சீமான் – பாண்டே நெருக்கம் எதைச் சொல்கிறது?

-சாவித்திரி கண்ணன்

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைகளை சற்றுக் கூடுதலாகவும், விவரமாகவும் பேசி கருத்தை கவருபவர் சீமான்! திமுகவும், அதிமுகவும் நீர்த்துப் போய், அம்பலமான நிலையில், மக்கள் புதிய ஒரு அரசியல் கட்சியை எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பிற்கு தக்கவராக சீமான் தோற்றம் காட்டுகிறார்! ஆனால், அவர் நம்பகத்தன்மையானவரா?

தன்னை ஒரு சாதியவாதியாகவும், ஆர்.எஸ்.எஸ்காரனாகவும் வெளிப்படுத்திக் கொண்டு, பாஜகவின் வளர்ச்சியே தன் ஊடகச் செயல்பாட்டின் அடித்தளம் என்று எப்போதும் பொய், புரட்டுகள் பேசி பிழைப்பு நடத்தும் ரங்கராஜ் பாண்டே, ”ஈரோடு கிழக்கு தேர்தலில் நாம் தமிழர் கட்சி திமுக, அதிமுகவை விட அதிகம் வாக்குகள் பெறும்” என, ‘கருத்துக் கணிப்பு’ என்ற பெயரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதும், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளதும் கவனிக்க வேண்டிய விஷயங்களாகும்.

எளிய மக்களை ஏய்த்து வாழும் தத்துவத்தை ஏகமனதோடு தூக்கிப் பிடிக்கும் ஒரு ஊடக அரசியல் தரகரான ரங்கராஜ் பாண்டேவின் நம்பிக்கையை சீமான் வென்றெடுத்திருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

ரங்கராஜ் பாண்டேவை பொறுத்த அளவில், சீமானை எப்போதுமே ”எங்க அண்ணன் சீமான்” என புளகாங்கிதமாகத் தான் பேசுவார்.  நெருக்கடியான பல நேரங்களில் சீமானுக்கு ஆதரவாகவே பேசி வந்துள்ளார். ”தமிழ்நாட்டில் சீமானுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது” எனப் பேசி வருபவர். அந்த வகையிலேயே, ”தற்போது ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் மிக அதிக வாக்குகள் வாங்கும்” எனப் பேசி வருகிறார். முந்தைய தேர்தலில் இந்தத் தொகுதியில் வாங்கிய வாக்குகளை விட, இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சற்று கூடுதல் ஓட்டுகள் வாங்கக் கூடும். காரணம், இன்று திமுக, அதிமுக இரண்டையும் எதிர்த்தவர்களின் ஓட்டுகளை சென்ற தேர்தலில் பெற்ற கமலஹாசன் கட்சியும், டிடிவி.தினகரன் கட்சியும் களத்தில் இல்லை.

ஆனால், இந்தச் சூழலை மிகவும் சிலாகித்து ரங்கராஜ் பாண்டே வரவேற்பது ஏன் என்பதை நாம் கவனிக்க வேண்டும். சகலவிதத்திலும் மனித குல விரோதியாக உள்ள ஒரு மனிதன், ‘சீமானை ஆதரிக்கிறேன்’ என்பதும், தொடர்ந்து அவரது வளர்ச்சியில் ஆதரவு காட்டுவதும், எதைக் குறிக்கிறது? பாஜக விருபாத தமிழ்த் தேசியத்தை சீமான் பேசுகிறார். இந்திய தேசிய எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறார். அதுவும், பாஜக முற்றிலும் ஏற்க முடியாத தனித் தமிழ் ஈழம் பேசுகிறார், பாஜகவிற்கு வேப்பங்காயாகக் கசக்கும் பிரபாகரனை தூக்கி பிடிக்கிறார்! எனினும், பாஜகவும். இந்துத்துவ அமைப்புகளும், பிரமுகர்களும் சீமானை ஏன் எதிர்ப்பதே இல்லை. மாறாக சீமானை ரசிக்கிறார்கள்!

திமுகவை பொறுத்த அளவில் அது எப்போதோ திராவிட நாடு பேசிய கட்சி! ஆனால், இன்றோ, அதை தூக்கி கடாசிவிட்டு தேசியத்தின் பலா பலன்களை நிறையவே அனுபவித்து வரும் கட்சி! பிராமண எதிர்ப்பு என்பதை எப்போதுமே உதட்டளவில் பேசி, மறைமுகமாக பார்ப்பனீயத்துடன் உறவாடி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, அனுசரணையோடு செயல்படும் கட்சி. அதற்கு சிறந்த உதாரணம் வேண்டுமென்றால், சங்கரராமன் கொலை வழக்கில் கைதான சங்கராச்சாரியார் மீது வலுவாக ஜெயலலிதா போட்ட வழக்குகளை வலுவிழக்கச் செய்து, நீர்த்துப் போக வைத்து, அவர் விடுதலையாகக் காரணமானதோடு, சங்கராச்சாரியை கைது செய்த துணிச்சலான காவல் துறை அதிகாரி பிரேம் குமாரை படுமோசமாக பழிவாங்கி, அவர் சாவுக்கே காரணமானவர் கருணாநிதி.

ஸ்டாலின் பற்றி சொல்ல வேண்டும் என்றால், பார்ப்பனியத்திற்கு சேவை செய்வதே தன் பாக்கியமாகக் கருதி, தன் ஆட்சியின் ஒவ்வொரு அசைவையும் அதற்கே அர்ப்பணித்து வருபவர். அதன் வெளிப்பாடாகத் தான் திமுகவை கருவறுப்பதையே வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயல்படும் இந்த ரங்கராஜ் பாண்டேயின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது அப்பா இறந்ததற்கு இரங்கல் தெரிவித்த நிகழ்வாகும். ஸ்டாலின் என்ன தான் தன்னை பார்ப்பனிய பாஜக விசுவாசியாக வெட்கமின்றி வெளிப்படுத்திய நிலையிலும், இந்த பாண்டே போன்றவர்கள் திமுகவை ஆதரிக்கத் தயாராக இல்லை. ஆனால், இந்திய தேசியத்திற்கு எதிராய் தாறுமாறாகப் பேசும் சீமானை கேள்வியின்றி ஆதரிக்கிறார்கள் ஏன்? என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

காரணம், திமுகவின் தவறுகளை அவர்களை விட பெரிய அயோக்கியர்களான நாம் பேசினால் எடுபடாது. அதனால், தமிழனாகப் பிறந்து, தமிழ் இனவாதத்தை தூக்கிப் பிடிக்கும் ஒருவர் பேசினால் தான் அது நன்கு எடுபடும் என்ற பாஜகவின் தந்திரமே! அதுவும், அதிகாரத்தில் இருந்து பல தப்புகளை செய்துவிட்ட அதிமுக பேசுவதை விடவும், அதிகாரத்திற்கே வராத சீமான் பேசுவது சிறப்பாக எடுபடும் என்பதால், சீமானை களத்தில் இறக்கி அவர் வளர்ச்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக!

‘சீமான் பாஜகவையும் எதிர்க்கத் தானே செய்கிறார்’ எனச் சிலருக்கு தோன்றலாம். ஆனால், அவர் 85 சதவிகிதம் திமுகவை எதிர்த்தால், தன்னை நடுநிலையாளன் போல காட்டிக் கொள்வதற்கு 15 சதவிகிதம் பாஜகவையும் எதிர்ப்பது போல பாசாங்கு செய்வார். மிகச் சிறப்பாக தமிழ் உணர்வை விதைத்தும். மக்கள் நலன் சார்ந்து வெளிப்பட்டும் வரும் சீமான் மிக நுட்பமாக பாஜக உறவைப் பேணி வருகிறார். சீமான் அறுவடை செய்து கொண்டிருக்கும் யாவையுமே, நாளை அனுபவிக்கப் போகிறவர்கள் பாஜகவினரே என்பதற்கு பாண்டே – சீமான் உறவே சாட்சி!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time