மக்கள் தீர்ப்பை மாற்றி எழுத முயலும் பாஜக!

ச.அருணாசலம்

தில்லி மாநகராட்சியில் அறுதி பெரும்பான்மையாக ஆம் ஆத்மி  தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும், இன்னும் மேயரை தேர்ந்தெடுத்து நிர்வாகம் செய்ய முடியாமல் பல முட்டுக்கட்டைகள்.  மக்கள் பணிகள் ஸ்தம்பித்துள்ளன! ஆள் தூக்கும் முயற்சி வெற்றி பெறாத நிலையில், மாநகராட்சியை கலைக்குமா பாஜக?

ஊரை கொள்ளையடித்து “உலை” யில் போடும் அதானி பற்றியும் அதற்கு துணை போன மோடிஅரசு பற்றியும் நாடே பரபரப்பாக விவாதிக்கும் வேளையில் நாட்டின் தலைநகரான புது தில்லியில் ஜனநாயகத்தின் குரல்வளை  மோடி கும்பலால் நெறிக்கப்படுவதும் நடைபெற்றுவருகிறது!

உத்தமர் மோடியின் கழுகுப் பார்வையில் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவின் நேரடி கண்காணிப்பில் உள்ள புது தில்லியில் பா ஜ கவினரால் அரங்கேற்றப்படும் அவலங்களை பாருங்கள்.

புது தில்லி மாநகராட்சிக்கு , கடந்த டிசம்பர் 4ந்தேதி தேர்தல்கள் நடந்து, முடிவுகள் டிசம்பர் 7ந்தேதி அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். 250 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பா ஜ க விற்கு பலத்த அடியை கொடுத்தது. 134 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, பா ஜ கவை இரண்டாம் இடத்திற்கு (104) தள்ளியது.

வடக்கு தில்லி, தெற்கு தில்லி மற்றும் கிழக்கு தில்லி என மூன்று மாநகராட்சிகளாக இருந்ததை ஒரே மாநகராட்சியாக இணைத்து வார்டுகளை 272லிருந்து 250 ஆக சுருக்கி மோடி அரசு சென்ற ஆண்டு மார்ச் 22- ல் ஆணை பிறப்பித்தது. மூன்று நகராட்சிகளை ஒன்றாக இணைத்தால் ஆம் ஆத்மி கட்சியை ஓரங்கட்டிவிடலாம் என்ற தப்பாசையில் (நப்பாசையில்) மோடி அரசு -ஆம் ஆத்மி கட்சியினரின் பலத்த எதிர்ப்பையும் மீறி- இந்த மாற்றத்தை கொண்டு வந்தது.


ஆனால், தேர்தல் முடிவுகள் பா ஜ க முகத்தில் கரியை பூசியதால் எப்படியாவது , தன் வசம் பெரும்பான்மை பலம் இல்லாத போதும் மாமன்றத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டத்தை வளைக்கும் “சாணக்கியத்தனத்தை ” அரங்கேற்றுகிறது.

முனிசிபல் கார்ப்பரேஷன் ஆப் டெல்லி  சட்டம் – MCD Act 1957- தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மேயரையும் , துணை மேயரையும் தங்களது முதற் கூட்டத்திலேயே தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்களில் மூத்த உறுப்பினரை தற்காலிக தலைவராக கொண்டு இத்தேர்வு நடைபெற வேண்டும்.

ஆனால், தேர்வான உறுப்பினர்களில் மூத்தவரான பெரும்பான்மை பலம் பெற்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முகேஷ் கோயலை ஏற்காமல், பா ஜ கட்சி தன் கட்சியை சார்ந்த சத்ய சர்மாவை தற்காலிக அவைத்தலைவராக அறிவித்தது. சட்டத்தையும் மரபுகளையும் புறந்தள்ளி சத்ய சர்மாவையே தற்காலிக தலைவராக அறிவித்தார், புது தில்லி துணை நிலை ஆளுனர் சாக்சேனா.

இந்த நாடகத்திற்குப் பிறகு இரண்டு முறை – ஜனவரி 6, மற்றும் ஜனவரி 24 – மாமன்ற உறுப்பினர்கள் கூடி மேயர் தேர்தலை நடத்த முயன்றும், பாஜக செய்த ரகளையாலும், கூச்சல் குழப்பத்தினாலும் அது நடைபெறவில்லை.


கைப்புண்ணிற்கு கண்ணாடி எதற்கு? என்பதை போல் வெளிப்படையாக அறுதி பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட ஆம் ஆத்மி கட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெறுவதை தடுக்க “சாணக்கியர்கள்” தலைகீழாக நிற்கும் காட்சிகளையே நாம் புது தில்லியில் கண்டு வருகிறோம்.

இரண்டு மாதங்கள் கடந்தும் தேர்தலில் தோல்வி அடைந்த பாரதிய ஜனதா கட்சி தலைநகரான தில்லியில் மக்களின் தீர்ப்பை மறுதலிப்பதில் மும்முரமாக உள்ளது.

ஒரு மா நகராட்சிக்கு மேயரரும்,துணை மேயரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்களின் பரிந்துரையைக் கருத்தில் கொண்டே நியமன உறுப்பினர் நியமனங்கள் நடக்கும். ஆனால், துணை நிலை ஆளுனர் சாக்சேனாவால் நியமிக்கப்பட்ட தற்காலிக மன்ற தலைவர் சத்ய சர்மா
10 நியமன உறுப்பினர்களை நியமித்து உள்ளார் . ஆம், இந்த பத்து நபர்களும் புதிதாக பாஜ கட்சியில் இணைந்த  “பச்சோந்திகள்” என்பதை தில்லி மக்கள் அனைவரும் அறிவர். இவர்களுக்கு முதலில் பதவி பிரமாணம் செய்து வைத்த துணை நிலை ஆளுனர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களை இரண்டாவதாகவே பதவியேற்க அழைத்தார்! இது பாஜகவிற்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறுக்கு வழியில் அதிகரிக்கச் செய்த முயற்சி என்பது பட்டவர்த்தனமாகத் தெரிய வந்தும் பாஜகவிற்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை.

இந்த காரணங்களினாலேயே கூச்சலும் குழப்பங்களும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது பாஜ கட்சியினரால், விளைவு ? மேயர் தேர்தல் தள்ளி வைப்பு. பெரும்பான்மை பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஷெல்லி ஓபராய் என்ற பெண்மணியை மேயர் வேட்பாளராக அறிவித்து களமிறங்கியது. பாரதிய ஜனதா கட்சியினரும் ரேகா குப்தா என்ற பெண்மணியை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.


மேயர் தேர்தல் பிப்ரவரி 6 ந்தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தாங்கள் வெற்றி பெற வாய்ப்பில்லாத நிலையில், பாஜக ஏற்படுத்திய குழப்பத்தினால் மாமன்ற கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

குழப்பத்திற்கு காரணம், ”நியமன உறுப்பினர்கள் (ஆல்டரமென்) 10 நபர்களும் மேயர் தேர்தலில் வாக்கு அளிப்பார்கள்” என்று பாரதிய ஜனதா கட்சியினர் கூறுவதும், அதை துணை நிலை ஆளுனர் ஆமோதிப்பதும் தான்!

மேயர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் புது தில்லி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (10) சபாநாயகரால் நியமிக்கப்பட்ட 14 சட்டசபை உறுப்பினர்களும் பங்கேற்கலாம் என்பது விதி. மாமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ‘ஆல்டெர்மென்’ எனப்படும் நியமன உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.

ஆனால், பாரதிய ஜனதா கட்சியினர், ”இந்த நியமன உறுப்பினர்கள் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் பங்கேற்கலாம்” என அராஜகம் செய்கின்றனர். இதற்கு 2016ல் வெளிவந்த தில்லி உயர்நீதி மன்ற தீர்ப்பை ( வட தில்லி முனிசிபல் கார்ப்பரேசன் ~ ஓர்னிகா மெர்ஹோத்ரா) துணைக்கு அழைத்து வருகின்றனர்.

ஆனால், புது தில்லி மாநகர அதிகாரிகளும், சட்ட வல்லுனர்களும் இதை மறுத்து, ”இந்த தீர்ப்பில் ஆல்டெர்மென்கள் மேயர் தேர்தலில் பங்கெடுக்கலாம் என்று கூறப்படவில்லை” என்கின்றனர்.

அரசியல் சாசனம் பிரிவு 243  R அறிவுறுத்தியபடி, தில்லி முனிசிபல் ஆக்ட்1957ல் உள்ள பிரிவு 3(b)(i) ன் படியும் ஆல்டெரமென்கள் மாமன்ற தேர்தல்களில் (மேயர் மற்றும் துணை மேயர்தேர்தல்களில்) பங்கெடுக்க முடியாது என்றுள்ளது.

இதை, பாரதிய ஜனதா கட்சியனரிடம் சிலர் சுட்டிக்காட்டிய போது, அவர்கள் “இது ஒரு வரலாற்று பிழை இதை வருங்காலங்களில் நாங்கள் திருத்துவோம்” என்று சத்ய சர்மா பதிலளித்துள்ளார் . ‘இரட்டை  நாக்கும், இரட்டை வேடமும் எங்களின் தனித்தன்மை’ என்று இதன் மூலம் பா ஜ க பறை சாற்றுகிறது. பிப்ரவரி 24 கிற்குள் மேயர் பதவியேற்பு நடக்காவிட்டால்,தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் பதவி இழக்க நேரிடும், மாநகராட்சி கலைக்கப்பட்டு விடும். அரசியல் சாஸசன சிக்கல்கள் உருவாகும்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருகட்சி, மாநகராட்சி நிர்வாகத்தை நடத்த முடியாமல் – மக்கள் பணியாற்ற முடியாமல் முடக்கப்பட்டு – உள்ளது. இந்த காலகட்டத்திற்குள் மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பல வேலைகள் நடந்திருக்க வேண்டும். இதனால் தலை நகர் தில்லி மக்களே கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

இதைப் போன்ற ஒரு அதிகார துஷ்பிரயோகத்தை இது வரை இந்தியா கண்டதில்லை! இன்னும் எத்தனை காலம்தான் இவர்கள் ஏமாற்றுவர்?

ஆம் ஆத்மி கட்சி நீதி மன்ற கண்காணிப்பில் தேர்தலை நடத்த அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளனர் எனத் தெரிய வருகிறது!

கட்டுரையாளர்.ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time