‘ஷார்ப்பான’ கேள்விகள்! சாவித்திரி கண்ணன் பதில்கள்!

- சாவித்திரி கண்ணன்

ஜோதிலிங்கம், சிவகாசி, விருதுநகர்

ஈரோடு கிழக்கு தொகுதியில்  மிகப் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து விட்டார், ஓபிஎஸ் என்கிறார்களே..?

அவர் விட்டுக் கொடுக்க முன் வந்தது பாஜகவிற்கு!

அவர்கள், அவரை விட்டுவிட்டு சென்றுவிட்டனர் எடப்பாடியின் அதிமுகவிற்கு!

முட்டி மோதி முயன்றார், அதிமுகவின் சரிவிற்கு!

ஐயோ பாவம்! அதில் அவரே சரிந்து போனார் !

விட்டு ஓடுவதை தவிர வேறு வழியில்லை ஓபிஎஸ்க்கு!

லஷ்மணன், பெங்களூர்

மக்கள் நீதி மையம் திமுகவை ஆதரிக்கிறதே..?

ஐயோ பாவம்! நிலைமை இப்படி ஆகிவிட்டது!

பாபு, புதுக்கோட்டை

ஷாக்கடிக்கும் தகவல் ஏதாவது இருக்கிறதா சாவித்திரியாரே?

கடந்த நான்கந்து மாதங்களில் சுமார் 100 க்கு மேற்பட்ட தொழிலாளிகள் தமிழக மின்வாரியத்தில் ஷாக்கடித்து இறந்துள்ளனர்! காரணம், மின்கம்பத்தில் ஏறி பழுது பார்க்கும் ‘கேங்மேன்’ வேலைக்கு தகுதியான ஊழியர்களை நியமிக்க மறுப்பது!

பணி நியமனத்திற்கு பணம் கேட்பதால் தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்! அனுபவமில்லாத ஒப்பந்த கூலிகளை மின்கம்பத்தில் ஏற்றி உயிர்பலி வாங்கிக் கொண்டுள்ளது திமுக அரசாங்கம்!  ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! இது ஷாக்கடிக்கும் செய்தி மட்டுமல்ல, சாவடிக்கும் செய்தி! இதற்கு ஏன் இன்னும் போராட்டம் வெடிக்கவில்லை என்பது வியப்பளிக்கிறது!

தயாளன், தாம்பரம்

தற்போதுள்ள நிலைமையில் எந்தக் கட்சி மிகவும் சிக்கலான நிலைமையில் உள்ளது?

அனேகமாக அனைத்து கட்சிகளும் சிக்கலான நிலையில் தான் உள்ளன! சிக்கலின் அளவு சற்றே வித்தியாசப்படலாம்! ஏனெனில், எந்தக் கட்சியும் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இல்லை!

சி.சஞ்சய்குமார், திருச்சி

சார், நீங்கள் ஏன் மோடியை அதிகம் விமர்சிக்கிறீர்கள்?

மோடியை மட்டுமல்ல, ஸ்டாலினையும் தானே! தப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் என் விமர்சனத்தில் இருந்து தப்ப முடியாது.

கே.எஸ்.கவின், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

ஆசிரியர்கள் திமுக ஆட்சி மீது கோபத்தில் உள்ளார்கள் என்ற கருத்து பரவலாக உள்ளதே..?

உண்மை தான்! ஆசிரியர்கள் எல்லாம் திமுகவுக்கு பெயில் மார்க் போட்டு விட்டார்கள்!

எல்.ராதாகிருஷ்ணன்,சென்னை

கனியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி கொலை விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ், பாஜகவை தோலூரிக்கும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்த திமுக தவறிவிட்டது.மற்ற திராவிடத் தலைவர்களும் வேடிக்கை பார்க்கின்றனர் எப்படி புரிந்து கொள்வது?

அவர்களை தோலூரிக்க நினைத்தால், நம் தோலை உரித்துவிடுவார்களோ என்ற பயமே!

மடியில் அத்தனை கனம்! எனவே, மனதில் அளவில்லா பயம்!

குற்றம் இழைக்கும் பாஜகவினருக்கோ கொண்டாட்டம்!

ஆலம், திருச்சி

அதிமுக ஆட்சியில் குட்கா விற்பனையை தடுக்க கோரிய ஸ்டாலின், தற்போது நடக்கும் குட்கா விற்பனையை அறியமாட்டாரா?

தான் ஆதாயம் அடைய முடியாத போது, குட்கா விற்பனையைத் தடுக்க குரல் கொடுத்தார்!

கு.தங்கவேல்,விருதாச்சலம்

அம்மா உணவகங்கள் அம்போவெனக் கைவிடப்பட்டுள்ளதே கவனித்தீர்களா?

ஆம்,கவனித்தேன். ஓஹோவென திகழ்ந்த அம்மா உணவகங்கள் தற்போது காற்றாடிக் கொண்டுள்ளன! கைவிடப்பட்ட அம்மா உணவகங்களின் மூலமாக கூட, அபாரமாக கொள்ளை நிகழ்த்த முடியும் என்பதையும் நிரூபித்து வருகின்றனர்!

 

# ஆவினைத் தவிர்த்து வெளியாரிடம் பால் கொள்முதல் செய்ததில் பல லட்சம் ஊழல்!

#  செய்யாத சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் வாங்கியதில் சுமார் 50 லட்சம் ஊழல்!

#  கோதுமை மாவு கோல்மாலில் கொள்ளையோ கொள்ளை!

பேசாமல் இந்த அம்மா உணவகங்களை குறைந்த வாடகைக்கு கணவனை இழந்த விதவைகளிடம் சொந்தமாக நடத்தும்படி ஒப்படைத்தால் சிறப்பாக நடத்துவார்கள் – அதற்கும் அவர்களிடம் கையூட்டு பெறாமல் தர வேண்டுமே…!

ம.ஏழுமலை, திருத்துறைப் பூண்டி

ஈரோடு கிழக்கில் பாஜக தலைவர்கள் பிரச்சாரத்திற்கு ஏன் போகவில்லை?

அதிமுகவின் வேண்டுகோளாம்! இருக்கிற ஓட்டையும் இழக்காமல் இருக்கத் தானாம்!

என்.அபிராமி, நங்கநல்லூர், சென்னை

தமிழக அரசு தமிழக அரசின் இந்து அறநிலைய துறை கோவில்களிலும் தீண்டாமை நடக்கிறதா என்ன?

ஆம்! அப்படிதான் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன! உதாரணத்திற்கு, திருவண்ணாமலையில் மாவட்டம் தண்டாரம்பட்டு தாலுகாவைச் சேர்ந்த தென்முடியனூர் கிராமத்தில் உள்ள கோயிலில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் நுழைய உரிமை இல்லையாம்! ஆகவே, அதிகாரிகள் தலித் மக்களை கோயிலுக்கு அழைத்துச் சென்று சாமி குணம் விட வைத்தனர். இதனால், அந்த கிராமத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு, தலித் மக்கள் சமூக பகிஸ்காரம் செய்யப்பட்டுள்ளனர்!  சொந்த ஊரில் பாலோ, காய்கறியோ, மளிகையோ அவர்கள் வாங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது! திமுக அரசோ, இதைக் கண்டு கொள்ளவே மறுக்கிறது! புரட்சிகரத் தோற்றம் காட்ட ஆலயப் பிரவேஷம் நடத்திவிட்டு, இப்போது மிரட்சி கொண்டு கைவிடுதல் முறையல்லவே!

கோமதிநாயகம், கோவை

குஜராத்தில் ஆசிரமம் நடத்தி கடவுளின் அவதாரமாக சீன் போட்ட ஆசாராம் பாபுவுக்கு கோர்ட் பாலியல் வழக்கில் ஆயுத தண்டனை வழங்கியுள்ளதே?

கைது செய்யப்பட்ட ஆசாராம் பாபு

பத்தாண்டுகள் விசாரணையின் இறுதியில், சிறுமியை கற்பழித்த இந்த கிழச்சாமியாருக்கு தண்டனை உறுதியாகி உள்ளது. இது போன்ற வழக்கில் அதிகபட்சம் ஆறு மாதத்தில் தண்டனையை உறுதி செய்ய வேண்டும். இன்னொரு பக்கம் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் இதே போன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான சிவசங்கர் பாபா தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்!

பாஜக ஆட்சி நடத்த குஜராத்தில், பாலியல் குற்றம் செய்த சாமியாரை தண்டிக்க முடிகிறது! திராவிட ஆட்சி நடக்கும் தமிழகத்தில் சிவசங்கர் பாபாவைத் தண்டிக்க முடியவில்லை என்பது அவமானம்!

கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை

தமிழ்நாட்டில் சனாதன எதிர்ப்பு என்று சில கட்சிகள் தேவை இல்லாமல் சீன் காட்டுகிறார்களோ? எனத் தோன்றுகிறது

சென்னையிலே பிறந்து வளர்ந்ததால் உங்களுக்கு இப்படி தோன்றுகிறது. சென்னையை அடுத்த செங்கல்பட்டில் கானாத்தூர் என்ற ஊரில் நந்தகுமார் என்பவரை குடும்பத்தோடு தீ வைத்துக் கொளுத்தியதில், அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்! காரணம், இவர் தன் குலத்தொழிலான வண்ணான் தொழிலை செய்யாமல், பக்கத்து ஊரில் ஒரு பெட்டிக் கடை வைத்து பிழைப்பது தானாம்! குலத்தொழிலை நிர்பந்தித்து கொலை செய்யவும் துணிந்த மனதில், ஆதிக்கம் கொண்டிருப்பது தான் சனாதனக் கருத்து! காலத்திற்கு ஒவ்வாத இந்த கருத்தை காலூன்ற வைக்கும் அரசியலில் பாஜக ஈடுபட்டுள்ளது.

கு.மஸ்தான், ராணிப்பேட்டை

அதானியின் மோசடிகள் அம்பலமானது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியாவின் வளத்தைப் பெருக்க ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால், அதானி என்ற ஒற்றை நபரின் வளத்தை பெருக்க நோக்கத்திலேயே. பாஜக அரசு செயல்பட்டுள்ளது! அதானிக்கு சேவை செய்வதை ஆண்டவனுக்கான சேவையாக மோடி கருதியுள்ளார் போலும்!

பாண்டித்துரை, அரசரடி, மதுரை

பாஜக மகளிர் அணி தலைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகியுள்ளாரே? அவருக்கு எதிராக பல போராட்டங்கள் நடக்கிறதே?

கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் மதத்தினர் மீது வெறுப்பு மற்றும் வன்மத்தைக் கற்றும் பேச்சுக்களை வெளிப்படையாக பேசி வரும் விக்டோரியா கௌரி என்ற பாஜக மகளிர் அணி தலைவியை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக தேர்ந்தெடுத்தது வேறு யாருமல்ல, உயர் நீதிமன்றத்திலேயே இருக்கின்ற நீதிபதிகள் குழு தான்! ஆக, இவர் புதிதல்ல, ஏற்கனவே இவரைப் போன்றவர்கள் இருப்பதினால் தான் இன்னொரு கூட்டாளியை தேர்ந்தெடுத்துள்ளனர்

க.செபாஷ்டின், வேலூர்

கருணாநிதிக்கு கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க நீங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் கருணாநிதி பெரிய படைப்பாளி அல்லவா?

தமிழில் இருபதாம் நூற்றாண்டில் சிறந்த 10 படைப்பாளிகளை தேர்வு செய்ய சொன்னாலும் சரி, அல்லது சிறந்த 50 படைப்பாளிகளை தேர்வு செய்ய சொன்னாலும் சரி, அதில் கண்டிப்பாக கருணாநிதி இருக்க மாட்டார்!  வேண்டுமானால், நூற்றில் ஒருவராக இருக்கலாம்! அவர் மிகச் சிறந்த சினிமா வசனகர்த்தா என்பதை மறுக்க முடியாது. ஆனால், தந்தையே மகளை கற்பழித்த காமாந்திரக் கதைகளையும் எழுதியவர் தான் கருணாநிதி!

எஸ், கோபிநாத், ஆத்தூர், சேலம்

நீங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களாக இருந்தார் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?

‘திமுக காங்கிரஸ் தோற்க வேண்டும்’ என  விரும்புவேன். அதேசமயம் மற்ற கட்சிகளும் நம்பத் தக்கதாக இல்லை. என் ஓட்டு  நோட்டோவிற்கு!

கு. தங்கவேல், நாமக்கல்

சமீபத்தில் உங்கள் கவனத்தை ஈர்த்த நிகழ்வை சொல்லுங்கள்?

கவிஞர் சுகிர்தராணி

இதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கிய தேவி விருதை புறக்கணித்த கவிஞர் சுகிர்த ராணியின் துணிச்சல் அதானி ஸ்பான்ஸரில் நடக்கும் நிகழ்வில் கிடைக்கும் விரைவில் உடன்பட மறுத்து அவரது அறச்சிற்றம் என்னை மிகவும் ஈர்த்தது!

க.அப்துல்கலாம், ஹைதராபாத்.

உங்களை திகைக்க வைக்கும் விவகாரம் ஒன்றைச் சொல்லுங்களேன்?

சமீப காலமாக பத்திரிகைகளை வாங்குவோரும் வாசிப்போரும் குறைந்துள்ளனர்! இது மட்டும் இன்றி பிரதான சேனல்களின் அரசியல் விவாதங்களை பார்ப்பவர்களும் மிகக் கணிசமாக குறைந்துள்ளனர் மக்கள் இப்படி தங்களை சிறுகச் சிறுக புறக்கணித்த போதிலும் இந்த பத்திரிகைகளும் சேனல்களும் திருந்தவே இல்லை!

உண்மைகளைப் பேச வேண்டும் என்றோ, அதிகாரத்திற்கு எதிரான மக்களின் குரலை இப்போதாவது ஒலிக்கலாமே என்றோ அழிவின் விளிம்பில் நிற்கும் போதும் கூடத் தோன்றவில்லை… என்பது என்னை திகைக்க வைக்கிறது.

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time