி பாடகியாக, அதுவும் கஜல் பாடுவதில் கைதேர்ந்தவராக விளங்கினார்! நடிகை கே.ஆர்.விஜயா அவர்கள் திரை உலகில் உச்சத்தில் இருந்த காலத்தில் தனக்கென்று ஒரு கதை எழுதும் குழுவை உருவாக்கி சொந்த படங்கள் தயாரித்து வந்தார். அப்போது அவர் சூட்டிங்கிற்காக மும்பை சென்று ஹோட்டல் அறையில் தங்கி இருந்த போது எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் ஒரு வித்தியாசமான குரல் ஒலிக்க கேட்டார்! அந்தப் பாடல் முழுமையும் வெகு ஆர்வத்துடன் அணுவணுவாக ரசித்து கேட்ட பிறகு, அவர் யாரென்று விசாரித்து அறிந்து உடனே தன் படத்தில் தனக்காக பாட சென்னைக்கு அழைத்துப் பாட வைத்தார்!

இதற்கு முன்பே வாணி ஜெயராம் தமிழ் சினிமாவில் ஓரிரு பாடல்கள் பாடி இருந்தாலும், அது யார் கவனத்தையும் கவரவில்லை. ஆனால், கே.ஆர்.விஜயா ஏற்பாட்டில் வாலி எழுத எம்.எஸ்.வி இசையில், ‘தீர்க்க சுமங்கலி’ படத்தில் வாணி பாடிய, ‘‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா..” பாடல் தான் அவரை தமிழ் மக்களின் நெஞ்சுக்கு நெருக்கமாக்கியது. அதற்குப் பிறகு 1970 களின் மத்திம காலம் தொடங்கி 90கள் வரை தமிழ்த் திரையின் பெரும்பாலான பிரபலப் பாடல்களுக்கு வாணியைத் தான் தேடினர் இசை அமைப்பாளரகள்!

அதுவும் குறிப்பாக பாலச்சந்தர் படங்களில் வாணி தொடர்ந்து பாடி வந்தார்!  ‘நாதமெனும் கோவிலிலே ஞான விளக்கு ஏற்றி வைத்தேன்’, ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்..’, ‘கேள்வியின் நாயகனே..’ ‘வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்….’ ‘கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்..’ என ஏராளம், ஏராளம்!

தமிழ் உச்சரிப்பில் வாணி அளவுக்கு சுத்தமாக பிழையில்லாமல் பாடிய வேறு பாடகியை பார்ப்பது அரிது!

உதாரணத்திற்கு, பாலசந்தரின் ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில்,

”இலக்கண்ம் மாறுதோ..இலக்கியம் ஆனதோ” என்ற பாடலை எஸ்.பி.பியுடன் பாடும் போது.

”என் வாழ்க்கை நதியில் ‘கரை’ ஒன்று கண்டேன்

உன் நெஞ்சில் ஏதோ ‘கறை’ ஒன்று கண்டேன்

புரியாததாலே திரை போட்டு வைத்தேன்.

திரை போட்ட போதும் அணை போட்டதில்லை.

மறைத்திடும் திரைதனை

‘விலக்கி’ வைப்பாயோ

‘விளக்கி’ வைப்பாயோ..”

என்ற பாடலில் ‘கரை’க்கும், ‘கறை’க்குமான உச்சரிப்பாகட்டும் ‘விலக்கி’ வைப்பாயோ, ‘விளக்கி’ வைப்பாயோ என்பதற்காக உச்சரிப்பாகட்டும், மிகத் துல்லியமாக பாடியிருப்பார். தாய் மொழியே தமிழாக கொண்டதனால் கூட இந்த லாவகம் அவருக்கு கைகூடியிருக்கலாம்.

‘புரியாததாலே திரை போட்டு வைத்தேன் ‘என்பதில் அதைச் சொல்லும் தொனியிலேயே அந்த உணர்வை மிக இயல்பாக வெளிப்படுத்தி அடுத்த வரியில் திரை போட்ட போதும் அணை போட்டதில்லை என குரலை இறக்கியும், ஏற்றியும் பாடுவார்! அடுத்த வரிகளில், ‘மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ…’ என ராகத்தை இழுத்து, விளக்கி வைப்பாயோ என குரலில் இறங்கி மென்மையாக கேட்பதில் தான் என்ன  ஒரு அற்புதமான உணர்வு நிலையை கடத்தி இருப்பார்!

இதனால் தான் கவிஞர் கண்ணதாசனுக்கும் வாணியை மிகவும் பிடிக்கும். ”குடும்ப பாங்கான குரலுக்கு வாணியின் குரல் மிகப் பொருத்தமானது. தெய்வீகமானது. அவரது தோற்றமும் கூட, தென் பாண்டி நாட்டுப் பெண்ணை பிரதிபலிப்பதே” என்று கூறியுள்ளார் கவிஞர்! ‘ஆம், இது முற்றிலும் உண்மையானது’ என்பதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்!

”நாதமெனும் கோவிலே ஞான விளக்கேற்றி வைத்தேன்!

ஏற்றி வைத்த விளக்கினிலே

எண்ணெய் விட நீ கிடைத்தாய்!”

”இசையும் எனக்கிசையும்! – தினம்

என் மனம் தான் அதில் அசையும்!”

மற்றொரு மனம் மயக்கும் காதல் பாடல்

”என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்..”

அடடா! என்னே இனிமை!

‘கெளரி மனோகரியைக் கண்டேன்…” என பளிச்சென்று ஒலிக்கும் அந்த கானக்குரல்!

குடும்ப பிணைப்பை மிக அழகாகச் சொல்லும் குடும்பத் தலைவி பாடுவதாக அமைந்த

”ஆயிரம் ஆண்டுகள், ஆயிரம் பிறவிகள்

பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்.

அத்தனைப் பிறப்பிலும் இத்தனை உறவும்

அருகினில் இருந்திட வேண்டுகிறேன்.”

இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் அனேகமாக தன் படங்கள் அனைத்திலும் வாணியின் குரலை ஒலிக்க செய்தார் எனச் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அதில் குறிப்பாக

”என் உள்ளம் அழகான வெள்ளித் திரை

அதில் உன் வாழ்க்கை தான், என்னோடு தான்”

என்ற பாடல் மிக அழகானது.

ஜெயகாந்தன் எழுதிய பாடல்களுக்கும் வாணி தன் குரல் வளத்தால் உயிர் கொடுத்துள்ளார்! சில நேரஙகளில் சில மனிதர்கள் படத்தில் வரும்,

”வேறு இடம் தேடிப் போவாளோ..

இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ… பாடலில்,

பருவ மழை பொழியப்,பொழியப்

பயிரெல்லாம் செழிக்காதோ..”

-என உச்ச ஸ்தாயியில் இழுத்துச் சென்று விட்டு இறங்கி வந்து,

‘இவள், பருவ மழையாலே வாழ்க்கை பாலைவனமாகியதே..’

எனச் சொல்லும் போது, நம் கண்களை குளமாக்கிவிடுவார்!

ஜேசுதாஸுடன் வாணி ஜெயராம்

பிற்கால எம்.ஜி.ஆர் படங்களில் கே.ஜே.ஜேசுதாசும், வாணி ஜெயராமும் தான் அதிகமாகப் பாடினர்.

”இன்று சொர்கத்தின் திறப்பு விழா

புதுச் சோலைக்கு வசந்த விழா”

என பரவசம் உண்டாக்கும் பாடல் மறக்க முடியாது!

”தங்கத்தில் முகம் எடுத்து,

சந்தனத்தில் உடல் எடுத்து

காமன் போல வந்திருக்கும் உருவோ..

அந்த தேவலோக மன்னவனும் நீயோ…”

என்ற பாடல் காதல் ரசம் சொட்டும் பாடலாகும்! அதில் வரும் வரிகளான

எந்தன் மனக் கோயிலில்

தெய்வம் உனைக் காண்கிறேன்.

உந்தன் நிழல் போலவே

வரும் வரம் கேட்கிறேன்…

எனப் பாடும் போது இந்தக் காதலின் உன்னதத்தை, தெய்வீகத்தை இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா? என உருக வைக்கிறார்!

ஜேசுதாசுடன் சேர்ந்து பாடிய மற்றொரு எம்.ஜி.ஆர் படப்பாடல்

‘தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்

மழை கொண்ட மேகம்!’

வாணி ஏதோ தெய்வீகமான காதல் பாடல்களை மட்டும் பாடியவரல்ல. டப்பாங்குத்து, காபரே டான்ஸ் என எல்லாவற்றுக்குமே பாடியுள்ளார்! அதில் பிரபலமானவையும் உண்டு, பிரபலமில்லாமல் போனவையும் உண்டு! சினிமா என்று வந்துவிட்டால் எல்லா விதப் பாடல்களையும் பாடத்தானே வேண்டும் என்ற சமரசமாக இருக்கலாம்!

”மச்சானை பாரடி, மச்சமுள்ள ஆளுடி

ஆளு நல்ல ஆளு தான், வாலு ரொம்ப நீளம் தான்”

என்ற பாடலில் எஸ்.ஜானகியுடன் வாணியும் துள்ளலாகப் பாடி இருப்பார்!

எஸ்.ஜானகியுடன் வாணி ஜெயராம்!

வாணி ஜெயராம் தான் பாடும் காலகட்டத்தில் அனைத்து ஆண்  பாடகர்களோடும் இணைந்து பாடியுள்ளார் என்ற போதிலும் எஸ்.பி.பியுடன் மட்டுமே ஆயிரம் பாடல்களுக்கு மேல் ஜோடி சேர்ந்து பாடியுள்ளார் பல மொழிகளில்!

”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

மனம் தாளாமல் துடித்திடும் ஓசை!

அந்தத் தீராத ஆசைகள் என்ன?

இந்த நீராடும் வேளையில் சொல்ல..!”

என்று ரகசியமாக காதலை பரிமாறும் கானம் செம அசத்தல்!

எஸ்.பி.பியின் இசையிலும் வாணி பாடியுள்ளார்.

‘மேகம் முந்தாணை…” பாடலாகும்!

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் வாணி ஜெயராம்

சதுரங்கம் படத்தில்,

”மதனோற்சவம் ரதியோடு தான்!

ரதி தேவியோ பதியோடு தான்!

உயிரோவியம் உனக்காகத் தான்

உடல் வண்ணமே அதற்காகத் தான்!”

என்ற பாடல் காதல் போதை கிளர்ச்சியைத் தூண்டும் பாடலாகும்.

மேல் நாட்டு மருமகள் படத்தில்

”முத்தமிழில் பாட வந்தேன்.

முருகனையே வணங்கி நின்றேன்…”

என்ற பாடல் எல்லா முருகன் கோவில்களிலும் இன்றளவும் ஒலிக்கும் பாடலாகும்!

அதே போல புனித அந்தோணியார் படத்தில் வரும்

”மண்ணுலகில் இன்று தேவன் பிறந்து வருகிறான்…!”

பாடலானது ஒவ்வொரு கிறிஸ்த்துமஸ்சின் போதிலும் தமிழகம் முழுக்க ஒலிக்கும் பாடலாகும்! அம்மன் பாடல்கள் தொடங்கி இஸ்லாமிய பக்திப் பாடல்கள் வரை ஏராளமான ஆன்மீக உணர்வை உண்டாக்கும் பாடல்களை இந்தி, உருது உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார்!

இப்படியாக நம் வாழ்வின் அனைத்து சம்பவங்களுக்கும், உணர்வுகளுக்கும் பொருந்தும் விதமாக பல்லாயிரம் பாடல்களை பாடிச் சென்ற இந்த கலைவாணி, வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாத உணர்வு நிலைகளை நமக்குள் கடத்தி, நம் மனங்களில் ரகசியமாக உறவாடியுள்ளார்! எனவே, என்றென்றும் நம் இதயங்களில் வீற்று இருப்பார்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time