அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் இந்தியைத் திணிக்கும் முயற்சி வேகம் எடுத்துள்ளது. ‘இந்தியாவில் உள்ள 22 மொழிகளை இல்லாமலாக்கி, இந்தியை மட்டுமே ஒற்றை ஆதிக்க மொழியாக்கும் முயற்சி எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என்பதை விவாதிக்க தாய்மொழிகளை பாதுகாக்கும் மாநாடு நடக்க உள்ளது!
இந்தியா மொழிகளின் தேசம். இந்தியா என்ற இப் பிரதேசம் உண்மையில் உலக நாகரீகத்தின் தொட்டில். 65,000 ஆண்டுகளாக இங்கே பல்வேறு வகையிலான மனிதர்களின் இடப் பெயர்ச்சி நடந்து கொண்டே இருந்துள்ளது. இதன் காரணமாக எத்தனை, எத்தனையோ அறிவுத் துறைகளும், மொழிகளும், சிந்தனைகளும் வாழ்வு முறைகளும் இங்கே மிகச் செழித்து வளர்ந்திருக்கின்றன. பன்மையின் பேரழகிற்கு ஆகச்சிறந்த சான்று இந்தியா..
1961 ஆம் ஆண்டு, கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1,652 மொழிகள், தாய் மொழிகளாகப் பேசப்பட்டு வந்துள்ளன. அவைகளை கவனமாக ஆய்வு செய்த மொழியியல் வல்லுனர்கள் அவற்றை 1,150 மொழிகளாகவே கருதுகின்றனர். பேச்சு பாணிக்கும் (DIALECT) மொழிக்கும் வேறுபாடு தெரியாத கணக்கெடுப்பாளர்களால், இப் பிழை நேர்ந்திருக்கக் கூடும். நிற்க, தற்போது (2022) நடந்த ஆய்வின்படி, இன்று இந்தியாவில் 780 மொழிகள், தாய் மொழிகளாக உயிருடன் இருந்து வருகின்றன. அதாவது 60 ஆண்டுகளில் சுமார் 350 மொழிகள், நம் கண் முன்னரே மீட்டெடுக்கவே முடியாதபடி இறந்துவிட்டன. இந்த 780 மொழிகளிலும் பல அழிவை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன.
சற்று சிந்தித்துப் பாருங்கள்… இவ்வுலகில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவைகளில் மொழியே முதலிடம் பெறும். ஒவ்வொரு மொழியும் ஓர் உலகப் பார்வை. அம் மொழி பேசும் மக்களின், அவர்கள் முன்னோர்களின் சிந்தனைகளிலும், நாவிலும் வாழ்ந்தவை. எவ்வாறு ஒவ்வொரு கனிக்கும் ஒரு தனித்துவமான சுவையுள்ளதோ, அவ்வாறே ஒவ்வொரு மொழியும் தனித்துவமானது. ஒரு மொழியின் அழிவு என்பது ஒரு உலகக் கண்ணோட்டத்தின் அழிவு. ஒரு மொழியின் அழிவு என்பது இப் புவிக்குநேரும் இழப்பு, ஏன், இப் பிரபஞ்சத்திற்கே நேரும் இழப்பு. மீட்டெடுக்க முடியாத ஒரு முடிவான இழப்பு.
சரித்திரக் காரணங்களினால், 300 ஆண்டுகளுக்கு முன்பு தான் மிக நீண்ட இருளில் சிக்கியிருந்த இப்பகுதி விழிப்படைந்தது. வெள்ளையர்களையும், மன்னர்களையும் மகத்தான விடுதலைப் போராட்டதின் மூலம் முறியடித்து ஒரு குறிப்பிடத்தக்க சுதந்திரமான ஆட்சித் தோற்றுவிக்கப்பட்டு சுமார் 76 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதந்திர அரசு அனைத்து மக்களுக்கும் சமமான அரசாக இல்லாமல் போனது ஒரு பெரும் வரலாற்றுத் துயரம். செல்வந்தர்களின் நலனையே அது மக்கள் நலம் என நம்ப வைக்க முற்படுகிறது. மொழிக் கொள்கைகளிலும், கல்விக் கொள்கைகளிலும் அரசு முன்வைக்கும் கோட்பாடுகள் சிந்திக்கத் தெரிந்தோரைப் பதைக்க வைக்கின்றன. இந்நிலையில் எட்டாண்டுகளுக்கு முன்னர் பாஜக, தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
பன்மையின் அழகினையும் வேறுபாடுகளின் இணக்கத்தையும், நெகிழ்ச்சியையும் உணரத் திறனற்ற அது, ஒற்றை இந்தியா, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றை அதிகார மையம் எனும் அடிப்படைவாத சிந்தனையில் சிக்குண்டு இருக்கிறது.
இந்நிலையில், பாராளுமன்ற அலுவல் மொழிக்கமிட்டி முன் மொழிந்துள்ள மொழிக் கொள்கையால் ஒரு பேராபத்தை இந்திய மக்களாகிய நாம் எதிர் கொண்டுள்ளோம். பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37வது கூட்டத்தில் தலைமை உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ’ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்’, ’இந்தியாவின் ஒற்றுமைக்கு இந்தியை முக்கிய பங்காக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். ’இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ட்விட்டரில் ’இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதற்கே உரிய முக்கியத்துவமுள்ளது. … இன்று இந்தியாவை ஒரு மொழியால் ஒன்றுபடுத்த முடியுமென்றால், அது பரந்துபட்ட அளவில் பேசப்படும் இந்தியாகும்.’ எனப் பதிவிட்டிருந்தார். இந்த பாஜக அரசாங்கம் பதவி ஏற்ற முதல்நாளே வெளியிட்ட அதிகாரபூர்வ உத்தரவில் ’அரசின் சார்பில் ட்விட்டர், முகநூல், யூடியூப், அல்லது இணைய பக்கங்கள் வைத்திருக்கும் அரசு ஊழியர்கள், அமைச்சக, துறை அதிகாரிகள், கார்ப்பொரேசன்கள், வங்கி ஊழியர்கள் ஆகியோர் இனி தங்கள் பதிவுகளை இந்தியில் மட்டுமோ அல்லது இந்தியிலும், ஆங்கிலத்திலுமோ பதிவிடவேண்டும், எனினும், இந்திக்கே முன்னுரிமை தர வேண்டும்’ என்று உத்தரவிட்டது. தற்போது அந்த அரசாங்கத்திற்கு கீழ்படிந்து நடக்கும் பாராளுமன்ற நிலைக்குழுதான், ஐஐடிக்கள், ஐஐஎம்கள் உள்பட அனைத்து மத்திய அரசாங்க கல்வி நிறுவனங்களும் இந்தியைப் பயிற்று மொழியாக பயன்படுத்த வேண்டும் என மூர்க்கமாகப் பேசுகிறது. நீதிமன்ற அலுவல் நடவடிக்கைகளையும் இந்தியிலேயே நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு முன் மொழிந்துள்ளது.
நடைபெறும் இந்த சம்பவங்களைப் பார்க்கும் போது பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் ’இந்தி – இந்து – இந்துஸ்தான்’ என்ற தனது கோஷத்தை அமல்படுத்துவதில் தீவிரமாக இருப்பது தெரிகின்றது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைத்துத் துறைகளிலும் இந்தி கட்டாயமாகத் திணிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்வது அவசியமாகின்றது.
மொழி என்பது சிந்தனையைத் தாங்கிச் செல்லும் வாகனம் என்பதை நாமனைவரும் ஏற்கிறோம். உயர்ந்த, உன்னதமான சிந்தனைகளோடு வளர விரும்பும் ஒரு நாட்டிற்கு வளமிக்கமொழிகள் தேவைப்படுகின்றன. தாய்மொழியைக் கற்பது பாதிக்கப்பட்டால் மக்கள் சிந்தனையற்றவர்களாக மாறக்கூடும். நுட்பமாக ஆய்வு செய்ய இயலாமல் குருட்டுத் தனமாகப் பணிய நேரிடும். பல மொழிகளைப் பேசும் சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மைவாத நிலைப்பாட்டால், மொழி மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவது துரதிஷ்டவசமானதாகும். தற்போது மீண்டும் அப்பிரச்சினை தூண்டப்பட்டுள்ளது.
2011 கணக்கெடுப்பின்படி 56.37 சதவீத மக்கள் இந்தி பேசாதோர். பெரும்பாலான முன்னணி ஏகபோகங்கள் இந்தி பேசுபவர்கள். இந்நிலையில் இந்தி பேசாத மக்கள் மீது ஆளும் தரப்பு இதுபோன்று இந்தியைத் திணிப்பது நியாயமற்ற சர்வாதிகாரப் போக்காகும். உணர்வுள்ள எந்த ஒரு மனிதனுக்கும் தனது தாய்மொழி மீது ஆழமான உணர்ச்சியும் பற்றும் இருக்கும். எனவே தான் பல மொழிகளைப் பேசும் நாடுகளான சுவிச்சர்லாந்தோ, கனடாவோ, எந்த ஒரு ஒற்றை மொழியையும் அரசு மொழியாகவோ அல்லது தேசிய மொழியாகவோ கொண்டிருக்கவில்லை. இந்தியாவிலும் தேசிய மொழியோ அல்லது அரசு மொழியோ இல்லை. அரசியமைப்புச் சட்டம் சரத்து344 (1),மற்றும் எட்டாவது அட்டவணைப்படி இந்தி உள்ளிட்ட 22 மொழிகளும் சமமான அந்தஸ்துடன் உள்ளன.
சமூக, அரசியல் களங்களில் இரண்டு அம்சங்களில் மொழியின் பயன்பாடு நெருக்கமாகப் பிணைந்துள்ளது: ஒன்று அன்றாட நடைமுறை, மற்றொன்று கல்வி. பன்மொழி பேசும் இந்தியாவில் இயல்பாகவே மாநிலங்களுக்குள், மாநிலங்களிடையே, மத்திய மாநில அரசாங்கங்களிடையே, நீதிமன்ற நடைமுறைகளில் இணைப்பு மொழி அல்லது மொழிகள், சட்டமன்றங்களிலும், பாராளுமன்றங்களிலும் விவாதிப்பதற்கும் என்ன மொழியைப் பயன்படுத்துவது என்ற கேள்வி எழுகிறது. அதே போல மருத்துவத்தை எடுத்துக் கொள்வோம். இரண்டு மருத்துவர்கள், இந்தியல்லாத மொழி பேசுபவராக இருந்தால், இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு அறுவை சிகிச்சை செய்யும் போது ஆங்கில மொழியில் தானே பேசுவர்.
வரலாற்று காரணங்களால், இந்தியாவிலும், மற்ற பல நாடுகளிலும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உருவாகிவிட்டது. பிரிட்டீஷார் தங்களது நிர்வாக நோக்கத்திற்காகவே ஆங்கிலத்தைக் கொண்டு வந்தனர். ஆனால், அதே ஆங்கிலம் உலக அறிவுக் கருவூலக் கதவுகளை இந்தியர்களுக்குத் திறந்து விட்டது. நாம் சுதந்திரம் பெற்ற நேரத்தில் அது ஏற்கனவே பழக்கத்திற்கு வந்து விட்டது. ஆங்கிலத்தை இனிமேலும் “அந்நிய மொழி” என்று தள்ள முடியுமா?
இந்தியா விடுதலை அடைந்த பின்பு, பல்வேறு தேசிய இனங்களின் மொழிகளை வளர்த்தெடுப்பதற்கு சீரிய முயற்சிகள் முழுவீச்சில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. உற்பத்தி மொழி ஆகாமல் மொழி வளர இயலாது. இயற்பியலில், வேதியியலில், உயிரியலில், பொறியியலில், மருத்துவத்தில், சமூக அறிவியல் துறைகளில், இன்னும் பல்வேறு துறைகளில் என்று ஒரு மொழி உற்பத்தி மொழியாக மாறுகிறதோ, அப்பொழுது மட்டுமே அது வளர இயலும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, போஜ்பூரி, ஒரியா, போன்ற தேசிய இன மொழிகள் அவ்வாறு இன்று வளர்வதற்கு, ஆங்கிலம் போன்ற வளர்ந்த மொழியின் துணை தேவை.
இந்திய மொழிகளை முழுவீச்சில் வளர்த்தெடுக்க அவற்றை நல்ல கண்காணிப்புடன் ஆங்கிலத்தோடும் மற்ற இந்திய மொழிகளோடும் கலந்துரையாடச் செய்வதும் தேவைப்படுகிறது. அதற்கு தேவைப்படும் ஆங்கில இலக்கியங்களையும், உயர்தர புத்தகங்களையும் மிகப்பெரிய அளவில் மொழியாக்கம் செய்ய வேண்டும். அதற்கு கூகுள் மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது. அதே நேரம் சொந்த நடையில் அசலாக புதிய உயர்தரப் புத்தகங்களை எழுத வேண்டும். அப்படி செய்யாமல் எந்த ஒரு மொழியும் வளர முடியாது.
இந்த நிலையில் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்கும் சமீபத்திய நடவடிக்கையால் இந்திக்கு மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு, இந்திக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படுமென்பதால் மற்ற அனைத்து பிராந்திய இந்திய மொழிகளின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாகிவிடும். உள்துறை அமைச்சர் கூறுவது போல இது மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு மாறாக, இந்தத் திணிப்பானது கடுமையான பாரபட்சத்தை ஏற்படுத்தி, மக்களைப் பிளவு படுத்திவிடும். அது நாட்டிற்கு நல்லது அல்ல.
மொழியின் கல்விப் பயன்பாட்டினைக் கருத்தில் கொண்டால், சுற்றியுள்ள உலகை எளிதாகவும், சிறப்பாகவும் கற்பதற்கு தாய்மொழி தான் சிறந்தது. எனவே, தொடக்கம் முதல் உயர்கல்வி வரையில் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். அதற்காக, மேலே சொன்னபடி, இந்திய மொழிகள் அனைத்தையும் உரியமுறையில் உண்மையிலேயே வளர்த்தெடுப்பதற்கு அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பாடங்களை தாய்மொழியிலேயே கற்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் தங்களது திட்டத்தை நிறைவேற்ற இந்த நேரத்தை ஆட்சியளார்கள் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற அதி முக்கியக் கேள்வி எழுகிறது. இந்தி பேசும் மக்களுக்கும் இந்தி பேசாத மக்களுக்கும் இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்த வேண்டுமென்பதே ஆட்சியாளர்களின் நீண்டநாள் நோக்கமாகும். அந்த திட்டத்தை நிறைவேற்றவே தற்போது எத்தனிக்கின்றனர்.
இந்தியை மட்டுமே ஒற்றை ஆட்சி மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆங்கிலத்தை நீக்குவதற்கும் மற்ற இந்திய மொழிகளின் (தாய்மொழிகளின்) வளர்ச்சியை சிறுமைப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் இந்தி படிப்பதை ஏற்கனவே கட்டாயமாக்கிவிட்டனர். தற்போது மருத்துவக் கல்லூரிகள், ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இந்தியைப் பயிற்று மொழியாக ஆக்குவதற்கும் மத்திய அரசாங்கப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இந்தியில் மட்டுமே நடத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பல மொழிகளைப் பேசும் நம் நாட்டில் ஹிந்திமொழியை அலுவல் மொழியாக கொண்டால், ஹிந்திமொழியை இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாகக் கொண்ட தென்னிந்திய, கிழக்கிந்திய மக்களைவிட ஹிந்திமொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு அது சாதகமாக அமைந்துவிடும். இது மிகவும் ஓரவஞ்சனையாகும்.
நம்மைப் போன்ற பன்மொழி பேசும் சமுதாயத்தில் நாடு முழுவதற்குமான ஒற்றை ஆட்சி மொழி என்று இருக்க முடியாது என்பது நமது கருத்தாகும். எனவேதான் 8வதுஅட்டவணையில் இந்தியாவின் 22 மொழிகளுக்கு சம அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் அறிவுத்திறன் மேம்பாட்டிற்கும், மனவளர்ச்சிக்கும் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை அவரவர் தாய்மொழியில் கற்பித்தல் இன்றையமையாதது என்பது நாம் அறிந்ததே. எனினும், இன்று வரை முக்கியமான நவீன நூல்கள், சஞ்சிகைகள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உள்ளன. அவற்றையெல்லாம் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் இதுவரை எடுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டமானது.
இந்த உண்மைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, இந்தியை ஒற்றை ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஏற்க வேண்டுமென்று மக்களை நிர்பந்திப்பது நிச்சயம் பாரபட்சமானதாகும். இது அரசியல் ரீதியாக தூண்டப்படுகிறது, ஆழ்ந்த வெறியுடையதாக இருக்கிறது.மொழிவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்துவதைத் தவிர வேறு எதையும் இந்த நடவடிக்கை செய்யாது. மத்திய அரசாங்கத்தின் இந்தப் பேரழிவு மொழிக் கொள்கைக்கு எதிராக அகில இந்திய கல்விப் பாதுகாப்பு இயக்கம் மக்கள் ஆதரவுக் கருத்தைத் திரட்டி வருகிறது.
அதன் ஒருபகுதியாக தென்னிந்தியமொழிப் பாதுகாப்பு மாநாட்டை பிப்ரவரி 17, வெள்ளிக் கிழமை அன்று காலை பத்து மணிக்கு சென்னை தி.நகர், சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடத்துகிறது. பல அறிஞர் பெருமக்கள் உரையாற்றுகின்றனர். கல்வியை நேசிக்கும் அனைவரும் இதில் கலந்து கொண்டு இம்மாநாட்டை வெற்றிபெறச் செய்வீர்..!
Also read
மேனாள் துணைவேந்தர் பேரா. லெ. ஜவகர் நேசன் தலைமையேற்க, கல்கத்தா பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற புவியியலாளர் பேராசிரியர் துருவாஜோதி முகர்ஜி துவக்க உரை ஆற்றவுள்ளார். கர்நாடகாவின் மேனாள் அட்வகேட் ஜெனரல், ரவிவர்மா குமார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேரா. சச்சிதானந்தாசின்ஹா, மதுரைக் கல்லூரி பேரா. ஆர். முரளி, கேரளாவின் மூத்த பத்திரிகையாளர் பி.ஆர்.பிபாஸ்கர், ஆந்திரப் பிரதேச அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. அ. சந்திரசேகர், ராஜபாளையம் ராஜூஸ்கலைக் கல்லூரி, பேரா.வி. வெங்கட்ராமன், தி மாடர்ன்ரேஷனலிஸ்ட் ஆங்கில இதழின் இணை ஆசிரியர் வி.குமரேசன், லயோலா கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர். மரியாஜோசப், எம்.மகாலிங்கம், வேட்டவலம், திருவண்ணாமலை, தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் செயலாளர் போஸ்கோ, அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி பொதுச் செயலாளர் பேரா. தருண் காந்தி நஸ்கர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
கட்டுரையாளர்; க.யோகராஜன்
பேராசிரியர், கல்விச் செயற்பாட்டாளர்
சற்றே நம்பிக்கை தரும் பதிவு. ஒன்று பட்டால் நம் மொழியை காக்கலாம்!
மிகவும் பிழையான புரிதல். பா.ஜ.க அரசு முன்னெடுத்துள்ள கல்விக் கொள்கையில் தாய்மொழி வழி கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நம் தமிழக அரசு – ஹிந்தி எதிர்ப்பு என்ற போலி முழக்கத்தை முன்வைத்து அரசு பள்ளிகளில் மட்டும் ஹிந்தியை ஒழித்து விட்டு தன் கட்சி/குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டும் பேசவும் மற்றும் ஹிந்தியை தாராளமாக கற்பிக்கும் தகிடுதத்தம் செய்கிறது.
இது போன்ற “மொழியைக் காப்போம்” போன்ற முழக்கங்கள் தேவையில்லை. எந்த மொழிக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடவில்லை. ஏதேனும் ஆபத்து என்றால் அது நம் கேடுகெட்ட சினிமா மற்றும் சீரியல்களாலும் தமிழே வராத செய்தி வாசிப்பவர்களாலும்தான்.
உங்களைப் போல் ஆசிரியப் பணியில் உள்ளவர்கள் தமிழை வாழ வைக்க சிறந்த வழி நீங்கள் ஏற்கனவே செய்து வரும் தமிழ் வழி கல்வி காணொலிகள்தான். நீங்கள் ஏற்கனவே சிறப்பாகவே செய்து வருகிறீர்கள். இது போன்ற “மாநாடுகள்” எந்த கூடுதல் பயனையும் தரவல்லதாகத் தோன்றவில்லை. நன்றி – பாலமுருகன்