பிபிசி மீது தினமணி வைத்தியநாதன் பாய்ச்சல்!

தலையங்கத்தை பாஜகவிற்கான ஊதுகுழலாக மாற்றியும், நடுப்பக்க கட்டுரைகள் பெரும்பாலானவற்றை சனாதன கருத்து பரவலாக்கத்திற்குமாக தினமணியை பயன்படுத்தி வரும் வைத்தியநாதன் இன்றைய தலையங்கத்தில் பி.பி.சி ஊடகத்தின் மீது அவதூறு சேற்றை வாரி இறைத்து ,வன்மத்தை கக்கியுள்ளார்!

பிபிசியின் நம்பகத்தன்மை எப்போதுமே கேள்விக் குறியாகத் தான் இருந்திருக்கிறதாம்! பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும் காலனிய மனோபாவத்துடன் தொடர்கிறதாம் அந்த நிறுவனம்! அந்த நிறுவனம் குறித்து பிரிட்டிஷாருக்கே மதிப்பில்லை எனும் போது உலக அளவிலான மரியாதை குறித்து பேசத் தேவையில்லையாம்!

இப்படியெல்லாம் பி.பிசியை வசைமாறி பொழிந்து விட்டு, வைத்திய நாதன் எழுதுகிறார்;

கடந்த 21 ஆண்டுகளில் பல தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்ற பிறகும்,குஜராத் கலவரத்தையும், நரேந்திர மோடியையும் இணைத்துப் பேசுவது முட்டாள்தனம். இப்போது இந்த ஆவணப்படம் வெளியிடப் பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கக் கூடும்? இந்திய வம்சாவளி ஒருவர் பிரிட்டன் பிரதமராகி இருக்கும் நிலையில், இந்தியர்களுக்கு எதிரான மன நிலையை உருவாக்குவது காரணமாக இருக்கக் கூடும். 2024 தேர்தலில் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான பரப்புரை முயற்சியாகவும் இருக்கலாம். என்கிறார்!

இந்த பிபிசி ஆவணப்படத்தை பார்க்கும் யாராயிருந்தாலும், பிபிசியின் இதழியல் அறத்தின் மீது மிகுந்த மரியாதை கொள்வார்களே அன்றி, இவ்விதம் பேசத் துணிய மாட்டார்கள்! நரேந்திரமோடியின் அரசு நிர்வாகத்தில் இருந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மோடி ‘எவ்வளவு பாரபட்சமாக செயல்பட்டார்’ என மனம் திறந்து, நொந்து போய், பேசி இருக்கிறார்கள்! குற்றுயிரும்,குலை உயிருமாக பாதிக்கப்பட்ட மக்கள் வாக்கு மூலம் தந்துள்ளனர்! பாதிப்பை உருவாக்கிய இந்துத்துவ குண்டர்கள் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளனர். இவையாவும் அவரவர் வார்த்தைகளில், வலியுடன் பதிவாகியுள்ளன! இவற்றில் எதுவுமே புனைவில்லை. மேலும், இவை குஜராத் கலவரத்தின் சிறு துளியை மட்டுமே காட்சிபடுத்தி உள்ளன!

ஒரு பத்திரிகையின் ஆசிரியர் ஒரு ஆவணப்படத்தை கேள்விக்கு உள்ளாக்கும் போது, ‘அதில் சொல்லப்பட்ட அல்லது காட்சிபடுத்தப்பட்ட இன்னின்ன விஷயங்கள் உண்மை இல்லை’ என சொல்வது தான் முறையாக இருக்கும். அப்படி இல்லாமல் பொத்தாம் பொதுவாக ”பிபிசி நிறுவனம் நம்பகத்தன்மை அற்றது” என்பது எப்படி சரியாக இருக்க முடியும்! முதலில் அந்த ஆவணப் படத்தையாவது வைத்திய நாதன் பார்த்திருப்பாரா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், கர்நாடக இசைக்கச்சேரிகளை நேரில் சென்று பார்த்து ரசித்து அனுபவித்து எழுதி கொடுப்பவர் முனைவர் பாகீரதி என்னும் முன்னாள் ராணிமேரி கல்லூரி இசை பேராசிரியை! அதை வாங்கி சற்றும் கூச்சமில்லாமல், ‘கலாரசிகன்’ என தன் புனைப் பெயரைப் போட்டு தினமணியில் பிரசுரித்துக் கொள்வார் வைத்தியநாதன். அதைப் படிக்கும் யாருக்குமே கர்நாடக இசையில் வைத்தியநாதனுக்கு இவ்வளவு ஞானமா? என வியப்பார்கள்!

அதே போல தினமணியின் தலையங்கங்களை யார் எழுதி தருகிறார்கள் என நான் ஏற்கனவே குறிப்பிட்டு உள்ளேன்! அதன் பிறகு அவர்களை தவிர்த்து விட்டு, தற்போது வ.மு.முரளி என்பவரைக் கொண்டு தினமணி தலையங்கங்களை எழுதி வாங்குகிறார்! இந்த முரளி ஊர் அறிந்த ஆர்.எஸ்.எஸ்காரர்! தினமணியின் தர்மபுரி நியூஸ் எடிட்டராக உள்ளார்! தற்போது தினமணி எடிட்டோரியலில் பெரும்பாலோர் இந்துத்துவா இயக்க ஈடுபாட்டாளர்கள் தாம்! ஆக, முரளி எழுதி தந்த தலையங்கத்தை ஒருமுறையேனும் வாசித்து பார்த்து இருந்தால் கூட, ‘இவ்வளவு கூச்ச நாச்சமின்றி, பாஜகவின் பாதந்தாங்கியாக எழுதப்பட்டு உள்ளதே…’ என வைத்தியநாதன்  ஒரு ஷணம் கூச்சப்பட்டு இருப்பார்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் காலில் விழுந்த வைத்தியநாதன் ஆசிரியராக இருந்தால், இப்படி தான் தலையங்கம்.

தினமணி நடுப்பக்கங்களில் வெளிவரும் கட்டுரைகளில் இந்துத்துவ சனாதனக் கருத்தாக்கத்தை தூக்கலாகக் கொண்டு, பொய்களையும், புனைவுகளையும் சேர்த்து கட்டுரைகளை எழுதி வருபவர்களான ஜோதி ஜெயலட்சுமி,  இடை மருதூர் மஞ்சுளா, ச.பன்னீர் செல்வம், டி.எஸ் தியாகராஜன், சுதா சேஷய்யன், டி.எஸ்.வேங்கட ரமணா போன்ற பார்ப்பன எழுத்தாளர்களைப் போல பிபிசி ஆவணப்படம் எடுக்க வேண்டும் என  ‘வைத்தி அம்பி’ எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

இதழியல் அறம் குறித்த அடிப்படை பண்பு நலன்கள் கூட சிறிதுமின்றி, இதழியல் துறை ஜாம்பவான்கள் டி.எஸ்.சொக்கலிங்கம் தொடங்கி இராம. திரு.சம்பந்தம் வரை ஆசிரியராக இருந்த வரலாற்று புகழ்மிக்க தினமணி ஏட்டை மிகத் தரக் குறைவாக மாற்றி, அதன் சர்குலேஷனையும் தரைமட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்ட வைத்தியநாதன், புகழ் பெற்ற சர்வதேச நிறுவனமான பிபிசியை அவதூறாக பேசுவது முறையல்ல!

‘நியாயப்படி நாம் எழுதி இருக்க வேண்டிய உண்மையை எழுதாமல் மறைத்தோம். ஆனால், பிபிசி வெளியிட்டு நம் முகத்திரையையும் சேர்த்தே  கிழித்து விட்டதே’ என குற்றவுணர்வு வைத்திக்கு வந்திருக்க வேண்டும்.

ஆண்டாள் குறித்து தினமணியில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரிடம் மன்னிப்பு கேட்டு, அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்தவர் தான் வைத்தியநாதன். தனிப்பட்ட  வைத்தியநாதனாக அல்ல, ஒரு பத்திரிகை ஆசிரியராக! எவ்வளவு மானக்கேடு! அன்றைக்கு தமிழக பத்திரிகையாளர்கள் அனைவருமே இதை அவமானமாக உணர்ந்தோம். தினமணி வாசகர்கள் மனம் எவ்வளவு புண்பட்டு இருக்குமோ! இவரைப் போன்ற ஒருவர் பத்திரிகையாளன் என்ற போர்வையில் தொடர்ந்து வலம் வருவதே தமிழ்நாட்டிற்கு அவமானம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time