ஊழல் அதிமுகவுடன் கைகோர்த்த திமுக அரசு!

-சாவித்திரி கண்ணன்

ஈரோடு கிழக்கு தேர்தல் என்பது இந்த இருபது மாத திமுக ஆட்சி நிர்வாகத்தை சீர் தூக்கிப் பார்த்து மதிப்பீடு செய்யும் ஒரு பொன்னான வாய்ப்பாக மக்கள் அமைத்துக் கொண்டால், அது தான் ஜனநாயகத்தின் வெற்றியாக இருக்க முடியும்! இதோ அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் சமரசமான திமுக ஆட்சி பற்றி உங்கள் கவனத்திற்கு!

ஈரோடு தொகுதியில் திமுக அமைச்சர்கள் முகாமிட்டு வீடுவீடாகச் சென்று ஓட்டு கேட்டு வருகிறார்கள்! அப்படி வருகின்ற திமுக அமைச்சர்களிடம், ”கீழ் கண்ட விவகாரங்களில் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்?” என பொதுமக்கள் கேட்டால் சிறப்பாக இருக்கும்.

முதலாவதாக சென்ற ஆட்சியாளர்கள் மித மிஞ்சிய ஊழல்கள் செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்ற வாக்குறுதியை சிதைத்துவிட்டது திமுக அரசு! சென்ற ஆட்சியில் ஊழலுக்கு துணை போன ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த ஆட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. முன்னால் அமைச்சர்கள் ஒரு சிலர் வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டன! எந்த முன்னேற்றமும் இல்லை. இதில் கடுகளவும் வெளிப்படைத் தன்மை இல்லை. ஏதோ பேரம் நடந்திருக்க வேண்டும்.

திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கோவை சென்று மிக அதிகமாக வறுத்தெடுத்தது வேலுமணியைத் தான்! ”எல்.இ.டி பல்ப் தொடங்கி பினாயில் வரை ஒவ்வொரு அயிட்டத்திற்கும் பல மடங்கு கூடுதல் விலை வைத்து உள்ளாட்சித் துறையை சூறையாடிய வேலுமணியை நாங்க ஆட்சிக்கு வந்தால் உள்ளே தள்ளுவோம். இது உறுதி” என்றார். உள்ளாட்சித் துறையில் உச்சகட்ட ஊழலில் திளைத்த வேலுமணி தற்போது வெள்ளையும், சொள்ளையுமாக நடமாடிக் கொண்டுள்ளார்.

இது குறித்து நாம் அறம் இணைய இதழில்,

ஊழல் வழக்கில் வேலுமணி தப்புவிக்கபடுகிறாரா?

என  நடைபெற்ற விவகாரங்களை தெளிவாக எழுதி இருந்தோம்.

சென்ற ஆட்சியில் புளியந்தோப்பு கே.பி.பார்க் பல அடுக்கு குடிசை மாற்று வாரியக் கட்டிடங்கள் உதிர்ந்து விழும் நிலைமையில் கட்டப்பட்டது அம்பலமானது! இந்தக் கட்டுமானம்  படுமோசமாக கட்டப்பட்டுள்ளது என ஐ.ஐ.டி ஆய்வு அறிக்கை சமர்பித்தது! இதில் சம்பந்தப்பட்ட ஒ.பி.எஸ் மீது இது மட்டுமின்றி, ஆயிரம் கோடியை விஞ்சும் மிக ஆதாரமான பல ஊழல் புகார்கள் சி.எம்.டி.ஏ வில் செய்தது தெரிய வந்தவுடன் சைலண்ட் மூடுக்கு போய்விட்டது திமுக அரசு! இன்று வரை இதில் யாரும் தண்டிக்கபடவில்லை.

அதே போல மின்சாரத்துறைக்கே ஷாக் கொடுக்கும் வகையில் வரலாறு காணாத விதமாக கொள்ளையடித்துவிட்டு அத் துறையை சுமார் ஒன்றரை லட்சம் கோடி நஷ்டத்தில் தள்ளிய தங்கமணியும் தற்போது தகதகவென்று வலம் வந்து கொண்டுள்ளார். பால்வளத் துறையில் பகல் கொள்ளை அடித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சரியாக வழக்கு பதியாமல் தப்பவைத்தது இந்த ஆட்சி!

கொடநாடு கொள்ளையில் அனைத்தும் தெரிய வந்துவிட்ட நிலையிலும், அதில் தெளிவான நிலைப்பாடு எடுத்து உண்மையான குற்றவாளியான எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கை திசை திருப்பி, குழப்பி பம்முகிறது திமுக ஆட்சி!

சென்ற ஆட்சியில் ஊழலில் கொடி கட்டிப் பறந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி தந்து போக்குவரத்து துறையில் நடந்த ஊழலில் அவரைக் கைதில் இருந்து தப்ப வைத்ததோடு, தற்போது டாஸ்மாக்கிலும், மின்சாரத் துறையிலும் அளவற்ற சூறையாடல்கள் அரங்கேற்றப்பட்டு வருகிறது!

அதிமுக ஆட்சியின் ஊழலுக்கு உடந்தையாக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ், பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், எஸ்.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், குமரவேல்பாண்டியன் ஐ.ஏ.எஸ், விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் மற்றும் சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் நந்தகுமார்  உள்ளிட்டவர்கள் மீது இன்று வரை ஏன் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்பதை திமுக அரசாங்கம் விளக்க வேண்டும். மேலும் இந்த அதிகாரிகள் எல்லாம் தற்போது மிகவும் பாதுகாப்பாக, நல்ல துறைகள் தந்து காப்பாற்றப்பட்டு வருகின்றனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் சிகரமாக  சுற்றுச் சூழல் சீரழிவை தாங்க முடியாமல் நீதி கேட்டு ஊர்வலம் வந்த அப்பாவிகள் 13 பேர்  கொல்லப்பட்ட தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறல் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கை சென்ற ஆண்டு மே 18 ந்தேதி முதல்வரிடம் தரப்பட்டது. ஆனால், அதை மூன்று மாதங்களாக வெளியிடாமல் தாமதப்படுத்தியதோடு மக்களை குருவியைப் போல சுட்டுக் கொன்ற கொடூர போலீஸ் அதிகாரிகள் மீதோ, மாவட்ட அட்சியர் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை திமுக அரசு! வெறும் இடமாற்றல்களோடு விட்டுவிட்டது. இது குறித்து நாம் அறம் இதழில்

இன்னும் கமுக்கம் காட்டுவதேன் தமிழ்க முதல்வரே

என எழுதி  இருந்தோம்.

மனித உயிர்களுக்கு இவ்வளவு தான் மதிப்பா? இந்த அத்துமீறலுக்கு காரணமானவர்களை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்? இதன் பின்ணணியில் நடந்த பேரங்கள் என்ன?

சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபம் ஆன்மீக பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்டு சொசைட்டி ஆக்டில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அங்கே கோயிலைப் போல ஸ்ரீராமர், சீதை, அனுமார் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள், பூஜை, புனஸ்காரங்கள், உண்டியல் நிதி மற்றும் தனிப்பட்ட பிரம்மாண்ட நிதி வசூல் நடத்தப்பட்டன! எதற்கும் முறையான கணக்கு வழக்கு இல்லை. நிதி முறைகேடுகள் கொடி கட்டிப் பறந்தன! இந்த நிலையில் இதை ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது! இதை நீதிமன்றமும் அங்கீகரித்தது! இந்த ஆட்சியில் அந்த ஊழல்வாதிகள் கோர்டில் மேல்முறையீடு செய்த நிலையில்,  பார்ப்பன பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து, அரசு தரப்பில் நீதிமன்றத்திற்கு தகுந்த ஆவணங்களை சரியாக தாக்கல் செய்யாமல், அயோத்தியா மண்டபத்தை மீண்டும் பகல் கொள்ளை பார்ப்பனர்களிடமே ஒப்படைத்துவிட்டது அரசு!

தற்போது சொல்லி இருப்பது சில உதாரணங்கள் தான்! ஈரோடு தேர்தல் வரையிலும் இந்த 20 மாத திமுக ஆட்சி பற்றிய மதிப்பீடுகள் அறம் இணைய இதழில் தொடந்து வரும். வாசகர்கள் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்கட்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time