டி.என்.பிஎஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளில் ஈடுபட்ட வர்களை உடனடியாக ஏன் டிஸ்மிஸ் செய்யாமல் மாதக்கணக்கில் சஸ்பெண்டிலியே வைத்து பாதி சம்பளம் தண்டத்திற்கு கொடுக்கிறது.இது இப்படியே தொடருமானால் வேலைக்கு வராமல் சஸ்பெண்டில் இருந்தவாறே இவர்கள் (60 க்கும் மேற்பட்டோர்)முக்கால்வாசி சம்பளத்தை பெறக் கூடிய நிலை தான் ஏற்படும். தமிழக அரசு.தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளி வரும் தகவல்கள் அரசு பணிக்காக தங்களைத் தயார்படுத்தி தேர்வெழுதும்லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பேரதிர்சியை தந்து கொண்டுள்ளது .அரசு ஊழியர்கள், காவல்துறையினர், இடைத்தரகர்கள்… என்பதாக இது வரை இருபது பேர் கைதாகி இருந்தாலும் மற்ற பலரை எப்படியும் பாதுகாப்பது என்ற அதிமுக அரசின் முயற்சி காரணமாக சி.பி.சி.ஐ.டி.போலீஸ் இது வரை மேற்கொண்ட விசாரணைகள் வீழலுக்கு இறைந்த நீராகியுள்ளது.
குருப்- 4 க்கான தேர்வு 2019 செப்டம்பரில் நடந்தது.இந்த தேர்வை 16,29,865 பேர் ,தமிழகம் முழுக்கவுள்ள 5,575 மையங்களில் எழுதினர். ஆனால்,அந்த தேர்வின் முடிவு 2019 நவம்பரில் வெளியான போது, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 39 பேர் முதல் நூறு இடங்களில் வந்தது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.விசாரணையில் இதே போன்ற முறைகேடுகள் குருப் 2 ஏதேர்வில் அரங்கேறி உள்ளதும்,அதில் 42 பேர்களின் விடைத்தாள் திருத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. மேலும் இந்த மையத்தில் 2016 ஆம் ஆண்டு முதற் கொண்டே இதே போலபணம் கொடுத்து வெவ்வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் வந்து தேர்வெழுதி குறுக்கு வழியில் வெற்றி பெற்று வருவதும் தெரியவந்து, இது வரை 60 பேர் சஸ்பெண்டாகியுள்ளனர் என்றாலும், கீழ்நிலையில் உள்ளவர்கள் சிலர் கைதானாலும், மேல்மட்டத்தில் உள்ளவர்கள்ஏன் கைது செய்யப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது சஸ்பெண்டில் உள்ளவர்களை மேல்மட்டத்தில் உள்ளவர்கள் காப்பாற்றி வருவற்கான காரணம் தங்கள் பெயரை அவர்கள் இழுத்துவிடக் கூடாது என்பது தான்!
கடந்த ஆறு மாதமாக கிடப்பில் இருந்த இந்த வழக்கில் சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில் போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கினர். பின்னர் உள்துறை, வருவாய்துறை, விஏஓ (கிராம நிர்வாக அதிகாரி) உள்பட 20 பேரை போலீசார் கடந்த 10 நாளில் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்கள் 20 பேரையும் சஸ்பெண்ட் செய்யும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்கள் 20 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 20க்கும் மேற்பட்டவர்களை தேடி வருவதாக சொல்லப்படுவது உண்மையில்லை.ஏனெனில் அவர்கள் அரசின் மேல்மட்டத்தில் உள்ளவர்களால் பாதுகாக்கபடுகின்றனர்.
.தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 87 லட்சம்.வேலை வாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்யாமல் பல தேர்வுகள் எழுதி வேலைக்காக முயற்சிப்போர் இன்னும் சில லட்சம்!
சுமார் மூன்று லட்சம் அரசு ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பை பெறக்கூடிய ஒரே நுழைவாயில் டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தாழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மட்டுமே! இதன் மூலம் கிராம நிர்வாக அதிகாரிகள்,எழுத்தர் தொடங்கி மாவட்ட துணை ஆட்சியர்,மாவட்ட துணைகண்காணிப்பாளர் பதவி வரை பல தளங்களில் உள்ள பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தி,தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி முலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் மட்டுமே சுமார் ஒரு கோடிப்பேர் தேர்வு எழுதியுள்ளனர் என்பதைக் கொண்டு பார்த்தால், இந்தநிறுவனத்தின் மீது தமிழக இளைஞர்கள் எவ்வளவு எதிர்பார்ப்பும்,நம்பிக்கையும் வைத்துள்ளனர் என்பதை உணரலாம்!
ஒரு இளைஞன் ஆரம்பள்ளி தொடங்கி கல்லூரி வரைபடித்ததோடு இல்லாமல்,இந்ததேர்வுகளுக்கேன்றே ஒருவருடம் தன்னை இரவுபகலாகத் தயார்படுத்திக் கொண்டுதான்தேர்வுஎழுதவருகிறான். வீட்டில் படிக்க சரியான சூழல் இல்லாத இளைஞர்கள் பூங்காக்களுக்கு சென்றும், நூலகங்களுக்கு சென்றும் மணிக்கணக்கில்தங்களை வருத்தி தேர்வு எழுதி நம்பிக்கையோடு காத்திருப்பதை பார்க்கலாம்! அப்படிப்பட்ட இளைஞர்கள் இன்றுதங்கள் தலையில் இடி விழுந்ததைப் போலதுடிக்கிறார்கள்- டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளால்!
பலவருட படிப்புக்கும்,உழைப்புக்கும் பயனில்லை என்றால்…,இந்த இளைஞர்களுக்கு ஏற்படும் விரக்தி என்பது ஏதோ சமூகம் சாராத தனிநபர்கள் பிரச்சினையல்ல!மேலும் பல லட்சம் லஞ்சமாகக் கொடுத்து அரசு வேலைவாய்ப்புபெறுபவரிடம்அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை பொதுமக்கள் பெறமுடியாது என்பது மட்டுமல்ல,எந்த ஒரு அரசு சேவையையும் லஞ்சம் இல்லாமல் பெறமுடியாது. இந்த நிலைமைக்கு பிள்ளையார் சுழி போடுவதுதான் அரசுதேர்வாணைய முறைகேடுகளாகும். ஆகவே முறைகேடுகள்,உழ்ழல்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், நேர்மையான முறையில் அரசு ஊழியர்கள் வேலைக்கு தேர்தெடுக்கப்பட வேண்டும்.
ஏன்தண்டிக்க மறுக்கிறார்கள்?
டி.என்.பி.எஸ்.சி தேர்வுமுறைகேடு தொடர்பாக நீதிமன்றம்சென்று கடுமையாகப் போராடினாலும் கூட தண்டிக்கபடுவது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.இதற்கு இரண்டு உதாரணங்கள்!
2005 ல்குருப் 1க்குதேர்வான 91 பேர் முறைகேடான வகையில் பதவி பெற்றுள்ளனர் என ஏ.பி.நடராசன் தொடங்கி ஏராளமானோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில்எட்டுபேரைத் தவிர்த்து மற்றவர்களின் முறைகேட்டை 2009 ல்உறுதிபடுத்தியது உயர்நீதிமன்றம்! இதில் 15 பேர் ராஜினாமா செய்துவிட்டனர்.மூன்று பேர் பணியில் சேராமல் தவிர்த்துவிட்டனர். மீதி 65 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
உச்சநீதிமன்றவிசாரணையில்நீதிபதிகள்சந்தேகத்திற்குஇடமின்றிகுற்றச்சாட்டை உறுதிபடுத்தியதோடு,சம்பந்தப்பட்டவர்களை உடனே தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டனர். தீர்ப்பு வெளியான ஆண்டு 2014 . இதற்குள் சம்பந்தபட்டவர்களில் 15 பேர் டி.ஆர்.ஓ வாக பணியாற்றி வந்தனர்.15 பேர் ஏ.டி.எஸ்.பி யாக பணியாற்றிவந்தனர்.இவர்கள் இத்தனை ஆண்டுகள் அரசு பணியில் வேலை செய்து அரசின் நம்பிக்கையை பெற்று விட்டதால், தற்போது அவர்களை தீடிரென்று பதவி நீக்கம் செய்யமுடியாது என தமிழக அரசுதரப்பில் வாதம் வைக்கபட்டது. இந்த வகையில் குற்றம் இழைத்தவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
இதேபோல 2017 ல் நடந்த குருப் 1 தேர்வில்அப்பல்லோபயிற்சிமையம் மற்றும்மற்றொரு அரசியல்வாதி நடத்தும் பயிற்சி மையம் ஆகிய வற்றி லிருந்து மொத்தம் 62 பேர் தேர்ச்சிபெற்றனர். இது சம்மந்தமாக மத்திய குற்றபிரிவு ரெய்டு நடத்தி தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் சாம்ராஜேஸ்வரன் என்பவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தது. ஆனால்,நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதைத் தொடர்ந்து இன்று வரை இதில் சாம்ராஜேஸ்வரன் உள்ளிட்டஉரியவர்கள் யாருமே தண்டிக்கப்படவில்லை என்பதை நாம் மறக்க கூடாது..ஆகவே இந்த குற்றவாளிகளின் கூட்டுக்களவாணிகள் என்பதே உண்மை!
பொதுவாக ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை அரசுப்பணிக்கு எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அமைப்பை பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. இங்கே,நேர்மையான நபர்கள் நியமிக்கப்பட்டால் அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு திறமையின் அடிப்படையில் வேலை கிடைக்கும்.அதன் முலம் ஊழல் இல்லாத அரசு சேவையை இந்த நாடேபெற்றுப் பலனடையும்! ஆனால்,சாதிமற்றும் கட்சிஅடிப்படையில் இதன் தலைவர் மற்றும்உறுப்பினர்கள் நியமனம் நடப்பதால் அவர்களும் அந்த சார்பு கண்ணோட்டத்திலேயே அரசுப் பணிக்கு ஆட்களைகுறுக்கு வழியில் எடுக்கும் போக்கு தான் நடந்து கொண்டுள்ளது. இதற்கு ஒரு முடிவு ஏற்படவேண்டும்.
பலவகைமுறைகேடுகள்
# செல்வாக்கான பயிற்சிமையங்களை கண்டடைவது.
# தேர்வுத்தாள்களை முன்கூட்டியே பெற்றுவிடுவது.
# தில்லுமுல்லுவை அனுமதிக்கும் தேர்வுமையங்களை தேர்ந்தெடுத்து பரிட்சை எழுதுவது.
# விடைத்தாள் தலைமை நிறுவனத்திற்குசென்றுசேரும் வழியில் அதை மாற்றுவது அல்லது சரியான விடைகளை எழுதிவைப்பது.
# விடைத்தாளில்அடையாளக்குறியீடு வைத்து, அதை திருத்துபவருக்கு சிக்னல் தருவது.
# நேர்முகத் தேர்வில் பணம் கொடுப்பவர்களுக்குமதிப்பெண்களைஅள்ளி வழங்குவது.
வியாபம் ஊழல்
மத்தியபிரதேசத்தில் வியாபம் எனப்படும் அரசு அமைப்பின் மூலம்தான்அரசுதேர்வுநடத்தப்படுகிறது.2008 தொடங்கி 2018 வரை இதில் நடந்த முறைகேடு மூலமாக ஏராளமானோர் அரசு வேலையில் சேர்ந்தனர்.இதில் சுமார் 20,000 கோடி ரூபாய்அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என கருதிய நீதிமன்றம் இதை சி.பி.ஐ விசாரிக்க ஆணையிட்டது.இதில் மாநில கல்வி அமைச்சர்,ஐ.பி.எஸ் உயர் அதிகாரி உள்ளிட்டசுமார் இரண்டாயிரம்பேர் கைதாயினர். வழக்குவேகம்பெற்றபோது 47 பேர் மர்மமான வகையில் மரணமடைந்தனர்.இறுதியில்31 பேர் பல்லாண்டுகள் சிறைவாசம்பெற்றனர். அதேபோல தமிழகத்தில் பலநூறு கோடி ரூபாய் புழங்கும் டி.என்.பி.எஸ்.சி ஊழல்களை சி.பி.ஐ விசாரித்தால் தான் உண்மைவெளிவரும்என்பதேமக்கள் விருப்பம்!
பயிற்சி மையங்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தினால் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும். உண்மையில் எந்த பயிற்சிமையங்களுக்கும்சென்று படிக்க முடியாத லட்சக்கணக்கானவர்கள் இன்றும் தங்கள் சொந்த உழைப்பிலும் ,திறமையிலும் நம்பிக்கை வைத்து பரிட்சை எழுதி வருகின்றனர்.
Also read
ஆகவே,தேர்வு முடிவுகளை முழுமையாக இணையத்தில் பி.டி.எப்பாக்க வெளியிட வேண்டும் இப்படி நேர்மையாக தேர்வு நடத்தி திறமையான வர்களை தேர்தெடுக்க பல வழிமுறைகள் உள்ளன .ஆனால், ஆட்சியாளர்களே குறுக்கு வழியில் தேர்தலில் பணம் கொடுத்து வெற்றிபெற்று வருகிறவர்களாக இருப்பதால் அவர்களுக்கு நேர்மையான ஊழியர்களை பிடிக்காது. அவர்களின் தேவை தங்கள் ஊழலுக்கு துணை செய்பவர்களே…! ஆகவே, இவர்களை மீண்டும் திரும்ப முடியாத அளவுக்கு அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும்!
Leave a Reply